தற்காலிக அரசாங்கமோ தக்காளி அரசாங்கமோ இல்லை : ரணில்!!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தற்காலிக அரசாங்கமாக குறிப்பிட்டாலும் ஆட்சியில் இருப்பது தற்காலிக அரசாங்கமோ தக்காளி அரசாங்கமோ இல்லை எனவும், வன்முறை கும்பல் பலவந்தமாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“வன்முறை கும்பல் பலவந்தமாக ஆட்சியில் இருப்பது மக்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதால், அதற்கு இடமளிக்க முடியாது.

இங்கு இருப்பது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை. நாட்டில் நாகரீகமான அரசியல், ஒழுக்கமாக வாழக்கூடிய அரசியல் முறைமையை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.

விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்க போவதாகவும் இந்த போராட்டத்தை மக்கள் சக்தி நடவடிக்கையாக மாற்றி வெற்றியுடன் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும்” ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இன்று (28.11) காலை 10 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதையடுத்து அப் பகுதியை பார்ப்பதற்காக நான்கு இராணுவ வீரர்கள் சென்ற சமயத்தில் காட்டுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கரெஜிமென்ட் படையணியில் உள்ள பூனாவையைச் சேர்ந்த 40 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபையில் வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால் பாரிய சர்ச்சை!!

 

வைக்கோல் பட்டறை என்ற வார்த்தையால்  சர்ச்சை

வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா தனது கருத்தில் வைக்கோல் பட்டறை என்ற வசனத்தினை பாவித்தமையினால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது.

வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா தனது வட்டாரத்தின் அபிவிருத்தியில் தலையீட முடியாது. அவர் எனது வட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பாக விடயத்திலிருந்து மீளபெற வேண்டுமேன என நகரசபை உறுப்பினர் இராஜலிங்கம் சபையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உறுப்பினர் பாலப்பிரசன்னா அவர் என்னால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி கோரிக்கைகளை வாபஸ் வாங்க வேண்டுமேன தெரிவித்தமை சிறுபிள்ளைத்தனமாகவுள்ளது. எனக்கு உரிமையில்லையா? மக்களுக்கு சேவை செய்ய , பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் எல்லா வட்டாரமும் என்னால் பார்க்க முடியும் . சொந்த தேவைக்காக நான் இல்லை, மக்களின் தேவைக்காகவே நான் கதைக்கின்றேன் என்றதுடன் வைக்கோல் பட்டறை போன்று என்ற வாசனத்தினையும் பாவித்திருந்தார்.

திடீரென எழுந்த நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் இவ் உயரிய சபையில் வார்த்தைப் பிரயோகங்கள் என்பது முக்கியமானது. இன்றுடன் மூன்றாவது தடவையாக உறுப்பினர் பாலப்பிரசன்னா சபையின் போது அவமதிக்கின்ற சொற்பிரயோகயங்களை பிரயோகித்திருக்கின்றார். இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையினை இந்த சபை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த உறுப்பினர் பாலப்பிரசன்னா வவுனியாவில் கடை சம்பந்தமாக ஒர் பிரச்சனை இடம்பெற்றது. அந்த சமயத்தில் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் என்னிடம் ஏன் நீங்கள் தொப்பி போட வில்லையா? பள்ளிக்கு போகவில்லையா என அப்படியெல்லாம் அவர்கள் கதைத்துள்ளனர். அதன் போது ஒரு பிரச்சனையுமில்லை. நான் இப்ப தேவையில்லாத கெட்ட வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை

அவரின் கருத்திற்கு பதிலளித்த உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவும் இவர் சபையில் மூன்று தடவைகள் இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்கள் பேசியதற்கு சபையின் உள்ள உறுப்பினர்களின் ஆதாரங்களுடன் உங்களுக்கு தெரிவித்துள்ளேன் என தவிசாளரிடம் தெரிவித்தார்.

இதன் போது உறுப்பினர்களாக பாலப்பிரசன்னா மற்றும் சு.காண்டீபன் ஆகியோருக்கிடையில் பாரிய கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. தவறான கருத்தினை தெரிவித்திருந்தால் வாபஸ் பெறுமாறு உறுப்பினர் பிரசன்னாவிற்கு தவிசாளர் தெரிவித்தார்.

நான் தவறான வார்த்தைப்பிரயோகம் எதுவுமே மேற்கொள்ளவில்லை நான் வைக்கோல்பட்டறை என்றே தெரிவித்திருந்தேன். இதில் என்ன தவறு உள்ளது? வாபஸ் பெற முடியாது என உறுப்பினர் தெரிவித்தார். இங்குள்ள சகல உறுப்பினர்களும் தங்களது வசனங்களை எவரினதும் மனது புன்படாவண்ணம் பேச வேண்டும். உறுப்பினர் பாலப்பிரசன்னா மன்னிப்பு கேட்க வேண்டுமென உறுப்பினர் சேனாதிராஜா தெரிவித்தார்.

