சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் கைது!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது தொடர்பாக கோலாலம்பூர் பொலிஸ் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இத்தேடுதல் நடவடிக்கையின் போது 728 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட 425 பேரில் 394 பேர் ஆண்களும் 31 பெண்களும் உள்ளங்கியுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், இந்தோனேசியா, பாகிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிம்பாவே, நைஜீரியா, மற்றும் உகாண்டாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர.

கைது செய்யப்பட்ட 15 நைஜீரியர்களும், ஒரு உகாண்டா பெண்ணும் ஏழு மோசடி வழக்குளில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுவதாக பொலிஸ் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் தெரிவித்திருக்கிறார்.

இதில், முறையான ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலத்தை கடந்து தங்கியிருந்தமை, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்திருந்தமை உள்பட குடிவரவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் விரைவில் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் மரணம்!!

திருகோணமலை – லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்றிரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கனகராசா வசந்தகுமார் எனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனது நண்பருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவரது நண்பர் தங்கராசா விஜிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்கைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு கனகராசா வசந்தகுமார் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவரது சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

14 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ரோஜினி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரின் தாய் இரண்டாவது திருமணம் முடித்துள்ளதாகவும், தாயுடன் வளர்ந்து வந்த நிலையில் மனவுளைச்சல் காரணமாக இன்று இரவு வீட்டுக்குள் தூக்கில் தொங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தாய் இரண்டாவது திருமணத்தின் பின்னர் தன்னை குறைவாக பார்ப்பதினால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதனையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒக்டோரப் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வந்த்தார்.

ஒரு கட்டத்தில் ஜனாதபதியை “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்ற ரீதியிலும் பொன்சேகா பேசியிருந்தார். இந்நிலையில், புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி எதனையும் பொன்சேகாவிற்கு வழங்க போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கட்சி தாவி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துகொண்டவர்களுக்கும் அமைச்சு பதவி வழங்கப்போவதில்லை என இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

-தமிழ்வின்-

மைத்திரி தலைமையிலான மத்திய குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுந்தந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு இடம்பெற்றது.

இதன்போது சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்க கூடாது என அதிரடி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட மூவர் இன்று அரசாங்க தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை, சம்பூர் பகுதியில் 18 வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பதினெட்டு வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு தங்குவதற்கு வீட்டின் அரையை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலன் விளக்கமறியலிலும், காதலி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா ஆசை காட்டி பல இளைஞர்களை ஏமாற்றிய இந்தப் பெண் யார்? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

 

யார் இந்தப்பெண்?

கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ளை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.

குறித்த பெண் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

இந்த பெண் நாட்டில் தெரிவு செய்யப்படும் பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்கின்றார். அங்கு தான் வசதியான பெண் எனவும், பாதுகாப்பு கருதி வாடகை வீட்டில் தங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கனடாவில் வசிப்பதாகவும் யாரெனும் கனடா செல்ல ஆசையிருந்தால் அனுப்பி வைப்பதாகவும் அந்தப் பகுதி மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறார். அதற்கமைய குறித்த பெண் தங்கியிருக்கும் வீடுகளில் சுமுகமான உறவு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு மோசடியில் ஈடுபடுகிறார். கனடா அனுப்புவதற்காக முதலில் 5 லட்சம் ரூபா வழங்குமாறு கோருகின்றார்.

அதற்கமைய வழங்க வேண்டிய பணத்தை அனுப்புவதற்கு, கனடா செல்ல வேண்டியவர்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு ஒன்றை திறக்க வேண்டும். அதில் பணத்தை வைப்பு செய்துவிட்டு அதற்கான புத்தகம், ஏரிஎம் அட்டை, அதற்கான கடவு சொல் அனைத்தையும் அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் ஊடாக அவர் அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த வீடுகளில் இருந்து தப்பிச் சென்று விடுகின்றார்.

