என்னையும் கடத்தினார்கள் : பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

மலையாள நடிகரரான திலீப் கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வராத நிலையில் நடிகை பார்வதி “நானும் கடத்தப்பட்டுள்ளேன்” என்று கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தார். இதுபற்றி மேலும் அவர் கூறுவதாவது;

“எனது தோழி நடிகை கடத்தப்பட்ட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

ஏனென்றால் எனக்கும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. என்னை கடத்தியது யார் என்பதை இப்போதுகூட தெரிவித்து தண்டனை வாங்கித் தர முடியும்.

ஆனால் அதை நான் விரும்பவில்லை. அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். எனக்கு நடந்த சம்பவத்துக்காக நான் அழுதுகொண்டு மூலையில் உட்கார்ந்து விடவில்லை. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்’ என்றார் பார்வதி.

சொர்க்கத்திலிருந்து பார்ப்பான் : இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை!!

கேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில் தனது சகோதரர் பஹத் (13) மற்றும் அவர் நண்பருடன் சேர்ந்து கால்பந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது பந்து கடல் உள்ளே சென்ற நிலையில் பஹத் அதை எடுக்க சென்றுள்ளார். இதையடுத்து நீரில் மூழ்க தொடங்கிய பஹத்தை காப்பாற்ற அவர் நண்பர் சென்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரோஸ் வேகமாக தண்ணீரில் இறங்கி பஹத்தையும், அவர் நண்பரையும் காப்பாற்றினார், ஆனால் துரதிஷ்டவசமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிலர் பிரோஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பேசிய பிரோஸின் தம்பி பஹத், என்னை காப்பாற்ற முயன்று அவன் உயிரிழந்துவிட்டான். மீண்டும் அவன் என்னிடம் வரவேண்டும் அல்லா என சோகத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் மிகபெரிய கால்பந்து ரசிகரான பிரோஸ் அவனுக்கு பிடித்த பிரான்ஸ் அணி விளையாடிய அரையிறுதி போட்டியை சொர்க்கத்திலிருந்து பார்த்திருப்பான் என நபர் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடுவானில் நேருக்கு நேர் மோதவிருந்த இரு விமானங்கள் : நூலிழையில் உயிர் தப்பிய 330 பயணிகள்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில், இரு விமானிகள் நேருக்குநேர் மோதவிருந்த விபத்து 200அடி இடைவெளியில் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10-ம் தேதியன்று கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு 162 பயணிகளுடன் இண்டிகோ விமானமும், பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் புறப்பட்ட விமானமும் பெங்களூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேருக்கு நேர் மோதவிருந்துள்ளது.

இதற்கிடையில் 200 அடி இடைவெளியின் போது விமான மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் (TCAS) ஒலிக்க துவங்கியுள்ளது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமான ஓட்டிகள் உடனடியாக மோதலை தவிர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு, பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விமான விபத்து புலனாய்வு வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

வவுனியாவின் கின்னஸ் உலக சாதனையாளன் கணேஸ்வரனுக்கு பாடசாலை சமூகத்தால் மதிப்பளிப்பு!(படங்கள்)

அண்மையில்  உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip)  தயாரித்து கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன்  மற்றும் தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில்  கலந்து கொண்டு  வெண்கலம்  வென்று  இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும்  வவுனியா தமிழ் மத்திய  மகாவித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை  சேர்த்த மாணவன்  சிவானந்தன் கிந்துசன், பயிற்றுவிப்பாளர்  நவநீதன்   ஆகியோரை  கௌரவிக்கும்  நிகழ்வு  நேற்று  11.07.2018  புதன்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள்  பாடசாலை சமூகத்தினரால்   மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு  காலைப் பிரார்த்தனை வேளையில்  பொன்னாடை போர்த்தியும்  வாழ்த்துப்பா  வழங்கியும்  கௌரவிக்கும்  நிகழ்வும்  இடம்பெற்றது.

இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும்  வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் விளங்குவதுடன்  மேற்படி சாதனை நாயகனான  கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்கள்  தன்னுடைய இந்த சாதனைக்கு  காரணமான  கல்லூரி  தாய்க்கு தனது  உலக சாதனை  சான்றிதழை  சமர்ப்பணம்  செய்துள்ளார் . தன்னுடைய   சாதனை சான்றிதழை  கல்லூரியின் அதிபரிடம் கையளித்து பாடசாலைக்கு  பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தால் தெற்காசிய சாதனையாளன் கிந்துஷன் கௌரவிப்பு!(படங்கள்,வீடியோ)

கடந்த  06.05.2018 இல்  கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற  தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில்  கலந்து கொண்டு  வெண்கலம்  வென்று  இலங்கை வடமாகாணம் வவுனியா மாவட்டம் மற்றும்  வவுனியா தமிழ் மத்திய  மகா வித்தியாலயம் என்பவற்றுக்கு பெருமை  சேர்த்த மாணவன்  சிவானந்தன்   கிந்துசன், பயிற்றுவிப்பாளர்  நவநீதன்    மற்றும்  வவுனியா  தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவரான  கின்னஸ் சாதனையாளர்  கனகேஸ்வரன் கணேஸ்வரன்  ஆகியோரை கௌரவிக்கும்  நிகழ்வு  நேற்று  11.07.2018  புதன்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா  வித்தியாலயத்தில்  அதிபர்  திரு.தா.அமிர்தலிங்கம் தலைமையில்  இடம்பெற்றது.



மேற்படி நிகழ்வில் சாதனையாளர்கள்  பாடசாலை சமூகத்தினரால்   மலர்மாலை அணிவித்து பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு  காலைப் பிரார்த்தனை வேளையில்  பொன்னாடை போர்த்தியும்  வாழ்த்துப்பா  வழங்கியும்  கௌரவிக்கும்  நிகழ்வும்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் ஆசிய மெய்வல்லுனர்   தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் 5000m ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற  மாணவன் கிந்துசன்  அவர்களுக்கு  சிறப்பு  மாணவ முதல்வர் சின்னம்  சூட்டும்  நிகழ்வும்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்  பாடசாலையின் அதிபர், பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் : ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்!!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு அந்த கதிர்கள் நிலவின் மீது விழும், அதனால்தான் அது சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்றது.

இதன் காரணமாகத்தான் மற்ற சந்திர கிரகணங்களைப்போல இல்லாமல், இது பூமியின் நிழலை கடந்து நேரடியாக கடந்து செல்லுகின்ற வரையிலும் நம்முடைய பார்வைக்குத் தென்படுகின்றது.

இந்நிலையில், 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக நீண்ட சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இந்த நூற்றாண்டினது மிக நீண்ட சந்திர கிரகணமாகவும், அதிசயமாகவும் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் மீண்டும் இம்மாதம் 27ஆம் திகதி சந்திர கிரகணம் இடம்பெறவுள்ளது.

இந்த கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் இந்த கிரகணத்தை 27ஆம் திகதி பின்னிரவு முதல் 28ஆம் திகதி அதிகாலை வரை அனைவரும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திர முழுக்கிரகணத்தின்போது, சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோ மீற்றர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் இருக்கின்ற தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றுமட் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் வாழும் மக்கள் பார்க்க முடியும் என்பதோடு ஆர்ட்டிக் மற்றும் பசுபிக் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் இதனை பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் டெனிஸ் பந்தினை தூக்கி எறிந்து ஹெரோயின் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியாக பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெனிஸ் பந்திற்குள் நுட்பமான முறையில் 3.15 கிராம் ஹெரோயின் வைத்து குறித்தபெண் இந்த செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஹிருனி எல்விஸ் என்ற பெண் இந்த குற்றத்தை செய்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டமையினால் நேற்று இந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கையின் கையை பிடித்த இளைஞன் : கோபத்தில் சகோதரன் செய்த செயல்!!

