வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுதான்!!

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக வவுனியா நகர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

கடந்த மாதம் வவுனியா மாவட்ட சிறு வியாபாரிகள் சங்கம் நகரசபைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தோம். வீதியில் வைத்து வியாபாரம் செய்த இருவரால் முரண்பாடு ஒன்று ஏற்பட்டது.

எனினும், மறுநாள் நாம் ஐந்து பேர் கொண்ட குழு அந்த முரண்பாடு தொடர்பாக பேசுவதற்காக நகரசபைக்கு சென்றிருந்தோம். எனினும் தலைவர் எம்மை சந்திக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அதனால் எமது வாழ்வாதாரத்திற்காகவே ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அரசியல் தலையீடுகள் இன்றி சுயமாகவே அந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக சிறு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று கூறுவதோடு, எமக்கு வேறு தொழில்கள் தெரியாது தீபாவளி பண்டிகை நாள் வரை வீதியில் வைத்து வியாபாரம் செய்வதற்கு எமக்கு அனுமதி தரப்பட்டது. அதன் பின்னர் பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம்.

எனவே, எமது உணர்வுகளை புரிந்துகோண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலே எமக்கான ஒரு நிலையான வியாபார நிலையத்தை அமைத்து தருவதற்கு நகரசபை தவிசாளர் முன்வர வேண்டும் இல்லாவிடின் தற்போது வியாபாரம் மேற்கொள்ளும் இலுப்பையடி பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வினயமாக கேட்டுகொள்வதாக மேலும் தெரிவித்தனர்.

அதிரடி அரசியல் மாற்றங்கள் : ரணில் உடனடியாக பிரதமராக நியமனம்?

ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நீதிமன்றின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணியின் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும்.

இதற்கு முன்னதாக பதவி வகித்த அமைச்சரவையை அவ்வாறே ஜனாதிபதி பதவியில் அமர்த்த வேண்டுமென ரிசாட் பதியூதீன் கோரியுள்ளார்.

வவுனியாவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மாயம்!!

வவுனியா ஹொறவபொத்தான வீதியின் இலுப்பையடி பகுதியில் நிறுத்துவைக்கபட்டிருந்த தனது முச்சக்கரவண்டி காணாமல்போயுள்ளதாக அதன் உரிமையாளரால் வவுனியா பொலிஸ்நிலயத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் (02.12)காலை முச்சக்கரவண்டியில் திருகோணமலை சென்ற உரிமையாளர் இரவு 11 மணியளவில் வவுனியாவிற்கு மீண்டும் வந்ததுடன் இலுப்பையடிபகுதியில் உள்ள அவரது வர்த்தக நிலையைத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வர்த்தக நிலையத்தில் உறங்கியுள்ளார்.

காலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது முச்சக்கரவண்டி மாயமாகியுள்ளது. அதன் அனுமதிபத்திரங்கள், திறப்பு போன்றன உரிமையாளரிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

NP AAQ 4528 இலக்கமுடைய முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 வருட காதல் : காதலி எதிரில் காதலன் செய்த மோசமான செயல்!!

 

காதலன் செய்த மோசமான செயல்

தமிழகத்தில் காதலன் வேறொரு பெண்ணுடன் பழகியதால், மனமுடைந்த காதலி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்தும், 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வித்யாவிடம் பேசுவதை தவிர்த்து வந்த அரவிந்த், நேற்று வேறொரு பெண்ணை அழைத்து வந்து, அவரையே காதலிப்பதாக கூறி வித்யாவிடம் காண்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்ற வித்யா நடந்ததை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளார். இதையடுத்து உறங்கச் சென்ற மகள் வித்யா அதிகாலையில் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள கிணற்றில் வித்யாவின் காலனி மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி வித்யாவின் உடலை மீட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தில் வித்யாவின் பெற்றோர் அரவிந்த் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் : மைத்திரி அதிரடி!!

