இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எட்டு ஆண்டுகளுக்கு கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
போக்குவரத்துக் குற்றத்திற்காக சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க பொலிஸ் உத்தியோகஸ்தர் 3,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் இன்று தீர்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சாட்சிகள் சரியாக நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கே, 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திண்டுக்கலின் தென்னம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார், எனினும் ராதாவை முருகனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் ராதா மீண்டும் கர்ப்பமானார், இதற்கிடையே அடிக்கடி இருவருக்கும் தகராறு வந்தது. சில நாட்களுக்கு முன் முருகன் காணாமல் போக, அக்கம்பக்கத்தில் ராதா விசாரித்துள்ளார்.
அப்போது முருகனுக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் நடந்துள்ளதாகவும், தற்போது கூட வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய் விட்டதாகவும் கூறியுள்ளனர். முருகனின் பெற்றோரும் ராதாவை துரத்தி விட்டதால், மண்டபத்தில் வசித்து வரும் ராதா வடமதுரை பொலிசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தலைமறைவான முருகனை பொலிசார் தேடி வருகின்றனர்.
பிறந்து ஒரு மாதமான குழந்தையை உயிருடன் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் யூனிப்பீல்ட் தோட்டத்தில் வசித்து வரும் 28 வயதான பெண்ணோ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இந்த பெண் நேற்று முற்பகல் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க செய்துள்ளார்.
இதன் பின்னர், குப்பைகளை போட வெட்டப்பட்டிருந்த குழிக்குள் குழந்தையை வைத்து மண்ணை போட்டு மூடியுள்ளார்.
குழந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால், பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் குழந்தை பற்றி பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது தான் குழந்தையை குழிக்குள் போட்டு புதைத்து விட்டதாக பெண் கூறியுள்ளார். இதன் பின்னர், பெண்ணின் தாயும், உறவினர்களும் இணைந்து குழந்தையை தோண்டி எடுத்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பால் கொடுக்கும் போது குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் வைத்தியசாலையில் கூறியுள்ளனர். எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குழந்தையின் கழுத்து பகுதியில் மண் இருப்பதை கண்டு அது பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது கணவருடன் சுமார் ஒரு மாத காலமாக இருந்து வரும் தகராறு காரணமாக குழந்தையை உயிருடன் புதைத்ததாக பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவன், கண்டியில் தொழில் புரிந்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
சபரிமலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 28ம் திகதி ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது.
இதனை தொடர்ந்து பெண்கள் நுழைய முயன்ற போது போராட்டம் வெடித்தது, அந்நேரத்தில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ராஜேஷ் குருப் என்பவர் சபரிமலை ஐயப்பன் சிலையை நெஞ்சில் வைத்திருப்பது போலவும், காவல் துறையினர் அவரை காலால் எட்டி உதைப்பது போலவும், கழுத்தில் அரிவாள் வைத்திருப்பது போலவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலானது.
கடைசியில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்றும், போலியாக புகைப்படங்களை போட்டோஷாப் செய்திருந்ததும் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் கைது செய்தனர், இந்நிலையில் நேற்று இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது. இன்று கேரளாவில் பந்த் நடந்துவரும் நிலையில், ராஜேஷ் குருப் தன்னுடைய பாதி மீசையை எடுத்துள்ளார், இதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
குவைத்தில் மருத்துவ தாதியாக பணியாற்றி வரும் பிரபா என்பவர் 15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. தற்போது நான் குவைத்தில் மருத்துவ தாதியாக பணியாற்றி வருகிறேன். அங்கு பணி செய்தபோது, அங்கு பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.
அப்போது அவர் என்னிடம், தஞ்சையில் தொழில் செய்யலாம் என்றும் அதற்கு நிதி உதவி செய்யுமாறும் கூறினார். நான் அவரை நம்பி 15 லட்சம் கொடுத்தேன். மேலும், என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறார்.
உன்னுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டார், எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை வாங்கிதாருங்கள் என கூறியுள்ளார். என்னை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டல் விடும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியுள்ளார்.
பொலிசார் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பிரபாவை பொலிசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்,
சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது.
சங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் சிறப்பாக அலங்காரம் செய்ததாக அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நிரஞ்சனா கூறுகையில், முதலில் எனக்கு இந்தப் போட்டியில கலந்துக்கிற எண்ணமே இல்ல. ஏன்னா, என்னோட பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்த மாதிரி எந்த மொடலும் கிடைக்கவில்லை. பின்னர் நாம ஏன் இந்த வாய்ப்பை நழுவவிடணும், நம்மகிட்ட திறமை இருக்கு’னு தோணுச்சு.