திருகோணமலை பகுதியில் தனது தங்கையின் கையை பிடித்த நபரை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் பதினைந்து வயதுடைய தங்கை தனியார் வகுப்புக்குச் சென்று வரும் போது இளைஞர் ஒருவர் கையை பிடித்ததாக சிறுமி வீட்டுக்குச் சென்று தனது சகோதரன் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கையைப்பிடித்த இளைஞரை சிறுமியின் சகோதரன் தாக்கி காயப்படுத்தி உள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சிறுமியின் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தண்டவாளத்தில் தலையை வைத்து இரு யுவதிகள் தற்கொலை!!

கம்பஹா – தரலுவ பகுதியில் யுவதிகள் இருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும், நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.

யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் கம்பனிகள்!!

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்களும், மாணவர்கள் மத்தியில் சிகரட் பாவனை என்பது முட்டாள் தனத்தின் அடையாளம் என்ற விடயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் வளவாளராக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் அருளானந் இணைந்திருந்ததோடு சிகரட் பாவனையால் உதடு கறுத்தல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், பாலியல் பலவீனமடைதல், அசிங்கமான முகத்தோற்றம் ஏற்படல் போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

 

வவுனியா கண்டி வீதியில் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதால் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டியின் சாரதியும் அவரின் மனைவி மற்றும் ஒரு வயதுடைய மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

வெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். A9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டில் இருந்த போது அசிட் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்வதாக கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கணவர் தொடர்ந்து இவ்வாறு அச்சறுத்தும் நிலையில், பயத்துடன் இலங்கை வந்த பெண் கடந்த 8ஆம் திகதி கெக்கராவ, சுதர்ஷகமவில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று சகோதரனின் பிள்ளைக்கு சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று கைலபத்தான சந்தியில் முச்சக்கரவண்டியில் ஏற முயற்சித்த பெண்ணை கீழே தள்ளிய கணவன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் படுகொலை காரணமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியாவில் சூரியகலத்தினால் வரும் வெப்பத்தினால் பாதிப்புறும் மக்கள்!!

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் பெறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியகலத்தினால் அப்பகுதியில் அதிகளவு வெப்ப நிலை காணப்படுவதாகவும் இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் நோய்வாய்ப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும்,

எனவே இதிலிருந்து தமது கிராமத்தை மீட்டுத்தருமாறும் உடனடியாக காத்தார்சின்னக்குளம் பகுதியிலிருந்து குறித்த நிறுவனத்தை நிறுவனத்தை அகற்றுமாறும் அப்பகுதி கிராம மக்கள் கோரியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரியகலம் (சோளர்) மூலம் இலங்கை மின்சார சபையினருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக தமது இருப்பிடங்களுக்கு குறிப்பாக அப்பகுதி கிராமத்திலுள்ளவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும் சூழல் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் நோய்த்தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்,

வெப்பம் அதிகரித்து அப்பகுதி முழுவதும் வெப்பநிலை காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்த கிராம மக்கள் கோரியுள்ளார்கள்.

குறித்த சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு காவலாளி தமது கடமைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்து எமது வீடுகளில் நடைபெறும் அன்றாட செயற்பாடுகள், நடவடிக்கைகளை அவதானித்துவருவதாகவும் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் இது குறித்த முறைப்பாடு ஒன்றினை வவுனியா பிரதேச செயலாளரிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிடவுள்ளதாக காத்தார்சின்னக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு!!

 

வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம் (11.07) காலை தொடக்கம் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா குருமன்காட்டில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா குருமன்காடு சந்தி தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இன்று (11.07.2018) அதிகாலை திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் (பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத்தொடர்பகம்) இன்று காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதி (சீட்) கழற்றப்பட்டு கழவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து : ஒருவர் பலி, ஐவர் படுகாயம்!!

 

வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(11.07) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.