அவமதிக்கின்ற சொற்பிரயோகங்களை மேற்கொள்ளப்படும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த உறுப்பினர் சேனாதிராஜா எங்களுக்கும் மூன்று சந்தர்ப்பங்கள் தந்ததன் பின்னரே நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மாவீரர் தின எதிரொலி : விக்னேஸ்வரனின் பாதுகாப்பு அதிரடியாக நீக்கம்!!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மாவீரர் நாளையொட்டி இவரால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று 24 மணி நேரங்கள் கூட ஆகியிராத நிலைமையில் உடனடியாக அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் தற்போது திடீரென அவரின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவு கூறும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்துவிட முடியாது என முன்னாள் வடக்கு முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை அமர்வில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதில் குழப்பநிலை!!

 

வவுனியா நகரசபை

வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று (28.11.2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. சபை அமர்வின் இடையில் நகரசபை உறுப்பினர் திருமதி லக்ஸ்சனா நாகராஜன் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பதற்கு நகரசபை தலைவரிடம் அனுமதி கோரினார்.

இதற்கு சபையிலிருந்த இரண்டு பெரும்பான்மை இன உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் மாவீரர் தின நிகழ்வு என்ற பெயரில் இடம்பெறுவதற்கு தமது ஆட்சேபனையும் வெளியிட்டுள்ளதுடன் யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமது விருப்பத்தினை தெரிவித்தனர்.

இந்நிலையில் நகரசபைத்தலைவர் இ.கௌதமன் கடந்த 35 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அஞ்சலி நிகழ்வாக சபை நிறைவுற்ற பின்னர் நடாத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

சபை முடிவடைந்த பின்னர் பிற்பகல் 12.45 மணியளவில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு யுத்தத்தின் போது உயிரிழந்த மூவின மக்களுக்கும் தமது அஞ்சலியை செலுத்தினார்கள்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!!

 

இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை கனகராயன்குளம் பொலிஸார் இன்று (28.11) அதிகாலை 1 மணியளவில் கைது செய்துள்ளனர். இவ் விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – புத்தளம் நோக்கி சென்ற வீல்ரோ கப் வாகனத்தை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அவ் வாகனத்தில் பயணித்த புத்தளத்தை சேர்ந்த 20,25 வயதுடைய இரு இளைஞர்களை 13பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் வாகனத்தையும் கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அமலாபாலுடன் திருமணம் குறித்து விஷ்ணு விஷால் அதிரடி டுவிட்!!

 

விஷ்ணு விஷால் அதிரடி டுவிட்

நாங்களும் மனிதர்கள் தான்… அமலா பாலுடனான இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷ்ணு விஷால்.

விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த மாதம் ராட்சசன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடந்து விஷ்ணு அண்மையில் தனது காதல் மனைவியை விவாகரத்தும் செய்தார்.

தற்போது விஷ்ணு, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், விஷ்ணு நடிகை அமலா பால்-ஐ இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘ என்ன ஒரு முட்டாள்தனமான செய்தி. தயவுசெய்து பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் குடும்பத்துடன் தான் வசித்து வருகிறோம். இது தொடர்பாக யாரும் எதுவும் எழுத வேண்டாம்’’ என்று ஒரு வணக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் இறந்த சடலத்துக்கு தாலிகட்டி திருமணம் செய்த இளைஞன் : நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்!!

 

நெகிழவைக்கும் சம்பவம்

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

24 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண்ணும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் அப்பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த காதலி இறந்துவிட்டாளே என கதறி துடித்த காதலன் நெகிழ்ச்சியை விடயத்தை செய்தார். அதன்படி சடலமாக கிடந்த காதலியை அவர் இந்து முறைப்படி குங்குமம் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இளைஞர் தனது காதலியின் சடலத்துக்கு தாலி கட்டும் போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். இது சம்மந்தமான நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த இளைஞன் : பதறவைக்கும் CCTV காட்சிகள்!!

