இலங்கையில் வன்முறை வெடிக்கும் அபாயம் : தீவிர பாதுகாப்பில் இராணுவம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எந்த நேரத்தில் வன்முறை வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு சிறப்பு அதிரடி படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றில் தொடர்ந்தும் குழப்ப நிலை ஏற்படுகின்றமையால் அமைச்சுக்களுக்கு, முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆதரவாளர்கள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரையும் தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைத்தால் உடனடியாக இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு உத்தரவு கிடைத்துள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் 30 அரச அமைச்சுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நிறைவேற்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லதிப் தெரிவித்துள்ளார்.

அமைச்சிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குறித்த அமைச்சின் செயலாளர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

மைத்திரியின் கூட்டத்தில் ஏற்பட்டு முரண்பாடு : நாளை நடக்கப் போவது என்ன?

நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது பெரும்பான்மையை நிரூபிக்க போவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சற்று முன்னர் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் கூடும் வேளையில், பெரும்பான்மையை வெளிப்படுத்தும் கடிதத்ததை ஜனாதிபதியிடம் நாளை காலை ஒப்படைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் அதற்கு ஜனாதிபதி பெரிதாக விரும்பவில்லை. நாளைக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இணக்காடுகளின்றி கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்ததாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் இளைஞன் திடீர் கைது!!

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இளைஞனை இன்று (18.11) மாலை 2மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலே இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மதகுவைத்தகுளம் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனிடமிருந்தே 540 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் குறித்த இளைஞனை பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வர்த்தக சங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை!!

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணைய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தையல் கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் வவுனியா வர்த்தக சங்கத்தின் கட்டிடத்தில் இன்று (18.11.2018) காலை இடம்பெற்றது.

வவுனியா வர்த்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களின் தலமையில் இடம்பெற்ற இவ் விசேட கலந்துரையாடலின் போது அனைத்து தையல் கடை உரிமையாளர்களும் ஒன்றினைந்து தங்களுக்குரிய நிர்ணைய விலையினை நிர்ணயித்துள்ளனர்.

அத்துடன் புதிதாக ஒரு விதிமுறையினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தனர். அதாவது வேறொரு தையல் நிலையத்தில் பணபுரிந்து விட்டு அங்கிருந்து பணிவிலகி இன்னும் ஒரு தையல் நிலையத்திற்கு பணியாற்ற செல்லும் சந்தர்ப்பத்தில் முன்னர் பணிபுரிந்த இடத்தில் குறித்த ஊழியர் பணி விலகியமைக்கான காரணத்தினை கேட்டறிந்த பின்னர் பணிக்கு அமர்த்த வேண்டும் என்பதே ஆகும்.

வவுனியா நகரில் அமைந்துள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களின் விலை நிர்ணையம் தொடர்பாக கலந்துரையாடலும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் நிர்ணைய விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தகர்களையும் பிரிவு பிரிவாக விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மூலம் நிர்ணைய விலையினை பரிசிலித்து அவர்களது விலைப்பட்டியலை வவுனியா மாவட்ட செயலக கட்டிடத்தில் இயங்கும் நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் ஒப்படைத்து அவர்கள் மூலம் நடைமுறைக்கு கொண்டுவருதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அத்துடன் விலைப்பட்டியல் அனைத்து வர்த்தகநிலையத்திலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையினையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனுக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் எம்.எஸ்.நயீம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்குடியிருப்பு, இத்திக்குளம், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் போதையில் வீட்டுக்குச் சென்று தனது மனைவியிடம் பணம் கேட்டு அவரை தாக்கி காயப்படுத்தியதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைபாட்டிற்கமைய சம்பூர் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தேவநகர், புளியம்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இவ்வருடம் மார்ச் மாதம் பழைய குரோதம் காரணமாக ஒளிந்திருந்து நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தலைமறைவாக இருந்த நிலையிலே எட்டு மாதங்களின் பின்னர் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை : ஜி.ரி.லிங்கநாதன்!!

இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா – சிதம்பரபுரம், பழனிநகரில் நேற்றைய தினம் சனசமூக நிலையத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் தொலைக்காட்சி ஒன்று என்னை தொடர்பு கொண்டு இவ்வாறு கேட்டிருந்தது, நாங்கள் மூன்று பேர் மாகாணசபையிலிருந்து போயிருந்தோம். பெண் பிள்ளைகளையும், சிறுவர்களையும் மாகாணசபைக்கு கூட்டிக் கொண்டு செல்ல முடியாதுள்ளது. ஏன் நீங்கள் இவ்வாறு நடக்கின்றீர்கள் என்று கேட்டிருந்தது.

நான் கூறினேன், அப்படி ஒன்றும் நடக்கவில்லையே ஒரு மக்கள் பிரதிநிதிகள் மாவட்டம் சார்ந்தவர்கள், கட்சி சார்ந்தவர்கள் உண்மையான விடயங்களில் பிழையாக நடந்தால் அதனை தட்டி கேட்போம். அதற்காக குரல் கொடுப்போம் என்று கூறினேன்.

தற்போது நாடாளுமன்றத்தில் நடக்கின்ற விடயத்தை பார்க்கும்போது ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை கைப்பற்றுவதற்காக முயற்சி செய்திருந்தார். அதனை நாங்கள் தடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்திருந்தோம்.

மற்றும்படி ஒருநாளும் மிளகாய்பொடியோ அல்லது கத்தியோ இலங்கை நாடாளுமன்றத்தில் நடக்கின்ற கேவலமான விடயம் ஒன்றும் மாகாண சபையில் நடக்கவில்லை என நான் ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றேன்.

அதேநேரம் இன்னுமொரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இன்று மூன்று தனி நபர்கள், மூன்று தலைவர்கள் தங்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்காக இந்த நாட்டை குட்டிச் சுவராக்கி கொண்டிருக்கின்றார்கள்.

இன்றுவரை நாடாளுமன்றத்தை கூட்டுவதா, கலைப்பதா என்ற ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்றார்கள். இந்த விடயங்கள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் சிரியாவில் ஏற்பட்ட நிலைதான் இலங்கைக்கும் ஏற்படும். சிரியாவில் உள்ள பிரச்சினைகள் உங்களுக்கு தெரியும்.

அங்கே இருக்கின்ற ஜனாதிபதியை அகற்றுவதற்கான ஒரு முயற்சியும், அதை தடுப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் தான் இன்றைக்கு பல லட்சம் மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டிருக்கின்றமைக்கு காரணமாகும்.

இப்போதும் ஜனாதிபதி அவர்களும் ஏற்கனவே இருக்கின்ற இரண்டு பிரதமர்களும் கட்சி பேதங்களை மறந்து உடனடியாக இந்த நாட்டில் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை தடுக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் மூன்று பேரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆகவேண்டும்.

இல்லை என்றால் இலங்கையும் ஒரு சிரியாவாக மாறுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என மேலும் தெரிவித்திருந்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் நேரில் சந்தித்துக்கொண்ட ரணில் – மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார்.

அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்திருந்தார். இதனையடுத்து மகிந்த – ரணில் ஆகிய இருவரும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரிவந்த நிலையில், அண்மையில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

இதன் போது புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, சற்று முன்னர் அனைத்து கட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களின் 12வது ஆண்டு நினைவு தினம்!!

வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் விவசாய கல்லூரி வளாகத்தில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

இவர்களின் நினைவுதினம் வருடாவருடம் விவசாயக் கல்லூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் குறித்த நினைவு தினத்தில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 12ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (18.11.2018)​ இடம்பெற்றது

இந் நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர்களின் படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாலித தெவரப்பெரும தொடர்பில் விசாரணைக்கு குழு நியமனம்!!

கடந்த வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் நிலையின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும கூரிய கருவி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை செய்ய நாடாளுமன்றக்குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்தக்குழுவை நியமிக்கவுள்ளார். இது தொடர்பில் வீடியோ காட்சியை ஏற்கனவே கரு ஜெயசூரிய கோரியிருப்பதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைக்குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே வெலிக்கடை காவல்துறையினரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் தாம் கத்தியை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை பாலித தெவரப்பெரும மறுத்துள்ளார்.

