இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

சபாநாயகர்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது என்பதனை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புக்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கூடுதல் பெரும்பான்மை உண்டு என்பதனை கரு ஜயசூரிய ஒப்புக்கொள்கின்றார். நாடாளுமன்றை எதிர்கொள்ள முடியாத காரணத்தினால் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அமர்வில் பங்கேற்கவில்லை.

பிரதமர் ஒருவரை நியமிக்கவோ அல்லது பதவி நீக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. கட்சித் தலைவர் கூட்டத்தில் இதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலியுறுத்தியது என தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மன்னிப்பு கோரிய சஜித் பிரேமதாச!!

சஜித் பிரேமதாச

மிருகங்களை இழிவுபடுத்தியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்பு கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வனவிலங்குகளை போன்று செயற்பட்டதாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எனது கூற்றை வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். காட்டு விலங்குகளை விடவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இழிவாக செயற்பட்டனர். மிருகங்களை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை.எனக்கு பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எவ்வித அச்சமும் இன்றி பதவியிலிருந்து விலகியிருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றம் : பிரதி சபாநாயகர் வெளியிட்ட திடீர் தீர்மானம்!!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் மீண்டும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் 1 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களே இன்றைய அமர்வு நடைபெற்றுள்ளது.

இந்த அமர்வில் அனுரகுமார திசாநாயக்க, தினேஸ் குணவர்தன, லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் உரையாற்றியிருந்தனர். இதையடுத்து கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர், “இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இங்கு கூறுகின்றேன். இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி 10 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நாடாளுமன்றில் செங்கோளுடன், பிரதி சபாநாயகர் வெளியே சென்ற நிலையில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர்.

வவுனியா நகரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் பிசுபிசுத்தது!!

வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாததால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பிசுபிசுத்துள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் இன்று 19.11.2018 திங்கட்கிழமை நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக கடந்த 17.11.2018 சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இடம்பெற்ற அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் நகரசபைக்கான நிர்வாகக்கூட்டம் இடம்பெற்று இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தின் அடிப்படையில் நகரசபையினுடைய தலைவர் எமது சங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தாலும் தற்போதைய நிலையில் எமது சங்கம் இன்று திங்கட்கிழமை 19.11.2018 நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்குபெறுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இன்றைய தினம் எமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் சகலரும் வேலைக்கு சமூகமளிப்போம் என்பதை அறியத்தருவதுடன் வேலை செய்வதற்காக வாகன ஒழுங்குகளை எமக்கு செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் தங்களினால் எற்கனவே கடிதங்கள் மூலம் விடுக்கப்பட்டிருக்கின்ற கோரிகைகளான தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை, மலசலகூடம் சீர்திருத்தம் போன்ற இரு கோரிக்கைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரிகின்றோம் என்று தெரிவித்து அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தில் உயர் பீட உறுப்பினர் இராமு. சூரியகுமாரினால் நகரசபை தலைவர், செயலாளர், உப நகர பிதா ஆகியோருக்கு கடந்த 17ஆம் திகதி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 7 மணியளவில் அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் வேலைக்கு சமூகமளித்த நிலையில் அவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டபோது இருதரப்பினருக்கும் இடையே முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபை தவிசாளர், உப நகரபிதா, நகரசபை செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரடுமுடியவில்லை.

நகரசபை ஊழியர்களின் ஐந்து பேர் கொண்ட குழுவினர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பணிக்குச் செல்லும் ஊழியர்களை தடை செய்வதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் குறித்த ஐந்து பேர் கொண்ட குழுவினரிடம் பணிக்குச் செல்பவர்களை தடை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இதன் பின்னர் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் காலை 8 மணியளவில் பணிகள் வழமைக்குத்திரும்பியதால் இன்றைய கவனயீர்ப்பு பிசுபிசுத்துள்ளது.

வடக்கில் மாவீரர் தினமன்று தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை!!

மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படும் தினமான எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குழப்பங்கள் விளைவிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் அன்றைய தினம் நடைபெறும் தவணைப் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் திட்டமிட்டுள்ளதனால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அதிகளவான பாடசாலை மாணவ மாணவியர் எதிர்வரும் 27ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் கல்விப் பணிப்பாளரின் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போரில் உயிர் நீத்த தங்களது சொந்தங்களை நினைவு கூர்வதில் பிழையில்லை என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

ஒன்றுமே தெரியாமல் தவிக்கும் மஹிந்த : ஒற்றை வரியில் கதையை முடித்த ரணில்!!

