பூப்பெய்ததால் தனிக்குடிசையில் இருந்த சிறுமி : கஜா புயலின் கொடூர தாக்குதலால் பலியான சோகம்!!

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூப்பெய்ததால் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி, கஜா புயலுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கஜா புயலின் அசுர தாக்குதலால் தமிழகத்தின் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கஜா புயலுக்கு பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, பூப்பெய்ததால் அருகில் இருந்த தென்னந்தோப்பு குடிசையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு தென்னந்தோப்பை கஜா புயல் தாக்கியதில், அங்கிருந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தன. அத்துடன் மாணவி தங்கியிருந்த குடிசையும் அடித்து வீசப்பட்டது. இதனால் குறித்த மாணவி பயத்தில் அலறியதாக தெரிகிறது.

ஆனால், அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. வெளியே வர முடியாமல் தவித்த அந்த மாணவி, தென்னை மரங்கள் விழுந்ததால் குடிசைக்குள்ளேயே சிக்கி மரணமடைந்துள்ளார். மறுநாள் காலையில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்த்தபோது தென்னந்தோப்பே சீரழிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், மரங்களுக்கு நடுவில் சிக்கி கிடந்த மாணவியின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, புயலால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தங்கள் தோளிலேயே மாணவியின் உடலை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், நடைபயணமாகவே சொந்த ஊருக்கு கொண்டு வந்து மாணவியின் உடலை அடக்கம் செய்தனர். கிராமமே புயலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், 10 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

எங்களை வாழ விடுங்கள் என கெஞ்சிய பெண் : கருவை சிதைத்தும், தலைமுடியை மழித்து சித்ரவதை செய்து கொலை!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் நவம்பர் 16 ஆம் திகதி மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில், காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர், சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா என்பவரின் மகன் நந்தீஸ் (25) என்பதும், சடலமாகக் கிடந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகளும், நந்தீஸின் மனைவியுமான சுவாதி (20) என்பதும் தெரிய வந்தது.

நந்தீஸ் என்ற அந்த வாலிபர் மரக்கடையில் கூலி வேலை செய்து வரும் ஏழை தொழிலாளியின் மகன். இறந்து கிடந்த பெண் சுவாதியின், தந்தையும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இல்லாதுபோனாலும், ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் குறு விவசாயி. இருவரும் வேறு வேறு சமூகத்தினர்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நந்தீஸ், ஹார்டுவேர் கடையில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். சுவாதி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, குடும்பத்தாரை மீறி இவர்களது இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

கொடூர கொலை
வாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பாக்கள் அஸ்வதப்பா, வெங்கடேஷ், கார் ஓட்டுநர் சாமிநாதனர் ஆகிய மூன்று பேரும், நந்தீஸிடமும், சுவாதியிடமும், ‘நடந்தது நடந்து போச்சு. எங்களுக்கு உங்கள் மேல் இருந்த கோபம் எல்லாம் மறைந்துவிட்டது.

உங்களை ஏற்றுக்கொள்கிறோம். வாங்க, எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்,’ என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதையெல்லாம் நம்பிய காதல் தம்பதியினர், அவர்களுடன் காரில் ஏறிச்சென்றனர். ஆனால், அந்த கார் சூடுகொண்டப்பள்ளிக்குச் செல்லாமல் திடீரென்று கர்நாடகா மாநிலம் நைஸ் சாலையில் பறக்கத் தொடங்கியது.

பதற்றம் அடைந்த நந்தீஸும், சுவாதியும் காரை நிறுத்தும்படி கெஞ்சியும், கார் நிற்காமல் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் போய்தான் நின்றது.

நந்தீஸை அந்த கும்பல் மிரட்டியது. அப்படி பிரிந்து செல்லாவிட்டால், இருவரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

காதல் தம்பதியினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தனர். கண்காணாத இடத்தில் ஓடிச்சென்று பிழைத்துக்கொள்கிறோம்…. விட்டுவிடுங்கள்… என்று கெஞ்சியுள்ளனர். குறிப்பாக சுவாதி, நந்தீஸின் குழந்தையை சுமக்கிறேன்…. எங்களை வாழ விடுங்கள்… என்று தரையில் புரண்டு அழுதிருக்கிறார்.

இதனை கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த கும்பல், நந்தீஸை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளது.

அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர்.

மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடிவயிற்றுப்பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். அதன்பிறகே இருவரின் சடலங்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, சுவாதியின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40), பெரியப்பா வெங்கடேஷ் (43), புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சுவாதியின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர்கள் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

குழந்தையை கொன்றுவிட்டு இளம் விதவை எடுத்த அதிர்ச்சி முடிவு : தமிழில் எழுதிய உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் பொலிசாரின் தொல்லையால் குழந்தையை கொன்றுவிட்டு, விதவைப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு பாலம்மாள்(25) என்ற மனைவியும் பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

இநிலையில் சண்முகசுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். இதனால் பாலம்மாள், தன்னுடைய குழந்தை பாலகுமாருடன் மூலைக்கரைப்பட்டி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து நேற்று இரவு பாலம்மாள் திடீரென்று மகன் பாலகுமாரின் கழுத்தில் சேலையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செயது பின்னர் அதே சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் பொலிசார் பாலம்மாளின் வீட்டில் சோதனை நடத்திய போது அவர் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில்,கணவர் இறந்தபின்னர் பாலம்மாளுக்கும் அவரது மாமியார் மகராசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த‌து. கணவரின் ஆதார் அட்டையை மகராசி எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுத்தாராம். அதுமட்டுமின்றி பாலம்மாள் மீது மகராசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் பாலம்மாளிடம் பொலிசார் விசாரித்தபோது அவர்கள் அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இது பாலம்மாளை மனவேதனை படுத்தியது. ஏற்கனவே கணவரை பறிகொடுத்த வேதனையில் இருந்த பாலம்மாள், அடுத்து பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார். இதனால் ஏற்பட்ட வேதனையில் அவர் மகனை கொன்று தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமான 6 மாதத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 27 வயதான அம்புஜ் கத்துட்யா என்பவர், சாலையில் இடிந்து கிடந்த கட்டட சிமென்ட் கற்களில் சிக்கியுள்ளார்.

இதனால் நிலைத்தடுமாறி விழுந்தவர், பின்னால் வந்த பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கினார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இறந்துபோன அம்புஜ் கத்துட்யாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அஞ்சலி (25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் புளியந்தோப்பு ஸ்டிபன்சன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அம்புஜ் கத்துட்யா, பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுவந்துள்ளார்.

அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கியுள்ளார். அம்புஜ் இறந்த தகவலையறிந்த அஞ்சலியும் அவரின் உறவினர்களும் கதறி அழுதுள்ளனர்.

மோசமாக நடந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் நடத்தைகளுக்கு விரோதமான முறையில் மோசமாக நடந்துக்கொண்டமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் மோசமாக நடந்துக்கொண்ட உறுப்பினர்கள் சிலரை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அனுப்புவது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.

திலும் அமுனுகம, பிரசன்ன ரணவீர, ரஞ்சித் சொய்சா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவங்ச, அருந்திக்க பெர்னாண்டோ மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களையே நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அனுப்புவது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டமை தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் ஒலிவாங்கியை சேதப்படுத்திய திலும் அமுனுகம, சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றி, மிளகாய் தூள் கலந்த தண்ணீரை கொண்டு தாக்கிய பிரசன்ன ரணவீர, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த அருந்திக்க பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தின் உணவகத்தில் இருந்து கத்தியை எடுத்து வந்து சபையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்ட பாலித தெவரப்பெரும,

சபாநாயகர் மீது குப்பை வாளியை வீசி தாக்கிய ரஞ்சித் சொய்சா, நாற்காலி மற்றும் புத்தகங்களில் சபாநாயகரின் பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவங்ச ஆகியோர் சம்பந்தமாக தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் சிறப்புரிமை குழு கவனம் செலுத்த உள்ளது.

8வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரில் பிறப்புரிமை குழுவில் 10பேர் அங்கம் வகித்தனர். அதன் தலைவராக திலக் மாரப்பன கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சாயி பாபாவின் 93வது அவதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 93 வது அவதார தினத்தினை முன்னிட்டு வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம் இன்று சனிக்கிழமை(17.11) வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை நவ்வி குஞ்சுக்குளம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வவுனியா நவ்வி ஸ்ரீவாயி வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளது.

இவ் வைத்திய முகாமில் பொது மருத்துவ முகாம், நிபுணத்துவ மருத்துவ சேவை, கண் பரிசோதனையும் கண்ணாடி வழங்கலும், காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கான சிகிச்சை பற் சிகிச்சை, சித்த வைத்திய முகாம், தொற்றா நோய்களை இனம்கானும் குருதிப் பரிசோதனை இடம்பெற்றது. அத்துடன் முன்பள்ளி மாணவர்கள் 22பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கண் வைத்திய முகாமின் மூலம் 225 பேரும் பற்சிகிச்சை மூலம் 54 பேரும் பொது வைத்திய முகாமின் மூலம் 270 பேரும் சித்த வைத்திய முகாம் மூலம் 115 பேரும் மொத்தமாக 664 பேர் இலவச வைத்திய முகாம் மூலம் பயன் பெற்றுக்கொண்டனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், சென்யூரி தாதியர் பயிற்சி கல்லூரி மற்றும் விசன்கெயார் நிறுவன உத்தியோகத்தர்களும் என பல நிறுவனங்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் மாலையணியும் நிகழ்வு!!

