ஆசையாக வளர்த்த மகள்களுக்கு நேர்ந்த துயரம் : தினமும் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் தந்தை!!

கதறி அழும் தந்தை

இந்தியாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 2 சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று அவரது தந்தை தினமும் கதறி அழுகும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவைச் சேர்ந்தவர்கள் கல்பனா (6), சவுமியா (4). சகோதரிகளான இருவரையும், கடந்த வாரம் இவர்களின் பாட்டி ஜெயம்மா(55) கன்கனமரடி கிராமத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.

இதனால் கடந்த 24-ஆம் திகதி தனியார் பேருந்தில் பேத்திகளுடன் ஜெயம்மா பயணம் செய்தார். அந்த தனியார் பஸ் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தின் அருகே சென்ற போது, திடீரென்று தறிக்கெட்டு ஓடி அருகிலிருந்த காவிரி பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஜெயம்மா, கல்பனா, சவுமியா உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் கர்நாடகாவையே உலுக்கியது.

இந்நிலையில் விபத்தில் பலியான கல்பனா, சவுமியா ஆகியோரது உடல்கள் அவர்களின் கிராமமான கோடிஷெட்டிபுராவில் அடக்கம் செய்யப்பட்டது. மகள்களின் பிரிவை தாங்க முடியாமல் தாயும், தந்தையும் தினமும் அழுதபடி உள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினாலும், அவர்களால் குழந்தைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

2 குழந்தைகளையும் விபத்தில் பலிகொடுத்த தந்தை தினமும் தனது மகள்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறியபடி இருந்து வருகிறார். அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றாலும், மீண்டும் அவர் மகள்களின் நினைவிடத்திற்கு சென்று, கதறி அழுது வருகிறார். மகள்களின் நினைவிடத்திற்கு சென்று கதறி அழும் அவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

வடமாகாணத்தில் மிகக் குறைந்த வயதில் யூடோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவன் கௌரவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் யூடோ தரங்கணிப்பு போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவன் ஆர்.கே. கெவின் வயது (10) வவுனியாவில் கௌரவிக்கப்பட்டார்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புக்கலை அமைப்பின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியில் 18.11.2018 அன்று நடைபெற்ற யூடோ தற்காப்புக்கலை தரங்கணிப்பு போட்டியில் வவுனியா சார்பாக கலந்துகொண்ட அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் வெற்றிபெற்று 6 என்ற தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது அகில இலங்கை யூடோ சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.பஸ்நாயக்க மற்றும் யூடோ தொழில்நுட்பத் தலைவர் கெ.எச்.எஸ்.கே.கப்புஆராட்சி ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

வடக்கு மாகாண ரீதியில் யூடோ தற்காப்புக்கலையை பயிற்றுவித்துவரும் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் தலைமையில் பங்குபற்றிய மாணவர்களில் 40 மாணவர்கள் யூடோ தகுதிச் சான்றிதழ்களை பெற்றிருந்த போதும் கெவின் மிகக்குறைந்த வயதில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவனின் சாதனையை பாராட்டு முகமாக அவர் கல்விகற்ற அகில இலங்கை தமிழ் கலவன் பாடசாலையின் புலைமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் 30.11.2018 அன்று ஆர்.கே.கெவின் வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜாவினால் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை எல்லைக்குள் சட்டவிரோத வியாபார நிலையம் : மக்கள் விசனம்!!

 

வவுனியா யாழ் வீதியில் விவசாயப் பண்ணைக்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்துமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சகோதர மொழியைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் கடையொன்றினை அமைத்து அதனுள் உணவுப்பொருட்கள் மற்றும் தேனீர் என்பவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இவ்வாறு கடை அமைத்து வருவது தொடர்பில் இதுவரை நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந் நிலையில் வவுனியாவில் நகரசபையின் அசமந்தப்போக்கினால் சட்டவிரோதமான வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றினை அகற்றுவதற்கு பெரும் பிரயத்தனத்தினை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தக நிலையத்தினை அமைப்பது மாத்திரமின்றி அதனுள் சுகாதார சீர்கேடான முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வது தொடர்பிலும் நகரசபை கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் விக்னேஸ்வரன்!!

வவுனியா நகரசபையின் கலாச்சார குழுவினரால் இடம்பெற்றுவரும் எழு நீ விருது வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

விஷேட அதிரடிப்படையினரின் பூரண பாதுகாப்புடன் ஆரம்பமான நிகழ்விற்கு 30ற்கும் மேற்பட்ட பொலிசார் வீதி ஓரங்களிலும் நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றியும் பாதுகாப்பு கடைமையினை மேற்கொண்டு வருகின்றனர்.