போட்டிக்கான விதிமுறையில பெண்கள் மட்டுமே கலந்துக்கணும்னு இல்ல. அப்போதான் திருநங்கையான என் தோழி ஜீவாகிட்ட இது பத்திச் சொன்னேன். நான் ஒரு திருநங்கை. நான் எப்படி இதுல கலந்துக்க முடியும். நான் கலந்துக்கிட்டா உங்களால ஜெயிக்க முடியாது என சொன்னார். அதை நான் பார்த்துக்குறேன், நீங்க வாங்கன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனேன் என்ற வரை வழிமறித்து பேசினார் திருநங்கை ஜீவா.
அவர் கூறுகையில், ஆரம்பத்துலயே நான் நிரஞ்சனாகிட்ட சொன்னேன், நான் கொஞ்சம் கறுப்பானவ, பொண்ணுங்களை மாதிரி என் ஸ்கின் கிடையாது, நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க’னு சொன்னப்போகூட, என்னால முடியும் ஜீவா. பிரைடல் மேக் அப் போட்டா நீ ரொம்ப அழகா இருப்ப. நிச்சயமா சொல்றேன் நாமதான் வின் பண்ணுவோம்’னு நம்பிக்கையா சொன்னாங்க.
அங்க இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம் என சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசுல பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை. அப்படியே ஆடிப்போயிட்டேன். நிரஞ்சனா அவ்வளவு அழகா மேக் அப் போட்டு விட்டுருந்தாங்க.
இறுதியில் நான் ஜெயித்ததா சொன்னாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போயிடுச்சு என கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதிகமா ஜீவாவை ரசிப்பதை பார்க்க முடிந்தது. எல்லா ஈவென்ட்டும் முடிந்து விருது கொடுக்கும்போது நிரஞ்சனாவையும் ஜீவாவையும் மேடைக்குக் கூப்பிட்டார்கள்.
விருதை கையில வாங்கினதுக்கு அப்புறம் தான் ஜீவா அழுதுகிட்டே, தான் ஒரு திருநங்கை என கூறினார். அதை கேட்ட அனைவரும் அப்படியே ஆச்சர்யப்பட்டதை பார்க்க முடிந்தது.
சென்னையில் கண்டெய்னர் லொரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார்.
மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சாதிக் அலி தன்னுடைய மனைவி பர்வீன் (35), எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மகன் மாபூப் பாஷா (15) மற்றும் தந்தை அன்வர் (70), தாயார் அவாமாபி (65), பெரிய மாமனார் அகமது பாஷா (60) ஆகிய 5 பேரையும் ஆரணிக்கு காரில் அழைத்துச் சென்றார்.
வேலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரமுள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து அதிவேகத்தில் வெளியே வந்த டிரெய்லர் லொரி ஒன்று திடீரென எதிர்புறமாக திரும்பியது. கண் இமைக்கும் நேரத்தில் டிரெய்லர் லொரியில் கார் மோதி உருக்குலைந்தது.
காரில் இருந்த சாதிக் அலி உட்பட அவரின் குடும்பத்தினர் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
சுமார் 2 மணி நேரம் போராடி நொறுங்கிய காருக்குள் கிடந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனம் புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழை எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என முல்லைத்தீவு போக்குவரத்து பிரிவு பொலிஸார் இன்று அறிவித்தல் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு வரும் பொலிஸார் கடந்த காலங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி அட்டை ஆகியவற்றை மட்டும் பரிசோதித்து வந்த நிலையில் தற்பொழுது வாகன புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழையும் பரிசோதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவில் பெரும்பாலான சாரதிகள் குறிப்பாக மோட்டர் சைக்கிளில் பயணிப்போர் புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருக்க தவறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் போக்குவரத்து பொலிஸாரின் தீடீர் பரிசோதனையின் போது சாரதிகள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் சாரதிகளுக்கு புகைக்கசிவு தரநிர்ணய சான்றிதழை வாகனத்துடன் எடுத்துச் செல்லுமாறு போக்குவரத்து பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து சென்ற ஹையேஸ் ரக வான் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பஸ் சாரதி சம்பவ இடத்தில் பலியானார் என தெரியவருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.நிலாந்தன் தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினராகிய நாம் பல சுற்றி வளைப்புகளையும், சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தோம்.
