35 அடி நீர்மட்டத்தை எட்டியது இரணைமடு குளம்!!

வடக்கின் பாரிய குளமான இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 35 அடியை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணத்தின் விவசாயத்திற்கு பெரும் பங்காற்றும் முக்கிய குளமான இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் 2300 மில்லியன் ரூபா செலவில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பின் மூலம் வடமாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து குளத்தில் தற்போது 36 அடி வரையில் நீர் சேமிக்கக்கூடிய ஏது நிலைகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 35 அடிவரை உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இரணைமடு குளத்தினை வட மாகாணசபையின் முன்னாள் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

குளத்தில் 36 அடி வரை நீர் வந்த பின்னரே இரணைமடு குளத்தின் வான் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 35 அடி நீர் இரணைமடு குளத்தில் காணப்படுகின்றது.

இரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதைப் படியுங்கள்!!

 

கட்டாயம் இதைப் படியுங்கள்

ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது.

நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும்.

முக்கியமாக மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

இந்த மெலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது. தற்போது இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள், தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.

இந்த மெலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்பு இளம்வயதினருக்கு உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.

முதலில் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே இரவு தூக்கம் மிக மிக முக்கியமானதாகும்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் மூவர்கைது!!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைதடுப்புப் பிரிவினரால் ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சா இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 நபர்களையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (04.12) காலை யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிசார் சோதனை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கஞ்சாவினை தமது உடைமைக்குள் மறைத்துவைத்து கடத்திச்சென்ற நிலையிலேயே அவர்களை கைதுசெய்ததாக பொலிசார் தெரிவித்தனர் .

கைதுசெய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வேப்பங்குளத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் : அச்சத்தில் வர்த்தகர்கள்!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைக்கு முன்பாக இன்று (04.12.2018) இரவு 8.30 மணி தொடக்கம் வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதினையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையின் காரணமாக அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கிய போதிலும் 9.40 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தனர்.

சுமார் ஒன்றரை மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்திருந்தமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

பயங்கரவாதி என இலங்கை மாணவனை சிக்க வைத்த கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை மாணவனான மொஹமட் கமார் நிஷாம்டீனை சிக்க வைத்த ஒருவரை நியூ சவுத்லேண்ட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வீரரான உஸ்மான் கவாஜாவின் சகோதரரான அர்லான் கவாஜ் என்ற நபரையே அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக நிஷாம்டீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சுமார் ஒரு மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், குற்றச்சாட்டை ஒப்புவிக்க முடியாது போனதால், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து குற்றச்சாட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நிஷாம்டீன் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் மனநல மருத்துவர்கள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏதோ மனநோய் ஒன்றினால், பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் உணருவதாக கூறி, மனநல மருத்துவர்கள் சிலர் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி கடந்த சில மாதங்களாக நடந்துக்கொண்ட விதத்தை ஆராயும் போது தாம் இதனை உணர்வதாகவும் ஜனாதிபதியை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஏதோ ஒரு வகையில், ஜனாதிபதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போர் மற்றும் சமாதானத்தை அறிவிக்க முடியும். அப்படியான உத்தரவு எதனையும் பிறப்பித்தால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் இந்த மனநல மருத்துவர்கள் கருதுவாக கூறப்படுகிறது.

அதேவேளை அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, ஜனாதிபதிக்கு மருத்துச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் பாரியார் ஜெயந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

-தமிழ்வின்-

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்ட புதிய நெருக்கடி!!

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கைக்கு நீண்டகால வெளிநாட்டு அந்நிய செலாவணி கடன் வழங்குதல் தொடர்பான தரப்படுத்தலை B இல் இருந்து B நிலைமைக்கு குறைத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமரை நியமித்ததுடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, கொள்கைகளில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை, வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாமை, வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள ஆபத்து போன்ற காரணங்களின் அடிப்படையில், இலங்கை கீழ் நிலைக்கு தரப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில் இருந்து 2019 ஆம் ஆண்டு முதல், 2022 ஆமு் ஆண்டு வரையான காலத்தில் இலங்கை 20.9 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டும் என பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

மற்றுமொரு சர்வதேச கடன் தரப்படுத்த நிறுவனமான முடீஸ் நிறுவனம் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையை B1 நிலையில் இருந்து B2 வரை கீழ் இறக்கியது.

இந்த தரப்படுத்தல்கள் காரணமாக இலங்கை வெளிநாட்டு கடன்களை பெறும் போது அதற்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வாதிகாரியாக நடக்கவேண்டாம் : மைத்திரியை மிரட்டும் ரணில்!!

சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனத்தில் கொண்டு செயற்படவில்லையெனில் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அரசமைப்புக்கு முரணாக என்னைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றி அந்த இடத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார்.

பெரும்பான்மை பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவையையும் அவர் நியமித்தார். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை நாம் நிறைவேற்றினோம்.

ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக ஜனாதிபதி செயற்பட்டார். சர்வாதிகாரத்துடன் அவர் நடந்தார், நடக்கின்றார்.

