மகளின் காதலுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய பெற்றோர்!!

OLYMPUS DIGITAL CAMERA

மகளின் காதல் விவகாரத்திற்கு பயந்து தாய் தந்தையர் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அதோடு நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பிரகாஷைத்தான் மணப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதனால் கடந்த 19ம் திகதி குலதெய்வம் கோவிலுக்குப் போவதாக கூறி விட்டு மனைவி விஜயாவுடன் வெளியேறினார் துரைசாமி.
ஆனால் வீடு திரும்பவில்லை.

காணமல் போன துரைசாமியையும் அவரது மனைவி விஜயாவையும், பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததை அடுத்து அவர்களது மூத்தமகள் லலிதா புதன்கிழமை எ.பள்ளிப்பட்டி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசாரும் மகளின் காதலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய தாய், தந்தையை தேடி வருகின்றனர்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு வவுனியாவில் வட்டமேசை கலந்துரையாடல்..!

Sri_Lanka_Vavuniya_Districtதேசிய நல்லிணக்கத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளது.

இது தொடர்பில் வவுனியாவில் நேற்றும் இன்றும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.

வட்டமேசை கலந்துரையாடலாக நடத்தப்படும் இந்த நிகழ்வின்போது வடக்கு கிழக்கை சேர்ந்த சமய பெரியார்கள், பங்கேற்கின்றனர்.

இந்தநிகழ்வில், வட அயர்லாந்தின் மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர் டேவிட் ரஸல், வட அயர்லாந்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான பணிப்பாளர் மைக்கல் டொக்கேடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

குறித்த நல்லிணக்க முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கமும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பொதுநலவாய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் பதில் தலைவர் கெரன் மெக்கன்ஸி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவ்வாறான வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை பொதுநலவாய அமைப்பு கடந்த மே மாதத்தில் லண்டனில் நடத்தியது.

ஈழ ஆதரவாளர் நீலவேந்தன் தீக்குளித்து மரணம்!!

neelaventhan

ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் பெரும் பங்கு வகித்த ஸ்ரீதர் என்கின்ற நீலவேந்தன் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தின் திருப்பூர் அனுப்பர்பாளையம் பெரியார் காலனி நேதாஜி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவது மகன் ஸ்ரீதர் என்ற நீலவேந்தன்(34).

சட்டத்தரணியான இவர் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக உள்ளார். ஸ்ரீதர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மாநகராட்சி பார்க்கேட் முன் வந்தார். திடீரென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோல் போத்தலை திறந்து உடல் முழுவதும் ஊற்றினார். பின்னர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் இது குறித்து திருப்பூர் வடக்கு பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கருகிய நிலையில் இருந்த ஸ்ரீதரை 108 அம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பூர் அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முன்னதாக பொலிசாரிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் கூறியதாவது..

நான் ஆதித்தமிழர் பேரவையின் மாநில செயலாளராக உள்ளேன். அருந்ததியினருக்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை. படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும் சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன் என்று கூறினார்.

ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு அளப்பறியது.

ஈழ விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்தது.

சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பால் சரஸ்வதி சபதம் தலைப்பு மாறுகிறது!!

sarasvati

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் சரஸ்வதி சபதம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தோமஸ் நடிக்கிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சந்துரு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் தலைப்புக்கான பிரச்சினையும் தொடங்கிவிட்டது. மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த சரஸ்வதி சபதம் பக்தி திரைப்படத்தின் தலைப்பில் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக விளம்பரத்தோடு புதிதாக சரஸ்வதி சபதம் பெயரில் படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றங்கள் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

பின் அவர்களுடோடு பேச்சுவார்த்தை நடித்தி சுமூகமாக பேசித் தீர்த்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு நவீன சரஸ்வதி சபதம் என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது எவரது மனத்தையும் புண்படுத்தாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்றார்.

இப்படத்திற்கு பிரேம்குமார் என்பவர் இசையமைக்கிறார். இவர் ஹரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத் தகடுகளை மலவாயிலில் மறைத்து கடத்த முயன்றவர் கைது..!

arrest175 லட்சம் ரூபா பெறுமதியான 11 தங்கத் தகடுகளை மலவாயிலில் மறைத்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகர் நோக்கிச் செல்லவிருந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவரிடம் இருந்து 1500 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தங்கம் கடத்த முயன்ற 8வது நபர் இந்த மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.

இவர்களில் நான்கு பேரிடமே தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. இன்னும் 3 தங்க கட்டிகள் இருவரது வயிற்றில் உள்ளதாகவும் தொடர்ந்தும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

முதலாவது நபரின் வயிற்றில் 13 தங்கக் கட்டிகள் இருப்பதாக ஸ்கேன் மூலம் தெரிந்த போதும் 15 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.