 

மைத்திரி அதிரடி

இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை, எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை. அமைச்சரவை இல்லை. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன். தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டவுள்ளேன். அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அதிலும் ஆராயப்படும் எனவும் மைத்திரி இதன்போது கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலையில் திருமணம் : நள்ளிரவில் தூக்கில் தொங்கிய மணமகன்!!

 

தூக்கில் தொங்கிய மணமகன்

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தினேஷ் (31). இவருக்கும், மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுடைய திருமணம் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

நேற்று அதிகாலை முதலே திருமணத்துக்கு செல்வதற்காக வீட்டில் அனைவரும் கிளம்பி கொண்டு இருந்தனர். மணமகன் தினேஷ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கி கொண்டு இருந்தார். மணமகனை எழுப்புவதற்காக அவரது தாய் மாடிக்கு சென்று அறையின் கதவை தட்டினார்.

நீண்டநேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தினேஷ் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

இது பற்றி அறிந்த பெண் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மணமக்களை வாழ்த்துவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்களும் சோகத்தில் மூழ்கினர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

முதற்கட்ட விசாரணையில், தினேஷ் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர் தன்னைவிட அதிகம் படித்து இருந்ததால் தினேஷ் திருமணத்துக்கு ஒருவித தயக்கத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு நீண்டநேரம் தினேஷ் தனது தாயிடம் பேசி உள்ளார். அதன்பிறகு நள்ளிரவுக்கு மேல் தூங்க சென்ற அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாழ்வுமனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!

 

கண்ணீர் விட்டு கதறும் கணவன்

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா (21) தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் காஞ்சனாவிற்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் விஜயசித்ரா, முழுமையான வலி வரும் வரை மருத்துவமனையிலே இருக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் மருத்துவமனையில் இருந்த காஞ்சனாவிற்கு வலி அதிகரித்துள்ளது.

ஆனால் அந்த சமயம் மருத்துவர் விஜயசித்ரா பணிநேரம் முடிந்து வெளியில் சென்றுள்ளார். பணியில் இருந்த செவிலியர் சுகன்யா, காஞ்சனாவிற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். அப்போது குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், எந்த அசைவும் இன்றி நின்றுவிட்டது.

உதவிக்கு வேறு யாரும் இல்லாத காரணத்தால் பதறிப்போன சுகன்யா, காஞ்சனாவை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆபத்தான நிலையில் காஞ்சனாவை அங்கிருந்த உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கும் மருத்துவர் இல்லாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தையும், தாயும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குழந்தையும், காஞ்சனாவும் இறப்பதற்கு மருத்துவ நிர்வாகமே காரணம் என கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பேரில் தற்போது சம்மந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறிக்கை வந்ததும் அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியுள்ளார்.

யுத்தத்தில் கால்களை இழந்த கிளிநொச்சி சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை!!

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன், அவர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் குறித்த சிறுவர்கள் எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்தனர். தற்போது கால்களை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்ற போதும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

அவற்றை தீர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் அன்றாடம் கூலி வேலைகளை நம்பி வாழும் குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

குறைந்தது இவ்விரண்டு சிறுவர்களினதும் பாடசாலைக்கான போக்குவரத்து வசதிகளையாவது ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி : 14 வருடங்களின் பின்னரே பலாபலன்!!

ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் குறித்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர் அல்லது 1153 அடிகள் ஆகும்.

இலங்கையின் அடையாளமாக அமையப்போகும் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்ட பணத்தை 14 வருடங்களில் ஈடுசெய்ய முடியும் என இத்திட்டத்தைத் தயாரித்த பேராசிரியர் சமிந்த மாணவாடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களின் பின்னர் ஈட்டப்படும் வருமானம் நாட்டுக்கு இலாபமாக அமையும்.

இந்த அடையாளச் சின்னமானது பகல் வேளைகளில் மாத்திரமன்றி இரவுவேளைகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் அணைந்து அணைந்து எரியக்கூடிய மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டதாக அமையவுள்ளது.