இந்த பெண்ணுடன், சிங்கள சினிமா நடிகரும் தொடர்புப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நடிகரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண் கனேடிய விசா பெறுவதற்கு 14 ஆம் திகதி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். விசா பெறுவதற்கான நேர்முக தேர்விற்கு செல்லும் போது அவர்களால் மோசடி செய்யும் நடவடிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம், 72 கடவுச்சீட்டுக்கள், 50 வங்கி வைப்பு புத்தகங்கள், 50 ஏ.டி.எம் அட்டைகள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

 

வீதிகளில் குப்பை

வவுனியாவிலுள்ள வீதிகளில் தமது வீட்டுக்கழிவுகள், வியாபார நிலையத்தின் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அதனைச் செயற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை உபபிதா சு.குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார்மகிழங்குளம் செல்லும் வீதிகளில் வீசப்பட்டுள்ள குப்கைளை அகற்றுவதற்கு அவரது தலைமையில் சென்று ஊழியர்கள் அதனை அண்டிய பகுதிகளை சுத்தப்படுத்தி வீசப்பட்டுள்ள குப்பைகளை அகற்றினர். இதனை மேற்பார்வை செய்யச் சென்ற நகர உபபிதா இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வீதிகளில் குப்கைகளை வீசுவதால் வீதியால் செல்பவர்களுக்கு பல அசௌரியங்கள் ஏற்படுகின்றது. இவ்வீதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமை கண்காணிக்கப்படவுள்ளதுடன் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று வீதிகளில் வீசப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பல ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதில் அவர்களின் முகவரிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது இவற்றை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். வீதிகளில் வீட்டுக்கழிவுகள், வியாபார நிலையங்களின் கழிவுகள், குறிப்பாக கோழிக்கழிவுகளே அதிகமான காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தமது பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும்போது நகரும் சுத்தமாகிவிடும் இவ்வாறு வீதிகளில் தமது குப்கைகளை வீசுவதால் உங்களுடைய பிள்ளைகளும் குடும்பங்களுமே பாதிக்கப்படவுள்ளன.

இவ்வாறன நடவடிக்கையினை இனிவருகாலங்களில் நிறுத்தி நகரசபை தொழிலாளர்கள் குப்பை அகற்ற வருபவர்களிடம் தங்களது குப்பைகளை கொடுக்கவும் அல்லது தத்தமது குப்பைகளை தமது வீடுகளில் போட்டு எரிக்கவும் அல்லது வெட்டி மண்ணில் புதைத்து விடவும். எமது நகரை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கணவனின் இரக்கமற்ற செயல்!!

 

புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஆந்திர மாநிலத்தின் குப்பத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவர் வேலு என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் இருவரும் ஒரே சாதி என்பதால் திருமணத்துக்கு குடும்பத்தார் சம்மதித்தனர். இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்னர் வேலு – சந்தியா திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தியாவை வேலு கொடுமைப்படுத்த தொடங்கினார். பைக் வாங்க ரூ.50,000 வேண்டும் என மனைவியை சமீபத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளார். காதல் கணவரின் செயலால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்தார்.

இதையடுத்து குடும்பத்தார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு சந்தியாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

அப்போது ஆம்புலன்சில் வேலுவும் இருந்த நிலையில் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இதையடுத்து வேலு, ஆம்புலன்சில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார். இதையடுத்து ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் வேலுவின் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சந்தியாவின் சடலத்தை அவர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய வேலுவை பொலிசார் தேடி வருகிறார்கள்.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர் : நடந்த கொடூரம்!!

 

நடந்த கொடூரம்

சென்னையில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரை அடுத்த எழில் நகரைச் சேர்ந்த பாபு(30) என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பாபு தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி விமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த விமலா, தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் பாபு அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாபுவின் வீடு காலையில் வெகு நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாபு மற்றும் விமலா இருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளனர். மேலும் இவர்களின் குழந்தைகளான கிஷோர்(6), தியா(4) ஆகிய இருவரும் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் படுக்கையில் சடலமாக இருந்தனர். அதன் பின்னர், நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குழந்தைகளை கொன்று விட்டு பாபு, விமலா இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது பாபு மூவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்துபோன ஒரே மகள் : பின்னணிப் பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்!!

 

பாடகி சித்ரா

பிரபல பின்னணி பாடகி சித்ரா இறந்துபோன தனது ஆசை மகளின் நினைவாக கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.

பாடகி சித்ரா, தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்துள்ளார்,

இவரது ஒரே மகள் நந்தனா 2011 ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். தனது ஆசை மகளின் நினைவாக கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.

இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது, சித்ரா, மகள் பற்றி பேசும்போது கண்கலங்கினார். பேசமுடியாமல் விம்மினார், பின்னர் பாடல் ஒன்றை மட்டும் பாடினார்.

