வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2019ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2019 ம் கல்வி ஆண்டிற்கான கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வழமை போல் அனைத்து கற்கைநெறிகளுடன் புதிதாக தாதி உதவியாளர் (Nurse Assistant –NVQ 3) மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கைநெறி (Assistant Steward NVQ 4) போன்றன ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பாக தாதி உதவியாளர் கற்கைநெறியானது க.பொ.த (உ/த) Bio Science / Bio Gechnology மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதையும் மேலும் தெரியப்படுத்துகின்றோம்.

விண்ணப்பபடிவங்களை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 03.12.2018

மேலதிக விபரங்களுக்கு 02.11.2018 திகதிய அரச வர்த்தகமானியைப் பார்வையிட  இங்கு அழுத்தவும்

தொடர்புகட்கு:
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா

தொலைபேசி இலக்கம் : 024 222 3664, 024 222 6720.

வவுனியாவில் நடைபெற்ற தொழில் சந்தை ஆரம்ப நிகழ்வு!!

தேசிய இளைஞர் சேவை மன்றமும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் தொழில் சந்தை இன்று 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 09 மணிமுதல் 02 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவிப் பணிப்பாளர் சிசிர செனவிரட்ண தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனிபா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு அதிதிகளாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஜானக, மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதிகளாக NAITA பணிப்பாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் ரமேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் ஒழுங்கமைப்பு பணிகளினை வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா தெற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம் இருந்து போதைப்பொருளை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புனராக பணியாற்றும் ஒருவரை திடீர் பரிசோதனை செய்த பொலிஸார் அவரிடம் இருந்து சிறிய அளவில் கெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கடமையில் இருந்த மேலும் சிலரையும் சோதனைக்குட்படுத்திய பொலிஸார் போதைப்பொருளை வைத்திருந்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!!

 

கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குமார் டிக்ஷன் (வயது 21) என்பவரின் சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில் திம்புள்ள தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கொழும்பில் பழக்கடை ஒன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் மலையக இளைஞர்களுக்கு ஏற்படக்கூடாது என திம்புள்ள கீழ்பிரிவு தோட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை மதியம் திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் தொகுப்பு!!

 

வவுனியாவில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

வவுனியா மறவன்குளம் இரண்டாம் ஒழுங்கை பாலவிநாயகர் ஆலயத்தில் பொதுமக்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

அத்துடன் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுங்கேனி களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்தில் நெடுங்கேனி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் மாவீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தமது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மற்றும் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த சகோதரர்களின் (வீரவேக்கை சசி, கப்டன் சசி, மேஜர் மலரவன்) நினைவாக முருகனூர் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தின் அவர்களின் சகோதரனினால் மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது.

வவுனியா நகரசபையின் குழுக்களிலிருந்து கூட்டமைப்பு இராஜினாமா செய்ய முடிவு : லக்சனா நாகராஜன்!!

வவுனியா நகரசபையின் உப குழுக்களில் இருந்து இராஜினாமா செய்ய தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா நகரசபையினால் மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டாத நிலையில் தொடர்ந்தும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வரமுடியாது.

உள்ளுராட்சி மன்ற விதிகளுக்கு அமைய உப குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் வேலைத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெறாத தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்தோம்.

மக்கள் செல்வாக்கினை இழந்து கூட்டாட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தமது கருத்துக்களையும் தமது கட்சி சார்ந்தவர்களின் கருத்துக்களையுமே முன்னிலைப்படுத்தி வரும் நிலையில் பெயரளவிலேயே குறித்த குழுவில் நாம் பங்கேற்று வரவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதன் ஓர் அங்கமாகவே தற்போது மக்கள் ஆதரவை தாம் பெறுவதற்காக அரசியல் விழாவாக நடத்தப்படுவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வை நாம் பார்க்கின்றோம்.

குறித்த நிகழ்வு தொடர்பாக நாம் சில விடயங்களை குழுவின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் முன்வைத்தபோதிலும் அதனை செவிமடுக்காத தலைவரும் அவர் கட்சிக்காரர்களும் தாம் செய்யும் செயற்பாடுகளில் எம்மையும் இணைத்துள்ளதாக தெரிவித்து கூறிவரும் பொய்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களிலும் மக்கள் பணிகளை குறித்த தலைவரும் அவர் சார்பானவர்களும் மேற்கொள்ளாது காலத்தை கடத்திவிட்டு குறித்த உப குழுக்களில் நாமும் பங்கேற்றிருந்தோம் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர்க்கும் நோக்கோடு வவுனியா நகரசபையின் அனைத்து உப குழுக்களில் இருந்தும் எமது பிரதிநிதிகள் இராஜினாமா செய்ய தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்பதுடன் இன்று நகரசபை கலாசார குழுவில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 3 பேர் இராஜினாமா செய்துள்ளனர் என நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தெரிவித்தார்.

சிறை செல்லத் தயாராகும் சபாநாயகர் கரு ஜயசூரிய!!

சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பு விடுத்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதற்காக சிறைக்குச் சென்று காற்சட்டை அணியவும் தயாராக இருக்கின்றேன் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் மீண்டும் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பினார்.

