வவுனியா சேமமடு கிராமம் தொடர்பாக அரச அதிபருடன் விசேட சந்திப்பு!!

சேமமடு கிராமத்தின் உட்கட்டுமான வசதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம்.கனீபா தலைமையில் நடைபெற்றது.

கிராம மக்கள் மற்றும் கிராமத்தின் பொது அமைப்புகளால் ஏற்பாடுசெய்யபட்ட குறித்த கலந்துரையாடலில் சேமமடு கிராமத்தில் காட்டுயானைகளால் மக்களிற்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாகவும், விவசாய அழிவுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் சேமமடு வீதிகள் புணரமைப்பு, குளத்தினை புனரமைத்தல், மக்களுக்கான வீட்டுத்திட்டம், போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசஅதிபரிடம் சுட்டிகாட்டபட்டிருந்தது.

அதன் அடிப்படையில் காட்டு யானைக்கான மின்சார வேலியினை எதிர்வரும் 10.12.2018ம் திகதிக்கு முன்பதாக செய்து தருவதாகவும் மற்றும் புணரமைப்பு வேலைகளை படிப்படியாக செய்துதருவதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சேமமடுவில் காட்டு யானைகளின் தொல்லைகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதுடன் அண்மையில் ஒருவர் யானை தாக்குதலிற்கு இலக்காகி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன், மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, ஓய்வுபெற்ற கிராமசேவகர் முத்துராஜா, முன்னாள் பிரதேசசபை தலைவர் சிவலிங்கம், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு புதிய துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டித் தரிப்பிடமானது பாடசாலையின் அதிபர் தா.அமிர்தலிங்கம் முன்னிலையில் கல்லூரியின் முன்னாள் அதிபர் தர்மாம்பிகை சிவஞானம் அவர்களினால் கடந்த (23.11.2018) காலை 9 மணியளவில் திரைநீக்கம் செய்யப்பட்டு மாணவ மாணவிகளின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2016 மற்றும் 2017ம் ஆண்டு பாடசாலை பழைய மாணவ சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரின் நிதியொதுக்கிட்டில் 400க்கு மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகளை எவ்வித இடையூறுமின்றி தரித்து நிறுத்தக்கூடிய வகையில் சுமார் 38 லட்சம் பெறுமதியில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தவொரு பாடசாலையிலும் இல்லாத அமைப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இத் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

வவுனியாவில் “ஒளிரும் கிராமம்” இளைஞர் செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு!!

தமிழ் தேசிய இளைஞர் கழகம் மக்கள் நலம் சார்ந்த செயற்றிட்டங்களை தாயக பகுதியில் செயற்படுத்திவரும் இவ் வேளையில் தாண்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் திருநாவற்குளம் கிராமத்தில் தமது ஆரம்ப நிகழ்வினை அண்மையில் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் இவ் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபக தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் , வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்கள்.

சிறப்பு அதிதியாக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் யோகநாதன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை, பண்டாரவன்னியன் சனசமூக நிலைய தலைவர் கணேசமூர்த்தி ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பும்!!

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா 2018ம், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் இன்று (01.12) வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க.பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு அதிதிகளும், கலைஞர்களும் மாலை அணிவித்து பவனியாக அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

கலாசார விழாவில் தமிழ் மொழி வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், நாட்டார் இசை, சிவதாண்டவம், கிறிஸ்தவ நாடகம், பறை இசை, கிராமிய நடனம், போன்றவற்றில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தினால் ‘வவுனியம்’ எனும் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. நூலை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் நூலை பெற்றுக்கொண்டதுடன் அதிதிகளுக்கும் வவுனியம் நூல் வழங்கி வைக்கப்பட்டது.

சிற்பத்துறை, நாடகத்துறை, கலைத்துறை, இசைத்துறை, இலக்கியத்துறை போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ‘கலா நேத்திரா’ என்ற விருது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா நெடுங்கேணியில் மஹிந்தவிற்கு ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மக்களுக்கான உரிமையை மக்களிடம் விட்டுவிடுங்கள் , வாக்களிக்க இடமளியுங்கள் எனத் தெரிவிக்கும் பதாதையைத் தாங்கியவாறு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒன்றிணைந்த மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஜக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் மக்களின் ஆணையை நாங்கள் ஏற்க தயார், தேர்தலை நடாத்துவோம் எனத் தெரிவிக்கும் பதாதைகளுடன் பேருந்து நிலையத்ததைச் சுற்றி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் 10 இலட்சம் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்ட போராட்டத்தில் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம்.ரஞ்சித் கலந்துகொண்டு கொண்டிருந்தார்.