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் குற்றச்சாட்டு என்ன என்று எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் எந்த விதத்தில் நம்பிக்கையை உடைத்தேன் என்று கூட தெரிந்து கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 14ஆம் திகதி நான் பேச சந்தர்ப்பம் கேட்டேன் எனினும் சபாநாயாகர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதனாலேயே நான் நாடாளுமன்றத்தை விட்டு எழுந்து சென்றேன்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய கூட்டம் ஆரம்பித்தது முதல் அமைதியாக இருந்த, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உரையாற்றுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பித்தோம். அதில் வெற்றி பெற்றோம். எங்களுக்கு அரசாங்கம் ஒன்றை அமைக்க இடமளிக்குமாறே கேட்கின்றோம் என ரணில் தனது உரையை சுருக்கமாக முடிந்துக் கொண்டார்.

வவுனியாவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

வவுனியா – காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காத்தார்சின்னகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த மூவரும், துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணொருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற மூவரும் மதுபோதையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

230 கி.மீ தூரம் சொந்த குழந்தையின் சடலத்தை சுமந்து வந்த தந்தை!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் குழந்தையின் சடலத்தை பேருந்தில் எடுத்து வந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் உள்ள குச்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். கூலித்தொழிலாளியான இவருக்கு மனான் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு மனானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

சிகிச்சைக்காக கிஷ்த்வார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு நிமோனியா நோய் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் இந்த நோய்க்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லாததால் சிறுவனை ஜம்மூவுக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி மனானை அழைத்துக் கொண்டு ஜம்மு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சுல்தான். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காதல் சிறுவன் மனான் பரிதாபமாக உயிரிழந்தான். மனானின் பிரிவைத் தாங்க முடியாமல் சுல்தான் உட்பட மொத்தம் குடும்பமும் சோகத்தில் மூழ்கியது.

கிஷ்த்வார் மருத்துவமனையில் இருந்து ஜம்மூவுக்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியவுடன் அவசர ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார் சுல்தான். கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு 230 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆம்புலன்ஸில் சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று எண்ணியே அவசர ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார்.

ஆனால் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேண்டுமென்றால் பெட்ரோலுக்கு உரியப் பணத்தை செலுத்த வேண்டும். அப்போது தான் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸை அனுப்பும். வறுமையான குடும்பத்தில் பிறந்து கூலி வேலை செய்து வரும் சுல்தானிடமோ அந்த அளவுக்குப் பணம் கிடையாது.

இருப்பினும் தனது மகனுக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சியுள்ளார். நிலைமையைப் புரிந்துகொள்ளாத மருத்துவமனை நிர்வாகம், குழந்தையின் சடலத்தை பேருந்தில் எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளது. இதன்பின்னர் உள்ளூர் சமூக சேவை அமைப்பு மூலமாகப் பணம் திரட்டி சாதாரண ஆம்புலன்ஸ் மூலமாக ஜம்மு சென்றுள்ளனர்.

ஜம்மூவிலும் இதே நிலை நீடித்ததால் யாருக்கும் தெரியாமல் இறந்த குழந்தையின் உடலை பேருந்தில் ஏற்றிவந்து சொந்த ஊருக்கு வந்துசேர்ந்துள்ளார் சுல்தான். சம்பவம் குறித்து சுல்தானுடன் சென்றிருந்த அவரது உறவினர், சுமார் 6 மணி நேரம் ஜம்மு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்து உதவிக் கேட்டோம். ஓவருவர் கூட உதவவில்லை. கடைசியாக யாரிடமும் சொல்லாமல் போர்வையில் மூடியபடி பேருந்தில் ஏற்றி குழந்தையை ஊருக்குக் கொண்டுவந்தோம்.

12 மணி நேரம் குழந்தையின் சடலத்தை வைத்துக்கொண்டு போராடினோம். அந்த ஒரு இரவை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம் என உருக்கமாகக் கூறினார். 30 வருடம் கூலித்தொழிலாளியாக இருந்து பல மணி நேரம் சுமைகளை தூக்கிய சுல்தான் தனது குழந்தையின் சடலத்தையும் தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவளை கொன்றுவிட்டீர்களா? திருமணமான அடுத்த நாள் கடத்தப்பட்ட மனைவி : கதறும் இளைஞர்!!