நகரசபையினரின் காலாச்சார நிகழ்விற்கு இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கலாச்சார நிகழ்வினை நடாத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டுள்ளது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை வாழ்த்தி வரவேற்கும் பதாதை ஒன்று மண்டபத்திற்கு முன்பாக ஈரோஸ் அமைப்பு உரிமைகோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த அரசியல் நோக்கம் கொண்டதா என்ற சந்தேகத்தினை நிகழ்விற்கு வருகை தந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சருக்கு பாதுகாப்பு அகற்றப்பட்ட நிலையில் இவ்வாறான நிகழ்விற்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு ஏன் ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

எழு நீ விருது வழங்கும் நிகழ்வினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மௌன மொழி பேசிய காதல் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணத்தில் இணைந்த ஜோடி!!

மௌன மொழி பேசிய காதல்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வாய் பேச முடியாத காதல் ஜோடி, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணுக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் ஆனது.

இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்த பின்னர், இருவரின் உறவினர்களும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நிச்சயதார்த்தத்துடன் இவர்களின் திருமணம் நின்று போனது. எனினும் சேவியர் செல்வத்திற்கு, வைஷ்ணவிக்கு ஒருவரையொருவர் பிடித்து விட்டதால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, யாருக்கும் தெரிவிக்காமல் தூரத்து உறவினர் ஒருவரது வீட்டில் இந்த ஜோடி தஞ்சமடைந்தது. அதனைத் தொடர்ந்து நண்பர்களின் உதவியுடன் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள், அத்துடன் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.

இந்நிலையில், பெண்ணை காணவில்லை என வைஷ்ணவியின் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சேவியர் செல்வம்-வைஷ்ணவியை வரவழைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு திருமணமான ஆவணத்தை பொலிசாரிடம் காட்டினர். அதன் பின்னர், பொலிசார் இரு வீட்டாரிடமும் பேசி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, திருமண ஜோடியை ஏற்றுக்கொண்டனர்.

தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகள் அம்பாயி கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக, தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு தந்தையுடனே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துளசிராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருடைய உடலை வீட்டிற்கு கொண்டு வரும்போது, அதனை பார்த்த அதிர்ச்சியில் தந்தையின் உடல் மீது மயங்கி விழுந்தவாறே அம்பாயியும் உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி : சாரதி வைத்தியசாலையில்!!

முச்சக்கரவண்டி தீப்பற்றிக் கொண்டதால் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் திருகோணமலை – மகாதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் அதே இடத்தை சேர்ந்த எஸ்.எஸ்.கே.அபேரத்ன (47வயது) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேக்கரி வியாபாரம் செய்து வரும் குறித்த நபர் கடைகளுக்கு பொருட்களை கொடுத்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, இதனை அடுத்து வண்டியின் கதவை திறந்து பார்த்த போது தீ பற்றிக்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

மேலும் தீயை அணைப்பதற்கு முற்பட்ட வேளை குறித்த நபரின் கையில் தீ பற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி தீப்பற்றிய போது வீதியின் அருகில் இருந்ததாகவும், சாரதி மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணிலுடன் ஒருபோதும் இணைந்து செயற்பட மாட்டேன் : மைத்திரி விடாப்பிடி!!

கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ரணில் குறித்த அச்சத்தின் காரணமாகவே பிரதமர் பதவியை நிராகரித்தனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பொது தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது.

பொது தேர்தலுக்கு செல்வதன் ஊடாகவே சிறந்த தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய முடிவும்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டிய தேவை உருவானால் நான் அவர்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து ஆராய்வேன்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்பதை இப்போதும் உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பதால் ஒருவர் பிரதமராகமுடியும் என அரசமைப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதியுடன் விருப்பத்துடனேயே ஒருவர் பிரதமராக முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

ஆலயத்திற்குச் சென்ற யுவதியைக் கடத்திய நபர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.

அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விக்கினேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள்!!

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன

சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5 பெருபான்மையுடன் அமைத்த மாகாணசபையை நாசமாக்கிய 23ம் புலிகேசியே வருக வருக..

தமிழர் தேசத்தில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தினை சிங்கள தேசத்தில் அமைக்க காணிவழங்கிய வள்ளலே வருக வருக..

பழைய பேரூந்து நிலையத்தினை மூடி அப்பாவி மக்களினதும் நகர வர்த்தகர்களினதும் மடியில் கைவைத்த பெருந்தகையே வருக வருக..

போன்ற பல்வேறு வசனங்களுடன் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என துண்டுப்பிரசுரத்தின் கீழே காணப்படுகின்றது.

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய சுய தொழில்வாய்ப்பு முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதனை கருத்திற் கொண்டு முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு கிலோ மீற்றருக்காக அறவிப்படும் கட்டணத்தை 10 ரூபாயில் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மீற்றர் முச்சக்கர வண்டிகளின் ஆரம்பக் கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு வரும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு!!

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பணியாற்றும் நமசிவாயம் ஜெயப்பிரகாஷ் என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சார்ஜன் தர நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது இந்த பதவி உயர்வு  பொலிஸ்மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி தற்போது வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார்.

