8வது மாடிக்கு சென்ற இளம்பெண் : அடுத்து செய்த செயல் : சிசிடிவியில் சிக்கிய காட்சி!!

 

சிசிடிவியில் சிக்கிய காட்சி

இந்தியாவில் எட்டாவது மாடியில் இருந்து பெண் மருத்துவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கடக்படா பகுதியை சேர்ந்தவர் பிரனவ் குல்கர்னி. இவர் மனைவி பிரஜக்டா (33). தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவர்.

இருவரும் அங்குள்ள எட்டு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரஜக்டா நேற்று நைட்டி உடையில் தனது வீட்டிலிருந்து வெளியில் வந்து லிப்டில் ஏறி எட்டாவது மாடிக்கு ஏறினார்.

பின்னர் அங்கிருந்து அவர் கீழே விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உடல் சிதறியது. இந்த காட்சிகள் அங்குள்ள கமெராவில் பதிவானது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனையில் பிரஜக்டாவின் உள்ளுருப்புகள் அனைத்தும் சேதமடைந்ததும், வெளி உடலில் படுகாயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இது தற்கொலையாக இருக்கலாம் என கூறும் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையால் பிரஜக்டா இம்முடிவை எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், பிரனவும், பிரஜக்டாவும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தார்கள். அவர்கள் சண்டை போட்டு நாங்கள் பார்த்ததேயில்லை என கூறியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைத்திரியை கொலை செய்ய முயற்சி : பொலிஸ் மா அதிபர் கைது?

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்பு செயலாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டால், பொலிஸ் மா அதிபர் பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!!

 

சிறுவன் சடலமாக மீட்பு

நிந்தவூர் பகுதியில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் முகத்துவாரப் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து நேற்று காலை காணாமல்போயிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், நிந்தவூர் முதலாம் பிரிவில் 196/A வன்னியார் பகுதியில் உள்ள மன்சூர் அய்மன் அப்துல்லாஹ் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கிய கொழும்பின் பிரதான பகுதிகள் : மக்கள் பரிதவிப்பு!!

 

மக்கள் பரிதவிப்பு

கொழும்பு நகரில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியமையினால் மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த மலை மாலை 5.30 மணிவரை பெய்துள்ளது. கடந்த 3 மணித்தியால காலப்பகுதியில் 122 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தும்முல்ல, நிதஹாஸ் மாவத்தை, ஹைட்பார்க், ஹொர்ட்டன் பிளேஸ், சின்ஸி வீதி, யூனியன் பிளேஸ் மற்றும் பேஸ்லைன் வீதி உட்பட மேலும் சில வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. சில வீதிகள் பல அடி நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணி நிறைவடைந்து வீடு நோக்கி பயணித்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மற்றும் நாளை அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்!!

 

இறந்து கிடந்த கர்ப்பிணிப் பெண்

நியூசிலாந்தின் வெலிங்டன் கடற்கரையில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் நியூசிலாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் ஷேலார் என்பவரின் மனைவி சோனம் என்பது தெரியவந்துள்ளது.

நவம்பர் 17 ஆம் திகதி முதல் சோனம் மாயமானதாக கணவர் சாகர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே வெலிங்டன் கடற்கரையில் மர்மமான முறையில் சோனம் இறந்து கிடந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

5 மாதம் கர்ப்பிணியான சோனம் தனது குடியிருப்பில் இருந்து மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான நவம்பர் 17 ஆம் திகதியே கணவர் சாகர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனிடையே வெலிங்டன் கடற்கரையில் இருந்து மர்மமான முறையில் குறித்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

விசாரணையின் ஒருபகுதியாக பல்வேறு கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தாலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் வாக்குமூலத்திலும் அது நிரூபணமான நிலையில் பொலிசார் கொலை வழக்கை தற்கொலை வழக்கு என மாற்றியுள்ளனர்.

தற்போது சோனத்தின் உடலை இந்தியா கொண்டு செல்லாமல் நியூசிலாந்திலேயே இறுதிச்சடங்குகளை முடிக்க உறவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்!!

 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள்.

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் கொடுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் : வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.

“ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம், அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்” என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும்.

செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும்.அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் திரும்.

மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது 9ல் வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ம் பாவம், அந்த 9ம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம்.

ரிஷபம் : அழகுணர்ச்சியும் அன்பும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே… ராகு 2ம் இடத்திற்கும், 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள், வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும்.

இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். பூர்விக சொத்து வீடு மனைகளால் பிரச்சனை வரலாம்.எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது.

அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும்.

கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடக்கும்.

மிதுனம் : இது வரை 2ல் ராகு 8ல் கேது சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகு சனியின் பார்வையையும், கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு, புகழ், பெறுமை, ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார்.

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும்.ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்.தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும்.

ராகு 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம்.உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். சனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம்.

ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

கடகம் : இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும், 7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள். இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்க்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும். அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம், தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டிற்கு வருகிறார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியாகி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

இனி கேதுவும் அந்த வீட்டில் அமரப்போவதால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும்.

உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும்.மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது.

சிம்மம் : வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே… எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். 12ஆம் வீட்டில் விரையத்தில் அமர்ந்துள்ள ராகு 11ல் இடப்பெயர்ச்சி ஆவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும்.

பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.

பிள்ளைகளுக்கு படிப்பு மாற்றம் மேல் கல்விகளுக்கு சுப கடன்கள் வாங்க நேரிடும். தடைப்பட்ட திருமணங்கள், புத்திரபாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

புதிய முயற்சிகள் கை கூடும். புதிய மனிதர்களின் தொடர்பு அவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.நன்மையான ராகு கேது பெயர்ச்சி தான். 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்.

கன்னி : கன்னி ராசிக்கு 11ல் ராகுவும் 5ல் கேதுவும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் இடம் மாறி அமரப்போகின்றனர். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடமாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும். கேந்திரத்தில் பாவ கிரகங்கள் வரும் பொழுது வலிமையாக பலனை செய்யும்.

கடந்த காலங்களில் மகிழ்ச்சியை கொடுத்து நிம்மதியை இழக்க செய்த ராகு கேது இப்பொழுது சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளை உருவாக்கி தரலாம்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும்.குடும்பத்தில் சுபகாரியம் சுபமாக முடியும்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் ஓத்திகைகக்கு வீடு மாறலாம். காலிமனைகள் வாங்கும் வசதி வரும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆறுதலையும் முன்னேற்றத்தையும் தரும். ஞாயிறன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள்.

துலாம் : ராகு 10ஆம் வீட்டிலும் கேது 4ஆம் வீட்டிலும் அமர்ந்து இருக்கின்றனர். இனி ராகு ஒன்பதாம் வீட்டிற்கும் கேது 3ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகளும் கேந்திர ஸ்தானமான 4, 7, 10,வீடுகளில் ராகு கேது வருவது நல்லது தான்.

கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் : சகோதரம், வீரியம், வீரம், எழுத்தறிவு, விளையாட்டு. தகப்பன் ஸ்தானத்தில் ராகு இருந்து சனி பார்வை பெறுவதால் தந்தையாருக்கு உடல் நிலை பாதிக்கலாம். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல்படலாம். குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார்.

விருச்சிகம் : செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே… இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார். இது வரை 3 ல் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள்.

ஏற்கனவே இருந்த இடம் யோகத்தை செய்ய வேண்டிய இடம் தான். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம்.

சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். வருமானம் சேமிப்பு உயரும். சிலருக்கு வீட்டுக்கு மேல் மாடி வீடு கட்டும் யோகம் வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் நல்லதே நடக்கும்.

தனுசு : இதுவரை 2 ம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும் . ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும்.

தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் முழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம்.

ஜென்மசனியால் இது வரை போரட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் வரும்.

மகரம் : மகர ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளனர். இனி அந்த நிலை மாறி 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு அமரப்போகின்றனர். கேந்திரத்தில் கேது ராகு இருந்தது ஓரு வகையில் நன்மை செய்ய கூடியது தான். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு, ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும்.

இந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.

மோட்ச ஸ்தானத்தில் மோட்சகாரகன் வருவதால் புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும். சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி யோகம் செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும்.

கும்பம் : அமைதியும் எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் உள்ளனர். இனி ராசிக்கு 5ம் இடத்திற்கும் ராகுவும், 11ம் இடத்திற்கும் கேதுவும் வரப்போகிறார்கள். 5ஆமிடம் என்பது புத்திரபாக்கியம், தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை கதை கவிதைகளில் ஆர்வம் இவை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள்.

11ஆம் இடம் என்பது லாபம் மூத்த சகோதரம், எண்ணங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும். இதுநாள் வரை போதுமான வருமானம் வந்தாலும் கடனுக்கு வட்டியை கட்டி விட்டு நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது 11ல் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்.

இதுவரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். இதுவரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் குடும்பத்தில் அமைதியும் நிலவும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

மீனம் : உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும், 11ஆம் இடத்தில் கேதுவும் இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் 4ல் ராகுவும் 10ல் கேதுவும் மாறுகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் யோகமான இடம்தான் என்றாலும் தேவையில்லாத செலவுகள், வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லை என பிரச்சனைகள் திணறடித்தன. இனி இந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

4ம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி, நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்க்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.

வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள், வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். கடல் தாண்டி திரவியம் தேடும் வாய்ப்பு வரும். சிலருக்கு இடமாற்றம் தொழில் மாற்றம் வரலாம். ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால் தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார்.