அதனடிப்படையில் தை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தவறிழைத்த 655 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள், கம்பனிகள், கம்பனி முகவர்கள் எமது குழுவினரால் அடையாளங் காணப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை 611 வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டு அவற்றில் 595 வழக்குகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா நீதிமன்றத்தால் தண்டமாக அறவிடப்பட்டது.
குறிப்பாக வர்த்தகர்கள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், சிட்டுத்துண்டு இல்லாமல் அந்த லேபலில் போதிய விபரங்கள் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தல், பாதுகாப்பு கருதி எஸ்.எல்.எஸ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட பொருட்களுக்கு பதிலாக அச் சான்றிதழ் அற்ற பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தவறுகளை மேற்கொண்டமையினாலலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தவறிழைத்த வியாபாரிகளை இனங்கண்டு தண்டம் விதிப்பது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பல தரப்பினருக்கும் பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் கடமைகள், பாவனையாளர் சட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் முகமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளன.
வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 36 விழிப்புணர்வு நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 33 விழிப்புணர்வு நிகழ்வுகளும் பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் முகமாக 3 விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும் என வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமை மற்றும் ரூபாவின் விலையில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தற்போது வாகனங்களின் இறக்குமதியை மேற்கொண்டிருக்க முடியும்.
அவை பெப்ரவரி அளவில் இலங்கையை வந்தடைந்திருக்கும். எனினும் தற்போது அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களுக்கான விலைகளை தீர்மானிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17 ஆம் திகதி மேற்கொள்ள அமைச்சுத் தீர்மானித்துள்ளது.
வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு எதுவித அழுத்தம் கொடுக்காமல் இருக்க வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு அமைய செயற்படுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் சீருடையை வழங்கும்போது இடம்பெற்ற ஊழல் மோசடியைத் தவிர்த்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தை இடைத் தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக பாடசாலை மாணவர்களக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தச் சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நீர்க்கொழும்பு கொப்பரா சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
உயிருடன் எரிந்துகொண்டிருந்த நாயை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு கால் நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மீது விலங்குகள் குற்றவியல் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் கீழே கூறப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு திருமண பொருத்தம் கைகூடி வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்.
மேஷம் : செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு வீரத்தோடு விவேகமும் அதிகம் இருக்கும். குருபகவான் இந்த ஆண்டு சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை. எட்டாம் இடத்தில் உள்ள குருபகவான் உங்களின் குடும்ப ஸ்தானத்தையும், சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
விரைய ஸ்தானமான 12வது வீட்டின் மீதும் குருவின் பார்வைபடுகிறது. வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி பலவித நன்மைகளையும், பணவரவையும் தர உள்ளது. எட்டாம் இடத்தில் இப்போது உள்ள குருபகவான் 2019ஆம் ஆண்டு இறுதியில் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இது ஒன்பதாம் இடம் என்பதால் குருவின் பார்வை 5ஆம் பார்வையாக மேஷ ராசியின் மீது விழுகிறது.
எனவே 2019 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபலன் வருவதால் திருமண யோகமும், குழந்தை பாக்கிய யோகமும் கிடைக்கிறது. தேய்பிறை அஷ்டமி திதியில் ஸ்ரீ காலபைரவருக்கு சிவப்பு நிற துணியில் மிளகு மூட்டை கட்டி தீபம் ஏற்றலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயரை தரிசனம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம் : காதல் நாயகன் சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டில் அஷ்டமத்து சனி, ஆறாம் இடத்து குருவினால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது சம சப்தமாக விழுகிறது.
குருவின் ஏழாவது பார்வை திருமண யோகத்தை கொடுக்கிறது. காதல் மலரும் காலம் இது. மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். உற்சாக நினைவுகளுடன் வலம் வருவீர்கள். நீண்ட காலம் தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்கித்தவித்தவர்களுக்கு இந்த ஆண்டு வீட்டில் தொட்டில் ஆடும். சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு 60ஆம் கல்யாணம், பீமசாந்தி நடத்தி வைப்பீர்கள்.
இப்போது சனி எட்டில் இருப்பதால் சிலருக்கு அஷ்டம சனியின் பாதிப்பும் இருக்கிறது. 2019 அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சி அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். கடன் பிரச்சினைகளும், நஷ்டமும் ஏற்படம் என்பதால் திருமணத்தை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடித்து விடுங்கள். குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று குழந்தை கிருஷ்ணரை வணங்கி வாருங்கள் நன்மையே நடைபெறும்.