மைத்திரிக்கு இறுதி வாய்ப்பு : அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ரணில் தரப்பு!!

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை இறுதியானது எனவும் அது தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமை தொடர்பில் இந்த வாரத்திற்குள் தீர்வு ஒன்று கிடைக்கவில்லை என்றால் வேறு நடவடிக்கை ஒன்றைய முன்னெடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலந்துரையாடல் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றால் இறுதி நடவடிக்கையாக பொது மக்களை இணைந்து கொண்டு வீதியில் இறங்கி போராடுவோம் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்றிரவு 8 மணிக்கு சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்ற போதிலும் அது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் மீள் திறப்பு : சாதகமான தீர்வு கிடைக்கும் வர்த்தகர் சங்கம் நம்பிக்கை!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீள் திறப்பது குறித்து இன்று (03.12) பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வர்த்தக சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பினையடுத்து இம் மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுமூகமான ஒரு தீர்வு கிடைக்கும் என்று வர்த்தகர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வர்த்தகர் சங்க செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மேலும் தெரிவிக்கும்போது,
இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகிய முற்தரப்பினருடன் வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்தும் சகல பேருந்து சேவைகளையும் வந்து செல்வதற்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர் சங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், வர்த்தகர்கள், கமக்கார அமைப்புக்கள், பாடசாலை சமூகத்தினரின் மகஜர்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை யாழப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதையடுத்து ஆளுநர் நேரடியாக மீள் திறக்கப்படவேண்டிய பேருந்து நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இன்றைய சந்திப்பில் எங்களிடம் உறுதியளித்துள்ளார். இன்னும் சில தினங்களில் பழைய பேருந்து நிலையம் மீள் திறப்பதற்குரிய நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி கொடுத்த நீதிமன்ற தீர்ப்பு : மகிந்த எடுத்த அதிரடி முடிவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வங்கி பிரதானிகளுடான சந்திப்பு உள்ளிட்ட முக்கிய கூட்டங்களை பிற்போட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளையை அடுத்து மகிந்த ராஜபக்‌ஷ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பதவி உட்பட அமைச்சரவை மீது பேரிடியாக மாறிய நீதிமன்ற உத்தரவு!!

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று காலை இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், குறித்த மனு பரிசீலிக்கப்பட்டது. இன்று காலை விசாரணைக்கு வந்த வழக்கு தீர்ப்பிற்காக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரதமர் பதவியை வகித்தவர் உட்பட அமைச்சரவையின் 49 உறுப்பினர்களையும் வரும் 12ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பானது மஹிந்த உள்ளிட்ட அவர் சார்ந்த அனைவருக்கும் பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் குழு மோதலாக மாறிய வாய்த்தர்க்கம் : 3 பேர் வைத்தியசாலையில்!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மோதல் சம்பவம் நேற்று(02.12) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது. இதனால் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் 17, 19 மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு!!

வவுனியா நகரசபையின் எழுநீ பண்பாட்டு முற்றம் நடத்திய பல்துறை சேவையாளர் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (02.12) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சார் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

மங்கள வாத்தியங்கள் முழங்க பவனியாக அழைத்து வரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிதிகள், பல்துறை சேவையாளர்கள் மாலை அணிந்து வரவேற்கப்பட்டதுடன் அகவணக்கம் மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும் இந் நிகழ்வில் விசேட தேவைக்குட்பட்டோர், வைத்தியர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என பலருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

நீதியரசரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரனால் ‘எழுநீ’ ஆவண நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டதுடன் முதல் பிரதியை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் நகரபிதா இ.கௌதமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பல்துறை சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

மீனவ நடனத்தை வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் சிங்கள நடனத்தை உடரட்ட நட்டும வவுனியா தெற்கு கலாசார குழுவினர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தவர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!!

