இலங்கையில் அதிசய பலா மரம்!!

இலங்கையில் அபூர்வ பலா மரம் ஒன்று வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுகன்னாவ, லகபுவ பிரதேசத்தை சேர்ந்த ஜயவர்தன என்பவரின் வீட்டிலேயே இந்த மரம் வளர்ந்துள்ளது.

ஜயவர்தன என்பவரின் தாத்தாவின் தாத்தாவால் இந்த மரத்தின் கன்று நாட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 வருடங்களாக தங்கள் தோட்டத்தில் வளரும் இந்த அபூர்வ பலா மரத்தினால் இன்னமும் பலர் பயன் பெறுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு முறை இந்த மரத்தில் பலா காய்கள் காய்ந்து தொங்கும் எனவும், இதனை வீதியில் செல்வோர் பறித்து செல்வதாக ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வழமையை விடவும் மிகவும் அதிகமான பலாப்பழங்கள் இந்த மரத்தில் காய்ப்பதே சிறப்பு அம்சமாகும்.

250 வருடங்களுக்கு பழைமையான ஒரு மரத்தில் இன்றும் பலன் பெறுவதென்பது ஒரு அபூர்வ விடயமாகவே கருதப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்!!

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலைமை காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கடவுச்சீட்டு ஒப்பந்தம், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் கொள்முதல் விதிகளை மீறி பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு வருடத்திற்கு 214 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 20 அல்லது 25 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளமையினால், பொதுமக்களின் 5300 கோடி ரூபாய் பணத்திற்கு நட்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதற்கு குறைந்த கட்டணம் பெற்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்காமல், பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்ககப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக சென்ற 16 வயதான திருச்செல்வம் கஜேந்திரன் என்ற மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று தற்போது பெற்றோரின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வருகின்றார்.

இவருக்கான மேலதிக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதற்கான நிதியுதவி இன்மை மற்றும் குடும்ப வறுமை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.

பாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி : ஏற்க மறுத்த பெற்றோர்!!

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி குறித்த மாணவி வீட்டிலிருந்து சென்றுள்ளார். எனினும் பாடசாலை செல்லாமல் சீருடையுடன் நொச்சியாகமத்திலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் தனது காதலனுடன் இருக்கும் போது, குறித்த பாடசாலையின் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையில் புத்தமதத்தினைப் போதிக்கும் பௌத்த பிக்குவும் பிடித்து தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் குறித்த இளைஞனின் பெற்றோரை விசாரணைக்கு வருமாறு பொரிஸார் அழைத்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் குறித்த மாணவியை பொலிஸார் தனது பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, அவர்கள் அம்மாணவியை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனென்றால் தனது மகளுக்கு காதல் விவகாரத்தில் பல முறை அறிவுரை செய்ததாகவும் அதற்கு அவள் கீழ்ப்படியவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அம்மாணவி 18 வயதுடையவர் என்பதால், அவரது காதலனிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை!!

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயர் தேசமான லண்டனிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி : வியப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

மஹியங்கனை ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டத்திற்காக மரம் ஒன்று வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு மரத்தின் ஓட்டையில் பாரிய பாம்பு ஒன்று தனது 28 முட்டைகளை பாதுகாத்துள்ள நிலையில் மஹியங்கனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அந்த பாம்பு மற்றும் முட்டைகளை கிராதுருகோட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரத்தை வெட்டி கீழே சாய்த்த போது மரம் ஆடியமையினால் பாம்பு பதற்றமடைந்து மரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதனை அவதானித்த மரம் வெட்டும் நபர் மஹியங்கனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அங்கு வந்த பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் தாய் மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ : பல ஏக்கர் காணி சேதம்!!

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது.

இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீவிபத்தில் 10 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் கருகின எனத் தெரிவிக்கப்பட்டது. தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கற்குழி பகுதியில் வீட்டின் கதவுடைத்து நகை,பணம் திருட்டு : ஒருவர் கைது!!