கடகம் : கடகம் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சனிப்பெயர்ச்சி அமோகமாக இருந்தது. அடுத்து வந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டு நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி அற்புத பலன்களை அளிக்கப் போகிறது. பணவரவு அமோகமாக இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும் காலம் இதுவாகும்.
திருமணம் முடிந்தவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் மாதம் நிகழப்போகும் குருப்பெயர்ச்சி ஆறாம் இடத்திற்கு வர உள்ளதால் உங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடத்தி வைப்பீர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்வது நல்லது. செவ்வாய்கிழமை முருகன் ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்யலாம்.
கன்னி : கன்னி புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. 2018ஆம் ஆண்டு அர்த்தாஷ்டம சனி ஒரு பக்கம் ஆட்டி படைக்க குருவின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் அதிகமாக இருக்கும். நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி சில சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மீனத்தை குருபார்வையிடுவதால் உங்களுக்கு காதல் கைகூடி வரும்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். சிலர் வீட்டில் தொட்டில் ஆடும் குவா குவா சத்தம் கேட்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்களுக்கு சுமாரான பலன்களையே தரப்போகிறார் என்பதால் கடவுளை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
நல்ல தசாபுத்தி நடந்தால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றவும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லவும்.
விருச்சிகம் : விருச்சிகம் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட வீர பராக்கிரமம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… கடந்த சில ஆண்டுகளாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறீர்கள். இப்போது பாத சனி வேறு பாடாய் படுத்தி எடுத்து வருகிறது.
ஜென்ம குரு உங்கள் ராசியில் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் என்றாலும் ஏழாம் இடத்தையும், ஐந்தாம் இடம், ஒன்பதால் இடத்தையும் குரு பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை செய்ய முயற்சி செய்யலாம் வெற்றிகள் கிடைக்கும். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரப்போகிறார்.
2 ஆம் இடத்தில் கேது அமர்வது சாதகமான அம்சம். பணவரவு அதிகமாகும் சனிபகவான் குடும்பஸ்தானத்தில் இருந்த போதிலும் அடுத்த ஆண்டு கூடவே கேது அமரப்போகிறார் அக்டோபர் குரு பெயர்ச்சி நிகழ்ந்து சனியோடு குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வது அதிக சாதகமான அம்சமாகும்.
மேலும் நன்மைகள் நடைபெற ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள் சிவபுராணம் படியுங்கள் அதிக நன்மை நடைபெறும்.
மகரம் : மகரம் சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே… ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். விரைய சனி என்றாலும் குருபகவான் உங்களை பாதுகாத்து வருகிறார். பணவரவு அமோகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் தடைபட்டிருந்த திருமணம் கைகூடி வரும். இதுநாள் வரை சிங்கிள் என்று ஸ்டேட்டஸ் போட்டவர்கள் இனி தைரியமாக உங்கள் ஜோடியுடன் ஹனிமூன் கிளம்பலாம். 2019ஆம் ஆண்டு நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சில நன்மைகளை ஏற்படுத்தும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு அக்டோபர் மாதம் வர உள்ளது சாதகமற்ற அம்சம் என்றாலும் உங்களின் விரைய செலவுகளை சுப செலவுகளாக மாற்றுங்கள். பாதிப்புகள் குறைய ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.
மீனம் : மீனம் குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே… 2018ஆம் ஆண்டு உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் இடத்து குரு, பத்தாம் இடத்து சனி என இருந்தாலும் பல நல்ல விசயங்களை பார்த்து இருப்பீர்கள். இதற்குக் காரணம் உங்களின் தசாபுத்தியும், கடவுள் பக்தியும்தான். குருபகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கைகூடி வரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். வரவிருக்கும் புத்தாண்டிலும் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெறப்போகிறது. பிப்ரவரியில் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பல சாதகமான அம்சங்களை தரப்போகிறது. அதே நேரத்தில் அக்டோபரில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்வது சில பாதகமான அம்சங்களை ஏற்படுத்தும். மேலும் நன்மைகள் நடைபெற வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்கவும்.
இலங்கையில் தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி பிடித்துள்ளமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் காணப்படும்.
எனினும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை முகாமைத்துவ திட்டத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டிய இடத்தில் சீன மொழி இணைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பெயர் பலகை முதலில் சிங்கள மொழியிலும் இரண்டாவதாக சீன மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. குறித்த திட்டம் மேல் மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திட்டமிட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.