இந்த நிலையிலேயே, நாம் நீதிமன்றத்தை நாடி சென்றோம். சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எனவே, இனியாவது ஜனாதிபதி திருந்தி நடக்க வேண்டும். அவர் நினைத்தபடி, அவரின் சொந்த விருப்பத்துக்கிணங்க பிரதமரைத் தீர்மானிக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். அந்த பெரும்பான்மை பலத்துடன் நாம் இருக்கின்றோம்.

இதை ஜனாதிபதிக்கு பல தடவைகள் புரியவும் வைத்துள்ளோம். எனவே, நாம் மீண்டும் ஆட்சியமைக்க ஜனாதிபதி வழிவிட வேண்டும்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நாம் போராடி வருகின்றோம். எமது நிலைப்பாடு சரியானது என்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் அரசமைப்பை மீறும் செயல் என அன்றே நாம் சுட்டிக்காட்டினோம். உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைத் தீர்ப்பும் அதை உறுதிப்படுத்தியது.

இங்கு சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளியோம். எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வாதிகாரியாக நடக்காமல் அரசமைப்பை பின்பற்றி நடக்க வேண்டும்.

இது தான் அவருக்கு அழகு. இல்லையேல் பெரும் விளைவுகளை அவரே சந்திக்க வேண்டி வரும். மக்கள் தம்முடன் தான் இருக்கின்றனர் எனக்கூறி அரசமைப்பை நீக்குவதற்கு ஹிட்லர் அன்று நடவடிக்கை எடுத்தார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் சட்டமொன்றை இயற்றினார். இவ்வாறு இங்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், மக்கள் தமது பின்னாலேயே நிற்கின்றனர் என்று வதந்தி பரப்புகின்றனர்.

நாம் அரசமைப்பை மதித்து நாட்டு மக்களின் நலன் கருதியே செயற்படுகின்றோம். எமது கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை. நாம் ஓரணியில் செயற்படுகின்றோம்.

ஜனாதிபதியின் விருப்பதுக்கிணங்க நாடாளுமன்றத் தேர்தல் தான் தேவை என்றால் சட்டபூர்வமான அரசு ஒன்று முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பின்னர் விசேட தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல நாம் தயார். தேர்தலுக்குப் பயந்தவர்கள் நாம் அல்லர். எந்தத் தேர்தலையும் அரசமைப்பின் பிரகாரம் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த இக்கட்டான நிலைமையில் அரசமைப்பை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அரசமைப்புடன் விளையாட வேண்டாம் என சகலரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதை மதிக்காவிட்டால் இருந்து பயன் இல்லை. ஜனநாயக கட்டமைப்பின் கீழ் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வேலை தேடிச் சென்ற யுவதி வீடு திரும்பவில்லையென முறைப்பாடு!!

வவுனியாவில் நேற்றுக் காலை வேலை ஒன்றிற்குச் சென்றுவிட்டு வருவதாகத் கூறிச் சென்ற 19 வயதுடைய யுவதி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று நேற்று இரவு 11மணியளவில் தந்தையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து வவுனியாவிற்கு வேலை தேடிச் செல்வதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததையடுத்து நேற்று இரவு 11மணியளவில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அதிகாலையில் வீடு புகுந்து திருட்டு : சந்தேகத்தில் ஒருவர் கைது!!

வவுனியாவில் நேற்று அதிகாலை வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் ஒருதொகைப்பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மேலும் பொலிசார் தெரிவிக்கும்போது, நேற்று அதிகாலை வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 12 பவுண் தங்கநகைகளையும் ஒரு இலட்சம் ரூபாவினையும் திருடிச் சென்றுள்ளார்கள்.

இதையடுத்து நேற்று காலை வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மேலும் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை பொலிசார் வலைவீசித் தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றத்தடுப்புப்பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக இளைஞர் யுவதிகளிடம் பேரம் பேசும் கும்பல்!!

வவுனியாவிலுள்ள பல தனியார் நிறுவனங்கள், நிலையங்களில் வியாபார சந்தையூடாகவும் ஏனைய முறைகளிலும் சேகரிக்கப்பட்ட தொழில் விண்ணப்பங்களை தமக்குத்தருமாறும் தனியார் வங்கி ஒன்றில் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாகவும் தொலைபேசியூடாக தொடர்புகொள்ளும் மர்ம நபர் ஒருவர் தங்களுடன் வேலை தேடுபவர்களை தொடர்புகொள்ளுமாறு கோரிவருகின்றார்.

