தி.குகீந்த் இயக்கத்திலும் துவாரகன் மற்றும் தி.கர்சன் இணைந்த தயாரிப்பிலும் உருவான விதைகள் குறும்படம் 25 நவம்பர் 2018 வெளியானது.
இந்தக் குறும்படம் இன்றைய இளைஞர்களின் சமுக மாற்றத்தின் மீதான பார்வையையும் அதற்காக அவர்கள் தெரிவுசெய்யும் வழிமுறைகளையும் கதைக்கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இத் திரைக்கதைக்கு ச.பிரவீனின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் இளைஞர்களின் மாற்றத்துக்கான எழுச்சியைத் தூண்டுவதாக அமைந்து திரைக்கதையின் நகர்வுக்கு வலுவைச் சேர்த்துள்ளது.
இக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவினை லக்ஷன் மற்றும் ஜனுசன் ஆகியோரும் படத்தொகுப்பினை சனோஜனும் திறம்படச்செய்து மேலும் பலம்சேர்த்துள்ளனர்.
இவ்வாறான சமுகத்தில் மாற்றத்தை விதைக்கும் விதைகளை ஆதரவு செய்து நாளை நல்ல பல விருட்சங்களை உருவாக்க வேண்டும் என்பதே இயக்குநரின் வேண்டுகோளாகும். குறும்படத்தை பார்பதற்கு இந்த தொடர்பை பாருங்கள்..
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஐயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் நேற்று (26.11.2018) காலை 11 மணியளவில் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபு தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
இப் பூஜையில் அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத் தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி), வவுனியா மாவட்ட குருசாமிகள் மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.
இலங்கையின் அரசியலில் பாரிய குழப்ப நிலைகள் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான நிலைக்கு முழுப் பொறுப்பும் தானே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மிகவும் சிந்தித்து பிரதமர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார். ரணிலை நீக்கிவிட்டு மஹிந்தவை பிரதமராக நியமித்து, புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க நன்கு சிந்தித்து தீர்மானம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தான் முழுமையாக பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னரே ரணில் உட்பட தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தால் அந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே அமைதியாக இருந்து தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ம் திகதி அதிரடியாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெலிகந்த பிரதேசத்தில் நேற்றைய தினம் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கிராமங்கள் சிலவற்றில் உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கறுப்பு மழை பெய்துள்ளது.
நேற்று மாலை 3.00 – 5.00 மணிக்கு இடையில் இந்த கறுப்பு மழை பெய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேச மக்களினால் நிரப்பப்பட்ட பாத்திரங்களில், இந்த கறுப்பு மழை நிரம்பியுள்ளது.
அத்துடன் நேற்று காலை முதல் வெலிகந்த பிரதேசத்தில் மழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசிக்கு நேற்றையதினம் வவுனியா நீதிமன்றத்தினால் பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் அம்மை வைத்தான், சாஸ்திரி கூளாங்குளத்தில் உள்ள 611ம் இரானுவ தலமையகத்திற்கு முன்பாக அல்லது பக்கத்திலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இறந்து போன உறுப்பினர்களின் மாவீரர் நிகழ்வினை நடாத்துவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியினால் தெரியவந்துள்ளது.
எனவே 1979ம் இலக்க 15ம் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 (1) பிரிவின் பிரகாரம் எனக்கு இருக்கின்ற அதிகாரங்களின் படி கீழ் குறிப்பிடுகின்ற கட்டளைகளை பிறப்பிக்கின்றேன் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1. ஈச்சங்குளம் 611ம் இரானுவ முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் பகுதிக்கு உட்பிரவேசிக்க கூடாது
2. குறித்த இரானுவ முகாமிற்கு அருகே வீதிகளை மறித்து இடையூறு விளைவிக்காமலும் அரச சொத்துக்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படுத்த கூடாது.
3. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் பாதாதைகள், படங்கள், உடைகள் பாவணை தடை மற்றும் பாடல்கள் இசைக்க கூடாது எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவை மன்றமும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று நவம்பர் மாதம் 27ம் திகதி காலை 09 மணி முதல் மாலை 02 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தொழில் தேடும் இளைஞர்கள் இச் சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து சமிக்ஞைக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இளைஞனின் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர் கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்தியவர் 23 வயதான மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞனுக்கு பிணை வழங்க எண்ணிய நீதிபதி, குறித்த காணொளியை பார்த்த பின்னர் பிணை வழங்க மறுத்துள்ளார்.விபத்தை ஏற்படுத்திய இளைஞனை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 2003 வாக்குகளை பெற்றார். நேற்று நடந்த தேர்தலில், 2916 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.
தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு சுவிஸில் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும், புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.
தற்போது சுவிஸின் எஸ்.பி எனும் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் தூண் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இதேவேளை, இவர் தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார்.
சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.
இவரது வெற்றி, சுவிஸில் அரசியலில் பிரகாசித்து வரும் தமிழ் இளையோருக்கு, மற்றுமோர் எடுத்துக் காட்டாக அமைந்து உள்ளது.
