மரண அறிவித்தல் : திருமதி இராசையா தவநாயகி!!

பிறப்பு : 05.03.1940 || இறப்பு : 14.12.2018

வவுனியா சின்னப்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வெளிக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தவநாயகி அவர்கள் 14.12.2018 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா முதலி, பத்தினியம்மாள் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முள்ளியவளை கந்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், இராசையாவின் பாசமிகு துணைவியாரும் ஆவார்.

காலஞ் சென்றவர்களான தங்கவேலு முதலி, சந்தான லட்சுமி மற்றும் சிவநாயகி, குணநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சத்தியபாமா, கெங்காதரன்(வருமான வரி பரிசோதகர்-வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை), கெங்கநாயகி (ஆசிரியை-வவுனியா பெரிய கோமரசன்குளம் ம.வி), பத்மலோஜினி(ஆசிரியை-சைவப்பிரகாச மகளிர் கல்லூரி), ஸ்ரீகாந்தன்(ஆசிரியர்-மூன்று முறிப்பு அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துரைசிங்கம்(இளைப்பாறிய முகாமைத்துவ உதவியாளர்-தேர்தல் அலுவலகம்), பால குலேந்திர குமாரி (மருந்தாளர்-வவுனியா பொது வைத்தியசாலை), பூலோகசிங்கம் (அதிபர்-வவுனியா இந்துக் கல்லூரி), நவரட்ணம் (இளைப்பாறிய ஆசிரியர்- வவுனியா விபுலாநந்தா கல்லூரி), கௌரி (ஆசிரியை-வவுனியா இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரோசன்(ஆசிரியர்-மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம்), நிரோசா(ஆசிரியை-மாதர்பனிக்கர் மகிழங்குளம் க.உ.வித்தியாலயம்),

ஹம்சாயினி(மருத்துவ பீட மாணவி-பங்களாதேஷ்), சாருஹாசினி (மின் இலத்திரனியல் இதய வரைபாளர்), நிவேதன்(விவசாய போதனாசிரியர்-முல்லைத்தீவு), ரிசோதன், சிபிஷா (மருத்துவ பீட மாணவி-யாழ் பல்கலைக்கழகம்), ஆரணி, இலக்கியா, இலக்சனா(மாணவிகள் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெளிக்குளம் இல்லத்தில் நடைபெற்று 16.12.2018 மாலை 3 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

வவுனியாவில் பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று(16.12) நடைபெற்றது.

இதன் போது நெற்செய்கையில் நவீன தொழில்நுட்பம் ,சோளம் மற்றும் நெற்பயிர்களை தாக்குகின்ற புழுக்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றைக்கட்டுப்படுத்தலும் நஞ்சற்ற உணவின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் விவசாய போதனாசிரியர்களால் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

நாம் பயிரிட்டு நாம் உண்போம் எனும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்லடியில் இயங்கிவரும் கட்டட நிர்மாணம் செய்யும் வேலைத்தள பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கூழாவடியை சேர்ந்த 55 வயதுடைய எஸ்.சிவசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கே.கணேஸதாசின் மரண விசாரணையினை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த வேலைத்தளத்தில் காவல் கடமையில் இருந்தபோதே இவர் உயிரிழந்துள்ளதாகவும் இவர் மாரடைப்பினால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமண தம்பதியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியர் விபத்திற்கு முகங்கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 99ஆம் மைல்கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னதுவ பகுதியில் வைத்து விபத்து இடம்பெற்ற நிலையில், காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு இம்பெற்றுள்ளது. மறுவீட்டு அழைப்பாக சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தல் போது வாகனத்தை மணமகன் ஓட்டிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி : குழப்பத்தில் ரணில் தரப்பு!!

இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடி நிலை தற்போது முடிவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிறைவேற்று அதிகாரம், மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்து வரும் சில நாட்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. இதன்போது முக்கிய அமைச்சு பதவிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை அல்லது நாளை மறுதினம் நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதான அமைச்சர் மற்றும் இராஜாங்க பதவிகள் பலவற்றை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களினால் இந்த அறிவுத்தல் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இதன் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம்.

இதன் காரணமாக தேசிய பாதுகாப்பு அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, ஊடக அமைச்சு உட்பட முக்கிய சில அமைச்சுக்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கொண்டு வர வேண்டும். மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்காக மாகாண சபை அமைச்சினையும் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையின் கீழ் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதெனவும், தேர்தலை பிற்போட்டு அரசியல் பழிவாங்கள்களை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியாமல் போகும் என அந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்னர்.

