அபாய கட்டத்தில் இலங்கை : அமெரிக்கா அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொறுப்புணர்ச்சியுடனும், துரித கதியிலும் நாட்டில் நிலவி வரும் குழப்ப நிலைமைகளுக்கு அரசியல் தலைமைகள் தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா இலங்கையின் எந்தவொரு அரசியல் தரப்பிற்காகவும் குரல் கொடுக்கவில்லை எனவும், குழப்ப நிலைமைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் நெருக்கடி நிலைமைகளினால், சர்வதேச நாடுகளின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் சமூகப் பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வெளிப்படைத்தன்மையுடன் சட்ட ரீதியான ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் போட்டியில் எந்தவொரு தரப்பினையும் ஆதரிக்கவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்ப நிலைமைகளினால் நாட்டுக்கு பாரியளவில் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் முதலீட்டாளர்கள் அபிவிருத்தி பங்குதாரர்கள் போன்றோரின் நன் மதிப்பினை மீளப் பெற்றுக் கொள்வதற்கு சில காலங்கள் காத்திருக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் இறைமைக்குள் அமெரிக்கா தலையீடு செய்யப் போவதில்லை எனவும், ஜனநாயக விழுமியங்களை மதித்து செயற்பட வேண்டியது அரசியல் தலைமைகளின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் கண் அறுவைசிகிச்சை முகாம் மூலம் 135 பேர் பலனடைந்தனர்!!

கண்புரை அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 135 நோயாளர்களிற்கு இருநாட்களில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கந்தசாமி செந்தூர்பதிராஜா தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்..

வவுனியாவில் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கண்சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் கண்புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு காத்திருப்போரின் பட்டியல் நீண்ட எண்ணிக்கை உடையதாக காணப்படுகின்றது.

எனவே அவர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களிற்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் செயற்திட்டம் ஒன்று கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. இரு தினங்களிலும் 135 நோயளார்களிற்கு வெற்றிகரமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளபட்டுள்ளது.

குறித்த சிகிச்சையானது சுகாதார அமைச்சினால் அனுப்பட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா பாணகல தலைமையிலான வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்களை கொண்டகுழுவே சத்திரசிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சத்திர சிகிச்சைக்கான நிதி உதவியை புணர்வாழ்வும், புதுவாழ்வும் (Assist Resettlement Renaissance) என்ற நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சத்திரசிகிச்சை மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்றதாக கூறும் வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர், வசதி வாய்ப்புகளற்ற ஏழை மக்களிற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதன் ஆரம்ப நிகழ்வு கடந்தவாரம் 1ம், 2ம், திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா, புணர்வாழ்வும், புதுவாழ்வும் நிறுவனத்தின் முக்கியஸ்தர் சர்வேஸ்வரன், வவுனியாவிற்கான இணைப்பாளரான நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா, ஹென்றி, மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது முகாம் எதிர்வரும் ஏழாம், எட்டாம் திகதிகளிலும் வவுனியாவில் மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்!!

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்று (05.12.2018) காலை 9.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினரால் நினைவுகூரப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் தமிழருவி சிவகுமார் அவர்களின் சொற்பொழிவுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உடுபுடவைகள் தமிழ் விருட்சம் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஆறுமுகநாவலரின் நினைவுத்தூபிக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.

இன் நிகழ்வின் போது தமிழ் விருட்சம் அமைப்பினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதினைந்து பேருக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா ஆசிரியர்கள் மூவருக்கு தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!

அறநெறிக் கல்விக்கு தமது அர்ப்பணிப்பான சேவையை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் அறநெறி ஆசிரியர்கள் 100 பேரிற்கும் இலங்கை நாட்டின் இந்துசமய அறநெறிக்கல்விக்கு உன்னதமான பங்களிப்பை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் இந்துசமய அறநெறிப் பாடசாலைகள் 100 இற்கும் தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிக்கும் தேசிய விருது வழங்கும் விழா நேற்றையதினம் பி.ப. 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் கொழும்பு 04 இல் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் போது வவுனியா மாவட்டத்தில் மூன்று அறநெறி பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டதுடன் மூன்று ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த அறநெறி பாடசாலைக்கான விருதினை சிந்தாமணி பிள்ளையார் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அறநெறிப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் பெற்றுக்கொண்டதுடன் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான விருதினை திருமதி கே.லோகவள்ளி (மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை) , திருமதி என்.சிவகங்கை (அரசடிப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை) , திருமதி ஜெ.விஜிதா (விளாங்குலேஸ்வரர் அறநெறிப்பாடசாலை) பெற்றுக்கொண்டனர்.