திருமணமான 2வது நாள் பெற்றோரால் கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தர வலியுறுத்தி இளைஞர் உதவிக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த எட்வின் பிலிப் என்ற இளைஞர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆரதி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்தை அடுத்து எட்வினின் சொந்த ஊருக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆனால் இந்த தகவல் தெரியவந்த ஆரதியின் பெற்றோர் பொலிசாரின் உதவியுடன் ஆரதியை பலவந்தமாக கன்னியாகுமரிக்கே அழைத்து சென்றுள்ளனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஆரதியை ஒப்படைக்கலாம் என்ற ஒப்புதலுக்கு அடுத்தே கேரள பொலிசார் ஆரதியை தமிழக பொலிசாருடனும் அவரது பெற்றோருடனும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் ஆரதி தொடர்பில் எந்த தகவலும் இல்லை என எட்வின் தெரிவித்துள்ளார். தமது மனைவியை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும், அவளை அவர் கொன்று விட்டார்களா என்பது கூட தெரியாமல் தவித்து வருவதாகவும் எட்வின் தமது பேஸ்புக் பக்கத்தில் கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

ஆரதியின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் இருப்பதாகவும், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தமிழக பொலிசார் கூறியதை அடுத்தே எட்வினின் வீட்டில் இருந்து ஆரதியை அவர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் ஆரதியை எங்கே கொண்டு சென்றார்கள் என்ற ஒரு தகவலும் இதுவரை இல்லை என எட்வின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதி காவல் நிலையத்தில் ஆரதியை ஆஜர்படுத்தியதாக தகவல் உள்ளது. அங்கிருந்து அவரது பெற்றோர்கள் அவரை எங்கே கொண்டு சென்றார்கள் என தெரியவில்லை, தயவு செய்து தமது மனைவியை கண்டுபிடிக்க உதவுங்கள் என கேட்டு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

துண்டாக கிடந்த மகனின் தலை.. கதறி அழுத தாய் : ஊருக்கு நடுவே நடந்த துணிகர கொலை!!

தமிழகத்தில் சமுதாய கூடத்தில் இளைஞர் ஒருவரின் தலை துண்டாக கிடந்ததால், பொலிசார் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி மேலப்பாலாமடையில் உள்ளார்.

இந்த தம்பதிக்கு 18 வயதில் பால்துரை என்ற மகன் உள்ளார். பால்துரைக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. இதனால் ஊரை சுற்றி கொண்டே தான் இருப்பாராம். இதன் காரணமாக அடிக்கடி தன் அம்மா வீட்டுக்கும் போய் வந்துள்ளார். அப்படி தான் வழக்கம் போல் தாயின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அந்த ஊருக்கு நடுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஒரு தலை மட்டும் துண்டித்து நிலையில் கிடப்பதைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், துண்டிக்கப்பட்ட தலை பால்ராஜின் தலை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து இந்த தகவல் அவரின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மகனின் தலையை கண்ட அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், பால்ராஜின் தலையை இங்கே வைத்துச் செல்வதற்கு என்ன காரணம்? ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய கணவனுக்கு மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரம் : நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவி வீட்டிற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (24). இவருக்கும் ராஜ்குமார் (30) என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கார் டிரைவரான ராஜ்குமார் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பினார். பார்வதி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவி இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பார்வதியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு பார்வதியை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் அவருடன் பேசி கொண்டிருந்தார்.

பக்கத்து அறையில் பார்வதியின் தந்தை தங்கவேலும், ருக்மணியும் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ராஜ்குமார் பார்வதியுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பெற்றோர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பதுங்கியிருந்த ராஜ்குமாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தொப்பையை வேகமாக குறைக்க இந்த பழம் மட்டுமே போதுமே!!

முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ள‌து. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக உள்ளது.

முலாம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : உடல் எடை : முலாம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரியின் அளவு மிகக் குறைவாக உள்ளது. எனவே உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடையைக் குறைந்து, அழகான உடலமைப்பை பெறலாம்.

புற்றுநோய் : முலாம் பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால். இது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, நமது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வேருடன் அழிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் : முலாம் பழத்தில் உள்ள அடினோசைன், நமது உடம்பின் ரத்த செல்கள் கட்டிப்படுவதைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.

கண் பார்வை : விட்டமின் A சத்துக்கள் முலாம் பழத்தில் அதிகமாக உள்ளதால், இது கண் பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூளையின் ஆரோக்கியம் : முலாம் பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதை தினமும் ஜூஸ் செய்து குடித்தால், இதயத் துடிப்பை சீராக்கி, நமது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச் சோர்வு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும் குறைந்த சர்க்கரை மற்றும் கலோரி உள்ள உணவுகளை உண்பதால், அதிகப்படியான சோர்வை உணரக் கூடும். இதற்கு அவர்கள் முலாம் பழ ஜூஸ் சாப்பிட்டால் முழுமையான உடல் எனர்ஜி கிடைக்கும்.