என்னுடைய உருவ பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என்று முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

உங்கள் முன் உரையாற்றுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு மனமகிழ்வடைகின்றேன். இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று வவுனியாவில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு கட்சி சார்ந்தோர் எதிர்ப்புத் தெரிவித்து எனது உருவ பொம்மையை எரிப்பதற்கு ஆயத்தம் செய்வதாகச் சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்தக் கட்சியைச் சார்ந்தோர் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். என்னுடைய உருவ பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்து விடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியா நகரசபையின் தலைவர் அவர்களும் அவருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த உறுப்பினர்களுஞ் சேர்ந்து முன்னெடுக்கின்ற இந்த நல்ல நிகழ்வு போற்றப்பட வேண்டியதொன்று.

பிரதேச சபைகள், நகர சபைகள் ஒவ்வொன்றும் தத்தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடிய கலை, கலாச்சார, இலக்கிய, சமூக அபிவிருத்திப் பணிகள், பொருளாதார வேலைத்திட்டங்கள் மற்றும் இன்னோரன்ன செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த மக்களின் நன்மை நாடி அவற்றை முன்னெடுத்துச் செல்வது சிறப்பாகும்.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகளை அடையாளப்படுத்தி அவற்றை உறுப்பினர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவதற்காக அவற்றின் மேல் கூடுதல் அக்கறை கொண்டிருத்தல் அவசியமாகும்.

தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவதும் மேடைகளில் முழக்கங்களை மேற்கொள்வதும் நீங்கள் அனைவரும் அறிந்ததே. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதும் தேர்தல் முடிந்த கையோடு அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டுத் தம்மை வளப்படுத்திக் கொள்கின்ற நடவடிக்கைகளிலேயே எமது அரசியல் தலைவர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மக்கள் பற்றிய சிந்தனைகள், மக்களின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடு மக்கள் பிரதிநிதிகளாகிய எமது மனங்களில் இருந்திருக்குமாயின் எமது மக்களின் வாழ்வு என்றோ மேம்பட்டிருக்கும்.

நாம் பதவிக்கு வந்ததும் எவற்றைப் பற்றி சிந்திக்கின்றோம்? வழக்கமாக பிரதிநிதிகள் எமக்கான வசதிகளை மேம்படுத்தவே சிந்திக்கின்றோம். எமக்கு வசதிகள் தேவைதான். உதவிகள் தேவைதான். செலவுப் படிகள் தேவைதான். சலுகைகள் தேவைதான். ஆனால் அவை யாவும் மக்கள் நன்மைக்காகவும் மக்கள் சேவைக்காகவும் பாவிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கென வழங்கப்படும் பணங்களில் மக்கள் சேவைக்கென வழங்கப்படும் உதவிகளில் கைவைத்தல் மக்களுக்குச் செய்யும் துரோகமான செயலாகும்.

நாம் கட்சிகளையும் எம்மையும் மேம்படுத்தப்போய் மக்களை மறந்து போகின்றோம். மக்கள் நலனுக்கென்றே கட்சிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று மக்கள் நலத்தை விட்டு கட்சி நலன்களிலேயே கவனத்தைச் செலுத்தி வருகின்றோம்.

சுயநலங்களிலேயே சிந்தனையைப் பதியவைத்து வருகின்றோம்.
இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக, செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற தமிழ் மொழியை தமது தாய் மொழியாகப் பேசுகின்ற மக்கள் வாழுகின்ற வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற, வந்துள்ள பல் துறை சேவையாளர்கள் பலர் எம்மிடையே காணப்படுகின்றார்கள்.

ஆனால் அவர்களில் கூடுதலானவர்கள் இலைமறை காயாக மக்களுடன் மக்களாக வாழ்ந்து தம்மை இனங்காட்டிக் கொள்ளாதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் சிறப்புக்களை ஏனைய மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அவர்களின் ஆக்கங்களை இலக்கியப் படைப்புக்களை, கவிதை நயங்களை, ஓவிய அலங்காரங்களை, இசைப்பணிகளை, பொதுமக்கள் சேவைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கும் அவற்றைப் படித்துப் பயன் பெறுவதற்கும் இவ்வாறான முன்னெடுப்புக்கள் பெரிதும் உதவுகின்றன.

