பைபிளால் கடுமையாக தாக்கப்பட்ட மங்கள!!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மங்கள சமரவீரவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்த ராஜபக்ச தரப்பினரால் நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தொடர்ந்து அதிக எதிர்ப்பு மங்கள சமரவீரவை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் தனது தீர்மானத்தை அறிவித்த பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவான உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இங்கு மங்கள சமரவீரவை ஆபாச வார்த்தைகளில் திட்டி மஹிந்த அணியினர், அவர் மீது புத்தகங்களினால் தாக்குதல் மேற்கொள்வற்கு சில தரப்புகள் முயற்சித்துள்ளனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெரிய புத்தகம் ஒன்று மங்களவின் தலையில் விழுந்துள்ளது.

உடனடியாக அந்த புத்தகத்தை எடுத்த மங்கள, இந்த புத்தகத்தில் தாக்கும் அளவிற்கு உங்கள் நிலைமை மோசமடைந்துள்ளதாக மங்கள சமரவீர, தினேஷ் குணவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

என்னாலும் இந்த புத்தகத்தில் திருப்பி அடிக்க முடியும். எனினும் நான் புத்தகத்தை மதிக்கிறேன். எனினும் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த புத்தகத்தை எடுத்து பாதுகாப்பாக அவர் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் இறுதியிலேயே அந்த புத்தகம் பைபிள் என தெரியவந்துள்ளது.

சண்டித்தனத்தை நிறுத்துங்கள் பெருமைபான்மை நிரூபிக்கிறோம் : மஹிந்த பகிரங்க சவால்!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு அமைய பெரும்பான்மை அதிகாரத்தை நிரூபிக்க வேண்டுமென்றால், அதனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த, சபாநாயகர் என்பவர் சுயாதீனமாக செயற்பட வேண்டும். இதற்கு முன்னர் நாங்கள் பல சபாநாயகர்களை பார்த்திருக்கின்றோம். அவர்கள் தங்களுக்கான கதிரையின் கௌரவத்தை பாதுகாத்தார்கள்.

சம்பிரதாய முறையில் நடத்துமாறு ஜனாதிபதி கூறினார். எனினும் சபாநாயகர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. சட்டரீதியாக செயற்படவில்லை. உரிய முறையில் செயற்பட்டிருந்தால் நாங்களும் சந்தர்ப்பம் வழங்கியிருப்போம்.

நாடாளுமன்றத்திற்கு கத்தியுடன் நுழைகின்றார்கள். இன்று கொஞ்ச நாட்களில் வாளுடன் நுழையவும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் சபாநாயகரே காரணமானவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள், சரியான பாடம் புகட்ட வேண்டும் : பிரித்தானிய தூதுவர் ஆதங்கம்!!

இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அசம்பாவிதங்களை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கியமான பணிகளை ஆற்றுவதற்காகவே இவர்களை மக்கள் தெரிவு செய்தததாகவும் நினைவுபடுத்தியுள்ளார்.

இலங்கை மக்கள் தமது பிரதிநிதிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்றத்திற்கும் உரிய வகையில் மதிப்பு கொடுக்கும் விதமாக செயற்படவில்லை.

நாடாளுமன்றம் செயற்படுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால், எந்த நாடாளுமன்றமும் இயங்க முடியாது என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை : 34 ஆயிரம் ரூபா தண்டம்!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகரால் பரிசோதனை நடாத்தப்பட்டபோது பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது நீதிமன்றத்தினால் 34 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகரின் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள், வண்டு மொய்த்த உணவுத்தானியங்கள், பூஞ்சனம் பிடித்த கருவாடுகள், எலி வெட்டிய பிஸ்கட் பைகள் என்பன விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை அவதானித்து குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் வழங்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை மேற்கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஐவருக்கும் எதிராக 34 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேலும் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

பதவி விலக தயார்? மஹிந்தவின் அதிரடி அறிவிப்பால் சூடு பிடிக்கும் இலங்கை அரசியல்!!

உரிய முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை விட்டு விலகிச் செல்லத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கசாகல பூராண விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாடாளுமன்றம் நாடகக் கொட்டகைக்கு நிகராக காணப்படுகின்றது. சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்தப் பதவியை விட்டுச் செல்லத் தயார்.

நாடாளுமன்றிற்குள் கத்தி கொண்டு வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களினால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், நாட்டு மக்களிடம் பிரச்சினைக்கு தீர்வு கேட்க வேண்டும்.