இவரது வெற்றி குறித்து பிரபல இணையம் ஒன்று நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது, எனது வெற்றிக்காக அயராது பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றின் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எப்போதும் நான் வீணாக்க மாட்டேன் என்பதுடன், எப்போதும் போன்று சோஷலிசமான சிந்தனைகளுடன், நடுத்தர குடும்பங்களின் தேவைகளுக்கும், பாடசாலை மாணவர்களின் கல்வி சம்பந்தமான விடயங்களுக்கும், மற்றும் பெண்களுடைய முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபடுவேன் என உறுதி தருவதுடன், இந்த தூண் நகரத்தை மென்மேலும் இடதுசாரி சிந்தனைகளுடன் முன்னேற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, சுவிஸ் தூண் நகரசபையில் முதன்முதலாக வெற்றியீட்டிய முதல் தமிழ்ப் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு 14 வயது மாணவியான கெ.ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது வழக்கு விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி எதிர்வரும் 30.04.2019 அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து ஹரிஸ்ணவியின் சித்தி மேலும் தெரிவிக்கும்போது, கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டு செல்லப்படுகின்றதே தவிர வழக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போதும் சட்டமா அதிபருக்கு இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் இவ்வாறு சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றும் இதே போலவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் எற்படவில்லை. எமது மகளின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரும் இன்றைய வழக்கு விசாரணைக்காக சமூகமளித்திருந்தார்.
கடந்த இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளி சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கின்றார் என்று கண்ணீருடன் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் கொலை செய்யப்பட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள் கலந்துகொண்டு கதறியழுதனர். இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது தனது சகோதரனை பறிகொடுத்த கிருஷ்ணகுமார் கனகரட்னம், படகு மூலம் கனடாவுக்கு புகலிடம் கோரிச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டதால், நண்பர்களுடன் மறைந்து வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் இவர் காணாமல் போனபோதும், உறவினர்கள் அதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.
தமது மகன் நாட்டிற்கு திருப்பியனுப்பப்படலாம் என்று அஞ்சி தாம் முறையிடவில்லையென அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனடாவை அச்சுறுத்தும் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மக் ஆர்தரினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு, தற்போது இறுதிக்கிரியை நடத்தப்பட்டுள்ளது.
புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், தமது உறவினர்களுடனான தொடர்பை முற்றாக நிறுத்துவதோடு, மறைந்து வாழ்வது ஆபத்தானது என மனிதநேய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தக்கோரி வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (26.11) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தினர்.
முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.செனவிரத்தின தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கலந்துகொண்டிருந்தார்.
மக்களின் உரிமையை மக்களிடம் விட்டுவிடுங்கள் வாக்களிக்க இடமளியுங்கள், ஐக்கிய தேசிய கட்சியினரே இதுவரை ஏமாற்றியது போதும் இனியும் வேண்டாம், இலங்கை இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சபாநாயகரை பதவி விலகச் சொல் போன்ற பாதாதையை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை பகுதியில் யாசகர் ஒருவர் மேற்கொண்ட கோடரி வெட்டுத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – இறக்ககண்டி பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த யாசகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இறக்க கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அபூபக்கர் சம்சுதீன் ( 50 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவரது மனைவியான இஸ்மாயில் பரீனா (45 வயது) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உடப்பு, சிலாபம், கீரியங்கல பகுதியைச் சேர்ந்த நூர் லெப்பை பாரூக் ( 65வயது) கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தல் பகுதியில் உள்ள குறித்த நபர் திருகோணமலைக்கு யாசகம் கேட்டு வருவதாகவும், அவருக்கு இரண்டு மாதங்களாக உணவு வழங்கி வந்ததாகவும் நேற்றிரவு குறித்த யாசகர் வீட்டுக்கு வந்து கணவனையும், மனைவியையும் கோடரியால் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.
தமிழீழவிடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பிரபாகரனின் 64-ஆவது பிறந்ததினத்தை இலங்கையில் உள்ளவர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று இலங்கையின் வடக்கின் சில பகுதிகளிலும் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வருவதோடு, தாயகத்தின் பல பகுதிகளிலும் இரத்ததான முகாம்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையிலே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த சூழலில் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பு எதிராக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையினால், அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவே விசாரிக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்களினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனுவை எதிர்வரும் 30 திகதி மற்றும் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் குறித்த மனுவின் பிரதிகளை பிரதிவாதிகளுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என சபாநாயகரினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13 திருத்தத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருக்க சட்ட ரீதியான உரிமை இல்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் தன்னுடைய ஊழலை கண்டுபிடிப்பதற்கு முதன் முறையாக ஆணைக்குழு ஒன்றை நியமித்ததன் மூலம் இந்த சாதனை ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்.
2015-2018 ஆம் ஆண்டு காலத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகளை கண்டுபிடிக்க ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக ஜனாதிபதி நேற்று சர்வதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள், மோசடிகளுக்கு ஜனாதிபதிக்கும் பங்கு உள்ளதாக பல அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி வீதியால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது வீதியில் நின்றிருந்த யானை தாக்கியுள்ளது. இதனால் சிறுமி சைக்கிளில் இருந்து கிழே விழுந்துள்ளார். கீழே விழுந்தமையால் சிறுமி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர் அயலவர்கள் வந்ததும் யானை அங்கிருந்து சென்றுள்ளது. விளக்குவைத்தகுளம் பகுதியை சேர்ந்த லக்சிகா என்ற 11 வயதுச் சிறுமியே சிறு காயங்களிற்குள்ளாகியதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.