இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு முன்னதா, திருமண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது.
உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. உதய்பூர் விமான நிலையத்தில், மொத்தம் 200 விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. இவை அனைத்தும் ‘சார்ட்டட் பிளைட்ஸ்’ எனப்படும் சிறப்பு பயன் விமானங்கள் ஆகும்.
வீட்டு விசேஷம் நடைபெறவுள்ள இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் தலா 30-50 விமானங்கள் லேண்ட், டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள அனைத்து 5 நட்சத்திர விடுதிகளையும், அம்பானி குடும்பத்தினர் ஏற்கனவே புக் செய்து விட்டனர்.
அத்துடன் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வரவும், மீண்டும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவும் ஜாகுவார், பி.எம். டபிள்யூ, மெர்ஸிடெஸ் பென்ஸ், ஆடி கார்கள் மட்டும் 1, 000 சொகுசு கார்கள் புக் செய்யப்பட்டுள்ளன.
உதய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோர் நேராக மும்பை வருகின்றனர். அங்கு வரும் டிசம்பர் 12ம் தேதி அவர்களின் திருமணம் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இத்தாலியில் நடைபெற்ற நிச்சயதார்த்தம், உதய்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடிகளை தாண்டும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, உதய்பூர் விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கப் போகின்றன.
அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்டோர் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்கப் போகும் வெளிநாட்டு அரசியல் பிரபலங்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் களைக்கட்டப் போகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கும் நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் பலர், ஜனாதிபதியுடன் செல்பி புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
இளைஞர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியும் சளைக்காமல் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இரணைமடு குளத்தின் கட்டுக்களில் நின்ற இளைஞர்களே தமது கைப்பேசிகளில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஜனாதிபதியின் அதிரடி செயற்பாடுகள் காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக நாடு பெரும் நெருக்கடி நிலையை அடைந்துள்ளது.
இதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியே என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் இளைஞர்களின் செல்பி மோகம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து வைக்கப்பட்டன. இன்று காலை 11 மணியளவில் குறித்த வான்கதவுகள் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சுதாகரனின் கண்காணிப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
குளத்தின் மேல் பகுதியிலிருந்து வரும் அதிகளவான நீரை வெளியேற்றவும், எதிர்வரும் நாட்களில் கிடைக்க இருக்கும் மழை வீழ்ச்சியினால் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதை தடுக்கும் நோக்குடனும் இவ்வாறு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் தாழ் நிலபகுதியில் எவ்வித பாரியளவிலான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும், தாம் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
குருநாகல் – தம்புள்ளை வீதியில் கலவெல – கனாதன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்றும், வெங்காயத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்றும் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்தின் சாரதியும், இரண்டு பயணிகளுமே காயமடைந்துள்ளனர். பேருந்தின் அதிக வேகம் மற்றும் சீரற்ற காலநிலையால் வீதியில் வழுக்கிச் சென்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணி மனைவியின் கண் எதிரே 23 வயது இளைஞன் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவரராகபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது கவியரசன், இவரது மனைவி கோகிலா. டிசம்பர் 6 ஆம் திகதி காலை சுமார் 10 மணியளவில் தனது மனைவி கோகிலாவை மாதந்திர பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் மருத்துவரை காண காத்திருந்தபோது தனக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் சளி, இருமல், தொண்டைவலி என்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். கவியரசனை பரிசோதித்த மருத்துவர், ஊசி மருந்து ஒன்றை போட்டுள்ளார். ஊசி போட்ட சற்று நேரத்தில் கவியரசனுக்கு வாயில் நுரைத்தள்ளி, மூக்கில் ரத்தம் வந்துள்ளது.
உடனே அங்கிருந்து சோளிங்கர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் உடனடியாக வேலூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அங்கும் பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு முடியாது என்று சொல்லி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சுமார் 5.30 மணியளவில் கவியரசன் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடல் ஆய்கூறுக்கு அனுப்பப்பட்டு டிசம்பர் 7 ந்தேதி மாலை 2.30 மணியளவில் ஆம்புலனஸ் மூலம் சடலத்தை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதனிடையே கவியரசின் உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தவறாக சிகிச்சை அளித்த சோளிங்கர் தனியார் மருத்துவமனையை மூடக் கூறியும், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெறுவோம் என்று சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் சுமார் இரண்டு மணிநேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். கவியரசன் இறந்ததன் காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு நேற்று சென்ற நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் பேசிய அவர், சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன்.