வவுனியாவில் வேலைக்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சாந்தசோலை 50 வீட்டுத்திட்டம் பகுதியில் நேற்று அரச ஊழியர் ஒருவரின் வீடு மின்ஒழுக்கினால் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டில் பிரதான சாமிஅறையில் சாமிப்படத்திற்கு பொருத்தப்பட்ட மின்குழிழ் பகுதியிலிருந்து மின்ஒழுக்கு ஏற்பட்டு சாமி அறையிலிருந்த படங்கள், பொருட்கள், அலுமாரி, வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், வூபர் சாதனங்கள் என சுமார் மூன்று இலட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசகமாகியுள்ளதுடன் வீட்டின் கட்டிடத்திற்கும் கூரைத்தகடுகள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.

வீட்டினை புனர்நிர்மானம் செய்வதற்கு ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா செலவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வீட்டின் குடும்பத் தலைவியான நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் பணியாற்றும் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினம் வீட்டில் எவரும் இருக்கவில்லை. குடும்பத் தலைவர் நகரிலுள்ள வியாபார நிலையத்திற்கு பணிக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தலைவி அரச அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். தனது மகனை சற்றுத் தொலைவிலுள்ள கணவரின் உறவினரிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காலை 11மணியளவில் வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை கண்ட அயலவர்கள் சற்றுத் தொலைவிலுள்ள உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உறவினர் வீட்டிற்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் மின்சாரம் நிறுத்தப்பட்டு எரிந்துகொண்டிருந்ததை பொருட்கள் அணைக்கப்பட்டுள்ளது. பொலிசார், கிராம அலவலகர், மின்சார சபையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இன்று அதிகாலை மின்னொழுக்கு காரணமாக வவுனியா நகரிலுள்ள இலத்திரனியல் கடை ஒன்று எரிந்து பலலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த என்னிடம் 6 முதல் 50 கோடி வரை பேரம் பேசினார் : தமிழ் எம்.பி பகிரங்கம்!!

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் மஹிந்த 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார் எனவும் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், கூழாமுறிப்பு பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் அல்லலுறும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கனடா செந்தில் குமரன் நிவாரண அமைப்பின் 1 ,026, 500 ரூபாய் செலவில் இரண்டரை ஏக்கர் காணியில் ஒருங்கிணைந்த பண்ணை ஒன்று அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே சிறுபான்மை இனம் என்று தமிழர்களை ஓரங்கட்டிய சிங்கள அரசியல் வாதிகள் இன்று தமிழினத்திடம் மண்டியிடுகின்ற ஒரு நிலை வந்துள்ளது.

இவ்வாறு ஒரு நிலை ஏற்படும் என்று மஹிந்த ராஜபக்ச நினைத்திருப்பாரா? இது அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கின்றதை உண்மைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே நாம் பார்க்கிறோம்.

இந்த மஹிந்த ராஜபக்ச எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்ற வகையில் பேரம் பேசுகின்ற நிகழ்வில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதென்பது இவ்வாறானதொரு நிலை தனக்கு ஏற்படும் என்று நினைத்திருக்கவே மாட்டார்.

இவர் என்ன விலை கொடுக்க முடியும்? எமது தமிழ் இனத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈர்த்த எங்கள் தியாகிகளுக்கு என்ன விலை கொடுக்க முடியும்? இது ஒரு தாய் மனத்தினுடைய கண்ணீர். ஒரு தாயினுடைய மன உக்கிரம் தான். இன்று மகிந்தவை மண்டியிட வைத்திருக்கிறது.

அது மட்டுமல்ல தமிழினம் தங்களுக்கு தேவையில்லை. அவர்கள் சிறுபான்மை இனம் என்று ஓரங்கட்டி வைத்திருந்த தேசிய கட்சிகள் அனைத்துமே இன்று தமிழர்களையே நம்பியிருக்கிறது.

இந்த தமிழர்கள் ஆணையிட்டு அனுப்பி வைத்திருக்கின்ற கூட்டமைப்பை நம்பியே அவர்கள் இன்று ஆட்சிப்பீடம் ஏறவேண்டிய நிலை வந்துள்ளது.

தமிழினம் அவர்களுக்கு அடிமையாகாது என்றும் இந்த மக்களுடைய நிம்மதியான விடிவுக்காக நிம்மதியான வாழ்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்களோடு இணைந்து மக்களை ஏமாற்றாத வகையில் பயணிக்கும் என நான் ஆணித்தனமாக கூறுகின்றேன்.