இங்கு போட்டி பொறாமைகளுக்கு இடம்கொடுத்தல் ஆகாது. எங்களுக்குப் பாராட்டுக்கள் கிடைக்கவில்லையே என்பதற்காக பாராட்டுக் கிடைத்தவர்களை இகழ்வதும் இறுமாப்புடன் அவர்களை வைவதும் எம்மை மிகக் கேவலமானவர்களாகவே சமூகத்தில் அடையாளப்படுத்தச் செய்வன.

இன்னொருவரை உயர்த்திப் பேசுவதால் உங்கள் உயர்ச்சி கேவலப்படுத்தப்படும் என்று எண்ணுவது தவறு. உண்மையில் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் நற்கீர்த்தி மேலும் உயருமே ஒளிய குறையாது.

மிகப் பழைய காலங்களில் புலவர்களின் புலமைத்துவத்தை மெருகூட்டுவதற்கும் அவர்களின் படைப்புக்களை விருத்தி செய்வதற்கும் அக்கால அரசர்கள் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் இலக்கியவாதிகள் மற்றும் படைப்பாளிகள் தமது படைப்புக்களை நூல் வடிவில் வெளியீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு நூல்களை வெளியிடக்கூடிய மூலதனங்கள் அற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்ந்து இருந்து வருவது கவலைக்குரியது. அவர்களின் இறுதிக்காலங்கள் விரக்தி உற்ற நிலைக்குச் செல்ல சமூகத்தில் உள்ள நாங்கள் இடமளிக்கக் கூடாது.

இன்றைய நிலையில் சங்கீத விற்பன்னர்கள் மற்றும் நடன விற்பன்னர்கள் சமூகத்தில் உச்ச நிலை அந்தஸ்தைப் பெற்று வாழ்வது மகிழ்ச்சி தருகின்றது. ஆனால் என்னுடைய இளமைக்காலத்தில், வெள்ளையர் எம்மை ஆண்ட காலத்தில் அல்லது சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் எமது கலை, கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் ஆகியன பரிகாசத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

பல்லாயிர வருட பண்பாடுகள் பகடியாகப் பேசப்பட்டு வந்தன. எப்பொழுது சிங்கள அரசியல்த் தலைவர்கள் ‘பஞ்சமா சக்திகள்’ என்று மதப் பெரியார்களையும், கிராமப்புற ஆசிரியர்களையும், உள்நாட்டு வைத்தியர்களையும், விவசாயிகள் மற்றும் மீனவர்களையும், தொழிற்சங்க உறுப்பினர்களையும் அடையாளப்படுத்தத் தொடங்கினார்களோ அப்பொழுதே சிங்கள மக்களின் பாரம்பரியங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின.

ஆனால் அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் ஒரு நிலை இருந்து வந்ததால் எமது கிராமிய பாரம்பரிய புத்துயிர்ப்பு வேகம் போதாமலேயே வளர்ந்து வந்துள்ளது. இப்பொழுதுதான் ஒற்றையாட்சிக்குட்பட்ட ஓரளவு அதிகாரப்பரவலாக்கம் அமுல்ப்படுத்தப்பட்டு வருவதால் நாம் அந்தப் பாரம்பரிய புத்தெழுச்சியை ஓரளவுக்கு உருவாக்க முடியுமாக இருக்கின்றது.

இன்றைய நிலையில் பல்வேறு துறைசார் சேவையாளர்கள் சிறப்புடன் வாழக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எமது மொழி, அதன் செழுமை, இலக்கியச் சுவை, தொழிற் பாரம்பரியங்கள், சமூகப் பாரம்பரியங்கள் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டுமெனின் எமது பல்துறை சேவையாளர்கள் அடையாளங்காணப்பட்டு போற்றப்பட வேண்டும்.