இந்த வீட்டின் சொத்தை அபகரிக்க எனது தந்தை விஜயகுமார் முயற்சித்து வருகிறார். என் தந்தை விஜயகுமாரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க ஆணை பெற்றுள்ளேன்.
இப்படி எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் இன்று காலை 9 மணியளவில் என் வீட்டிற்குள் நுழைந்து என்னை கைது செய்வதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. காவல்துறையினரின் செயலால் நான் பயந்த நிலையில் இருக்கிறேன்.
எனவே முதலமைச்சரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்று முயற்சி செய்தேன். பின்னர் அவரது உதவியாளரை சந்தித்து எனது நிலைமையை எடுத்துக் கூறி முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனை சந்தித்து எனது புகார் மனுவை அளித்துள்ளேன்.
இனிமேல் காவல்துறையினரால் எனக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டேன். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் எனக் காவல் ஆணையர் என்னிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.
கோயம்புத்தூரில் குடிக்கு அடிமையான தந்தை இரண்டு பிள்ளைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபன் – செல்வராணி தம்பதியினருக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
செல்வராணிக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், ஒரு கை மற்றும் கால் முடங்கிப்போயிருக்கிறது. ஆகையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கச் சிரமப்பட்டுவந்துள்ளார் செல்வராணி. பத்மநாபனின் அம்மா பிரேமாதான் குழந்தைகளைக் கவனித்துவந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே பந்தமனாபனுக்கும் செல்வராணிக்கும் ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. பத்மநாபன் குடிக்கு அடிமையானதால், வீட்டில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பந்தமநாபன், செல்வராணியுடன் தகராற்றில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டு, வீட்டுக்கு வந்த பொலிசார் , இப்போ நீங்க இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்ல. உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு காலையில ஸ்டேஷன் வந்திருங்க என்று கூறி செல்வராணியை அவரது அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தனது பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிய செல்வராணி, தனது குழந்தைகளையும் கூப்பிட்டுள்ளார். ஆனால் குழந்தைகளோ… “அப்பா போதையில் இருக்கார். ஏதாச்சும் ஆகிரும்” நாங்க அப்பாகூடவே இருக்கிறோம் என்று செல்வராணியுடன் செல்ல மறுத்துள்ளனர்.
காலையில், செல்வராணியின் தாய் வீட்டுக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் அசைவற்று இருந்ததால் ,அருகில் சென்று அவர்களை எழுப்பிய பிரேமா அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக பொலிசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைகள் தூங்கும்போது தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்திருக்கக்கூடும் என்று காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடித்துவிட்டு சைக்கோவாக மாறிவிடும் பத்மநாதன் இப்படி குழந்தைகளை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த வீட்டின் மீது நேற்றிரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் குண்டுத்தாக்குதல் காரணமாக ஹயேஸ் வாகனம் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமுற்ற 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன் என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் யாழ். நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டு வீசப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி புதுவகையான நோய் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாம் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்க நடாத்தப்படும் போராட்டம்.225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பம் இட்டாலும் நான் ரணில் விக்ரமசிங்கவை பிரமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி கூறுவதை கேட்டு நாம் வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க சம்மதித்தால் அது ஜனநாயகத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறாத ஒரு கட்சிக்கு ஜனாதிபதி நினைத்ததை போல் பிரதமர் பதவியை வழங்க முடியும் என்ற மனநிலைக்கு மக்களை திசை திருப்ப இது வழிவகுக்கும். ஜனாதிபதி மேற்கொண்ட தவறான முடிவுகளால் இன்று நாட்டின் அரச தனியார் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஒருநாள் ஹிட்லர் போல் செயற்படுகிறார். அடுத்தநாள் மிஸ்டர் பீன் போல் நடந்துகொள்கிறார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் கலந்துரையாடும் போது எமது வாக்குகளால் வெற்றிபெற்ற ஜனாதிபதி போல் பேசுகிறார். அதன்பின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அதற்கு முற்றிலும் மாற்றமாக பேசுகிறார். அதிலும் காலையில் ஒரு பேச்சு மாலையில் இன்னொரு பேச்சு. உதாரணமாக அரசியல் நெருக்கடிக்கு 24 மணித்தியாலங்களில் தீர்வு காண்பதாக கூறியவர் அடுத்த நாள் ஒரு வாரத்தில் தீர்வு காண்பதாக கூறுகிறார்.