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

இன்றுமாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் தேடியுள்ளார். இதன்போதே கிணற்றில் மகன் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.

பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் செல்வம் (வயது 40) என்ற நபரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 196வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

ஆறுமுகநாவலரின் 196 வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன், தமிழ்த் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் ரவி, தமிழருவி சிவகுமார் மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொதுமக்கள் , நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணியப்பட்டதுடன் திருவருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வேகத்தை குறைக்க பொலிஸாரின் புதிய யுக்தி!!

போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான புதிய யுக்தியொன்றை இன்று (06.12) வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ9 பிரதான வீதியில் பொலிஸ் அதிகாரிகளின் உருவங்களையொத்த பொம்மைகளை வடிவமைத்து வீதியோரங்களில் பொருத்தியுள்ளனர்.

இவ்வாறு பொருத்தப்பட்ட பதாகைகள் வாகன சாரதிகளுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் நிற்பது போன்று காட்சியளிப்தனால் வாகனங்களின் வேகத்தை குறைப்பதோடு இந்த வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்த்துள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் ஹெரோயின், கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற ஐவர் கைது!!

வவுனியா ஓமந்தை பகுதியில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சாவினை வாகனத்தில் கடத்திச் சென்ற ஐவரை இன்று (05.12.2018) அதிகாலை 12.10 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வாகனத்தில் கேரள கஞ்சாவினை கொண்டு செல்வதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த வாகனத்தினை ஒமந்தை பகுதியில் வைத்து மறித்துள்ளனர்.

இதன் போது வாகனம் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. வாகனத்தினை பின்தொடர்ந்த பொலிஸார் வாகனத்தினை மடக்கிப்பிடித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சோதனை நடவடிக்கையின் போது வாகனத்தினுலிருந்து 2கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் இரண்டு கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் வாகனத்தில் பயணித்த பரந்தன் மற்றும் திருகோணமலை பகுதியினை சேர்ந்த 30, 29, 18, 36, 45 வயதுடைய ஐவரை கைது செய்துள்ளதுடன் வாகனத்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ். வைத்தியசாலையில் பெண்களின் அட்டகாசம் : சினிமாவை மிஞ்சிய செயற்பாடு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போன்று நடித்து இருவர் திருட்டில் ஈடுபட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த தன்னியக்க கமாரா மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து சத்திர சிகிச்சை கூடத்திற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட வைத்தியர்கள் அணியும் ஆடைகளை அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருட்டில் ஈடுபட்டு போது அங்கிருந்தவர்களால் குறித்த பெண்கள் மடக்கி பிடிக்கப்பட்ட போதும், ஒரு பெண் தப்பிச் சென்றுள்ளார்.

பிடிப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வேளையில் அவரும் தப்பிச் சென்றுள்ளார்.

வெளியில் காத்திருந்த இளைஞனுடன் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.

இது குறித்து யாழ். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னியக்க கமராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகுப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தலைப்பகுதி முற்றாக சிதைவடைந்துள்ளதன் காரணமாக சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் இருப்பதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சடலத்தின் அருகில் டோர்ச் லைற் ஒன்று கிடைந்ததாக சடலத்தை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் ரயில்வே பகுதியினரால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் போன்று மாறிய இலங்கை : ஆபத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் மைத்திரி!!

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளில் வந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நெருக்கடி என்று எதுவுமில்லை. அரசியல் உறுதியற்ற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற நெருக்கடிகள் ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன், இத்தாலியிலும் ஏற்பட்டுள்ளதாக மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் உறுதியின்மை எங்களுக்கு ஒரு புதுமையான விடயம் என்றாலும், வெளிநாட்டு நாடுகளுக்கு அப்படியில்லை.

ஜேர்மனியில் ஆறு மாதங்களாகவும், இத்தாலியில் 5 வாரங்களாகவும் அரசாங்கம் இருக்கவில்லை. அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேன்புல் ஒரே இரவில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி ஒரு வாரத்துக்குள் தீர்ந்து வந்து விடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக இலங்கையில் அரசியல் ஸ்திரமன்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், தற்போது அரசாங்கமே இல்லாமல் போயுள்ளது.