செரிமானப் பிரச்சனை : முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இது செரிமானப் பிரச்சனைக்கு இடையூறு விளைவிக்கும் அமிலத் தன்மையை அகற்றி, செரிமான பிரச்சனை இல்லாமல் தடுக்கிறது.

காயங்கள் : முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக் கலவை, சருமம் போன்ற திசுக்களின் செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தி, சருமத்தின் உறுதித் தன்மையை பாதுகாக்கிறது.

100 வயதில் 26 வயது இளையவரை காதலித்து மணம் முடித்த பெண் : 30 வருடங்கள் திகட்டாத காதல்!!

பிரித்தானியாவில் உள்ள denbighshire பகுதியில் தன்னைவிட 26 வயது இளையவரான நபரை 30 ஆண்டுகள் காதலித்து 100 வயது மூதாட்டி ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பிரித்தானியாவின் வெல்ஸ் கவுண்டியில் உள்ள denbighshire பகுதியிலேயே இந்த வியக்க வைக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. காதலுக்கு வயது ஒரு பிரச்னையே இல்லை என்பதை இந்த 100 வயது Norah Witkiss என்ற பெண்மணி நிரூபித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் 30 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னரே நோரா மூதாட்டியும் 74 வயது மால்கம் யேட்ஸ் என்பவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பாடசாலை ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார் நோரா. இதற்கு முன்னர் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டாலும், அவை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

1980 ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுனரான மால்கம் யேட்ஸ் என்பவருடம் நோராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகினர். இருப்பினும் இந்த 30 ஆண்டுகளில் ஒருமுறை கூட இருவரும் திருமணம் குறித்து விவாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் நோராவிடம் முதன் முறையாக திருமணம் தொடர்பில் பேசியுள்ளார் மால்கம். 100-வது வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கிடைத்ததும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

முறைப்படி நோராவை திருமணம் செய்து கொண்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், வயதில் ஒரு இருபது குறைந்துள்ளதாக கருதுவதாகவும் மால்கம் தெரிவித்துள்ளார். மால்கம் இல்லாமல் தம்மால் தனியாக இயங்க முடியாது எனவும் அதனாலையே மால்கத்தின் விருப்பத்தை தாம் நிறைவேற்றியதாகவும் நோரா தெரிவித்துள்ளார். நோராவுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 101 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் : இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

இலங்கையில் ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாவிட்டால், நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

கொழும்பில் உள்ள அமரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையுடனான பாதுகாப்பு விடயங்களில் தாக்கங்கள் ஏற்படும் என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா, இலங்கையின் இராணுவக்கட்டமைப்புக்காக 39 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்தது.

அத்துடன் கடற்படை கப்பல் ஒன்றையும் அமரிக்கா கடந்த ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வழங்கியது

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையை அமெரிக்கா உன்னிப்பாக நோக்கி வருகிறது என்று அமரிக்க தூதரகத்தின் பேச்சாளர் டேவிட் ஜே மெக்கியூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்தமை நியாயமற்ற செயல் என்று அமெரிக்க தூதரகம் கண்டித்திருந்தது.

இந்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டாவிட்டால், கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் ஜே மெக்கியூரி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்!!

இலங்கையில் அரசியல் நெருக்கடி நீடித்துள்ளதால், இலங்கைக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.

முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.

எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.

ரணிலை பிரதமராகியே தீருவோம் : மைத்திரி – மகிந்தவுக்கு சவால்!!

அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதி நியமிக்கும் வரை எமது போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாளை நாம் நாடாளுமன்றம் செல்வோம். நாளையும் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கு நாம் பயப்படப்போவதில்லை. எந்தச் சவாலையும் ஏற்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவேண்டும். அது நாடாளுமன்ற சம்பிரதாயம், நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளார்.

மகிந்த தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே சபை அமர்வை குழப்பினர். எந்தச் சவால் வந்தபோதும் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற மேலாண்மையையும் பாதுகாக்க நாம் உறுதி பூண்டிருக்கின்றோம்.

கடந்த இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளின் போதும் சபை நடவடிக்கைகளை திட்டமிட்டே குழப்பினர். இதன் பின்னணியில் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகமும் எமக்குள்ளது.

எமக்கு சரியான தீர்வு கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. சட்ட ரீதியான பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து ஆட்சிப் பொறுப்பை உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணியிடம் வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி காலம் கடத்துவது எதிர்வரும் நாட்களில் அவருக்குத்தான் பாதகமாக அமையலாம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.