மொட்டில் இணைந்த அவரின் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என கூறி சில தினங்களில் மொட்டுடன் கூட்டணி என கூறுகிறார். சில நேரங்களில் ஜனாதிபதியின் பேச்சுகளில் மஹிந்த ராஜபக்ச, எஸ். பி திசாநாயக்க, விமல்வீரவன்ச, கம்பன்பில போன்றோர்களின் குரல்கள் வந்து செல்கின்றன. இவரது கையில் நிறைவேற்று அதிகாரம் இருப்பது குழந்தையின் கையிலுள்ள பொம்மையை போன்றுள்ளது.
தன்னால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை காட்ட முடியாது என அறிந்ததும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்டதில் தொடங்கிய அவரின் வர்த்தமானி நோய் இன்று அவர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த விழாவை புறக்கணிப்பதாக கூறிய ஹோட்டல் உரிமையாளர்களை பழிவாங்க வர்த்தமானி வெளியிட்டதில் வந்து முடிந்துள்ளது.
அவருக்கு கோபம் வந்தால் உடனே ஒரு வர்த்தமானியை நாம் எதிர்பார்க்கலாம். ஆகவே ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கும்போது அவர் புதுவகையான நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என எண்ண தோன்றுகிறது. எனவே ஜனாதிபதி சிறந்த வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுவது நாட்டு மக்களுக்கு நல்லது.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகளால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. கட்சியில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன. ஆகவே இனி நடைபெறும் எந்த தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வெற்றிபெறும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆனால் சட்டவிரோத அரசாங்கத்தின் கீழ் எந்த தேர்தலும் நடைபெற நாம் அனுமதியளிக்க முடியாது. இனி நடைபெறும் அனைத்து தேர்தல்களும் ஜனநாயக அரசின் கீழே இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் எமில்நகர் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் முதல் தடவை க.பொ.த உயர்தரத்துக்கு கணிதத்துறையில் தோற்றியிருந்தார். இருப்பினும் அவருக்கு முதலாவது தடவை பொறியியல் பாடத்திற்கு கிடைக்காததினால் மீண்டும் இரண்டாவது தடவை அதாவது கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
இதில் அவர் மொறட்டுவை பொறியியல் பீடத்துக்கு விண்ணப்பிப்பதற்கு உரிய புள்ளிகளை பெற்றதால் இணையம் மூலம் விண்ணப்பிக்க முயன்ற போது அவரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையம் அனுமதிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனும், பெற்றோரும் நேரடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற வேளையில் அங்கு குறித்த மாணவன் முதல்தடவை உயர்தரத்திற்கு இணையத்தினூடாக விண்ணப்பிக்க உள்ளதாகவும் அதன்படி முதல் தடவையிலேயே அவருக்கு வேறொரு பாடநெறி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்ட மாணவனும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்ததுடன் குறித்த மாணவன் விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனை தாம் விசாரிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
மனமுடைந்த நிலையில் இருந்த பெற்றோரும் மாணவனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் உதவியை நாடினர்.
ஆணைக்குழுவின் அதீத முயற்சியின் விளைவாக குறித்த மாணவன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டு அங்கு குறித்த மாணவன் முன்பு விண்ணப்பித்தமைக்கு சான்றுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டால் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவனும், பெற்றோரும் ஆணைக்குழுவிற்கு நேரடியாக வருகை தந்து பொறியியல் பிரிவில் பல்கலைகழகத்திற்கு செல்ல அனுமதியை பெற்றிருந்ததை தெரிவித்திருந்தனர்.
விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்ஷன மேற்பார்வையில் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராசா முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா திருநாவற்குளத்தின் இளைஞர் யுவதிகளுக்கான இலக்குகளை மேம்படுத்துகின்ற செயலமர்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவனின் வேண்டுகோளிற்கிணங்க நடைபெற்றது.