லாப ஸ்தானத்தில் இருந்து யோகத்தை செய்த கேது இப்பொழுதும் யோககாரனாக செயல்பட்டு யோகபலனை வாரி வழங்குவார். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும் தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வை கொடுக்கும்

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

 

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

வவுனியா மரக்காரம்பளை வீதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று (29.11.2018) காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி , ஈசன் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்தில் தூக்கில் தூக்கிய நிலையில் 43 வயதுடைய இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது மக்களிடம் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. காணாமல் போனவர்கள் விபரங்கள் பின்வருமாறு,

நுகதெனிய பிரதேசத்தை சேர்நத நவாஸ், என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.

தலகொஸ்வெட்ட பிரதேசத்தை உதயகுமாரி என்பவர் 02-11-2016 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.

அரவத்தை பிரதேசத்தை சிறியாவத்தி என்பவர் 17-02-2014 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.

நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த திலக்கனி பீரிஸ் என்பவர் 02-02-1995 திகதியன்று வெளிநாடு சென்றுள்ளார்.

இவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 0114380954/ 0112878244 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

6 வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த கட்டாய திருமணம் : 12 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்!!

இந்தியாவில் 6 வயதாக இருக்கும் போது சிறுமிக்கு திருமணம் நடந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து அந்த திருமணம் சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பித்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் பிண்டுதேவி (18). இவருக்கு 6 வயதாக இருக்கும் போது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டது.

பிண்டுதேவிக்கு வயது ஏற ஏற விபரம் தெரிய ஆரம்பித்த நிலையில் கணவரை பிரிய விரும்பி விவாகரத்து கோரியுள்ளார். ஆனால் கணவர் குடும்பத்தார், பிண்டுதேவி மற்றும் அவர் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது 18 வயதான பிண்டுதேவி, சாரதி என்ற அரசு சாரா நிறுவனத்திடம் இது சம்மந்தமாக உதவி கோரினார். இதையடுத்து நிறுவனத்தின் தலைவி மூலம் இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பிண்டுதேவியின் திருமணம் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிண்டுதேவி கூறுகையில், சிறுவயது திருமணத்தின் பிடியில் இருந்து நான் விடுவிக்கப்பட்டேன், இப்போது என் கனவுகளை நிறைவேற்றுவதற்காக பிடித்த படிப்பை படிக்க போகிறேன் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

திருமண ஆசையை வெளியிட்ட 12 வயது சிறுமி : நெஞ்சை உலுக்கும் காரணம்!!

யேமன் நாட்டில் ஒரு வேளை உணவுக்காக 12 வயது சிறுமி ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது சமூக ஆர்வலர்களை உலுக்கியுள்ளது.

யேமன் நாட்டில் ஒருவேளை உணவுக்காக பெண்களும் சிறார்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான சுகைனா பகிர்ந்துள்ள கருத்துகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

இரவில் தமது மகனை அணைத்தபடி படுத்துறங்கும்போது, ஒரு நாள் ஒரு ஏவுகணை அல்லது வெடிகுண்டு தங்களது குடியிருப்பின் மீது பதிக்கலாம் என தனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பலர் சொத்துக்களும் குடியிருப்புகளும் இழந்துள்ளனர். வாழ்க்கையில் அதுவரை சம்பாதித்த அனைத்தும் இழந்து தெருவீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களது பிள்ளைகள் குடிநீருக்காக வாய்விட்டு கதறுகின்றனர். பல சிறுவர்கள் பட்டிணி மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர்.

மருந்தும் உணவும் இன்றி ஒவ்வொரு நிமிடமும் அந்த சிறார்கள் நரக வேதனை அனுபவிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் மருந்துக்கும் உணவுக்குமான பணத்தை அரசாங்கம் போருக்காக செலவிடுகின்றது என்பது தான் கொடுமை.

யேமனில் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமக்கு பிள்ளை பிறந்ததாக கூறும் சுகைனா, மகன் நடக்கத் துவங்கியபோது அண்டை விட்டாரின் 5 வயது சிறுவன் பட்டினியால் மரணமடைந்துள்ள தகவல் தம்மை உலுக்கியது என்றார்.

ஒருமுறை தெருவோரம் சந்தித்த 12 வயது யேமன் சிறுமியிடம், தற்போதைய நிலையில் ஆசை என்ன என வினவியபோது,

அந்த சிறுமி தெரிவித்த பதில் தம்மை கடுமையாக பாதித்ததாக சுகைனா பதிவு செய்துள்ளார்.

அந்த 12 வயது சிறுமி தமக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதாகவும், அப்போதுதான் தமக்கு மதியம் சிக்கன் உணவு சாப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.