வலுக்கட்டாயமாக பிரதமரை மாற்றியமை, நாடாளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்திரி துரோகி, பைத்தியக்காரன் : நாடாளுமன்றில் விளாசித் தள்ளிய பொன்சேகா!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சரத் பொன்சேகா எம்.பி., ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். ஒருகட்டத்தில் பைத்தியக்காரன்’ என்று கூட விளாசித்தள்ளினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என் பெயரை விளித்து விமர்சித்துள்ளார். 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால் இவ்வாறு கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதி போல் செயற்பட்டிருக்கமாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் காலை வாரியிருக்கமாட்டேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன்.

வாரம் ஒருதடவை வெளிநாட்டுக்குப் பயணம் செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை ஜனாதிபதி தாத்தா என்று பெயர் வைத்து மகளின் பெயரில் வெளியிட்டிருக்கமாட்டேன்.

இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி மைத்திரி பேசி வருகின்றார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும்.

இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சை பெற்றாலும் பரவாயில்லை. அதற்கு ஏற்றவகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம் என்றார்.

-தமிழ்வின்-

மகிந்தவுக்கு மீண்டும் துரோகம் செய்த மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 அறிவித்தல்கள் சட்டவிரோதமானது.

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது சட்டரீதியானது என்ற போதிலும் ஜனநாயக விரோத செயல். அரசியலமைப்பு பேரவை உயர் நீதிமன்றத்தில் வெற்றிடமாக இருக்கும் இரண்டு நீதியரசர்களை நியமிக்க பரிந்துரைத்துள்ள போதிலும் ஜனாதிபதி இன்னும் அந்த நியமனங்களை வழங்கவில்லை.

இரண்டு பேருக்கு இடையிலான பிரச்சினை காரணமாக நாடு அதளபாதாளத்திற்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நான் நாட்டையும் தீ வைத்து எரித்து விட்டே செல்வேன் என ஜனாதிபதி, அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார். இதற்கு அமைய அவர் நாட்டுக்கு தீ மூட்டியுள்ளார். சரத் பொன்சேகாவை போல், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டும்.

மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். மகிந்த ராஜபக்ச தற்போதாவது இதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் அப்பம் சாப்பிட்டு விட்டு துரோகம் செய்தார். தற்போது பிரதமர் பதவியை வழங்கி துரோகம் செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை குழப்பி விட்டுள்ளார். இப்படி முன்னோக்கி செல்ல முடியாது. மகிந்தவும் மைத்திரியும் தமது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் இன்று கூடும் நாடாளுமன்றம் : முக்கிய யோசனை சமர்ப்பிக்க நடவடிக்கை!!

நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கமைய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 7 பேர் யோசனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.

அரசியலமைப்பின் 48 வது சரத்திற்கமைய மேற்கொள்ள வேண்டிய அடுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை நீதிமன்றினால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பிற்கமைய அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இன்று யோசனையாக முன்வைக்கப்படவுள்ளது.

ரணிலுக்கு நிபந்தனை விதிக்க கூட்டமைப்பு தீர்மானம்!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம் இரவு 8 மணி வரை தொடர்ந்தது. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கலந்துரையாடலின் போது எழுத்து மூலம் உத்தரவாதம் கோருவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவிடம் விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றில் சில விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வலுப்படுத்தல் மற்றும் வடக்கு கிழக்கை தற்காலிகமாகவேனும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஒருங்கிணைப்புக் குழுக் கூடவுள்ளது. இந்த சந்திப்பில், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளிலும் கண்களை கவரும் கொழும்பின் முக்கிய பகுதி : வைரலாகும் புகைப்படங்கள்!!

கொழும்பு நகரமானது பகல் வேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அதேவேளை, இரவுப் பொழுதில் ஆங்காங்கே மின்குமிழ் வெளிச்சங்களுடன் அழகாக காட்சியளிக்கும்.

அந்த வகையில் கொழும்பு – கங்காராம விகாரை பகுதியில் அண்மையில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட கண்களை கவரும் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

அந்த கங்காராம பகுதியானது இருளுக்கு மத்தியில் தெருவிளக்குகள் வெளிச்சத்துடன் மிகவும் அழகாக காட்சியளிப்பதாக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.