வாக்காளர்களிடம் அதிகாரத்தை வழங்கினால் யாருக்கும் எவ்வித சிக்கல்களும் கிடையாது. நாம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம் யாருக்கும் பயந்து கொண்டு தப்பிச் செல்ல மாட்டோம்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை வேறு எவரினாலும் எடுத்துக் கொள்ள முடியாது. நாம் இதனை விட்டுச் செல்ல தயார், எனினும் பலவந்தமாக அவமானப்படுத்தும் வகையில் செய்தால் அதனை ஏற்க மாட்டோம். நீதிமன்றினால் கூட ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மீண்டும் பிரதமராகின்றார் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமாக நியமிக்கப்படவுள்ளதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையில் 23வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பங்கள் தற்போது வரையில் நீடித்துள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு தரப்புகளும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

அந்த வகையில், தற்போது அலரி மாளிகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே, நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையில் 23வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி விடாப்பிடி : தொடர்ந்தும் மஹிந்தவே பிரதமர் : அதிரடி அறிவிப்பு!!

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் காணப்பட்ட குழப்பமான நிலைமையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை கையாளாது, நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், பிரதமராக தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி, ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவின்றி தொடரும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பெண்களின் நம்பிக்கை நிறுவனத்திற்கான அலுவலகம் திறப்பு!!

 

பெண்கள் நம்பிக்கை நிறுவனத்தின் கிளை அலுவலகம் நேற்று (15.11.2018) காலை 10 மணியளவில் வவுனியா தரணிக்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா மற்றும் கௌரவ விருந்தினராக சோ ஆ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கிறிஸ் லுக்கின், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சோ ஆ நிறுவனத்தின் மேற்பார்வை சபையின் தலைவர் ஹரி போல், சோ ஆ நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சு.அன்ரனி ஹலீசியஸ், சுகாதார வைத்திய அமைச்சின் வைத்தியர் எஸ்.லவன், பொஸ்டோ நிறுவனத்தின் தலைவர் T.நாகேந்திரராசா ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பல்வேறு ரீதியில் நலிவுற்ற நிலையிலுள்ள கிராமியப் பெண்களை குழுக்களாக ஒன்றிணைத்து ஒருவருக்கெருவர் உதவும் வகையில், வலுப்படுத்தி அவர்களின் குடும்பங்களில் சமூக பொருளாதார நிலைகளில் நிலைத்திருக்க்கூடிய, சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்ததுவதன் மூலம் அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற உதவுதல் எனும் தொலைநோக்குடன் இந்த நிறுவனம் சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளால் உருவாகியுள்ளது.

திருமணமான 3 மாதத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட காதல் தம்பதி : எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்!!

தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் கலப்புத்திருமணம் செய்த காதல் ஜோடி பிணமாக மீட்கப்பட்ட நிலையில் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ் (22) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஓசூரில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்று வந்தவர் ஸ்வாதி (19) இவர் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கல்லூரிக்கு சென்று வரும் நேரத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணம் முடிந்தப்பின்னர் தான் வேலை செய்யும் நிறுவனம் அருகிலேயே இருவரும் ஓசூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்தவாரம் இருவரும் தலை தீபாவளியை கொண்டாடினர். நந்தீஷின் வீட்டில் அவரது சகோதரர் சங்கர் மட்டும் தொடர்பில் இருந்துள்ளார்.

தனது சகோதரனைப் பார்க்க கடந்த 11-ம் திகதி சங்கர் ஓசூர் சென்றுள்ளார். ஆனால் அங்கு நந்திஷ், சுமதி இருவரையும் காணவில்லை. இதையடுத்து தனது சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவரையும் காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார்.

இருவரையும் பொலிசார் தேடி வந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுக்காவில் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இரண்டு உடல்கள் கிடப்பதாக அங்குள்ள பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. ஆணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய நிலையிலும், பெண்ணின் உடல்கயிற்றால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையிலும் கிடந்தது.

இருவர் உடலும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஊதிப்போய் இருந்தது. இந்நிலையில் புதுமண தம்பதிகள் காணாமல் போனது குறித்து பொலிசார் விசாரணை நடத்துவதை அறிந்து சுவாதியின் தந்தை சீனிவாசன் என்பவரும் சில உறவினர்களும் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி காவிரி ஆற்றில் கிடந்த உடல்கள் நந்திஷ், சுவாதியின் உடல்கள் என்பது தெரியவந்தது. இரண்டு உடல்களையும் பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாற்று சமுதயத்தை சார்ந்த இளைஞரை மணந்த காரணத்தால் ஆத்திரமுற்றவர்கள் தம்பதிகளை கடத்திச்சென்று ஆணவக்கொலை செய்துள்ளதாக பொலிசார் கருதுகின்றனர். சரணடைந்த சீனீவாசன் உள்ளிட்ட பெண்ணின் உறவினர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை பழிவாங்கிய கணவன் : இளம்பெண் மரணத்தின் பின்னணி!!