அவர்கள் பணி தொடர நாம் அவர்களுக்கு வசதி அளிக்க வேண்டும். இந்த நல்ல கைங்கரியத்தை ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் இன்று முன்னெடுத்து வருகின்றன என்று நம்புகின்றேன்.

அதற்கு மேலதிகமாக வவுனியா நகரசபை வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் கலைஞர்களையும், துறைசார் விற்பன்னர்களையும், சமூக சேவையாளர்களையும் இனங்கண்டு அவர்களை வாழ்த்திக் கௌரவித்து மக்களுக்கு இனங்காட்டி வருவது மிகச் சிறப்பான செயற்பாடாகும். இந்த நல்ல கைங்கரியத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டு இவர்களுக்கான கௌரவத்தையும் வாழ்த்துக்களையுந் தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து நாமும் மகிழ்வடைவோமாக!

இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டின் அரசியல் முன்னெடுப்புக்களும் அரசியல் வாதிகளின் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டு பாராளுமன்றம் ஒரு நகைப்புக்குரிய மன்றமாக மாற்றப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற வேண்டும். அரசினை நேர்வழியில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற வேண்டும். அதுவே பாராளுமன்றம் என்ற உயரிய சபையின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக மிளகாய்த்தூள் கரைசலை ஏனைய உறுப்பினர்கள் மீது வீசியடிப்பதும் அதிகாரத்தில் உள்ளவர்களை அவமதிப்புச் செய்வதும், ஒருவரை ஒருவர் அடித்துத் துன்புறுத்துவதும், தூஷண வார்த்தைகளைப் பிரயோகம் செய்வதும், அவற்றை வெளிச்சம் போட்டு ஊடகங்கள் மூலம் உலகறியச் செய்வதும் எமக்கு அருவருப்பைத் தருவதுடன் உலக நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியிலும் ஒரு அவப் பெயரை தேடித்தருவதாக அமைந்துள்ளன.

மக்கள் பிரதிநிதிகளின் வாதப்பிரதிவாதங்கள் வன்முறைகளாக மாற்றமடைய நாம் இடம்கொடுத்தலாகாது. எது எவ்வாறிருப்பினும் எமது நாடு என்ற வகையில் எம்மைப் பிற நாட்டவர்கள் எள்ளி நகையாடுவதை நாம் இடமளிக்கலாகாது. அரசியல் என்பது எப்பாடுபட்டேனும் எமக்கெதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை பெயரிழக்கச் செய்யும் ஒரு வித்தையாகவே இன்று மாறியுள்ளது.

அரசியல் ரீதியாக ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் மீது சேறு அள்ளிப் பூசுவதே அரசியல் என்று ஆகிவிட்டது. மக்கள் நலம் இச் சேறு பூசலின் போது அடிபட்டுப்போய் விடுகின்றது. சேறு பூசலும் அதற்கெதிரான செயற்பாடுகளுமே முதன்மை அடைகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் கூட பேரம் பேசப்பட்டதாக ஊடகங்கள் பிழையான பல தகவல்களை வெளியிட்டு வந்துள்ளன. எனக்கு தெரிவித்த அளவில் அவர் வேடிக்கையாகக் கூறிய ஒரு விடயத்தைப் பதிவு செய்து, ஊடகங்கள் அதை ஊதிப் பெருப்பித்து மக்கள் மனங்களில் அவரைப்பற்றிய ஒரு தப்பபிப்பிராயத்தை உருவாக்க முயன்றுள்ளன என்பதே உண்மை எனக் காண்கின்றேன்.

கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் நான் பெரிதாக நெருங்கிப் பழகாத போதும் அவரின் நடைமுறைகள் அவரை ஒரு துரோகியாகக் கணிக்கக்கூடியவாறு எந்நிலையிலும் அமைந்திருக்கவில்லை. எமது மக்கள் நீண்ட காலப் போரின் பின்னராக அனுபவிக்கின்ற துன்ப துயரங்களில் இருந்து இன்றைய நிலையில் ஓரளவாவது அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் தம்பி சிவசக்தி ஆனந்தனின் எண்ணக்கருவில் உருவாகியுள்ளன போன்ற சிறப்பான திட்டங்களும் முன்மொழிவுகளும் ஏனைய அரசியல்த் தலைவர்களினது எண்ணங்களிலும் உருவாக வேண்டும்.

மாறாக உண்மை பேசுபவர்களை அடக்கியாள முனைவதும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுபவர்களை உயர தூக்கி வைத்து கொண்டாடுவதுமான நிலையே இன்று அரசியலில் வலுப்பெற்றுள்ளது. இந்த அரசியல் நிலை மாற்றப்பட வேண்டும்.

எமது அரசியல் முன்னெடுப்புக்களில் சட்டத்தின் வாயிலாக அரசியல் யாப்பு ரீதியாக எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரித்துக்களைப் பெற்றுக் கொடுப்பதையே நான் முதன்மைப்படுத்தி வருகின்றேன். கிடைப்பதை எடுப்பதே உசிதம் என்று வாழ்ந்து வரும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் நிலை அங்கத்தவர்களுக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் எனது செயற்பாடு சற்று விசனத்தை உண்டுபண்ணியிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.

எனினும் எனது செயற்பாடுகள் நாம் மக்களுக்கு 2013ல் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை மக்கள் கவனிக்க வேண்டும். எமது மக்களின் விடிவிற்காக அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக அவர்களுக்கான உரித்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் சகல உரித்துக்களுடனும் சமஸ்டி முறையிலான ஒரு அரசியல் கட்டமைப்பின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்.

ஆனால் எம்முடன் ஒத்த அரசியல் கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் கூட பல்வேறு திசைகளில் பயணப்படுகின்ற நிலை ஒன்று உருவாகி வருகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டும். தத்தம் கட்சி ரீதியான அவர்களின் சிந்தனைகளே பல சிக்கல்களை உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில் மேலும் ஒரு கட்சி அவசியமா என்று சிலர் கேட்கின்றார்கள். நான் புதியதொரு கட்சியை உருவாக்கியதன் ஊடாக ஏனைய கட்சிகளுடன் பகைத்துக் கொண்டேன் என்றோ அல்லது அவர்களை உதாசீனம் செய்து விட்டேன் என்றோ பொருள் கொள்ளக்கூடாது.

ஒத்த கருத்துடையவர்களைச் சேர்த்துக் கொண்டு தமிழ் மக்களின் விடிவுக்காக ஒரு நேர் வழியில் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அரசியல் முன்னெடுப்பின் ஊடாக எமது இலக்கை அடைய முயற்சி செய்யவே விரும்புகின்றேன்.

என்னோடு இணைந்து கொண்டு சேவையாற்ற விரும்புகின்ற அனைவரையும் அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றேன். கட்சிகளுக்கிடையே உள்ள பேதங்களை மறந்து எமது மக்கள் நன்மை கருதி ஒற்றுமையுடன் உழைக்க முன்வாருங்கள் என அனைவருக்கும் இச் சந்தர்ப்பத்தில் பகிரங்க அழைப்பு மூலம் அழைப்பு விடுக்கின்றேன்.

எனினும் எமது கொள்கைகளுக்கு மாறாக இதுவரை செயற்பட்ட தமிழர் விரோதக் கட்சிகள் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வந்தாலுங் கூட அவர்களை இணைத்துக் கொள்வது கடினம்.