-தமிழ்வின்-

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மல்லாவியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வவுனியா, பறநாட்டாங்கல் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக மல்லாவி நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளும், யாழில் இருந்து ஏ9 வீதியூடாக சென்ற பட்டா ரக வாகனம் பறநாட்டாங்கல் பகுதிக்கு திரும்ப முற்பட்டவேளை மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த மல்லாவியைச் சேர்ந்த ந.வசந்தகுமார் (42 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டா வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்!!

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை குறித்த நண்பர் திரும்ப வழங்காமையால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் கைமாற்றாக வழங்கியுள்ளார்.

அப்பணத்தை மீளத் தருமாறு கடந்த சில நாட்களாக கோரிவந்த நிலையில் பணத்தை கடனாக பெற்ற நண்பர் பணத்தை வழங்காது இழுதடிப்பு செய்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த பணம் கொடுத்த இளைஞன் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் களைநாசினியை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

நெருக்கடி நிலையிலும் மகிந்த ராஜபக்ச செய்த சாதனை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நீடித்திருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டாட்சி முடிவுக்கு வந்ததாகவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அறிவித்துவிட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கிய அரசியல் குழப்பம், நாடாளுமன்றக் கலைப்பு, நீதிமன்றத்தடைகள் என்று பெரும் நெருக்கடியை நாடு சந்தித்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்ட வர்த்தமானியானது அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன்படி, அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரி, மகிந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள், ரணில் மைத்திரிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை என்பனவற்றை அடுத்து நாட்டில் நீடித்த அரசியல் குழப்பத்திற்கு முடிவுகிட்டுகிறது.

ஆனால், இலங்கை வரலாற்றில் ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என்னும் சாதனையை படைத்திருக்கிறார் என்றும் அரசியல் தரப்பினர் கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக, சந்திரிகா அம்மையார் காலத்தில் பிரதமராக பின்னர், ஜனாதிபதியாக இருமுறை இருந்து, தேர்தலில் தோற்று, பின்னர் பொதுத் தேர்தல் மூலமாக நாடாளுமன்றம் சென்று, இடையில் குறுகிய கால பிரதமராக இருந்து நீதிமன்றத்தடையையடுத்து பதவி விலகுகிறார்.

நாட்டில் குறுகிய கால பிரதமராக இருந்தார் என்பது மகிந்தவின் வரலாற்றில் பொறிக்கப்படும் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எதுவாயினும், இலங்கை வரலாற்றில் இரண்டு முறை பிரதமராகவும், இரண்டு முறை ஜனாதிபதியாகவும் இருந்த பெருமையும் மகிந்த ராஜபக்சவை சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

-தமிழ்வின்-

வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முறைப்பாடு!!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று (14.12) மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரையும் அம்முறைப்பாட்டிற்கு எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை, எனவே எற்கனவே எங்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக கோரிக்கை ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கையளித்திருந்தனர்.

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரி எம்.றோகித பிரியதர்சன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில், எங்களது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டு பல வருடங்களாகியும் மனித உரிமைகள் ஆணையம் பதில் வழங்கவில்லை இன்று அனைவரும் இணைந்து முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு பதில் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தனர்.

தணிகின்றது அரசியல் நெருக்கடி : மைத்திரி முன் பிரதமராக ரணில் பதவியேற்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது.

அதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கும் உயர்நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்புகள் மைத்திரி – மகிந்த கூட்டணியை நிலைகுலையச் செய்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, தனது பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளார்.

அவர் தலைமையிலான அமைச்சரவையும் நாளை கலையவுள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நடைபெற்றன.

இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே, ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வென்ற நபரை பிரதமராக நியமிக்கவேண்டும்.

இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் கடந்த 12ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டது.

எனவே, இனியும் இழுத்தடிப்புச் செய்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே தனது முடிவை மாற்றி ரணிலுக்கு வாய்ப்பை வழங்க ஜனாதிபதி மைத்திரி முன்வந்தார் எனக் கூறப்படுகின்றது.

மைத்திரி – மகிந்த எடுத்த முக்கிய முடிவு : மனம் திறந்தார் மைத்திரி!!

கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடன் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தின்போது மைத்திரி இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியுடன் பேசிவிட்டு பதில் தருவதாக சொன்னார்கள். ஆனால் இன்னமும் பதில் இல்லை. மறுபுறம் நீதிமன்ற வழக்குகள் தொடர்வதால் நாங்கள் எப்படி நடந்துகொள்வது என்று கட்சியுடன் பேசித் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச இன்று காலை என்னை சந்தித்து இந்த நெருக்கடி நிலைமை தொடரவிட்டு என்னை மேலும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லையென தெரிவித்து பதவி விலகுவதாக சொன்னார். நாங்கள் வேறல்ல, எதிர்க்கட்சியில் எங்களது கட்சி உட்காரும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

4 வது மாடியிலிருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் தற்கொலை!!

 

செய்தி வாசிப்பாளர் தற்கொலை

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டார் 77 பகுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் 4 வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா கௌஷிக் ( Radhika Kaushik) என்ற பெண்மணியே வியாழக்கிழமை இரவு அவரது அலுவலகத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 3:30 மணியளவில் இறந்துவிட்டார்.

ஆரம்ப விசாரணையின் போது, ​​சம்பவத்தின் போது, ராதிகா கௌஷிக் ​​ Rahul Awasthi என்பவருடன் இருந்ததாக தகவல் கூறப்படுகின்றன. இது தொடர்பாக Rahul Awasthi கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப விசாரணைகள் இருவரும் அபார்ட்மெண்டின் பால்கனியில் இருந்ததாக கூறப்பட்டதுடன், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் Rahul Awasthi கழிவறைக்கு சென்றபோது ராதிகா கட்டிடத்தின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக நொய்டா பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியை கொலை செய்யும் சதி : சாட்சியங்கள் இல்லையென பொலிஸார் தெரிவிப்பு!!

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான கடந்த மூன்று மாதங்களாக விசாரணைகளை நடத்திய போதிலும் அது சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய எவ்வித சாட்சியங்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ரொய்டர் செய்தி சேவையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் வசித்து வரும் நாமல் குமார என்பவர், ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரது தேவைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறியிருந்தார்.

நாமல் குமாரவின் இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார். இது நாட்டை மிகப் பெரிய அரசியல் நெருக்கடிக்கும், ஸ்திரமற்ற நிலைமைக்கும் தள்ள காரணமாக அமைந்தது.

-தமிழ்வின்-

பதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ!!

மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச, நீண்ட நேரம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சற்று முன்னர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவி வகிப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றமும் இன்றயை தினம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபையில் பணியாற்றும் இருவருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணமோசடி!!

வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பயிலுனராக பணியாற்றும் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் இருவரிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபையில் கடந்த 6 மாதங்களாக தற்காலிகமாக பணியாற்றும் பயிலுனர் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன உங்களுக்குத் தகுதியிருந்தால் அந்த வேலைகளைப் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை காட்டிப் பேசியுள்ளார்.

குறித்தநபர் பேசியதை நம்பிய இருவரும் வங்கி வேலைக்கு செல்வதற்கு முடிவு எடுத்துள்ளார்கள். அவர்களிடம் முற்பணமாக 5ஆயிரம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து இருவரும் 10ஆயிரம் ரூபாவினை வவுனியாவில் (ஈஸி காஷ்) செய்து பணத்தை செலுத்தியுள்ளனர். இதையடுத்து தொடர்புகொண்டு குறித்த நபர் மேலும் 10 ஆயிரம் ரூபா பணத்தை வைப்புச் செய்தால் திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் உடனடியாக அத்தொகையைச் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த இருவரும் மேலதிகமாக 10ஆயிரம் ரூபாவினைச் செலுத்தியுள்ளனர். இருவரும் மொத்தமாக 20ஆயிரம் ரூபா செலுத்திய நிலையில் குறித்த நபரின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சில தினங்களின் பின்னர் நிலைமைகளை நகரசபையின் உயர் அதிகாரி ஒருவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் நிலையத்தில் முதற்கட்டமாக முறைப்பாடு மேற்கொள்வதற்கு சென்றபோது பொலிசார் இழுத்தடிப்பு செய்துள்ளதுடன் முறைப்பாட்டினையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு முறைப்பாடு நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பிரதமர் பதவி : உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த தலைமையிலான குழுவினர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 16ம், 17ம், 18ம் திகதிகளில் மீண்டும் விசாரிக்கப்படும் என மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்