வன்னிப் பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தமிழ் மொழிப்பெயர்ப்பாளராகவும் தனது சேவையை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, இவரின் இச் செயற்பாட்டினால் பல மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதேசத்தை பீதியில் உறைய வைத்த சடலம்!!

வெயாங்கொட – கொடவெல பிரதேசத்தில் உள்ள வயலில் நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பிரதேச மக்கள் பீதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மத்திய வங்கியின் சுகாதாரத் தொழிலாளியாக பணியாற்றிய 63 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகல நீதவான் சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறந்த நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கைப்பை மற்றும் கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இது கொலையைா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனது தந்தை தமிழர் என்பது குறித்து பெருமைப்படுகின்றேன் : மஹிந்த தரப்பை மிரட்டும் சிங்கள அதிகாரி!!

தனது தந்தை தமிழர் என்பது குறித்து தான் பெருமைப்படுகின்றேன் என குற்ற விசாரணை திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன கருத்து வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நிஷாந்த டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்பரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டிற்காக சேவை செய்தவர்களாகும். அவர்கள் அனைவரும் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்.

அத்துடன் நான் மனித தன்மையை மதிக்கிறேனே தவிர நபர் ஒருவரின் இனத்திற்கு அல்ல. எனது கடமையின் போது கட்சி, நிறம், இனம், மதம் பேதங்கள் இல்லை. அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலேயே நான் சேவை செய்கின்றேன்.

எனது பிறப்பு சான்றிதழில் எனக்கு சிங்களவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நான் மனித இனத்திற்கே உரிமையாகின்றேன். சிங்களம், தமிழ் முஸ்லிமாக இருப்பதற்கு முன்னர் அனைவரும் மனிதனாக இருப்போம்.

அத்துடன் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனசாட்சிக்கு உண்மையாகவும், நாட்டின் சட்டத்திற்கமையவும் செயற்படுகிறேன். இனிமேலும் அப்படி தான் செயற்படுவேன்.

எனது கடமை தொடர்பில் பலர் கோபமடைகின்றார்கள். அது குறித்து நான் அதிர்ச்சியடைவதில்லை” என நிஷாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

தமிழ் தலைமைகள் மக்களை அடகு வைத்துள்ளனர் : சிவசக்தி ஆனந்தன்!!

ஒரு கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை அடகு வைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கிடாச்சூரியில் நடைபெற்ற பிரதேச செயலக கலாசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கலைஞர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கலை, கலாசாரத்தை பாதுகாப்பது போன்று அரசியல் ரீதியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை தமிழ் மக்களின் நலன்சார்ந்து இராஜ தந்திர ரீதியாக முன்னகர்த்தக் கூடிய முகங்களை கை நழுவ விட்டுள்ளார்கள்.

இன்று இந்த பாராளுமன்றத்தில் ஓரு பிரதமரை நியமிப்பதற்கு அல்லது பெரும்பான்மையை காட்டுவதற்கு 113 உறுப்பினர்கள் தேவையான நேரத்தில் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு கொண்டு முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தடவை கூறுகிறார்கள் நாங்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவையும் ஆதரிக்கவில்லை. ஆக இருவரையும் ஆதரிக்கவில்லை என்றார்கள்.

பின்னர் இந்த நாட்டில் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. அதற்காக தான் ஆதரவளிப்பதாக சொல்லியிருந்தார்கள். அதனையடுத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்து, நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இன்று இருவருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய தமிழ் தலைமைகள் ஒரு கட்சிக்கு அல்லது ஓரு கட்சியை சேர்ந்த நபர் பிரதமராக அவர் வேண்டும் என்பதற்காக எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவளித்துள்ளார்கள். இதன் மூலம் தமிழ் மக்களை அடகு வைத்துள்ளார்கள். இதனை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

அண்மையில் இராஜதந்திரிகளை சந்தித்த கூட்டமைப்பினர் தென்னிலங்கை அரசியல் நெருக்கடி குறித்து பேசியுள்ளார்களே தவிர தமிழ் மக்களது பிரச்சினை குறித்து பேசவில்லை எனத் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரச அதிபர் திரேஸ்குமார் மற்றும் கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.

நீரில் மூழ்கி தமிழ் மாணவன் பலி : கடற்படை உதவியுடன் சடலம் மீட்பு!!

புஸ்ஸல்லாவ பகுதியில் செல்வகந்த ஆற்றிற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதுடன் அவருடைய சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மாலை தனது ஐந்து நண்பர்களுடன் பெற்றோருக்கு தெரியாமல் குளிக்கச் சென்றுள்ளார். இதன் போது நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் முழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சக நண்பர்கள் இளைஞனை காப்பாற்ற முயற்சித்த போதிலும் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து கடற்படை சுழியோடிகள் மூலம் நேற்று காலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கண்டி – பேராதெனிய கன்னொருவ ரணபிம ரோயல் கல்லூரியில் உயர்தர (2019) வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் கம்பளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜே.கஜனேஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு பலியாகி உள்ளார்.