இவ்விடயம் குறித்து குறிப்பிட்ட வங்கியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது போது அவ்வாறான செயற்பாடுகள் எவையும் குறித்த தனியார் வங்கியினால் இடம்பெறவில்லை என்றும் இளைஞர்கள், யுவதிகள் இதுகுறித்து ஏமாறவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவிலுள்ள சில தனியார் நிலையங்கள் நிறுவனங்களுக்கு தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி அவர்களிடமுள்ள தொழில் விண்ணப்பங்களை தமக்குத்தருமாறும் அவற்றில் தகுதியுள்ளவர்களுக்கு தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தொலைபேசியில் தெரிவித்து வருகின்றார்கள்.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டபோது க.பொ.த உயர்தரத்தில் இரண்டு பாடங்கள் சித்தி பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவதாகவும், கணனி அறிவு கட்டாயம் இருத்தல் அவசியம் என்பதுடன் வேலை பெறும் இளைஞர், யுவதிகள் தொடர்புகொண்டால் மேலதிக தகவல்களை வழங்குவதாக நபர் ஒருவர் தெரிவித்து வருகின்றார். அவரை யார் என்று கேட்டதும் தொலைபேசியை துன்டிப்புச் செய்துள்ளார்.

இதையடுத்து பெயர் குறிப்பிட்ட வங்கியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறான ஒரு செயற்பாடு தங்களது வங்கியினால் மேற்கொள்ளப்படவில்லை. சிலரின் ஏமாற்று நடவடிக்கையில் குறிப்பாக யுவதிகள் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வீதியில் சொகுசு வாகனம் விபத்து : 6 பேர் படுகாயம்!!

வவுனியா திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஹெப்பிட்டிக்கொலாவ பொலிஸ் பிரிவில் 13ஆம் கட்டைப்பகுதியில் மாலை 4.30 மணியளவில் அதிகவேகம் காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணம் மேற்கொண்டவர்களில் 6பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வரலாற்றில் இடம்பிடித்த மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கையில் ஒரு முறையில் குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் செயற்பட்ட நபராக வரலாற்றில் இணையும் சந்தர்ப்பம் தற்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் குறைந்த காலங்கள் பிரதமர் பதவியில் செயற்பட்டவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவே காணப்பட்டார்.

அவர் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை பிரதமராக செயற்பட்டார். மொத்தமான அவர் 85 நாட்கள் பிரதமராக செயற்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச இம்முறை 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக பெயரிடப்பட்டார்.

எனினும் அவர் பிரதமராக பதவியேற்று நாடாளுமன்றத்திற்கு வந்த முதல் நாளில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் அதனை ஜனாதிபதி நிராகரித்தார். அதற்கமைய அவருக்கு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை பதவியில் செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இன்றைய தினம் அவருக்கும் அவரது அமைச்சரவையும் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதற்கமைய மஹிந்த ராஜபக்ச இம்முறை 38 நாட்கள் மாத்திரமே பிரதமராக செயற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

நீதிமன்றின் உத்தரவை ஏற்றுக் கொண்ட மைத்திரி : 24 மணித்தியாலத்திற்குள் புதிய பிரதமர்!!

பிரதமர் நியமனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, உரிய நடவடிக்கையை எடுக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து நாளைய தினம் மேன்முறையீடு செய்யப் போவதாக அறிக்கை ஒன்றின் ஊடாக மஹிந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மகிந்த திடீர் நடவடிக்கை!!

 

மகிந்த திடீர் நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் இணங்கவில்லை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையிலேயே, குறித்த தடை உத்தரவை தாம் ஏற்கப் போவதில்லை என மகிந்த விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

வவுனியாவில் தடையை மீறி நடைபாதை வியாபார நிலையம் சீரமைப்புப்பணிகள் : நகரசபை மீது விசனம்!!

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நகரசபை தலைவர் அதில் எவ்வித அக்கறை அற்ற நிலையிலும் கவனிப்பாரற்ற நிலையிலும் செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற கோரிக்கைகள் பலவும் விடுக்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையின் செயற்பாடுகள் காரணமாக அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சில வியாபார நிலையங்களில் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் சம்பவ இடத்திற்குச் சென்ற உப நகர பிதா சு.குமாரசாமி தற்காலிகமாக சீரமைப்புப்பணிகளை நிறுத்த வைக்குமாறும் நகரபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் சீரமைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபாதையிலுள்ள வியாபார நிலையங்கள் அனைத்திற்கும் கூரைத்தகடுகள் அமைக்கப்பட்டு உயரமாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் நகரசபையினர் எவ்விதமான நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. நடைபாதை வியாபார நிலையங்களுக்கு சார்பான நிலைப்பாட்டிலிருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து நகர உப பிதாவிடம் கேட்டபோது, அன்றைய தினம் அங்கு சென்று சீரமைப்புப்பணிகளை நிறுத்துமாறு தெரிவித்திருந்தோம். இன்று நகரசபை தலைவர் அலுவலகத்திற்குச் சமூகமளிக்கில்லை. இது குறித்து அவருடன் கலந்துரையாடிவிட்டு நாளைய தினத்தில் பதில் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நகரசபைத்தலைவர் பள்ளிவாசல் நடைபாதை வியாபார நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியுள்ளார். அவர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்துள்ளமையினால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளமுடியவில்லை என்று கடந்த மாதம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடச் சென்ற இளைஞர்களிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.