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு இன்று (17.11.2018) காலை 9 மணியளவில் அம்மா சாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் 20க்கு மேற்பட்ட ஐயப்பன் பக்த அடியார்கள் மாலை அணிந்துகொண்டனர்.

குடைப்பிடிப்பது, காலணிகள் உபயோகிப்பது, சவரம் செய்துகொள்வது, புலால் உண்பது, பொய்களவு, சூதாடுதல், போதைவஸ்துகள் கூடாது, பகல் நேரத்தில் தூங்கக் கூடாது, இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.

மரணச் சடங்குகளில் ஐயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது. அப்படி கலந்துகொள்ள நேரிட்டால் தான் அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ளவேண்டும்.

குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது. இவைகளை ஐயப்பன் மாலையணியும் அடியவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள், காரியங்களாகும் என அம்மா சாமி இங்கு தெரிவித்தார்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராக பெற்றோர் ஒருவர் பொலிசில் முறைப்பாடு!!

மூன்றாம் தவணைப் பரீட்சை எழுவதற்காக பாடசாலைக்கு அனுப்பிய மாணவனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து பெற்றோரால் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்று வெள்ளிக்கிழமை நான் தரம் 8 இல் படிக்கும் எனது மகனை மூன்றாம் தவணை பரீட்சை எழுதுவதற்காகவே பாடசாலைக்கு அனுப்பினேன். ஆனால் எனது மகன் வகுப்பறையிலிருந்து வீதிக்கு அழைத்துவரப்பட்டு மகனுக்கு விருப்பமில்லாத நிலையில் பாடசாலை அதிபருக்கு சார்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றச் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னரே வகுப்பறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான் பாடசாலைக்கு அதிபரை நம்பியே எனது மகனை அனுப்பி வைக்கிறேன். அவர் பாடசாலையில் இருக்கும் 7 மணித்தியால நேரமும் அவருக்கு முழு வழிகாட்டியும் பொறுப்புதாரியும் பாடசாலை அதிபரே ஆவார். அதிபர் பாடசாலையில் இருக்கும் போது தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இதற்கான முழுப் பொறுப்பையும் அதிபரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தக் கூடாது என நான் அறிகின்றேன். எனவே சட்டத்திற்கு புறம்பான வழியில் எனது மகனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய அதிபரை அழைத்து விசாரணை செய்து உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

பெண்கள் என்றாலே பிடிக்காது… பொம்மையை காதலித்து திருமணம் செய்த இளைஞர்!!

டோக்கியோவில் இளைஞர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

நாம் சாதாரணமாக ஆண்-பெண் திருமணத்தை கேள்விபட்டிருப்போம் தற்பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் ஆண் – ஆண், பெண் – பெண், ஆண் – மூன்றாம் பாலினத்தவர் திருமணம் சஜகமாகிவிட்டது. ஆனால் டோக்கியோவை சேர்ந்த வாலிபர் இந்த லிஸ்ட்லையே இல்லாத அளவுக்கு விநோத திருமணத்தை செய்துள்ளார்.

டோக்கியோவை சேர்ந்த ஹரிகோ என்ற என்ற வாலிபருக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. ஆனாலும் திருமண ஆசை இருந்தது. இதனால் பெண் வடிவிலான ஒரு பொம்மையை காதலித்து வந்தார். இதையே திருமணமும் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி சமீபத்தில் அந்த பொம்மைக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார். இனி நான் சந்தோஷமாக இருப்பேன் என ஹரிகோ மகிழ்ச்சியிடன் பேசினார்.

வவுனியாவில் சிறுவனின் சடலத்திற்கு உரிமை கோரும் இரு உறவினர்கள்!!

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தாய் தந்தை அற்ற இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தினைப் பொறுப்பேற்பதற்கு சிறுவனின் தாயின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும், தந்தையின் சதோரர்களும் மற்றும் உறவினர்களும் வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மரண விசாரணை அதிகாரி, பொலிசார் தலையிட்டு சடலத்தினை தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சிறுவனின் தாயின் சகோதரர்கள், உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்பதற்கும் இறுதிக் கிரியைகள் மேற்கொள்வதற்கும் இரு பகுதி உறவினர்களுக்கு பொலிசாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் சிறுவன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளான். முச்சக்கரவண்டி சாரதியான தந்தை வன்னிப்பகுதிக்குச் சென்றபோது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தாய் குறித்த சிறுவனுடன் வன்னிப்பகுதியில் சிறிது காலம் வசித்து வந்துள்ளார். யுத்தத்தினல் தாயாரும் உயிரிழந்த நிலையில் வவுனியாவில் வசித்து வந்த தந்தையின் சதோதரர்கள், உறவினர்கள் குறித்த சிறுவனுக்கு ஐந்து வயது இருக்கும்போது பொறுப்பேற்று பராமரித்து வந்துள்ளனர்.