திருகோணமலையில் நஞ்சருந்திய நபர் உயிரிழப்பு!!

திருகோணமலை, சேருநுவர பகுதியில் வயோதிபர் ஒருவர் நேற்றிரவு நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சேருநுவர RB 2 பகுதியை சேர்ந்த ரத்னாயக்க முதியன்சலாகே சிறிசேன (63 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே இவர் நஞ்சறுந்தியுள்ளதாகவும், அதனை அடுத்து அருகில் உள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சேர்த்த போதும் அங்கு வைத்தியர் இல்லாமையினால் மீண்டும் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது நஞ்சருந்திய நபர் உயிரிழந்துள்ளதாக அவரின் மனைவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.

அத்துடன் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

17 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை : 59 பேர் கைது!!

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் கம்பஹா மாவட்டத்தில் இயங்கிய 17 பாலியல் தொழில் விடுதிகளை முற்றுக்கையிட்ட பொலிஸார் அவற்றில் இருந்த59 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விடுதிகளின் முகாமையாளர்களாக கடமையாற்றியவர்கள் உட்பட 19 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிந்த இன்னும் சில காலம் காத்திருந்திருக்கலாம் : கோத்தபாய ராஜபக்ச!!

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மகிந்த ராஜபக்சவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.

எனினும், நாடு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு காத்திருக்க முடியுமா? என்பதே தற்போதைய பிரச்சினையாகும். ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகளே.

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி வரவேற்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான வாழ்த்து செய்தி : மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.தே.க வின் பிரபலம்!!

இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வித்தியாசமான வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். 1945 ஆண்டு பிறந்த மஹிந்த ராஜபக்ச இம்முறை தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

பிறந்த நாளை முன்னிட்டு வருடாந்தம் இடம்பெறும் புண்ணிய தான நிகழ்வுகள் இம்முறையும் அபயராம விகாரையில் இடம்பெற்றது.

அத்துடன் மஹிந்தவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் அஜித் பீ பெரேரா மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்தில் “எங்களுக்கு மிளகாய் பொடி அடித்த மஹிந்த ராஜபக்ச அவர்களே! உங்களுக்கு 73 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

விடாப்பிடியிலிருக்கும் மைத்திரி : ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள முக்கியமான முடிவு!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இந்த சந்தரப்பத்தில் குறித்த மனுவை கையளிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இதனையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

அத்துடன், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதி இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைத்தொலைபேசியால் நேர்ந்த விபரீதம் : பாடசாலை மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் செல்போன் காணாமல் போனதால் மன அழுத்தத்தில் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் நிகிதா (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்னர் நிகிதா தனது சகோதரர் பப்ளூவுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது தனது செல்போன் காணாமல் போனதை உணர்ந்தார்.

குறித்த செல்போனை நிகிதாவுக்கு அவர் தந்தை பரிசாக அளித்திருந்தார். எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த நிகிதாவுக்கு தந்தை ஆசையாக வாங்கி கொடுத்த செல்போன் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நிகிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்!!

இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் குவஹாத்தியை சேர்ந்த மவுசாமி கவுதம் (35) இண்டிகோ விமான நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
3 நாட்கள் பயிற்சிக்காக குருகுரம் வருகை தந்திருந்த மவுசாமி, வெள்ளிக்கிழமையன்று வீடு திரும்புவதாக திட்டமிட்டிருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு 9:30 மணிக்கு போன் செய்து உணவு கொண்டு வருமாறு கூறியுள்ளார். 10 மணிக்கு சென்ற பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மவுசாமி கிடந்ததாக விருந்தினர் இல்லத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

மவுசாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் அறிந்த இண்டிகோ நிறுவனம், “இன்று காலை குர்கானில் எங்கள் சக ஊழியர் துரதிருஷ்டவசமாக இறந்ததை பற்றி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த கட்டத்தில், அவருடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும், பிராத்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.