மேற்படி செயலமர்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நேற்று (07.12.2018) மாலை 5.30 மணிக்கு கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின் வளவாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரதிப்பதிவாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களின் தொழில்முறைக் கல்வியின் முக்கியத்துவம் வாழ்க்கையின் இலக்குகளை எவ்வாறு அடைவது தொடர்பான செயலமர்வை நடாத்தினார்.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வின் அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வவுனியா நகரசபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று (08.12.2018) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையினை கண்டிக்கின்றோம், தேசிய நல்லிணக்கத்ததை காப்பாற்றுவோம், 30 வருட யுத்தத்தினால் நாம் துயரப்பட்டது போதும், ஒன்றுபட்டு எழுந்திடுவோம் பிரதேச அபிவிருத்திக்காக கை கொடுப்போம், சமாதானத்தினை சீர்குலைக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய் போன்ற வாசகங்களை ஏந்தியவண்ணம் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய போராட்டமானது அமைதியான முறையில் ஈச்சங்குளம் 611வது இராணுவ தலைமையகம் வரை சென்றடைந்தது.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஞரை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, 611 வது பிரிவின் இராணுவத் தளபதி ஆகியோரிடம் கையளித்தனர்.
ஜனாதிபதி தேர்தலை தற்போது நடத்த அனுமதிக்கப் போவதில்லை என சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நானே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறான எந்த முடிவும் என்னிடம் இல்லை.
எனது பதவிக் காலம் முடிவடையும் வேளையிலேயே உரிய முறையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகி அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதற்கு அவர் தனது கணிசமான அரசியல் ஆற்றல்களைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான றொபேர்ட் பிளேக் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ராஜபக்சவினதும் அண்மைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதும் நல்லாட்சி மீதும் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதி தொடர்பில் வாஷிங்டன், புதுடில்லி, டோக்கியோவிலும் வேறு இடங்களிலும் மற்றும் முக்கியமான கேள்விகளைக் கிளப்பியிருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சாக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தோ – பசுபிக்கில் விரிவடையும் அரசியல், இராஜதந்திர மோதலும்’ என்ற தலைப்பில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் நேற்றைய தினம் பிளேக் எழுதிய கட்டுரையொன்று வெளியாகியிருக்கிறது. அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் தற்போதைய அரசியல் முட்டுக்கட்டைநிலை அடுத்த வருடம் ஒரு ராஜபக்சவின் தலைமையில் தெரிவுசெய்யப்படக்கூடிய அரசாங்கமொன்றுக்கு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அளிக்கக்கூடிய எதிர்கால ஆதரவுக்கு தங்களது தற்போதைய செயற்பாடுகள் கொண்டுவரக்கூடிய விளைவுகள் குறித்து மகிந்த ராஜபக்சவும் கோதாபய ராஜபக்சவும் சிந்தித்துப் பார்ப்பதற்கான முக்கியமான சந்தர்ப்பமொன்றை வழங்கியிருக்கிறது.
பிரதமர் ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு எதிராக இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களும் அரசாங்க அமைச்சுக்களுக்கு நிதியை நிறுத்துவதற்கான வேறு இரு தீர்மானங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற போதிலும், பதவியில் இருந்து இறங்க அவர் மறுத்திருக்கிறார்.
அவரின் இந்த மறுப்பு இலங்கையின் அரசியலமைப்பு மீது அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இருக்கக்கூடிய பற்றுதலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, தங்களதும் கட்சியினதும் எதிர்காலத்துக்கு அநாவசியமான சேதத்தை ஏன் அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியையும் கிளப்புகிறது.
இவ்வருட முற்பகுதியில் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சித்தேர்தல்களில் பெற்ற பெருவெற்றி இலங்கையில் அவர் தொடர்ந்தும் பெரும் செல்வாக்குடன் விளங்குகிறார் என்பதை தெளிவாக வெளிக்காட்டியது.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படக்கூடும். அதில் போட்டியிடமுடியாதவாறு அரசியலமைப்பு மகிந்த ராஜபக்சவை தடுக்கிறது என்றபோதிலும் அவரது சகோதரர் பலம்பொருந்திய ஒரு வேட்பாளராக நிற்கக்கூடும்.
ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் ராஜபக்சாக்கள் சிறப்பான உறவுகளைக் கொண்டிருந்தார்கள். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கும் வேறுபல பாரிய திட்டங்களுக்கும் சீனா நிதியுதவி செய்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணக்கப்படுகின்ற ‘ ஒரு மண்டலம், ஒரு பாதை ‘ செயற்திட்டத்தின் வள்ளன்மையை அனுபவிக்கின்ற நாடுகளுக்கு எச்சரிக்கைக்குரிய கதையாக மாறியிருக்கிறது.
இலங்கை கடன்களைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் போனபோது அந்தக் கடன்தொகைக்கு நிகரான பங்குகளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனக்குத் தருமாறு சீனா பேச்சுவார்த்தைகளை நடத்திப் பெற்றுக்கொண்டது.
அதற்குப் பிறகு மாலைதீவு, பாகிஸ்தான், மலேசியாவில் புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தங்களது நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு மண்டலம், ஒரு பாதையின் கீழான திட்டங்களில் இருந்து கிடைக்கப்போகின்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற வருவாய்கள் சீனாவிடமிருந்து தாங்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கு போதுமானவையாக இருக்குமா என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக அத்திட்டங்களை மீளாய்வு செய்யப்போவதாக அறிவித்தன.
அதேவேளை, ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டத்தை மேலும் கூடுதல் உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தென்சீனக்கடலின் சர்வதேசப்பரப்பில் கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கக்கூடிய வல்லமையை பெய்ஜிங்கிற்கு கொடுக்கும் திட்டங்களைத் தொடருகின்ற நிலையில், ஆசியாவில் உள்ள நாடுகள் அதிகரிக்கும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கிற்கு எதிராக சரிசம வலிமையைத் தோற்றுவிக்கும் தந்திரோபாயமாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் முக்கியமான நாடுகளுடன் நல்லுறவுகளை பேணுவதற்கான விருப்பத்தை கூடுதலாக வெளிப்படுத்துகின்றன.
இதன் பிரதிபலிப்பாக அமெரிக்காவும் இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவும் திறந்த, சுதந்திரமான , சுபிட்சமிக்க இந்தோ – பசுபிக்கை உறுதிசெய்துகொள்வதற்கான பரந்ததொரு இந்தோ – பசுபிக் தந்திரோபாயத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றன.
அபிவிருத்திக்கு வழிவகுக்கும் முதலீடுகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமொன்றை அமெரிக்கா இவ்வருட ஆரம்பத்தில் நிறைவேற்றியிருக்கிறது.
இதன் விளைவாக சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் என்ற புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஒரு மண்டலம், ஒரு பாதை திட்டத்துக்கு மாற்றாக நிதி வழங்கல் ஏற்பாடொன்றை வகுத்து வளர்முக நாடுகளில் முதலீடுகளை உத்வேகப்படுத்த அமெரிக்க கோர்ப்பரேட் நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் புதிய நிறுவனம் வழிநடத்தும்.
நல்லாட்சிக்கான நியமங்கள் பலவற்றை முறையாகப் பின்பற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவின் புதிய மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்தின் திட்டங்களுக்கு மேற்படி புதிய நிறுவனம் உதவியாக செயற்படும்.
இலங்கைக்கான புதிய மிலேனியம் சவால் கூட்டுத்தாபன செயற்திட்டம் ஒன்று பரிசீலனையில் இருக்கிறது. ஜப்பானும் வேறு நாடுகளும் தங்களது சொந்தத்தில் சர்வதேச உட்கட்டமைப்பு மற்றும் இந்தோ- பசுபிக் முன்முயற்சிகளை வகுத்திருக்கின்றன.
இலங்கை – இந்து சமுத்திரத்தில் கப்பல்போக்குவரத்து சந்தடி மிகுந்த கடல் வழிகளுக்கு நெருக்கமாக கேந்திரமுக்கியத்துவ அமைவிடத்தில் இருக்கிறது. படிப்பறிவுமிக்க சனத்தொகையைக் கொண்டுள்ளது.
அத்துடன் விடுதலை புலிகளுடனான போரின் முடிவுக்குப் பிறகு நல்லிணக்கத்தை ஏறற்படுத்துவதற்காக பயனுறுதியுடைய பல நடவடிக்கைகளையும் கடந்த சில வருடங்களாக எடுத்திருக்கிறது.
