பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உருவான குட்டித் தீவு!!

pak

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 217 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்த அந்த நில நடுக்கத்தால் தென்மேற்கு மாகாணம் முழுவதும் குலுங்கியது. அதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.

பலுசிஸ்தான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த நில நடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் நொறுங்கின. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 217 பேர் வரை பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

600க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அவரன் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவரன், துர்பத் ஆகிய 2 மாவட்டங்களில்தான் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வீடு இழந்து தவிக்கிறார்கள். அங்கு சுமார் 300 இராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல இடங்களுக்கு இன்னமும் மீட்புக்குழுவினர் சென்று சேரவில்லை. எனவே உயிரழப்பு எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சாலை வசதிகள் சரியாக இல்லாததால் படுகாயம் அடைந்த பலர் ஹெலிகப்டர்கள் மூலம் மற்ற நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பயங்கர நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று காலை வரை சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாண மக்களிடையே கடும் பீதியும் பதற்றமும் நீடிக்கிறது.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிக அதிர்வு கராச்சியில்தான் உணரப்பட்டது. இதனால் கராச்சியில் மக்கள் வீடுகளில் இருந்து அலறியபடி வெளியில் ஓடி வந்தனர். நேற்றிரவு அவர்கள் வீடு திரும்ப பயந்து தெருக்களில் தூங்கினார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் கராச்சி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலியானார்கள். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
பாகிஸ்தான் – காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சுமார் 75 ஆயிரம் பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியை பூகம்பம் உலுக்கிய வேகத்தில் கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. பாகிஸ்தானின் ஜிவடர் கடலோரப் பகுதியில் இந்த தீவு உருவாகி இருக்கிறது.

சுமார் 60 மீட்டர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது.

நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்தனர்.

தமிழகத்தில் மூதாட்டி கொலை : அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்!!

knif

தமிழகத்தில் மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளில் மேலும் இரு கொலைகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

சேலம் மாவட்டம் வீராணம் பொலிஸ் நிலைய எல்லையில் உள்ளது மன்னார்பாளையம். இந்த ஊரைச்சேர்ந்த பச்சியம்மன் நகர் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி(70) விதவையான இவரது அண்ணன் பெயர் சுப்ரமணி(75). இருவரும் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த, 22ம் திகதி காலையில் நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் சரஸ்வதி பிணமாகி கிடந்தார். இன்னொரு நாற்காலியில் கயிறுகளால் கட்டப்பட்டிருந்த சுப்ரமணி பலமான காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வீராணம் பொலிஸார் சுப்ரமணியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரச மருத்துவமனையில் சேர்த்தனர். சரஸ்வதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்த இடத்தை பொலிசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை பொலிஸார் காயங்களுடன் உயிர் தப்பிய சுப்ரமணியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சுப்பிரமணியின், பக்கத்து நிலத்தை சேர்ந்த பாஸ்கரன் சுவர் ஏறி குதித்த கொலையாளிகளை தடுத்து நிறுத்தி நேரடியாக பேசியதோடு அவர்கள் தப்பி சென்றதை கண்ணால் பார்த்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, தனிப்படை பொலிஸார் தனித்தனியாக களமிறக்கப்பட்டு கிடுக்கிபிடி விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. சுப்ரமணி தன் மகன் சதாசிவத்துக்கும் தங்கை சரஸ்வதியின் மகள் மல்லிகாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அவர்களுக்கு மோகன்குமார்(23), என்ற மகனும், கௌதமி(20), என்கிற மகளும் உள்ளனர். அனைவரும், நாமக்கலம் மாவட்டம், எலச்சிப்பாளையத்தில்,வசித்து வந்தனர். மருமகன் சதாசிவம், மக்காச்சோளத்தை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இதில் அவருக்கு இலட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு வங்கியில் பெற்ற 18 இலட்ச ரூபாய் கடனும் திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டவர், நிலைமையை சமாளிக்க சீலநாயக்கன்பட்டியில் குடியேறி உள்ளார்.