ஏனைய உறுப்பினர்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டது என எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் 6 கோடி முதல் 50 கோடி வரை பேரம் பேசப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் பாலியல் நடவடிக்கைகளால் வேகமாக பரவும் கொடிய ஆபத்து!!

வவுனியாவில் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதாகவும், இதுவரை 20 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 13 பேர் மரணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் இம்முறை ஒவ்வொருவரும் தனக்கு எச்.ஐ.வி உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழிக்கலாம்.

வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.

அவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர்.

இந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது.

ஆனால், வவுனியாவை பொறுத்தவரை பாலியல் தொழில் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஒன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை.

அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி!!

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலக ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (01.12.2018) காலை 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியினை ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் , சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான வாகன விழிப்புணர்வு பேரணியானது,

மன்னார் வீதியூடாக வந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை வந்தடைந்தது.

மட்டக்களப்பு பொலிஸார் சுட்டுக்கொலை : கிளிநொச்சியில் ஒருவர் சரணடைந்துள்ளார்!!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த நபர் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் ஆவார். இவர் முன்னாள் போராளி என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு குற்றப்புலனாய்வுக் குழு விசாரணைகளை மேற்கொண்டு இருந்தது.

இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளில் தெரிவந்ததாவது, புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் என்பவற்றை முன்னெடுப்பதற்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்த பணிக்குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இதில் குறித்த பணிக்குழுவில் பணியாற்றிய உறுப்பினர்களையும் பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையிலேயே வட்டக்கச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான இராசநாயகம் சர்வானந்தனை பொலிஸார் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த நபர் இன்று காலை கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இவரிடம்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் CID யினரிடம் பொலிஸார்பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின் –

வவுனியாவில் மின் ஒழுக்கு காரணமாக வர்த்தக நிலையத்தில் தீ : பலகோடி சேதம்!!

 

வர்த்தக நிலையத்தில் தீ

வவுனியாவில் இன்று(01.12) அதிகாலை கண்டி வீதியிலுள்ள கிரி எலக்ரோணிக் சுப்பர் மார்க்கட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வர்த்தக நிலையத்தின் நிலக்கீழ் அறையில் களஞ்சியபப்படுத்தப்பட்ட பெருமளவு மின்சார உபகரணங்கள், சொசுகுக் கதிரைகள், பிளாஸ்டிக் கதிரைகள் என பலகோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் எரிந்துபோயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கண்டி வீதியிலுள்ள கிரி எலக்ரோணிக் சுப்பர் மார்க்கட்ரை நேற்று இரவு உரிமையாளர் மூடிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறக்கச் செனறபோது வர்த்தக நிலையத்தில் வழமைக்கு மாறான நிலைமைகள் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் வர்த்தக நிலையத்தில் பொருட்கள் எரிந்து காணப்பட்டுள்ளது இது குறித்து பொலிசார் மற்றும் நகரசபை, வர்த்தகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப்படையினர், நகரசபை உறுப்பினர்கள், பொலிசார், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சென்று பார்வையிட்டபோது நிலக்கீழ் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு எரிவு எற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மூன்று மாடிகளைக்கொண்ட குறித்த வர்த்தக நிலையத்தில் நிலக்கீழ் அறையிலேயே மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதுடன் மின் இணைப்புக்கள் அனைத்தும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சொகுசு கதிரைகள், பிளாஸ்டிக்கதிரைகள், சொகுசு மெத்தைகள், மின்சார உபகரணங்கள், தொலைக்காட்டிப் பெட்டிகள் எனப் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

வவுனியா காணாமல் போனோரின் போராட்ட களத்திற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகை!!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டக் களத்திற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது, களத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் நாட்டு ஆண், பெண் இரு ஊடகவியலாளர்களே இன்றைய தினம் வவுனியா போராட்ட களத்திற்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமது போராட்டங்களின் போது வெளிநாட்டுத் தலையீட்டை கோரி போராட்டம் மேற்கொண்டு வந்த உறவுகளைச் சந்தித்து அவர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டநாள் தொடக்கம் இன்றுவரையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் புகைப்படம் குரல் என்பன ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் மாற்றம் புதிய பிரதமர் வருகை என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முதன்மை சந்தேக நபரான பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடம் கேள்வி எழுப்பிய வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் இக்கைது வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் நடவடிக்கையே என்று தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வீங்கி கொண்டே சென்ற பெண்ணின் வயிறு : கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் : இறுதியில் பகீர் திருப்பம்!!