இந்நிலையில் பொதுமக்களிடையே இனவாதங்கள், மதவாதங்கள், சாதிப் பிரிவினைகள், பிரதேச வாதங்கள் ஆகியவற்றைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவு பட வைத்து தமது காரியங்களை இலகுவாக முன்நகர்த்துகின்ற அரசியல்வாதிகள் சிலர் என் மீது பழி சுமத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நகைப்பிற்குரியது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை நான் கலைத்துவிட்டதாக ஒரு சாரார் குற்றஞ்சாட்ட இன்னொரு சாரார் எனக்கு அரசியல் அனுபவம் எதுவும் இல்லை என்கின்றார்கள். பிழையான கருத்துக்களின் அடிப்படையில் ஒற்றுமையைப் பேணுவதில் எமது மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படாது.

ஒற்றுமை என்பது தகுந்த கொள்கை ரீதியான அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும். அடுத்து அவர்கள் கூறுவது போல அரசியல் அனுபவம் என்பது உண்மைக்குப் புறம்பான விடயங்களை அவ்வவ்போது மக்கள் நம்பக்கூடிய வகையில் உரத்துப் பேசி அவர்களை நம்ப வைக்கின்ற தன்மையே என்றால் போலிப்பித்தலாட்டம் ஆடுவதே அரசியல் அனுபவம் என்றால் அந்த அனுபவம் என்னிடம் இல்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

எனக்கு எமது மக்களை ஏமாற்றத் தெரியாது. அவர்களுக்கு உண்மைக்குப் புறம்பான விடயங்களை உண்மை போல எடுத்துக்கூறத் தெரியாது. அதனால்த்தான் எமது தலைவர்கள் எதிர்பார்த்த கைப்பொம்மையாக என்னால் ஆட முடியாது போனது.

எமது மக்கள் பலர் எமது மக்கள் சந்திப்பின் போது என்னிடம் எடுத்துக் கூறிய துயர சம்பவங்களும் அவர்களால் தீர்க்கமுடியாத கவலைகளுந்தான் என்னைக் கல்லாக இறுக வைத்து விட்டது. அவர்கள் துயர் துடைக்க வெறுமனே அண்டிப் பிழைத்தல் வழியாகாது என்ற முடிவுக்கு வந்தேன்.

இதனால்தான் எனது பதவிக்காலம் முடிவுற்ற நிலையிலும் நான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஒரு வாடகை இல்லத்தில் வசித்து வருகின்றேன். எனது கொழும்பு வாசஸ்தலத்தில் பிள்ளைகள், பேரன் பேத்திகளுடன் அளவளாவி மகிழ்ந்திருக்க வேண்டிய இத் தருணத்தில் நான் அவற்றையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி விட்டு என்னை நம்பி, எனக்குப் பெருந்தொகையான வாக்குகளை வழங்கி, முதலமைச்சராக்கிய வடபகுதி மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கானஉரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் தொடர்ந்தும் எனது மக்களுடன் வாழ்ந்து வருகின்றேன்.

2013ல் ஒரு இலட்சத்து முப்பத்திமூன்றாயிரம் பேர் சேர்ந்து எனக்கு வாக்களித்திருந்தார்கள் என்றால் இப்பொழுது கட்சி ரீதியாகப் பிரிந்து செல்பவர்களுக்கு மேலதிகமானோர் கொள்கை ரீதியாக என்னுடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதைக் காண்கின்றேன். எனவே போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள் என்று எனது அருமை மக்களிடம் நான் கூறி வைக்கின்றேன்.

வடக்கில் இருந்தாலென்ன கிழக்கில் இருந்தாலென்ன எப் பகுதிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள், தமிழ் உறவுகள் என்ற நிலைப்பாட்டில் எமது முன்னெடுப்புக்கள் அமைய வேண்டும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஆதரவு என்றென்றும் கிட்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இன்றைய இந்த நிகழ்வில் பாராட்டுக்களைப் பெறும் அனைத்து பல்துறை விற்பன்னர்களையும் இத் தருணத்தில் வாழ்த்திக் கொண்டு எனது அன்பிற்குரிய சகல வன்னி மக்களுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன் என்றார்.