இதையடுத்து தாயின் சதோதரர்கள், உறவினர்களுக்கு ஆண் சகோதரர்கள் இன்மை காரணமாக குறித்த சிறுவனை தாங்கள் பொறுப்பேற்று பராமரிப்பதற்கு தந்தையின் உறவினர்களிடம் கோரியுள்ளனர்.

இந்நிலையில் இருதரப்பினரும் ஒரு இணக்கத்திற்கு வருவதற்கு முடியாமையினால் பொலிஸ் நிலையம் சென்று பொலிசாரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிறுவனை தாயின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் பராயமடைந்ததும் அவனே யாருடன் வசிப்பது என்பதை முடிவு செய்வது குறித்து முடிவினை எடுப்பதாக இருதரப்பினரும் தெரிவித்த நிலையில் சிறுவனை தாயின் உறவினர்கள் தாண்டிக்குளம் பகுதியில் பராமரித்து வந்துள்ளனர்.

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் தரம் 8 கல்வி கற்று வந்த மாணவனே கடந்த வியாழக்கிழமை மாலை தனது மூன்று நண்பர்களுடன் பட்டக்காடு குளத்தில் குளிப்பதற்குச் சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

திருநாவற்குளம் இளைஞர்களினால் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மருத்துவப் பரிசோதனையின் பின்னர் சடலம் தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சாந்தசோலையிலுள்ள உறவினர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தாயின் உறவினர்கள் தாண்டிக்குளம் பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சிறுவனின் சடலத்தினை பொறுப்பேற்று மாலை இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்த உப நகரபிதா!!

வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய்க்கிணறு ஒன்று உப நகரபிதா சு.குமாரசாமியால் அமைக்கப்பட்டு மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குழாய்க்கிணறு ஒன்றினை அமைத்துத் தருமாறு அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் கிராம மக்கள் உப நகரபிதாவிடம் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உப நகரபிதாவினால் நகர கிராம அலுவலர் அலுவலகத்தில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவில் சட்டவிரோத கடைகள் மீள்புனரமைப்பு : தடையுத்தரவு பிறப்பித்த உபதவிசாளர்!!

வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கடைகள் இன்று (17.11.2018) காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்கள் இன்றையதினம் காலை மீள்புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் வவுனியா நகரசபை தலைவர் உட்பட பலருக்கு தகவலை தெரிவித்திருந்த போதிலும் எவருமே பல மணிநேரமாக அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை.

நீண்ட நேரத்திற்கு பின்னர் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வவுனியா நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (19.11.2018) வரை புனரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துடன் திங்கட்கிழமை வவுனியா நகரசபைக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவினை பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபை தலைவரிடம் கேட்டபோது, குறித்த வியாபார நிலையத்திற்கு தகரம் போட்டிருந்தனர். மழைக் காலத்தில் தண்ணீர் வருவதாக தெரிவித்து சீட் போடுகின்றனர்.

இக் கட்டிடம் புனரமைப்பு செய்யமுடியாது. அவர்கள் சிமெந்து மூலம் ஏதேனும் கட்டடங்கள் விஸ்தரிப்பு செய்தால் மட்டுமே எம்மால் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் தகரத்தினை கழற்றி விட்டு சீட் போடுவதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.

குறித்த வியாபார நிலைய சட்டவிரோத கட்டிடம் வடிகால் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பகுதியில் அமைந்துள்ளதுடன் இச் சட்டவிரோத கட்டிடங்களுக்கு மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

கடந்து சென்றது கஜா புயல் : அடுத்து வருகிறது பேத்தை புயல் : பெயர் வைத்தது யார் தெரியுமா?

கஜா புயல் தமிழகத்தை விட்டு நகர்ந்து கேரளாவுக்குச் சென்று இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது.

தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது மேலும் வலுவடைந்து கஜா புயலாக கடந்த 11ம் திகதி உருவெடுத்தது. இப்புயல் நேற்று நள்ளிரவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.

சென்னை மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கஜா புயல் எந்த வகையிலும் கைகொடுக்காத நிலையில், தற்பொழுதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் 18ம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது.