சதாசிவம் வாங்கிய கடனை அடைக்க பணம் கேட்டு தந்தை சுப்ரமணியத்தை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் சுப்ரமணி அவரது தங்கை சரஸ்வதி ஆகியோரை, அடிக்கடி அடித்து,உதைத்து, கொலை செய்வதாக மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரையும் கொலை செய்யும் முடிவுக்கு சதாசிவம் வந்துள்ளார். சுதாரித்து கொண்ட சுப்ரமணி திட்டமிட்டு சதாசிவம் கதையை முடிக்க நினைத்தார். இதற்கு சதாசிவத்தின் மனைவி மல்லிகா மகன் மோகன்குமார், சரஸ்வதி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மூலம் கூலிப்படை தயார் செய்யப்பட்டது. கடந்த 2009, நவ.12ல் கூலிப்படையினர் வீட்டில் தனியாக இருந்த சதாசிவத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தந்தை கொலை செய்யப்பட்டதை நேரில், பார்த்துவிட்ட மகள் கௌதமியும் கூலிப்படையினரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

பிறகு, இருவரும், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்னதானப்பட்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தந்தை -மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்து விட்டனர்.

இந்நிலையில் கூலிப்படையை ஏவிய சண்முகத்திற்கும் மற்ற ரவுடிகளுடன், ஏற்பட்ட மோதலில், கடந்த 2010, ஜூலை 25-ல், எட்டு பேர் கொண்ட கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு, சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சண்முகம் கொலை செய்யப்பட்ட பின், அவரது சகோதரர் ராஜா அடிக்கடி மிரட்டி சுப்ரமணியிடம் பணம் பறித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சுப்ரமணி பணம் தர மறுத்ததால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கடந்த ஒருவாரமாக வீட்டுக்கு வந்த ராஜா சுப்ரமணியத்தை மிரட்டி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

சம்பவ நாளான 22ம் திகதி ராஜா தன் கூட்டாளிகள் இருவருடன் சுப்ரமணி வீட்டுக்கு சென்றுள்ளார். வழக்கம் போல, பணம் கேட்டு, தகராறு செய்துள்ளார். சுப்பிரமணி பணம் தரமறுத்ததால் இருவருக்குள்ளும் தகராறு நடந்துள்ளது.

வயதான சுப்ரமணி, அவரது தங்கை சரஸ்வதி ஆகியோரை, தனித்தனி நாற்காலியில் கட்டிப்போட்ட ராஜாவும் அவனது கூட்டாளிகளும், வீட்டிலிருந்தபணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அப்போது, கூச்சல் போட முயன்ற இருவரையும் தாக்கியதில் எதிர்பாராத விதமாக சரஸ்வதி இறந்து விட்டார். பின்னர் மயங்கிய நிலையிலிருந்த சுப்பிரமணியத்தை அப்டியே விட்டு விட்டு அவரது வீட்டு பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகையை எடுத்து கொண்டு ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் தப்பியோடி உள்ளனர்.

இந்த உண்மையை வெளியே சொன்னால் மகன் சதாசிவம் பேத்தி கௌதமி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதால் உண்மையை கூறாமல் சுப்ரமணி தொடர்ந்து உண்மையை மறைத்து வந்துள்ளார். ஆனாலும் பொலிசார் விசாரனையில் உண்மை தெரிந்துவிட்டது.

வடமேல் மாகாண தேர்தலை மீள நடத்தக் கோரி உண்ணாவிரதம்!!

North_Western_Sri_Lanka_districts

வடமேல் மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டமொன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே புத்தளம் மாவட்டத்திற்கான மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை முன்வைத்து புத்தளம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டத்தினை ஜனசெத பெரமுன மேற்கொண்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக புத்தளம் மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முடிந்தால் இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும் : விமல் வீரவன்ஸ சவால்!!

wimal

வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.

வடமாகாண சபையைக் கைப்பற்றியதால் முழுநாடும் தமக்கு ஏற்றாற் போல செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் முடிந்தால் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சிரிபாயவில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

இனவாத, பிரிவினைவாத அரசியல் பயணத்துக்கு நாட்டை மீண்டும் கொண்டுசெல்ல எம்மால் இடமளிக்க முடியாது. வடக்கில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி பயன்படுத்தினால் அதற்கான முழு ஆதரவையும் நாம் வழங்குவோம்.