 

பதறவைக்கும் CCTV காட்சிகள்

தமிழகத்தில் இளம்பெண்ணை ஒருதலைக் காதல் காரணமாக கொடூரமாக குத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை செய்தார். அவர் பணிமுடிந்து கடையிலிருந்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் மெர்சி (21) என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசில் ஒப்படைத்தார்கள். விசாரணையில் அவரின் பெயர் ரவீந்தரன் என்பது தெரியவந்துள்ளது. ரவீந்தரன், மெர்சியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், மெர்சி காதலிக்க மறுத்துள்ளார். அதனால் அவரைக் கொலைசெய்யும் திட்டத்துடன் கடந்த இரு தினங்களாகச் சுற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மெர்சி பேருந்து நிலையம் அருகே நடந்து வந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக் கொலை செய்ததாகப் பிடிபட்ட ரவீந்திரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, மெர்சியை ரவீந்திரன் கொலை செய்வதற்காக விரட்டும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 6 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!!

 

காதல் ஜோடி

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான 6 மாதத்தில் புதுமணத்தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மகன் நந்தகுமார் (20). பிளஸ் 2 முடித்து விட்டு, திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தந்தூரி மற்றும் சைனீஸ் உணவு வகைகளை சமைக்கும் தொழில் செய்து வருகிறார்.

புளியம்பேட்டையைச் சேர்ந்த இவரது மனைவி சத்யப்ரியா (23) பட்டதாரி. இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரையும் பிரித்து பெற்றோர்கள் அவரவர் வீட்டில் வைத்திருந்தனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் இருவரும் சேர்ந்து வெள்ளகோவில் அருகே உப்புபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நந்தகுமார் அப்பகுதியில் உள்ள டீ கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடைக்கு நந்தகுமார் வராமல் இருப்பதை அறிந்த கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். அருகே ஒரு விஷபாட்டிலும் கிடந்துள்ளது.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நந்தகுமார் அடிக்கடி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று தாயை சந்தித்து வந்துள்ளார்.

ஆனால் சத்யபிரியாவின் வீட்டிலிருந்து யாரும் வருவதில்லை. இதனால் நந்தகுமார் மீது சத்யபிரிய கோபமாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஏற்பட்ட மனஉளைச்சலால் இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண நாளில் ரயிலிலிருந்து தவறிவிழுந்து இறந்த கணவன் : நடந்தது அறியாமல் தேடிய மனைவி!!

 

தவறிவிழுந்து இறந்த கணவன்

இந்திய மாநிலம் கேரளாவில் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 24 வயது முகமதலி என்பவர் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் மனைவியுடன் ரயிலில் மும்பை சென்றுள்ளார். போகும் வழியில் இரவு உணவுக்காக கை கழுவும் பொருட்டு இருக்கையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஆனால் ரயில் இருந்து தவறி விழுந்து குறித்த இளைஞர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. கை கழுக சென்ற கணவர் திரும்ப வராதது கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த ரயிலின் பல பெட்டிகளில் தேடியுள்ளார்.

பல கிலோ மீற்றர் கடந்த நிலையில் அடுத்த ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தபோது, அங்குள்ள அதிகாரிகள் நடந்தவற்றை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இறந்தது தமது கணவர் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி தாஹிரா மற்றும் முகமதலி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. மும்பையில் பணியாற்றும் முகமதலி தமது முதலாமாண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கொண்டாடும் பொருட்டும் மனைவியுடன் ஒரு மாதம் முன்னரே மும்பையில் இருந்து திருச்சூர் வந்துள்ளார். தற்போது உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் முகமதலியின் சடலத்தை திருச்சூருக்கு கொண்டு சென்றுள்ளனர்..

10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய இளைஞன் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!!

 

அதிர்ச்சித் தகவல்கள்

வேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர் செய்த ஒரு கொலையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி ஸ்ரீஜா என்ற இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது. செவிலியராக பணியாற்றி வந்த இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீஜா-வின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை வைத்து விசாரணை நடத்தி மங்காடு பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்ற வேன் ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விபின், தனது வேனில் பணிக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளையும் ஏற்றிச் செல்வது வழக்கம்.

பெண்களை கவர்வதற்காக வேனில் காதல் பாடல்களை ஒலிபரப்பும் விபின், அதில் வரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை நினைத்துத் தான் காதல் பாடலை ஒலிபரப்பியதாகப் பேசி, பெண்களை மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இப்படித்தான், தன்னை சினிமா நாயகன் போல நினைத்து பல காதல் பாட்டுகளை போட்டு, ஸ்ரீஜாவை காதல் வலையில் மயக்கியுள்ளார். அவனது காதலை நம்பி அவன் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்றுவர குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஸ்ரீஜாவை பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் கர்ப்பமான ஸ்ரீஜா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், கடந்த 20-ம் தேதி இரவு நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி ஸ்ரீஜாவை பைக்கில் அழைத்து சென்று தாமிரபரணி ஆற்றில் தள்ளிகொலை செய்துள்ளார்.

