வெள்ளவத்தையில் ஹெரோயின் வைத்திருந்த இளைஞர் கைது!!

arrest

வெள்ளவத்தை காலி வீதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசமிருந்து 6 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் இன்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மூதூரில் மீன் சாப்பிட்டவர்களில் ஒருவர் மரணம் : 28 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

food

மட்டகளப்பு , மூதூரில் பிரதேசத்தில் உணவு விசமானதில் ஒருவர் உயிரிழந்துடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது.

நேற்று விற்கப்பட்ட ஒருவகையான மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டவர்களே ஒவ்வாமை காரணமாக நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பெண்கள், 4 சிறுவர்கள் மற்றும் 9 ஆண்களும் அடங்குவதாக மூதூர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 28 பேரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் முஸ்லிம் பிரஜைக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கு!!

selvam-adaikalanathan

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு!!

Julie Bishop

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய அரச தலைவர்கள் அனைவரும் கட்டாயம் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினை வெளிக்காட்ட இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தியமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா!!

siva

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் மான் கராத்தே.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். மேலும், நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் உடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதோடு கதை மற்றும் திரைக்கதையையும் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும் சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கைக்கு காலக்கெடு விதிக்க நவிபிள்ளைக்கு அதிகாரம் இல்லை : ரவிநாத் ஆரியசிங்க!!

Ravinatha-Aryasinha

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க தனது இலங்கை பயணம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்களுக்கு வரும் 2014 மார்ச் மாதத்துக்குள் சுதந்திரமான, நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தனியான விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து நேற்றைய அமர்வில் பதிலளித்துப் பேசிய இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இலங்கைக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் நவநீதம்பிள்ளைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நவநீதம்பிள்ளையின் வாய்மூல அறிக்கையின் பிரதி உரிய காலத்தில் தமக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய ரவிநாத் ஆரியசிங்க செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கே தமக்குத் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பதிலளிக்க ஒரு இரவு மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணசபை உள்ளிட்ட எல்லா மாகாணசபைகளுடனும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்குத் தாம் உறுதியளிப்பதாகவும் இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு தீர்வு தந்தால் அரசு தப்பிக்கலாம் : சம்பந்தன்!!

sambanthan

இலங்கை மீது சில நாடுகள் குறிவைக்கின்றன தொடர்ந்து இலங்கைக்கு தொந்தரவு கொடுக்கின்றன, ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தம் தருகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றப் பொதுச்சபை உரையில் குறிப்பிட்டதை ஏற்கமுடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தன் இலங்கையில் போர் முடிந்து நான்காண்டுகளாகியும், தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.

அரசுக்கு, இந்தப் போரின் போது பல்வேறு நாடுகள் உதவின, போரின் போதும், போருக்குப் பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ இந்த நாடுகளுக்கும் ஐநா மன்றத்துக்கும் பல்வேறு உறுதிமொழிகளைத் தந்தார். இவை நிறைவேற்றப்படவில்லை என்றார் சம்பந்தன்.

மேலும் மனித உரிமைகள் குறித்த பிரச்சினையில் இன்னும் ஒரு நடவடிக்கையும் அரசால் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன இதையும் சர்வதேச சமூகம் கணக்கிலெடுத்துக்கொள்ளவில்லை என்று மஹிந்த கூறியதற்கு பதிலளித்த சம்பந்தன், அபிவிருத்தி என்பது ஒரு மாயை என்றார்.

வடக்கில் மக்களுக்குத் தேவை சுய கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வும், அவர்களது இழப்புகளுக்கு நீதியும்தான். இதை விடுத்து சாலைகளை அமைப்பது, மின்சாரக் கம்பங்களை நடுவது போன்றவற்றால் மட்டும் மக்களை திருப்திப் படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் கூட பெரும் சர்வதேச அழுத்தத்தின் பின்னணியில்தான் நடந்து முடிந்தன என்று கூறிய சம்பந்தன், இந்தத் தேர்தலில் பல குறைகளை பட்டியலிடமுடியும் என்றும், ஆனாலும், குறைகளை மீறி, மக்கள் தங்களது கருத்தை தெளிவாக அரசுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் கூறினார்.

இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் கோரினார்.

அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினாலே கூட, விமர்சனங்களிலிருந்து அரசு விடுபடலாம் என்று கூறிய சம்பந்தன் ஆனால் இது குறித்து அரசுக்கே ஒரு திடமான நிலைப்பாடு இல்லை, எனவே தான் இந்தப் பரிந்துரைகளைக் கூட அமல்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.

-BBC தமிழ்-

வவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு ஜி.ரி.லிங்கநாதன் கடிதம்!!

gt-linganathan

மூவின மக்களும் வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வட மாகாணசபையில் அமைச்சு பதவியொன்று அவசியமானது என வட மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி.ரி.லிங்கநாதன் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா மாவட்டமானது வட மாகாணத்தின் எல்லையாகவும் மூவின மக்கள் வாழும் பிரதேசமாகவும் அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தலைநகரமாகவும் விளங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இதற்கு மேலாக நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் எதிர்பாக்காத வகையில் சிங்கள இனத்தை சேர்ந்த அரச தரப்பு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் தமிழர்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

ஆகவே எமது எதிர்கால் செயற்பாட்டை எமது பிரதேசத்தில் வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளதால் அமையவுள்ள மாகாண அமைச்சில் ஓர் அமைச்சை எமது மாவட்டத்திற்கு வழங்குவதனால் பாதிக்கப்பட்ட சமூகம் எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கவும் கட்சியை பலப்படுத்துவதற்குமாக எமது மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடந்த காலங்களில் வன்னிப்பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த இயற்கை அனர்த்தங்களின்போது வைத்திய அதிகாரியாகவும் மனிதாபிமான நிறுவனங்களிலும் அளப்பறிய சேவையாற்றி இவர் சிறந்த முகாமையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியுள்ளார்.

எனவே இவருக்கு கடந்த 15 வருட கால அனுபவம் அமைச்சொன்றை சிறந்த முறையில் செற்படுத்துவதற்குள்ள தகுதியை கொண்டுள்ளமையை மேலும் உறுதி செய்கின்றது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத்துடன் ஜோடி சேர விரும்பும் மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை!!

ajith

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனையான அலிஷா அப்துல்லா, இந்தியாவிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் ஒரேயொரு வீராங்கனை இவர் மட்டுமே என்ற பெருமையை கொண்டவர். இளம் வயதிலேயே ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். இவருக்கு தற்போது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

உண்மையில் திரைத்துறையில் நுழையும் எண்ணம் இருக்கிறதா என்று அலிஷாவிடம் கேட்டபோது திரைத்துறைக்கு வர விருப்பம் இருக்கிறது. அவ்வாறு நடிக்க வந்தால் அஜீத்துடன் இணைந்து நடிக்கவே விரும்புகிறேன். அஜீத்தும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர். அவரால்தான் என்னை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார். இவரது கனவு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. தற்போது வீரம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் : ஹெல உறுமய!!

HelaUrumaya

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமூக ஜனநாயகக் கூட்டணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது என்பதில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுதியாக போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டே நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர், சட்டத்தரணியும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ஶ்ரீலால் லக்திலக்க உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மார்ச் மாதத்திற்கு முன் உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை : நவநீதம்பிள்ளை எச்சரிக்கை!!

pillei

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

ஒகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில் மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவு படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஎப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.

இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும் பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.

போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும் போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

3000 ஓட்டங்களை கடந்தார் டிவிலியர்ஸ்!!

de

T20 அரங்கில் தென் ஆபிரிக்காவின் டைட்டன்ஸ் அணி வீரர் டிவிலியர்ஸ் 3000 ஓட்டங்களை கடந்தார்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் பிரிஸ்பேன் அணிக்கெதிரான போட்டியில் டைட்டன்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் டைட்டன் வீரர் டிவிலியர்ஸ் 3000 ஓட்டங்களை கடந்தார். இவர் இதுவரை பங்கேற்ற 139 போட்டிகளில் ஒரு சதம், 17 அரைசதம் உட்பட மொத்தம் 3010 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இந்த இலக்கை எட்டிய 37வது வீரர் இவர். முதல் மூன்று இடங்களில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (5752 ஓட்டங்கள்), அவுஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் (5567), டேவிட் ஹசி (5354) உள்ளனர்.

6 வயது சிறுமியை இருமுறை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்!!

abusw

பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் ஒருவன் 6 வயது சிறுமியை 2 முறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றசெயலில் ஈடுபட்ட 12 வயது சிறுவன் பிரித்தானியாவின் சப்போல்க் அண்ட் நார்போல்க் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசிக்கின்றான்.