அதைவிடுத்து தமிழ், சிங்கள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் தனி இராச்சிய எண்ணக் கருவை கொண்டு சென்று நாட்டில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கவும் வெளி அழுத்தங்களின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்தால் நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதை நாம் ஏன் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதவேண்டும். இலங்கை, இந்திய லோக் சபையின் கீழ் ஆட்சிக்குட்படுத்தப்படும் நாடு அல்ல. அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்வதைச் செய்யும் நாடும் அல்ல.

ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ சோனியா காந்தியையோ, மன்மோகன் சிங்கையோ விக்னேஸ்வரன் சந்தித்தால் அது எமக்குத் தேவை இல்லை. எவரும் எவரையும் சந்திக்கலாம்.

வடமாகாண ஆளுநரையும் வடக்கிலுள்ள இராணுவத்தையும் வெளியேற்ற முடியுமா என விக்னேஸ்வரன் முயற்சித்துப் பார்க்கட்டும். இரவில் தூக்கத்தில் தெரிவதை எல்லாம் செய்ய முடியும் என இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அமைச்சர் விமல்.

சினிமா நூற்றாண்டு விழாவை புறக்கணித்த நடிகைகள் நயன்தாரா, ஸ்ரேயா மீது நடவடிக்கை!!

NAYAN

நடிகைகள் நயன்தாராவும், ஸ்ரேயாவும் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து திரையுலகினரை ஆத்திரமூட்டியுள்ளது.

இவ்விழாவில் நடிகர் நடிகைகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், நடிகர் சங்கமும் அறிவுறுத்தி இருந்தன. விழாவை சிறப்பாக கொண்டாட ஒரு வாரம் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது.

நடிகர், நடிகைகள் சென்னையில் முகாமிட்டு பல நாட்கள் நடன ஒத்திகை எடுத்து மேடையில் ஆடினார்கள். இதனை இயக்குனர்கள் பொறுப்பேற்று நடத்தினர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, கார்த்தி, தனுஷ், பரத், ஜீவா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமிராய் என முன்னணி நட்சத்திரங்கள் விழாவுக்கு வந்திருந்தனர். பலர் நடனமும் ஆடினார்கள்.

ஆனால் நயன்தாராவும், ஸ்ரேயாவும் விழாவுக்கு வரவில்லை. இருவரும் தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ்பட விழாவுக்கு வராமல் போனதும் தெலுங்கு படக்குழுவினருடன் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
நயன்தாரா, ஸ்ரேயா என நூற்றாண்டு விழாவில் பங்கேற்காத நடிகர், நடிகைகள் பட்டியல் தயாராகி வருவதாகவும் அவர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இளமையை மீட்டுத்தரும் கடலைமா பூச்சு!!

kadalaimaaகோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும்.

இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கடலைமா, மஞ்சள் பூச்சு..

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கடலைமா, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி உலர வைக்கவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் மென்மையாகும்.

கடலைமா பேஷியல்..

கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு கரண்டி கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதனை முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச் என்று ஆகும்.

அதேபோல் குளிக்கும் போது கடலைமா பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். பால், பன்னீர் கடலைமாவு : இரண்டு கரண்டி கடலைமாவுடன் 4 கரண்டி பால், 2 கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை நன்றாக முகத்தில் பூசவும், சருமம் கருப்பாக உள்ள இடங்களிலும் இந்த கலவையை பூசி ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

தயிர், எலுமிச்சை, கடலைமா..

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமா எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும்.

முகம் பொலிவாக..

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு பேக் போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

கடலை பருப்பு 1 கரண்டி, ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு கரண்டி பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் கரண்டி முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் பேக் ஆகப் போட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

உலகசாதனை பட்டியிலில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய நாய்!!

Worlds-Smallest-Dog

மனிதர்களால் உலகசாதனை நிகழ்த்துப்படுவது ஒரு வகை. விலங்குகளால் சாதனை நிகழ்த்தப்படுவது இன்னொரு வகை. இது போன்று வழமைக்கு மாறாக அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் சில விடயங்களும் உலகசாதனையாக அறிவிக்கப்படுவது வழமை.