தந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்!!

 

தந்தையால் கர்ப்பம்

El Salvador நாட்டில் மாற்றாந் தந்தையால் பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இமில்டா கோர்ட்ஸ் (20) என்ற இளம் பெண்ணை அவர் மாற்றாந் தந்தை பல ஆண்டுகளாக சீரழித்த நிலையில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கழிவறையில் இமில்டாவுக்கு குழந்தை பிறந்தது.

குழந்தையை இமில்டா அங்கேயே விட்டுவிட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது இமில்டா வேண்டுமென்றே கருக்கலைப்பு செய்து கொள்ள முயன்றார் என சந்தேகிப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

El Salvador நாட்டின் சட்டப்படி கருக்கலைப்பு என்பது மிக பெரிய குற்றமாகும். இதையடுத்து இமில்டாவின் குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது. மருத்துவர்களின் சந்தேகத்தின் பேரில் பொலிசார் இமில்டாவை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிமன்றம் இமில்டாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து இமில்டாவின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதாவது இமில்டாவுக்கு தான் கர்ப்பமானதே தெரியாது எனவும், குழந்தையை கொல்ல அவர் முயலவில்லை எனவும் வாதாடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்கொண்ட நீதிமன்றம் இமில்டாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து திங்கட்கிழமை இமில்டா விடுதலையானார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இமில்டாவின் உறவினர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூடியிருந்தனர். அப்போது இமில்டா மிகவும் உணர்ச்சிபூர்வமாக காணப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இமில்டாவின் மாற்றாந் தந்தை மீது நீதிமன்ற வழக்கு நடந்து வருகிறது.

சிறிய காயத்தை சாதாரணமாக விட்ட பெண் : எட்டு விரல்களும் அழுகிப்போன பரிதாபம் : எச்சரிக்கை!!

 

எச்சரிக்கை

சீனாவில் இடது கையில் ஏற்பட்ட சிறிய காயத்தை கவனிக்காமல் விட்டதால்,பெண்ணின் 8 விரல்களும் அழுகிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Hubei மாகாணத்தைச் சேர்ந்தவர் Zhang. 53 வயதான இவர் வீட்டு வேலை செய்த போது அவருடைய இடது கையில் சிறிய அளவிலான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.அதை கவனிக்காமல் அதற்கு எந்த ஒரு முதலுதவியும் செய்யாமல், சாதாரணமாக விட்டுள்ளார்.

இதனால் இரண்டு தினங்களுக்கு பின் அந்த காயம் பட்ட பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அது அப்படியே கைகளில் இருக்கும் அடுத்தடுத்து விரல்களுக்கு பரவி கை ஒரு கருப்பு நிறத்தில் அழுகி நிலையில் மாறியுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்ட போது, gangrene என்ற நோய் தொற்று என்று கூறியுள்ளனர்.

இந்த தோற்று மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இறக்க கூட நேரிடலாம், இது அதிகமாக விரல்கள், கால்விரல்கள் மற்றும் மூட்டுகளில் தான் தாக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். Zhang-க்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்பதாயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியை திருடிய மூவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை கிண்ணியாவில் முப்பதாயிரம் ரூபாய் பெருமதியான தொலைபேசியைத் திருடி வைத்திருந்த மூவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா, இடிமன், சின்னக் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 26,36, மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பகுதியிலுள்ள வீடொன்றினுள் முப்பதாயிரம் ரூபா பெருமதியான தொலைபேசியை இருவர் திருடி அதனை மற்றொரு சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார்கள்.

தொலைபேசி உரிமையாளர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய தொலைபேசியின் ரகசிய இலக்கங்களை பயன்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் உணவகங்களில் பணியாற்றும் 6 நோயாளர்கள் கண்டுபிடிப்பு!!

வவுனியாவிலுள்ள உணவகங்களில், உணவு கையாளும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு தொற்றை ஏற்படுத்த கூடிய நோய்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 11 சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் காணப்பட்ட உணவகங்களில் கடமையாற்றும், குறிப்பாக உணவு கையாளும் உழியர்கள் 382 பேருக்கு இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உணவங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு நெருப்பு காய்ச்சலும், 3 பேருக்கு காச நோயும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மீண்டும் அவர்கள் அதே உணவகங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் எதிரே வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிய குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.

விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று, இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.