இது 19ம் திகதி தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 20 மற்றும் 21ம் திகதி தமிழகத்தை நெருங்கும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறினால் இதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று தேடியதில் நமக்குக் கிடைத்திருக்கும் பெயர் பேத்தை.

தாய்லாந்து நாட்டு சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பெயர்தான் பேத்தை. நம்மை கடந்து சென்ற கஜா புயல் என்ற பெயர் இலங்கை சார்பில் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் வைப்பது ஏன்?

புயல்களைப் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை எளிமையாக்கும் வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியக் கடற்பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது.

ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகி, அதுபற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் புயல்களுக்கு தலா 8 பெயர்களை பரிந்துரை செய்வார்கள்.

ஒவ்வொரு புயல்களுக்கும் வரிசையாக ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயரை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

அந்த வகையில் இலங்கை அளித்த கஜா புயலுக்கு அடுத்து தாய்லாந்து அளித்த பேத்தை என்ற பெயர் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பேஸ்புக் பயனர்களை பாதுகாத்து தருமாறு அவசர கோரிக்கை!!

முகநூல் நிறுவனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. சட்டவிரோத இலங்கை அரசாங்கத்திடமிருந்து பயனர்களை பாதுகாத்து தருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக, முகநூல் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க்கிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் சட்டவிரோத அரசாங்கத்துடன் முகநூல் நிறுவனம் தொடர்புகளைப் பேணக்கூடாது என அவர் கோரியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலலான இலங்கை அரசாங்கம், சில முகநூல் பயனர்கள் பற்றிய விபரங்களை இரகசியமாக கோரக்கூடும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயனர்களின் அந்தரங்க உரிமையை உறுதி செய்ய வேண்டியது முகநூல் நிறுவனத்தின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அரசியல் அமைப்பிற்கு முரணான செயற்பாடுகளிலிருந்து இலங்கை முகநூல் பயனர்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரப்புக்களும் அரசியல் அமைப்பிற்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத அரசாங்கம் மரபு ரீதியான ஊடகங்களை கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிவில் சமூகத்துடன் ஊடாடக்கூடிய பிரதான கருவிகளில் ஒன்றாக தற்பொழுது இந்த சமூக ஊடகங்கள் அமையப் பெற்றுள்ளதாகவும், இந்த நிலையில் பயனர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை பதிவிடவும் பகிரவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சி என்ற வகையில் நாட்டு மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி ஜனநாயகத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் ஓர் கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இந்த அரசாங்கம் பயனர்கள் பற்றிய விபரங்களை கோரினால் அதனை நிராகரிக்குமாறும், பயனர்களின் அந்தரங்கத்தை உறுதி செய்யுமாறும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் திடீரென உள்வாங்கப்பட்ட கடல்நீர் : பெரும் அச்சத்தில் மக்கள்!!

யாழ் குடாநாட்டின் கடற்பரப்பில் ஐந்து அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளமையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக நெடுந்தீவு கடலில் நீர் மட்டம் 5 அடி குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக தீவுகளுக்கு இடையிலான படகு சேவை முழுமையாக நிறுப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பயணிகள் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 5 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளது.

பின்னர் ட்ரக்டர் பயன்படுத்தி படகுகளை மேலே இழுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மற்றும் குறிக்கட்டுவான் தீவுக்கு இடையில் படகு சேவை நேற்று முழுவதும் தடைப்பட்டுள்ளது.

கடல் நீர் குறைவடைந்தமையினால் நெடுந்தீவு உட்பட தீவுகளின் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதேநேரம் நெடுந்தீவு கடற்பகுதியில் மணிக்கு 100 – 150 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசியதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த தினங்களாக பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுருட்டு உற்பத்தியாளர், விற்பனையாளருக்கு நீதிமன்றம் 12ஆயிரம் ரூபா அபராதம்!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு எச்சரிக்கை இன்றியும், உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் சுருட்டு தயாரித்த உற்பத்தியாளருக்கும் அதனை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது இன்று நீதிமன்றம் இருவருக்கு 6ஆயிரம் வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போது உடல்நலம் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை, தார், நிகேட்டின் உள்ளீட்டைக் குறிக்கும் சிட்டுத்துண்டுகள் இன்றியும் உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 31 புகையிலை சுருட்டு பண்டல்கள் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து விற்பனைக்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மேற்படி புகையிலைச் சுருட்டை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உற்பத்தியாளர் ஆகிய இருவருக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு அமைவாக இருவருக்கும் தலா 6ஆயிரம் ரூபா வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட புகையிலைச்சுருட்டை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.