சபாநாயகர் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். இதற்காக சிறைக்குச் செல்ல வேண்டிவரும். எனவே காற்சட்டை அணிவதற்கு தயாராக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய,

“நான் எந்தவொரு போலி ஆவணத்தையும் தயாரிக்கவில்லை. விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். நீதியை நிலைநாட்டியதற்காக ஜனநாயகத்தை பாதுகாத்ததற்காக ஜம்பர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் செய்வதற்கு தயார். நான் நடுநிலை தவறி செயற்படுகின்றேன் என்றால், எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வாருங்கள்” என்றார்.

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!!

 

கிளி­நொச்சி, கன­கபு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்தில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப் கேணல் கில்மன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையார் ஏற்றியுள்ளனர்.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.

1991ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் போரின் போது வீரச்சாவடைந்த முன்னாள் அரசியற் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தளபதி வீரமணி மற்றும் தளபதிகள் மாவீரர்கள் போர் உதவிப்படை வீரர்கள் துணைப்படை வீரர்கள் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின்வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

மொனராகலை யுவதி கொலைச்சம்பவம் : சந்தேக நபர் கொடுத்த வாக்கு மூலம்!!

சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்ட, மொனராலையில் தனது காதலனால் பெண்ணொருவர்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

ஆரம்பத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் கூறிய கருத்துக்கும், கொலை செய்ததாக கூறப்படும் இளைஞனின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த 22 வயதான பெண் திருமணமானவர் என சந்தேகநபரான இளைஞன் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் திருமணமான கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடமாக இளைஞருடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் குறித்த இளைஞனின் சகோதரியின் அழகுக்கலை நிலையத்தில் வேலை செய்துள்ளார். அந்த சேவை நிலையத்திற்கு வந்த பின்னரே இருவருக்கும் இடையில் தொடர்புகள் ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் அந்த பெண் வேறு நபர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தான் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள இளைஞன், கொழும்பில் பணியாற்றிவிட்டு மொனராகலைக்கு வந்தபோது பெண்ணிடம் பேசுவதற்காக அவருடைய மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சுமேத வாவிக்கு அருகில் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை இதன்போது குறித்தபெண் மறுத்ததாகவும் அவரது மோட்டார் சைக்கிளை பரிசோதனை செய்ய சென்றபோது அதற்கு குறித்த பெண் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பலாத்காரமாக பரிசோதனை செய்தபோது அதில் இருந்த இரண்டு தொலைபேசிகளை கண்டு பிடித்ததாகவும் அதுதொடர்பாக கடுமையான வாக்கு வாதம் இருவருக்குமிடையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாக்குவாதம் தொடர்ந்ததில் அப்பெண்ணை தான் கழுத்து நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸாரிடம் குறித்த இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 23ம் திகதி இந்த கொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் 25ம் திகதி கைது செய்து நீதிமன்றத்தின் முன்னலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த கொலைச்சம்பவத்தை மற்றமொரு குழுவினர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கதறி அழும் ஓசையில் மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம்!!

வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் தினமான இன்று வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் மன்னார், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் டெனீஸ்ரன், சிராய்வா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்க்ப்படுகின்றது.

கண்ணீர் கடலில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்!!

 

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக, பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது.

கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்!!

தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு இன்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர். இதில் தமக்கும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுடரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கு இரத்த உறவுகள் வந்து அஞ்சலி செலுத்தும் நிலையில், கடல் கடந்து வந்து எமது தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை அங்குள்ள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்!!

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் இங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விட்டு கதறி அழுவதையும் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

39 மனைவிகளுடன் வாழ்க்கை : மீண்டும் திருமணம் செய்ய திட்டம் போடும் நபர் : மொத்தம் எத்தனை குழந்தைகள் தெரியுமா?

 

39 மனைவிகளுடன் வாழ்க்கை

உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியர் பெற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற 70 வயதான நபர் தான், 39 மனைவிகளுடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர்.

ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார்.

இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார்.

நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்’ என்று கூறியுள்ளார், காதல் மன்னன் ஜியோனா சானா.

கொழும்பை சேர்ந்த இவர்களை தெரியுமா? தகவல் வழங்குமாறு அவசர கோரிக்கை!!

கொழும்பை சேர்ந்த தம்பதி தொடர்பில் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் அவசரமாக தகவல் கோரப்பட்டுள்ளது.

இந்திய பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்சமயம் இருந்து வருகின்ற 29 வயதான ஜோய் என்பவரின் பெற்றோர் குறித்த தகவல்களே கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள தனது பெற்றோரை தேட இலங்கைக்கு செல்வதற்கான அனுமதியை பெற்று தருமாறு ஜோய் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரியுள்ளார்.

இதனடிப்படையிலேயே இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம், குறித்த தம்பதி தொடர்பான தகவல்களை கோரியுள்ளது.

ஜோய்க்கு ஐந்து வயதாக இருக்கும் போது உறவினரொருவரால் இந்தியாவிற்கு கூட்டி செல்லப்பட்டுள்ளதுடன், இதன்போது அவரது பெற்றோர் கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றுக்கு முன்பாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் ஜோயின் தந்தை மீனவரான பில்லு எனவும், தாயின் பெயர் மன்கோ எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 0112 2451397, 0112 2432457 போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடி!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு நிற துணியில் “தமிழீழம் எங்கள் தாயடா” என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், இந்த கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டுள்ளது.

இதை அவதானித்தவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த புலிக்கொடியை அகற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.