 

பெண்ணின் வயிறு

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. வேல்ஸின் Swansea நகரை சேர்ந்தவர் கீலி பாவெல் (28). சாதாரண உடல் எடையுடம் இருந்த இவரின் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

இதோடு கீலியின் வயிறும் வீங்க தொடங்கியது. இதையடுத்து மருத்துர்களிடம் சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பின்னரும் வயிற்றின் வீக்கம் மிகவும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பயந்து போன கீலி மீண்டும் மருத்துவர்களை நாடியுள்ளார்.

அப்போது அவருக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அதன் முடிவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் கீலியின் வயிற்றில் 7 பிறந்த சிசுக்களின் எடையுள்ள கட்டி இருந்துள்ளது. அதாவது 25 கிலோ எடையுடைய கட்டி இருந்தது. இதையடுத்து 5 மணி நேர ஆப்ரேஷன் செய்யப்பட்டு கட்டியானது அகற்றப்பட்டது.

இது குறித்து கீலி கூறுகையில், என்னுடைய வயிறு வீங்க வீங்க, என்னால் உடைகளை கூட அணிய முடியவில்லை, மிகவும் கஷ்டப்பட்டேன். மிக பெரிய அளவிலான கட்டியை என் வயிற்றில் இருந்து எடுத்தார்கள். நான் மறுஜென்மம் எடுத்ததாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மைத்துனியை ஒருதலையாக காதலித்த இளைஞர் : நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நவீன் (28). இவர் கீர்த்தனா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். நவீனின் இளைய சகோதரரை தான் கீர்த்தனாவின் சகோதரி திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கீர்த்தனாவின் வீட்டுக்கு அடிக்கடி நவீன் சென்று வந்துள்ளார். தம்பியின் மனைவி போலவே கீர்த்தனாவும் நவீனுக்கு மைத்துனி உறவுமுறை என்ற நிலையில் அவரை நவீன் காதலிக்க தொடங்கினார்.

மேலும் தனக்கு கீர்த்தனாவை திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் நவீனுக்கு கெட்ட பழக்கங்கள் இருந்ததால் கீர்த்தனாவின் பெற்றோர் இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. மேலும் கீர்த்தனாவும் நவீனின் காதலை ஏற்கவில்லை.

இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த நவீன், நேற்று கீர்த்தனா பள்ளிக்கூடத்துக்கு செல்லும் போது வழிமறித்து கோடாரியால் அவரை சரமாரியாக அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்று நவீன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை காப்பாற்றிய குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்த நிலையில் பொலிசார் நவீனை கைது செய்துள்ளனர், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆக்ரோஷமாக கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சைக்கோ கொலையாளி!!

 

சைக்கோ கொலையாளி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை செய்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய நபர் சைக்கோ கொலையாளியா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர்ராஜ் என்பவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 28 தேதி இவர் பணியில் இருந்த போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு அங்கு வந்துள்ளார். அங்கும் இங்கும் ஓடித் திரிந்த அவர், திடீரென தேவாலயம் முன் நடனமாடினார்.

இதைப் பார்த்த காவலாளி சுந்தர்ராஜ், மர்மநபரை எச்சரித்துள்ளார். காவலாளியை நோக்கிச் சென்ற அந்த நபர், திடீரென அவரைத் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் பெரிய கல்லைத் தூக்கி சுந்தர்ராஜின் வயிற்றில் போட்டார்.

மார்பு மற்றும் தலையிலும் கல்லைத் தூக்கிப் போட்ட மர்மநபர், நிர்வாணமாக நடனமாடிவிட்டு, காவலாளியை தாக்கிய கல்லை தேவாலயம் முன் சிறிது நேரம் வைத்த அவர், புதருக்குள் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த சுந்தர்ராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அந்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல தமிழ் நடிகர் உடல் நசுங்கி பலி : பேருந்தில் சென்ற போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

 

நடிகர் மதன்ராஜ்

பிரபல தமிழ் துணை நடிகர் மதன்ராஜ் சென்ற சொகுசுப் பேருந்து விபத்துகுள்ளானதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்.

தமிழகத்தின் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மதன். தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகரான இவர் நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கடடுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தலைக்குப்பிற கவிழ்ந்தது. இதில் நடிகர் மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போதைக்கு டிவி.நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.