இதனை விபின் பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். எந்த ஒரு பெண்ணும் புகார் அளிக்காததால் அவன் தப்பி வந்ததும் தெரியவந்தது. விபினை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இறந்த கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும் விபத்தில் பலியான சோகம்!!

 

விபத்தில் பலியான சோகம்

தமிழகத்தில் கணவனின் உடலை பின் தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிர்ழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்தவர் பாபு. இவர் சென்னை சிட்லபாக்கத்தில் இருக்கும் இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்ல மனைவி ராதா(45) மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் பின் ஆம்புலன்சில் பாபுவின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரின் மனைவி ராதா, மகன் அம்பரீஷ்(22), தாய் தங்கம்(70) மகள் சோனியா(25) ஆகியோர் மற்றொரு காரில் ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றனர்.

கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எடைக்கல் எனுமிடத்தில் செல்லும்போது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதா, அம்பரீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அவரது தாய் தங்கம், மகள் சோனியா, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோகுல், லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக் சந்திரபாபு ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொலிசார். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் விபத்தில் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உருக்குலைந்த நிலையில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிப்பு!!

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சடலம் யாருடையது என இணங்கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

இதேவேளை, இச்சடலம் செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா திருஞானம் (60 வயது) என்பவருடையது என அவரது குடும்பத்தினரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அதிரடித் தகவல்!!

 

பேஸ்புக்

இலங்கை விவகாரத்தில் பாரிய தவறிழைத்து விட்டதாக உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன், லண்டனில் இடம்பெற்ற விசாரணை ஒன்றின் போது இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளை நீக்காமை ஓர் பாரதூரமான பிழையாகும் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிங்களத்தில் வெளியான குரோத உணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகளினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த முகநூல் பதிவுகள், நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா என தொங் கேள்வி எழுப்பிய போது, ரிச்சர் அலன் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த முகநூல் பதிவுகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது எனவும் இதனால் உயிர்ச் சேதங்களும் உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாகவும் தொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முகநூல் பதிவுகள் இந்த முரண்பாட்டு நிலைமையை தூண்டி பூதாகரமாக்கியது என்பதனை நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா? தொங், முகநூல் நிறுவன துணைத் தலைவரிடம் வினவிய போது ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முகநூல் பதிவுகளை நீக்குமாறு இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் கோரிய போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன அவர் மேலும் வினவியுள்ளார். அதற்கு முகநூல் பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.

மேலும், சமூக விரோத அடிப்படையிலான பதிவுகள் கிடையாது என முன்னதாக முகநூல் நிறுவனம் வாதிட்டதாகவும் அதனை ஒப்புக் கொள்கின்றீர்களா தொங் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் போது இல்லை அதனை ஒப்புக்கொள்ளவில்லை தவறுதலாக இவ்வாறு ஒர் பிழை இடம்பெற்றதாக ரிச்சர்ட் அலன் தெரிவித்துள்ளார்.

முகநூல் நிறுவனத்தை நம்ப முடியாது எனவும் சரியான மதிப்பீடுகளை முகநூல் நிறுவனத்தை வைத்து பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ரிச்சர்ட் அலன், நிறுவனம் பாரதூரமான பிழையொன்றை விட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறான பிழைகளை வரையறுத்துக் கொள்வதே தமது நிறுவனத்தின் பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல மொழிகளிலும் குரோத உணர்வைத் தூண்டும் வார்த்தைகளை கண்டறிந்து அதனை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்காக பாரியளவில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார். குரோத உணர்வைத் தூண்டும் பதிவுகள் குறித்து இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் முறைப்பாடு செய்தும், முகநூல் நிறுவனம் அதனை உரிய முறையில் கவனத்திற் கொள்ளத் தவறியதாக தொங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இறுதியில் இலங்கையில் முகநூல் பயன்பாட்டை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்களில் தாக்கம் செலுத்தாது சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முகநூல் நிறுவனம் தீவிர முனைப்பு காட்டி வருவதாக ரிச்சர்ட் அலன் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றில் பங்கேற்ற போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தப் போகும் ரணில்!!

 

ரணில் விக்ரமசிங்க

நாடாளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, ஆளும்கட்சியின் ஆசனத்தில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று மோசமான அரசாங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் ஆசனம் பெறுவதற்கு நாளைய தினம் தீர்மானிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் கட்சியினர் ஆசனத்தை பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலை ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்கட்சியின் ஆசனங்கள் வெறுமையாக உள்ளன. நாம் அந்தப் பகுதியில் அமரப் போகிறோம் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.