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலையில் அவரது கணவரும் காதலியின் பங்கும் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. அன்று, வட இந்திய பெண்கள் கடைபிடிக்கும் ’கர்வா சாத்’ என்கிற பூஜை நாள். அதாவது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க பெண்கள், விரதம் இருக்கும் நாள்.

விசாரணைக்கு வந்த பொலிசாரிடம், என் மனைவி தீபிகா, நான் நீண்ட ஆயுளுடன் இருக்க விரதம் இருந்தாள். ஆனால் திடீரென்று தற்கொலை செய்துகொண்டாள் என்றார் அந்தப் பெண்ணின் கணவர் விக்ரம்.

முதலில் நம்பிய பொலிசாருக்கு பிறகு வீட்டை சோதனை செய்த போது பல சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் வீட்டில் பொருட்கள் அங்கும் இங்கும் அலங்கோலமாக சிதறி கிடந்தன. பின்னர் அவரது அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரித்ததில் அது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதியானது.

பின்னர் விக்ரமை காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரிக்க, வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார். குருகிராமில் அன்சால் வாலே வியூ சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ஷெஃபாலி பாசின் திவாரி (35).

இவர் தனது கல்லூரி நண்பரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஷெஃபாலிக்கு இங்கு இரண்டு பிளாட்கள் இருந்தன. அதில் ஒன்றை விற்க முடிவு செய்தார். 2015 ஆம் ஆண்டு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விக்ரம் சவுகான் என்பவரிடம் சொன்னார். அவர் விற்றுக் கொடுத்தார்.

இருவரும் ஒரே பிளாட் என்பதால் தினமும் காலையில் வாக்கிங் போகும்போது சந்தித்துக்கொண்டனர். இந்த நட்பின் காரணமாக, பேசிப் பழகினர். நாட்கள் செல்ல, இருவரும் காதல் வயப்பட்டனர்.

முதலில் பேச்சு, சிரிப்பு, மெசேஜ் என்று சென்று கொண்டிருந்த இவர்களின் நட்பு பின்னர் தகாத உறவு வரை வந்தது. விக்ரமுக்கு தீபிகா என்ற மனைவி, இரண்டு குழந்தைகள். தீபிகா வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி.

ஷெஃபாலி அடிக்கடி விக்ரம் வீட்டுக்கு வருவார். வீட்டில் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். இதை தவறாக நினைத்துக்கொள்ளவில்லை தீபிகா.

ஆனால், சில நாட்களில் தனது கணவரும் ஷெஃபாலியும் தவறான காதலில் இருப்பதை உணர்ந்து கொண்ட அவர், கணவரிடன் சண்டைப் போட்டுள்ளார். இது குடும்பத்துக்குள் பிரச்னையானது. இதற்கிடையே ஷெஃபாலியும் விக்ரமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதற்கு முன்னதாக, இருவருக்கும் விவாகரத்து வேண்டும். ஷெஃபாலி, தனது கணவரிடம் விவாகரத்து பற்றி கேட்க, ஓகே சொல்லிவிட்டார் அவர். ஆனால், தீபிகா ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் ஷெஃபாலி ஏமாற்றமடைந்தார். இதையடுத்து ஷெஃபாலியும் விக்ரமும் லே-லடாக்கிற்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு, தீபிகாவை தீர்த்து கட்டிவிட்டு தற்கொலை என்று நாடகமாடி விடுவோம் என்றார். அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார், ஷெஃபாலி.

அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த மாதம் 24 ஆம் திகதி நானிடாலுக்கு பிக்னிக் அழைத்துச் சென்றார் விக்ரம். அங்கு உயரமான பாறைக்கு அழைத்துச் சென்று தீபிகாவை கீழே தள்ளிவிடுவதுதான் திட்டம். ஆனால், இந்த திட்டத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரமாட்டேன் என்று இருந்துவிட்டார் தீபிகா கடந்த 27 ஆம் திகதி பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளி விட முயற்சி செய்தார் விக்ரம்.

இதைப் புரிந்து கொண்ட அவர், தனது குழந்தை களுக்காகத் தான் வாழ வேண்டும், என்னை கொன்றுவிடாதே என்று கதறியிருக்கிறார். ஆனால், இந்த கதறலை, விக்ரமின் தகாத உறவு மறைத்துவிட்டது. பால்கனியில் இருந்து பலவந்தமாக அவரைத் தள்ளிவிட்டார். அலறிபடியே கீழே விழுந்து உயிர் விட்டார் தீபிகா. இதை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது விக்ரமின் குழந்தைகள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் ஷெஃபாலிக்கு தகவல் தெரிவித்துவிட்டு பொலிசில் புகார் செய்திருக்கிறார்.