இவன் 2 முறை ஆறு வயது சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தியதாக அவனது பெற்றோரிடம் தெரிவித்தப்போது அதிர்ந்தப்போன அவர்கள் உடனடியாக அவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுவனை விசாரித்தப்போது அவன் செய்த தவறுக்காக பெரியளவில் வருத்தப்படவில்லை என்பதை பொலிஸார் புரிந்துக்கொண்டனர். அவள் என்ன நினைப்பாள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை´ என்று பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அச்சிறுவன் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் பயந்து ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது அவளது குடும்பத்தை அச்சிறுவன் 12 மாத காலத்துக்கு சந்திக்கக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதும் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு 300 பவுண்ட் மட்டும் நஷ்ட ஈடாக சிறுவனின் பெற்றோர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

வெளிச்சத்துக்கு வந்தது மம்மியின் ரகசியம்!!

mummy

ஜேர்மனியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மியின் உடலானது வெறும் பிளாஸ்டிக் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் ஜேர்மனியில் 10 வயது சிறுவன் ஒருவன் வட ஆபிரிக்க மம்மியின் உடலை தனது குடியிருப்பில் கண்டுபிடித்துள்ளான்.

ஜேர்மனியின் லோவர் சாக்ஸோனி (Lower Saxony) குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் மாடியறையில் இருந்த கனமான ஒருமரப்பெட்டியின் உள்ளே இருந்த இந்த மம்மியை கண்டுபிடித்தான்.

இந்த மம்மியின் உடல் இருந்த மரப்பெட்டியானது எகிப்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மம்மி குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இதன் உடலானது வெறும் பிளாஸ்டிக் என்றும் ஆனால் இதன் தலைப்பகுதியானது உண்மையானது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மண்டைப்பகுதியானது மருத்துவ மாணவர்களின் சோதனைக்கு உதவும் என்பதால் இதனை அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த மம்மியானது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உடல் என்று தெரிவித்துள்ளனர்.

நட்சத்திர ஹோட்டலில் தகராறு செய்த நடிகை திரிஷா!!

trisha

நட்சத்திர ஹோட்டலில் நடிகை திரிஷா தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்ததாக இணைய தளங்களில் பரபரப்பு செய்திகள் பரவி உள்ளன. திரிஷா தற்போது பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சமீபத்தில் நடிகர், நடிகைகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியொன்று நடந்தது. இரவு நேரத்தில் இந்த விருந்து நடந்தது. இதில் நடிகை திரிஷா கலந்து கொண்டாராம். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஸ்வரியும் சென்று இருந்தார்களாம்.

விருந்து நள்ளிரவை தாண்டியும் நடந்தது. இதில் மதுபானங்களும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. விருந்தில் திரிஷாவுக்கும் அங்கிருந்த சிலருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டதாம். திரிஷா அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் திடீர் என கோபம் அதிகமாக ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.

விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதன் பிறகு ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் திரிஷாவை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார்களாம். திரிஷா மறுக்க அவரை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் தோழிகளுடன் நின்று பேசிய திரிஷாவை போலீசார் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி நிர்ப்பந்தபடுத்தி அனுப்பி வைத்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

வவுனியாவில் சுகாதரமற்ற வெதுப்பகம் சுகாதார துறையினரால் கண்டுபிடிப்பு!!

vav

வவுனியா மாடாசாமி கோவில் பகுதியில் அமைந்திருந்த வெதுப்பகம் வவுனியா சுகாதார துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதாரமற்ற பல திண்பண்டங்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன என வவுனியா சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். சுகாதார பிரிவிற்கு பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை அடுத்து இந்த திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி கே.ஜீவராஜா, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.மே.ஜெயா, பொது சுகாதார பரிசோதகர்களான கே.சிவரஞ்சன் மற்றும் எம்.ரஞ்சன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல திண்பண்டங்கள் மீடகப்பட்டதுடன் சுகாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்கள் கைப்பற்றி அழித்திருந்தனர்.

இதேவேளை இங்கு உற்பத்தி செய்யப்பட்ட குளிர்பான பக்கற்றுக்களில் வேறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக போலியான முகவரியும் பொறிக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வவுனியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.