இப்படித்தான் ஒரு நாய் உலகின் மிகச்சிறிய நாயாக அடையாளம் காணப்பட்டு உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவ்அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 வயதாகும் குறித்த நாய்க்குட்டியின் எடை வெறும் 500 கிராம் மாத்திரமே. இதன் உயரம் 9.65 சென்ரி மீற்றர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டியாக அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஒரு நாய்க்குட்டி 10.16 சென்றி மீற்றர் உயரத்துடன் காணப்பட்டது.

எனினும் அதனை விட இந்நாய்க்குட்டி உயரம், எடை என்பவற்றில் குறைவாக இருப்பதானால் தற்போது உலகின் மிகச்சிறிய நாய்க்குட்டி ஆக உலகசாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்   சில மிகச் சிறிய நாய்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது..

1 2 3 4 5
6

மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை : அரசாங்கம்!!

maveerar

மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகளின் மாவீர்ர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு , புதிதாக தெரிவாகியுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிட்டியுள்ளது.

எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மாவீர்ர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டால் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மனித உரிமை எனும் பெயரில் சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை அடக்கியாள்கின்றன : மஹிந்த ராஜபக்ஷ!!

mahinda

பாதுகாப்பு மற்றும் மனித உரிமை விடயங்களைக் கொண்டு சில நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு மேற்கொள்ளப்படுவதாகவும் அதனால் சில நாடுகள் அரசியல் ரீதியில் நிலைகுலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் அரச தலைவர்கள் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஏற்பட ஐக்கிய நாடுகள் சபை தனது அதீத பங்களிப்பை செய்துள்ளது. இலங்கை தீவிரவாதத்திற்கும் சுனாமி அழிவிற்கும் உலக உணவு பிரச்சினைக்கும் வெற்றிகரமாக முகம்கொடுத்த நாடாகும்.

5 வருடங்களில் இலங்கை பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு சில தரப்பில் இருந்து இடையூறு ஏற்படுகிறது. நாடுகள் தனிக் கலாசாரம், பண்பாடு, வரலாறு கொண்டவை. அதனை பாதுகாக்க ஐநா சபை முன்வர வேண்டும்.

சில நாடுகளுக்கு தடை விதிப்பது குறித்து மீள சிந்திக்க வேண்டும். அதனால் சில நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கியூபா அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களுக்கு வாக்களிப்பு வசதி கிடைத்துள்ளது. அவர்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.

இலங்கை தொடர்பில் சில நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒன்றாக செயற்பட வேண்டும்.

சில தரப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்யக்கூடிய இடமாக ஐக்கிய நாடுகள் சபை அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது : ஒப்புக் கொண்ட பான் கீ மூன்!!

pankimoon

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் பொது விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்ற முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில் அமைப்பு ரீதியாக ஐ.நா சபை தோல்வியை தழுவியுள்ளது.

குறித்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா அமைப்பு பொருத்தமான அல்லது முழுமையான செயற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

மோசடி புகாரில் சிக்குகிறார் பவர்ஸ்டார் : மீண்டும் சிறை செல்கிறார்?

power

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கடன் தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக வடமாநில பொறியாளர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சமீபத்தில் பல பண மோசடி புகார்கள் எழுந்தது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது மீண்டும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

தனக்கு 25 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியதாகவும் அதற்கு முன்பணமாக தாம் 50 லட்சத்தையும் அவரிடம் கொடுத்ததாகவும் ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அவர் தமக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்று கூறி வடமாநில பொறியாளர் ஒருவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனை எந்த நேரத்திலும் பொலிசார் கைது செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

முகமாலையில் கண்ணி வெடியில் சிக்கிய உழவு இயந்திரம் : ஒருவர் பலி, இருவர் படுகாயம்!!

blasting_at_marvel_lock_gold_mine

முகமாலை முன்னரங்கக் காவலரண்கள் இருந்த பகுதியூடாக கம்பிக்கட்டைகள் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், கண்ணிவெடியில் சிக்கியதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அறத்தி நகர், அல்லிப்பளையினைச் சேர்ந்த அற்புதராசா சுதாகரன் (30) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த குகானந்தன் சுதாகரன் (17) , துரைசிங்கம் நிரோஜன் (17) ஆகியோர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த சிறுவன்!!