இரண்டாவது நபரின் வயிற்றிலிருந்து 6 தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன.

3 ஆவது நபரின் வயிற்றில் ஐந்து தங்கக் கட்டிகள் இருப்பதாக தெரிந்த போதும் 6 தங்க கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.

நான்காவது நபரின் வயிற்றிலிருந்து ஒரு தங்க கட்டி மட்டுமே எடுக்கப்பட்டது.

ஏனைய மூரிடம் வயிற்றினுள் தங்கக் கட்டிகள் இல்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

காணாமல் போன சிறுமி மர்மமான முறையில் மரணம்!!

girl

பிரான்சில் காணாமல் போன 5 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற அன்று 5 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தார் மற்றும் பக்கத்து வீட்டாருடன் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த இவர் திடீரென காணாமல் போகவே தாயார் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் பெற்றோர்கள் குடித்துவிட்டு குழந்தையை கவனிக்காமல் இருந்த சமயம் குழந்தை காணாமல் போயுள்ளது தெரியவந்தது.

மேலும் குழந்தையை கடத்திய கும்பல் யார் என விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில் பிரான்சில் உள்ள செலமோரண்ட் பெராண்ட் என்னும் இடத்தில் அச்சிறுமியின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது குழந்தை எவ்வாறு இறந்தது என்றும் கடத்தியவர்கள் யார் எனவும் பொலிசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் திட்டத்தில் அமெரிக்கா : பாதுகாப்பு செயலர் அதிருப்தி!!

gotapaya

இலங்கை நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

30 வருடங்கள் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜனநாயகத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு எல்லாவற்றையும் செய்த போதிலும் அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளது.

நாம் ஒரு பலகட்சி நாட்டில் இருக்கிறோம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது கூட நாம் தேர்தல்களை நடத்தினோம். ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது.

தெற்கில், அமெரிக்க தூதரகத்தின் பின்புலத்துடன் எந்தவொரு மட்டத்திலும் தேர்தல்களில் அவர்களால் வெற்றி பெறமுடியாது. சில வங்குரோத்து அரசியல் கட்சிகள் கூட அமெரிக்கத் தூதரகத்தைப் போன்றே குற்றம்சாட்டுகின்றன.

18வது திருத்தச்சட்டத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி பதவி வரம்பு நீடிக்கப்பட்டதை மேற்கு நாடுகள் விமர்சிக்கின்றன. ஆனால் அண்மையில் ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்க்கல் மூன்றாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகளும் அவர்களின் பதிலிகளும் தமிழ் மக்களுக்கு உத்தரவிட்ட போது மேற்குலக சக்திகள் மைளனம் காத்தன.
போரில் பிரபாகரன் உயிர் தப்பியிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறைக்கைதியாகவே இருந்திருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது.

வடக்கு மாகாணசபைத் தேர்லில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பதாக தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டால் மோசமான தவறாகி விடும் என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

இந்தியா கொடுத்த தொடர் அழுத்தமே கூட்டமைப்பின் வெற்றிக்கு காரணம் : ஜி.கே.வாசன்!!

g.k. vasan

இலங்கையில் நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று உள்ளதை மனதார வரவேற்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..

இந்த வெற்றிக்கு இந்திய அரசு தொடர்ந்து குரல் கொடுத்து அழுத்தம் தெரிவித்து வந்தது தான் காரணம். இந்த வெற்றிக்கு பிறகு ராணுவம் அங்கே இருப்பது முறையற்ற செயல். எனவே இலங்கையில் இருந்து ராணுவத்தை உடனே வெளியேற்ற வேண்டும்.

இலங்கை அரசு இதனை செய்யும் என நான் நம்புகிறேன். இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிமையும் வழங்க வேண்டும்.

இதனை இலங்கை அரசு உடனே செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அதில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதும் ஒரு பகுதியினர் சிறையில் இருந்து வருவதும் வருத்தம் அளிக்கிறது. எனவே சிறையில் இருப்பவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கையகப்படுத்தி வைத்திருப்பதை உடனே திருப்பி வழங்கி மீனவர்களின் வாழ்வாதரத்திற்கு உத்தர வாதம் அளிக்க வேண்டும் என்றார்.

புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் திடீர் இடமாற்றம்..!

votingபுத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சுமித் சந்தன, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் வாக்குச் சீட்டுக்கள் சில கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் முடியும்வரை சுமித் சந்தன, கொழும்பு பிரதான தேர்தல் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

நெற்றி பகுதியில் மூக்கு : சீனாவில் அதிசயம்!!

china

சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்பவருக்கு நெற்றியில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்தாண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்காக அவர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் குருத்தெலும்பு முற்றிலுமாக சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. இதனை மருத்துவர்களால் சரிசெய்ய முடியாத காரணத்தால் தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கை உருவாக்க முடிவு செய்தனர்.

இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது.

இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

ஆனையிறவில் புதிய புகையிரத நிலையம்!!

elephant pass

கிளிநொச்சி தொடக்கம் ஆனையிறவு கடல்நீரேரி வரையில் தண்டவாளம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் ஆனையிறவு கடல்நீரேரியில் புகையிரதப்பாதை கொங்கிறீட் சுவர் அமைக்கப்பட்டு பலமான பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனையிறவில் புதிய புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதோடு ஆனையிறவு தொடக்கம் பளை வரையான பாதையில் உள்ள பாலங்கள் புனரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளன.

பளை தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளில் சில இடங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

கண்ணிவெடி அகற்றும் பணி நிறைவுற்றதும் இப்பகுதி புனரமைப்பு வேலைகள் துரிதகதியில் நிறைவடைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

hiv

உலகம் முழுவதும் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் அது சடுதியாக அதிகரித்து வருவதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகல நோயாளர்களையும் எச்.ஐ.வி. பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போதே இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காது போனால் எயிட்ஸ் நோய் தொற்று நோய் போல் பரவ ஆரம்பித்து விடும். ஆபத்தான பாலுறவுகளில் ஈடுபடும் நபர்கள் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. இதுவே இந்த நோய் வேகமாக பரவ காரணமாகியுள்ளது.

2011ம் ஆண்டு 146 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2012 ம் ஆண்டு 186 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் எயிட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளான 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மொத்தமாக இதுவரை 1739 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்தமாக 4500 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

பாம்புப் பெண் நிரோசா விமலரட்னவிற்கு மீண்டும் பிடிவிராந்து!!

paambu pen

பாம்புப் பெண் என்று அழைக்கப்படும் நிரோசா விமலரட்ன என்ற பெண்ணுக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாகப் பாம்பு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிருக வதைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நிரோசா கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணைகளின் போது பாம்பு தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணைகளை நடத்திய நீதிமன்றம் பாம்பை பெண்ணிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பாம்பை குறித்த பெண்ணிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்த வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகவில்லை.

இதேவேளை பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாம்பு பெண் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்ததாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் குறைவான வாக்குகளை பெறும் கட்சிகளை நீக்கும் யோசனை : தேர்தல் ஆணையாளர்!!

ele

தேர்தலில் போட்டியிட்ட குறைவான வாக்குகள பெறும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இரத்துச் செய்யுமாறு பல சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் யோசனை முன்வத்துள்ளதாக தேர்தல் ஆணையளார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிடுவதால் சுமார் இரண்டு அடி நீளத்திற்கு வாக்குச் சீட்டை அச்சிட வேண்டியுள்ளது.

அத்துடன் அதனை சுமார் எட்டு மடிப்புகளாக மடித்து வாக்கு பெட்டியில் போடவேண்டியுள்ளது. வாக்கு எண்ணும் போது மட்டுமல்லாமல் கடதாசி செலவுகளை பார்க்கும் போது இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

என்னிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் அளிக்கப்பட்ட ஆயிரம் வாக்குகளில் ஒரு வாக்கைக் கூட பெறாத அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனையும் உள்ளது.

எனினும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை தவிர சட்டத்தை இயற்றும் அதிகாரம் என்னிடம் இல்லை. இதனால் இதனை மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

Earthquake1

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தெற்கு பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் சில நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் இவை பூகம்ப சேதத்தை தடுக்கும் வகையில் கட்டப்பட்டு இருந்ததால் சேதம் அதிகம் இல்லை.

70இற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தார். அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் பெருநாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள்.

வடக்கு மாகாண சபைக்கு வவுனியாவிலிருந்து ஒரு அமைச்சர்!!

northern_map

வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சருடன் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கிய 4 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை மாகாண சபை கொண்டிருக்கும்.

இந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சராக மருத்துவர் சத்தியலிங்கம் நியமிக்கப்பட உள்ளார். இவர்கள் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு 20 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றார்.

அதேவேளை கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்வி பணிப்பாளர் தம்பிராசா குருகுலராசா கல்வியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருகுலராசா கடந்த மாகாண சபைத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இவர் மாகாணத்தின் கல்வி துறை தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ளார்.

இவர்களை தவிர ஏனைய இரண்டு அமைச்சுக்களில் ஒன்று மன்னாரை சேர்ந்த பொறியியலாளர் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

மற்றைய அமைச்சு யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு கூட்டங்களை நடத்துவதற்கான கட்டடங்கள் இல்லை என்பதுடன் அதன் வரவு செலவு என்பனவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.