வவுனியா கற்குழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டின் கதவினையுடைத்து நகைகள், பணம் , தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்ற நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கற்குழி பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்றுள்ளது. திருவிழாவிற்கு வீட்டார் சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் கதவினையுடைத்து கைத்தொலைபேசி, பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

திருவிழா முடிவடைந்த பின்னர் வீட்டார் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் , மானிப்பாய் பகுதியினை சேர்ந்த 26வயதுடைய ( ஒரு பிள்ளையின் தந்தை) நபரொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீடுகளுக்கு சென்று தேங்காய் பிடிங்கிக் கொடுக்கும் வகையில் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை பார்வையிட்டதன் பின்னர் பிரிதொரு தினத்தில் வந்து களவாடி செல்வதாகவும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு , திருட்டுச் சம்பவ குற்றச்சாட்டில் பல தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவரெனவும் இவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகரில் கடந்த 2 வருடங்களில் 37 சட்டவிரோத கட்டடங்கள்!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் 37 சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாக நகரசபையினருக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கோரப்பட்ட தகவல்களுக்கு நகரபையினர் இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் நகரப்பகுதிகளில் 37 சட்டவிரோத கட்டடிங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நகரசபையில், கடந்த 24.05.2018 அன்று நடைபெற்ற சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அனுமதியற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதற்குப்பின்பும் கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சபையில் தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு 12 சட்டவிரோதக்கட்டிடங்களும் 2018ஆம் ஆண்டு தற்போது வரையில் 25 சட்டவிரோத கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் இவ்வருடமே மிகவும் அதிகரிக்கப்பட்ட 25 சட்டவிரோத கட்டிடங்கள் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியில் பதக்கம் வென்று சாதனை!!

அகில இலங்கை ரீதியில், கொழும்பு றோயல் கல்லூரியில் 01.07.2018 மற்றும் 02.07.2018 திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பதக்கங்களை வென்றுள்னர்.

அந்தவகையில் சண்முகநாதன் சஞ்சயன் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

அத்துடன் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற சான்றிதழையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

அதேபோல் விபுலானந்தா கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா நாகராஜா தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்களின் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், தேசிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் இருவர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் மேலும் சாதனை படைக்க முடியும் இருந்தபோதும் பயிற்சிக்கான உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள், அவைகள் நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் பல சாதனைகளை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார்.

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு!!

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் மொபிடெல் நிறுவனம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் இணைந்து வவுனியா நகர்ப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் நேற்று இரு பகுதிகளில் இடம்பெற்றது.

வவுனியா நகரை அழகுபடுத்தும் முதல் திட்டம் கடந்த மாதம் ஈரப்பெரியகுளம், கார்கில் பூட்சிட்டிக்கு முன்பாக என இரண்டு பகுதிகளில் பயணிகளின் நன்மை கருதி பேருந்து தரிப்பிட நிழற்குடை அமைக்கப்பட்டு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டம் நேற்று காலை வேப்பங்குளம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இரு பகுதிகளில் பேருந்து தரிப்பிட நிழற்கூடை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, நெளுக்குளம், ஓமந்தை, மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வவுனியா நகரசபைத்தவிசாளர், உப தவிசாளர், வர்த்தகர் சங்கத்தலைவர், செயலாளர், வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளால் பேருந்து தரிப்பிட நிழற்கூடை பகுதியில் மரம்நாட்டி வைக்கப்பட்டது. பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பொலிசாரால் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு!!

வன்னி பிராந்திய பொலிஸ் அலுவலகத்தின் ஏற்பட்டில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் A9 வீதியில் நேற்று (13.07) மக்கள் பாவனைக்காக பேரூந்து தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு அதிதிகள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவில் பொலிஸ் அலுவலகத்தின் அனுசரணையுடன் நான்கு பேரூந்து தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உப தவிசாளர் எஸ்.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

 இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு  13.07.2018 வெள்ளிகிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .

மேற்படி மகோற்சவத்தில்
13.07.2018 வெள்ளிகிழமை  நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
25.07.2018 புதன்கிழமை  சப்பர திருவிழாவும்
26.07.2018 வியாழக்கிழமை  காலை இரதோற்சவமும்
27.07.2018 வெள்ளிகிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற உள்ளது .

வவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியாவில் இன்று(13.07) பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முதல் வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் எதிர்பாரமல் தவறி கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சக பணியாளர்கள் இவரை உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த சிவா என்று அழைக்கப்படும் 30 வயதுடைய ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் தற்போது வசித்த வரும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சுயதொழில் கடன் திட்டம்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சியினை முடித்து வெளியேறிய மாணவர்கள், தாம் புதிதாக தொழில் ஒன்றினைத் தொடங்கவிருப்பின் அல்லது ஏற்கனவே தொழில் ஒன்றை ஆரம்பித்து நடாத்திச் செல்லும் மாணவர்கள் தமது தொழிலை விருத்தி செய்யவிருப்பின் இத்திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளமுடியும்.

நிகழ்ச்சித்திட்டம் : சுயதொழில்முயற்சியாண்மைக் கடன் வழங்கும் திட்டம்(SEPI)
பயனாளிகள் : 40 வயதிற்குட்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேர மாணவர்கள்
காலம் : 16 – 28.09.2018 (12 நாட்கள்)
இடம் : யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பண்ணை, புளியங்குளம்.

இணையவிரும்பும் மாணவர்கள் தமது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இல, தொலைபேசி இல மற்றும் செய்யவுள்ள அல்லது செய்கின்ற தொழில் போன்ற விபரங்களை 17.07.2018 ற்கு முன்பதாக [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்திலோ வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இத்திட்டமானது வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதனை கருத்தில் கொள்ளவும்.

மேலும் 12 நாட்பயிற்சி முடிவில் வியாபார முன்மொழிவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டு வங்கிகளிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதன் பிற்பாடு பின் தொடர்நடவடிக்கைகள் வவுனியா மாவட்டச் செயலகத்தினால் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தை நாடவும்.

தொடர்புகட்கு:
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
நெளுக்குளம்,
வவுனியா
024 222 3664, 024 222 6720, 024 205017

வவுனியாவில் எல்லைபுற தமிழர் நிலத்தை பாதுகாக்க இடம்பெயர்ந்தவர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற வேண்டும் : சத்தியலிங்கம்!!

வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைக்க முயல்கிறது.

இந்த நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியை வடக்கு மாகாண சபையும், த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முயற்சி செய்துவருகின்றார்கள்.

அதேவேளை எல்லைக்கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக்கிராமங்களில் குடியேறவேண்டும். இதன்மூலமே எமது பாரம்பரிய நிலங்களை பாதுகாக்கமுடியும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு மருதோடை வட்டாரத்தின் வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவிலுள்ள காங்சூரமோட்டை கிராமத்தில் நடைபெற்ற வீட்டுத்திட்த்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (11.07.2018) காஞ்சூரமோட்டை கிராமத்தில் 33 மீள்குடியேற்ற குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு மேலும் அவர் தெரிவித்தபோது, நாட்டில் ஏற்பட் அசாதாரண சூழ்நிலைகளினால் எமது மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியிருந்தனர். எனினும் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வசித்துவருகின்றனர்.

இதனால் எமது பாராம்பரிய கிராமங்கள் பல் மக்கள் இன்றி காடுகளாக காட்சி தருகின்றது. இதனை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயனபடுத்தி திட்டமிட்ட குடியேற்றங்களை நடாத்திவருகின்றது.

சிங்கள குடியேற்றங்களை தடுப்பது மட்டும் எமது நிலங்களை பாதுகாப்பதாக அமையாது. எமது பூர்வீக நிலங்களில் மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும்.

வவுனியா வடக்கில் தமிழ் மக்கள் தொகை குறைவாக உள்ளமையை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெறுபேறு நமக்கு உணர்த்தியுள்ளது. எனவே மக்கள் மீள்குடியேற முன்வரவேண்டும்.

நீங்கள் வரும்பட்சத்தில் உங்களுக்கான அடிப்டை வசதிகளை செய்து தர நாங்கள தயாரவுள்ளோம். மருதோடை வட்டாரத்தில் மீள்குடியேற விரும்புவர்களுக்கு வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்க தேசிய வீடமைப்பு அதிகார சபை தயாராகவுள்ளது.

அத்துடன் வாழ்வாதரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனமொன்று இந்தப்பகுதியில் விவசாயப்பண்ணை அமைக்க முன்வந்துள்ளது என்றார்.