இத்தகைய அனனுகூலங்கள் காரணமாக புதிய இந்தோ- பசுபிக் முன்முயற்சிகளினால் பெரிதும் பயன்படக்கூடிய வாய்ப்பான நிலையில் அது இருக்கிறது.
ஆனால், ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ராஜபக்சவினதும் அண்மைய நடவடிக்கைகள் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி மீதான அவர்களின் பற்றுறுதி பற்றி வாஷிங்டன், புதுடில்லி, டோக்கியோவிலும் ஏனைய இடங்களிலும் பாரதூரமான கேள்விகளைக் கிளப்பியிருக்கினறன.
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள் இலங்கை மீது கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படக்கூடிய நிலையைத் தோற்றுவிக்கும். அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபை மீண்டும் ஜனநாயகக் கட்டியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தும் செயன்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.
எனவே இலங்கை அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் அமெரிக்க காங்கிரஸின் மேலும் தீவிரமான பரிசீலனைக்கு உட்படும் என்பதை எதிர்பார்த்தேயாகவேண்டும்.
அந்த அண்மைய நடவடிக்கைகள் பதிய சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்திடமிருந்தும் மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் இலங்கைக்கு கிடைக்கக்கூடிய நிதியை பாதிக்கக்கூடும்.
ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான போட்டியின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு உதவுவதை நோக்கி தனக்கிருக்கக்கூடிய கணிசமான அரசியல் ஆற்றலைப் பயன்படுத்துவதே விவேகமான செயலாக இருக்கும் என்பதையே மேற்கூறப்பட்ட நிலைவர ஆய்வு உணர்த்துகிறது.
அவ்வாறு அவர் செய்வாரேயானால், தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் புதிய அரசியல் மற்றும் இராஜதந்திர மோதல் விரிவடைகின்ற நிலையில் இலங்கையை வாய்ப்பான ஒரு அந்தஸ்தில் வைக்கவும் உதவமுடியும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை பழை என நீதிமன்றம் தீரப்பு வழங்கினால் பெரும்பான்மையை கொண்டிருக்கும் தரப்பினருக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும், எனக்கு பிடித்த ஒருவரே பிரதமராக இருக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
“மகிந்த ராஜபக்சவினால் எனக்கு ஒருவருக்கு மட்டுமே ஆபத்து. எனினும், ரணிலை பிரதமராக நியமித்தால் முழு நாட்டிற்குமே ஆபத்து. இலங்கையே காணாமல் போயிருக்கும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சபாநாயகருடன் பல தடவைகள் தொலைபேசி ஊடாகவும், நேரடியாகவும் கதைத்து பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி.
இதனிடையே, அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
எனினும், நான் மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இணங்க தயாராக இல்லை. இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை.
அதுவொரு முற்போக்கான விடயமாகும். அது குறித்து இப்போது முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஒருமாத காலமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நாட்டில் மணித்தியாலத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் நடைபெறுக்கின்றன. ஊடகவியலாளராகிய நீங்கள் பல செய்திகளை தெரிந்து வைத்திருப்பீர்கள்.
கடந்த ஐந்து வாரங்களாக இப்படித்தான் நடக்கின்றது. அடுத்த ஒருவருட காலப்பகுதியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அது குறித்து நாங்கள் எதுவும் கூறமுடியாது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு திகதி குறிப்பிடப்படாமல் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரையில், தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நேற்று நான்காவது நாளாகவும் நடைபெற்ற நிலையில், இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வழக்கின் தீர்ப்பினை நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை ஆட்சேபித்து ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14ம் நீதிமன்றங்களுக்கான வருடாந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு தீர்ப்பு வழங் கால தாமதம் ஏற்படுமாயின், நாடு பெரும் அபாய கட்டத்தை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அமைச்சுக்கள் அனைத்து செயற்பாடுகளும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவின் கீழ் செயலிழந்துள்ளன.
இந்நிலையில் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறான நிலை நீடிக்குமாயின் போதிய நிதியின்றி அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முதல் அனைத்து விடயங்களிலும் பாதிப்பு ஏற்படும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.