boy

கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 1948ம் ஆண்டு முதல் கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது) நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல் கிரிக்கெட் கிளப் அணிக்காக களமிறங்கினார் முஷீர் கான். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கத்தோலிக் ஜிம்கானா அணிக்கெதிரான போட்டியில் 18 ஓவரில் 78 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

65 ஆண்டு கங்கா லீக் தொடரில் குறைந்த வயது வீரர் ஒருவர் 5 விக்கெட் வீழ்த்துவது இது தான் முதன் முறை. பின் களமிறங்கிய ஸ்போர்ட்ஸ்பீல் அணி திணறியது. முஷீர் கான் சகோதரர் சர்ப்ராஸ் கான் 16, (பள்ளி கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த சச்சினின் சாதனையை முறியடித்தவர்) 65 நிமிடம் களத்தில் நின்று போட்டியை சமன் செய்ய (81/7) உதவினார்.

புத்தளத்தில் மூன்று மூடை வாக்குச் சீட்டுக்கள் மீட்பு!!

ele

புத்தளம் பிரதேசத்தில் உள்ள கல்லூரியின் கட்டடத்தில் இருந்து மூன்று மூடைகளில் சுமார் ஜயாயிரம் வாக்குச் சீட்டுகள் பொது மக்களினால் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் மக்களும் மாவட்ட அரச அதிபருக்க அறிவித்த நிலையில் அரச அதிபர் அங்கு செல்வதற்கு முன்னர் இராணுவத்தினரும் பொலிஸாரும் கல்லூரியை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோசம் எழுப்பி இராணுவத்தை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும் மாட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார்.

 

தங்க கட்டிகளை விழுங்கி சென்னை புறப்படவிருந்த 07 பேர் கைது!!

Gold Bars

சுமார் 25ற்கும் மேற்பட்ட தங்க கட்டித் துண்டுகளை விழுங்கி சென்னைக்கு புறப்படவிருந்த 6 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி 7 பேரும் ஜெட் எயார் வேய்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுவதற்காக வந்த போது நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி 7 பேர் தொடர்பாக சந்தேகம் ஏற்படவே 7 பேரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டனர்.

சுங்க அதிகாரி சரத் நோனிஸ் தலைமையிலான குழுவினர் இவர்களை மீண்டும் விமான நிலையத்துக்கு அழைத்து வந்து உணவு நீர் வழங்கி கண்காணித்து வருகின்றனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் ஒரு பயணி மட்டும் தனது வயிற்றிலிருந்து 4 துண்டு தங்க கட்டிகளை வெளியில் எடுத்து சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். ஏனையோர் கண்காணிப்பில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கத்தின் பெறுமதி குறித்த மதிப்பீடு இன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

உடலுறுப்புகள் அறுக்கப்பட்டு 9 வயது சிறுவன் நரபலி!!

narapali

இந்தியாவில் பாடசாலைக்கு சென்ற 9 வயது சிறுவன் உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செல்லபெரும் புலிமேடு கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகன் மதன் ( 9). அங்குள்ள பாடசாலையில் 4ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல நேற்று முன்தினம் காலையில் பாடசாலைக்கு சென்றான்.

மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாடசாலைக்கு புறப்பட்டான். ஆனால், அவன் பாடசாலைக்கு சென்று சேரவில்லை. நீண்ட நேரமாகியும் அவன் வகுப்புக்கு வராததால் ஆசிரியர்கள் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு குளத்தில் மதன் இறந்து கிடந்தான். அவனது உடலை வெளியே எடுத்தபோது பெற்றோரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மதனின் இடது காது பிளேடால் அறுக்கப்பட்டிருந்தது. அவனுடைய உயிர் நாடியும் பிளேடால் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. உடல் முழுவதும் பிளேடால் வெட்டப்பட்டிருந்தது. பொலிசில் புகார் செய்யாமல் அவனது உடலை நேற்று முன்தினமே புதைத்து விட்டனர்.

நேற்று மதன் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவனுடைய பெற்றோர் தூசி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி மதன் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

சிறுவன் உடல் உறுப்புகளை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதால் நரபலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து தூசி பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.