மகிந்தவை பதவி விலகுமாறு கோரிக்கை : அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி அணி!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது போல், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்காது உடனடியாக விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று அவரை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகுவது அத்தியாவசியமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல், தொடர்ந்தும் பலவந்தமாக பதவியில் இருப்பது, ஜனாதிபதிக்கு தேவையற்ற அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மகிந்த உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக எடுத்துக்கொண்டாலும் தவறில்லை எனவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பதவியில் இருக்க எண்ணினால், நாடாளுமன்றத்தில் நாளைய தினம் அரசியல் ரீதியான முடிவை எடுக்க நேரிடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச பதவி விலக தான் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அதற்காக குடும்பத்தினரை இணங்க வைப்பதில் சிரமம் காணப்படுவதாக கூறியுள்ளார்.

தான் பதவி விலகுவது, தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்களின் வழக்கு விசாரணைகளுக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனவும் தனது தரப்பு குறித்தும் மனிதாபிமானமாக சிந்தித்து பார்க்குமாறும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக பதிலளித்துள்ள சுதந்திரக்கட்சியின் அணியினர், ஜனாதிபதி ஏற்படும் பாதிப்பை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதியை பாதுகாத்த அணி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, டிசம்பர் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் பதவி விலக போவதில்லை எனவும் எந்த முடிவாக இருந்தாலும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கு பின்னரே எடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.

டிசம்பர் 7 ஆம் திகதி தமது தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதால், தேர்தலுக்கு செல்ல நேரிடும் எனவும் அது தமது தரப்புக்கு சாதகமாக இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் சாதகமற்ற தீர்ப்பை வழங்கினால், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அசௌகரியத்திற்கு உள்ளாவதோ அல்லது அவமதிப்புக்கு உள்ளாவதோ தனக்கு பிரச்சினையில்லை எனவும், அந்த நிலைமை ஏற்பட ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-தமிழ்வின்-

ஐரோப்பாவில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட இலங்கையர்!!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில், இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடூர தாக்குதலில் காயமடைந்த இலங்கையர் கோமா நிலைக்கு சென்றமையினால், 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர், வென்னப்புவ, பொரலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த அஷோக பெர்ணான்டோ எனப்படும் 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காயமடைந்த இலங்கையினரினால் நடத்தி செல்லும் வர்த்தக இடம் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரான இத்தாலி நாட்டவர் மற்றும் அவரது சகோதரர் குறித்த இடம்தொடர்பான வாடகை பணத்திற்கு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையருடன் ஆரம்பத்தில் வாய்த்தகராறில் ஈடுபட்டவர்கள் பின்னர் அந்த சம்பவத்தை மோதலாக மாற்றியுள்ளனர்.

மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். எனினும் அவர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தது.

மேலும், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் 25 பாடசாலை மாணவர்கள் கைது!!

அம்பாறை உகன பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள தரம் 13 இல் கல்வி பயிலும் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் உள்ளூர் அரச மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காதல் பிரச்சினை இந்த மோதலுக்கு காரணமென பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது.

தாக்கப்பட்ட மாணவன் தான் காதலிக்கும் மாணவியின் வகுப்பறைக்கு சென்றவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசலை அதிபர் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததையடுத்து, உகன பொலிஸ் நிலைய உப பொறுப்பதிகாரி பிரேமரத்ன பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை நடத்தினார்.

அதன்பின்னரே 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நித்திரையில் தந்தையை கொலை செய்த மகன்!!

பொல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை நோட்டன்பிரிஜ் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். 73 வயதான தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தேக நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மகன் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறான் என நேற்று நோர்டன்பிரிஜ் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபர் முறைப்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.

தனக்கு எதிராக முறைப்பாடு செய்ததால் கோபமடைந்த மகன் இந்த கொலையைச் செய்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நேரத்தில் தந்தை மற்றும் மகன் மட்டுமே குறித்த வீட்டில் இருந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் மனைவி நேற்று இரவு உறவினரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனில் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகன்!!

 

கொலை செய்த மகன்

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ், காசல்ரீ ஜனபதய பகுதியில் தந்தையை கொலை செய்த மகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன நோயாளியான மகன் ஒருவருக்கும் தந்தைக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போதே தந்தையை மகன் பொல்லால் அடித்து கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இதில் உயிரிழந்த நபர் 74 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மன நோயாளியான மகன் தினமும் சண்டையிடுவதாகவும் நேற்று இரவிலிருந்து சண்டை உக்கிரமடைந்த நிலையிலேயே, இக்கொலை நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதுடைய மகனை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இவரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார் மனித புதைகுழியில் தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

 

மன்னார் மனித புதைகுழி

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள்அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 106 ஆவது நாளாக இடம் பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

106 ஆவது நாளாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணிகளின் போது தற்போது வரை 235 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 229 மனித எலும்புக்கூடுகள் புதை குழியில் இருந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மனித புதை குழிக்கு விஜயம் செய்து பார்வையிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போது, “இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்றைய தினம் இங்கு வருகை தந்து அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டுச் சென்றார்” என அவர் பதிலளித்தார்.