பொலிசார், விக்ரம், ஷெஃபாலியின் மொபைல் மெசேஜ், இமெயில் உள்ளிட்டவற்றை சோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதையடுத்து முதலில் விக்ரமை கைது செய்த பொலிசார், ஷெஃபாலியை நேற்று கைது செய்துள்ளனர். அவர், விக்ரமின் 6 மாத குழந்தையை வயிற்றில் சுமந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கஜா புயலின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!

தமிழகத்தின் பல மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியதில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணிநேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் வேதாரண்யம்-நாகை இடையே இந்த புயல் கரையைக் கடந்தது. ஆனால், இந்த புயலின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன் மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்தன.

கஜா புயல் ஏற்படுத்திய சேதங்கள் தொடர்பாக பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கஜாவின் கோர தண்டவத்திற்கு 18 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 5 பேர் மேலும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பலரின் உயிரை வாங்கிய கஜா புயல் : அனைவரையும் கண்கலங்க வைத்த புகைப்படம்!!

தமிழத்தில் கஜா புயல் காரணமாக பெண் ஒருவர் மீது மரம் சாய்ந்ததால், அவர் பரிதாபமாக இறந்து கிடக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நள்ளிரவு தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் காரணமாக தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக, நாகை, வேதாரண்யம் போன்ற பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, நடுத்தெருவில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்திருப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் அருகே மழையின்போது மரத்தடியில் நின்ற – துப்புரவு பணியாளர் மீது மரம் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் அருகே மழையின்போது பெண் துப்புரவு பணியாளர் மரத்தடியில் நின்று கொண்டிருந்த போது தீடீரென்று அந்த மரம் சாய்ந்ததால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மரம் விழுந்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது

ராஜபக்ச அரசை உடன் நீக்காவிட்டால் மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : சுமந்திரன் சவால்!!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் இல்லாமல் ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இது அடிப்படை ஜனநாயகம். ஆகவே தான் நாங்கள் 3 தினங்கள் அடுத்தடுத்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

இந்தத் தீர்மானம் முதலாவது தடவை நிறைவேற்றப்பட்டவுடனேயே ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சிறுபிள்ளைகள் பந்து விளையாடும் போது ஒரு தடவை ‘அவுட்’டானால் ‘அவுட்’ இல்லை. 3 தடவைகள் ‘அவுட்’டானால் தான் ‘அவுட்’ என்ற மாதிரி 3 தடவைகள் மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றிய போதிலும் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என்று நாங்கள் பார்க்கத் தான் வேண்டும். இல்லாவிட்டால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்” என தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் 60 காட்டாகாலி மாடுகள் பிடிக்கபட்டது!!

வவுனியா தெற்குதமிழ் பிரதே சபையால் அறுபது கட்டாகாலி மாடுகள் பிடிக்கபட்டுள்ளதாக சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.

வவுனியா தெற்குபிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், மற்றும் வட்டார உறுப்பினர்களால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதற்கமைவாக கடந்த மாதம் நடைபெற்ற சபையின் அமர்வில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகள் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைவாக வீதிகளில் நிற்கும் கால்நடைகள் பிரதேசசபையால் பிடிக்கபட்டு சபையின் வளாகத்தில் அடைக்கபட்டுள்ளது. இன்றுவரை அறுபது மாடுகள் பிடிக்கபட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் அதற்கான தண்டபணமாக பிடிகூலி, பராமரிப்பு செலவுகள் உட்பட்ட 1200 ரூபாயை செலுத்தி தமதுமாடுகளை மீட்டுசெல்ல முடியும் என தவிசாளர் தெரிவித்தார்.

மாடுகள் அடைக்கபட்டுள்ள ஒவ்வொரு நாளிற்காகவும் இருநூறு ரூபாய் பராமரிப்பு செலவிற்காக அறவிடப்படுவதுடன் பிடிக்கபட்டதிலிருந்து ஏழுநாட்களிற்கு பின்னர் அனைத்து மாடுகளும் ஏலத்தில் விடப்படும் என சபையின் தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த உலங்குவானூர்தி!!

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மஹிந்த அணியினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் இதுவரை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற மைதானத்தில் உலங்குவானூர்தி ஒன்று வந்துள்ளது.

இதில் வந்தவர் ஜனாதிபதியாக இருக்கலாம் அல்லது பிரதமராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸார் மீதும் தாக்குதல்!!

நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை கொண்டு வருவதற்கு மஹிந்த தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் செங்கோல் கொண்டு வரப்பட்டது.

எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மீது தண்ணீர் மற்றும் பல்வேறு பொருட்களை மஹிந்த தரப்பினர் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.30 வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஏற்படுத்தப்பட்ட குழப்பத்தினால் இன்றும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.