வீதியில் சடலமாக கிடந்த உணவக உரிமையாளர் : தமிழர் பகுதியில் சோக சம்பவம்!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த நிலையில் சம்பவதினமான இன்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில்,

மோட்டார் சைக்கிளுடன் கீழ் வீழ்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பிரயாணித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரண விவகாரத்தில் புதிய திருப்பம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 2 ஆம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷானின் சம்பவம், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும்,

விரிவான விசாரணை நடத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உயர் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு புதிய பொறிமுறையை நிறுவ ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாட்டில் ஒரு புதிய அலுவலகத்தை நிறுவ யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன் போது தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்.

போலந்து வெளியுறவு அமைச்சரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியா பெண்ணால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் : இந்திய ஊடகம் அதிர்ச்சித் தகவல்!!

கடந்த 12ஆம் திகதி பிரித்தானிய பெண் ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரான பெண்ணால் கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பரவி வரும் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணின் பைகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருள் தொடர்பில் இந்திய ஊடகமான NDTV தகவல் வெளியிட்டுள்ளது.

460 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 46 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் 21 வயது சார்லோட் மே லீ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலுக்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான குஷ் போதைப்பொருள் இதுவாகும்.

பெண்ணிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மனித எலும்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படும் மிகவும் அடிமையாக்கும் போதைப்பொருள் எனவும் NDTV வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சியரா லியோன் அரசாங்கம் கடந்த ஆண்டு அவசரகால நிலையை அறிவிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இந்த போதை பொருள் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக NDTV மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இளம் பெண், மிகவும் மோசமான வசதிகளுடன் இருப்பதாக டெய்லி மெயில் வலைத்தளம் வெளியிட்ட செய்தியின் காரணமாக சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கான காரணம் வெளியானது!!

அண்மையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த விபத்துக்கான காரணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி ஓய்வின்றி இருந்தமையினால் ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்கு பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கதிர்காமம் போக்குவரத்து சபையினால் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்தி பேருந்தை முறையாக சரிசெய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், கடைசியாக 2023 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், பேருந்தின் கம்பிகள் சேதமடைந்திருந்தன,

ஆனால் அவை அகற்றப்படவில்லை மற்றும் புதிய தகடுகள் பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.

இதனால் விபத்தின் போது பேருந்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தின் இருபுறமும் இரண்டு மரக் கடைகள் கட்ட 2022 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் குறித்த கடையின் உரிமையாளர்கள், பெரிய மரங்களை வெட்டி தமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மண்ணை சமன் செய்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சம்பவித்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை எச்சரித்துள்ளது.

இதேவேளை, இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,

வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

தென்னிலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட நபர் : கொலையில் அதிர்ச்சிப் பின்னணி!!

களுத்துறை – புளத்சிங்கள நாகஹதொல் பகுதியில் ஒருவர் தீவைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் மஹிங்கல – பாதுக்கை பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல நிஷாந்த என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்தவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் அருகே முகம் குப்புறக் கிடத்தப்பட்டு, அதன் மீது டயர்கள் பொருத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் தலையில் பலத்த வெட்டுக் காயம் இருந்ததாகவும், அவரது தொடையிலிருந்து மார்பு வரை டயர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், மரணம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் இருந்து, இறந்தவர் இன்று (28) காலை 10.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மத்துகம நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லிப்டில் சிக்கிய மகன் : ஒரே நிமிடத்தில் மயங்கி சரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர்.

51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் அந்த குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மகன் கண்முன்னே லிப்டில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரிஷிராஜ்.

உடனடியாக ஜெனரேட்டர் அறைக்குச் செல்வதற்குள், திடீரென மயங்கி விழுந்து விட்டார். அதே நேரத்தில், மின்சாரம் வந்ததால் லிப்ட் கதவு திறந்து, தேவன்ஷ் பத்திரமாக வெளியே வந்து விட்டான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த போதும், ரிஷிராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். திடீர் மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் கூறினர்.

மகனின் லிப்ட்டில் சிக்கியதால் அதிர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகனின் பாதுகாப்பை நினைத்து தந்தை உயிரிழந்தது அந்தப்பகுதியில் வசித்தவர்களை கண்களில் கண்ணீர் வரவழைத்தது.

பெண் வைத்தியர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை!!

பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய 11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவை சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). இவர், மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மனநல காப்பகத்தில் அவரை சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

இந்நிலையில், வருண்காந்த் மாயமானதாக, அவருடைய பெற்றோருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வருண்காந்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் வருண்குமாரை அடித்துக் கொன்று நடுப்புணி அருகே உள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 24ம் தேதி வருண்காந்த் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் காப்பக நிர்வாகி கிரிராம் (36), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில்பாபு (55), காப்பாளர்கள் ரித்தீஷ் (26), சதீஷ் (25), ஷீலா (27), பணியாளர் ரங்கநாயகி (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான சாஜி (32), டாக்டர் கவிதா (52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகிய 5 பேரை 10 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.

மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேர் மீதும் கொலை செய்தது, கொலையை மறைத்தது, கூட்டு சதி, தடயங்களை அழித்தது என 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்:
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வருண்காந்தை அவரது பெற்றோர் எங்களது காப்பகத்தில் அனுமதித்தனர்.

வருண்காந்த் எங்களது பேச்சை கேட்காமல் அதிகமாக கோபப்பட்டார். காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா முகத்தில் எச்சில் துப்பினார்.

இதனால் கடந்த 9ம் தேதி அங்குள்ளவர்களை மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்றபோது வருண்காந்த்தை மட்டும் காப்பகத்திலேயே விட்டு சென்றோம்.

இதேபோல் ஒரு பிறந்தநாள் விழாவிற்கும் வருண்காந்தை விட்டுவிட்டு மற்ற குழந்தைகளை அழைத்துச்சென்றோம்.

இதனால் வருண்காந்த் ஆத்திரமடைந்து, எங்களை பார்த்து கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை பயங்கரமாக தாக்கினோம். இதன் பின்னர் அவர் சரிவர சாப்பிடவில்லை.

இதன்பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கி உடலில் சர்க்கரையை தூவி எறும்பை விட்டு கடிக்க செய்து, மிளகாய்களை வாயில் திணித்து, கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பால் தாக்கினோம்.

இதில் மயங்கி விழுந்த வருண்காந்த் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று ஊழியர்களை மிரட்டினோம். அவர்களது செல்போனை வாங்கி சுவிட்ச்-ஆப் செய்து வைத்துக் கொண்டோம்.

கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை காரில் ஏற்றி நடுப்பணியில் உள்ள கவிதாவின் தோட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு குழிதோண்டி புதைத்து, அதன்மேல் செடிகளை நட்டுவித்தோம்.

இதையடுத்து கொலை சம்பவத்தை மறைக்க வருண்காந்தை ஆழியாருக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு காணாமல் போனதாகவும் நாடகமாடினோம். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

வவுனியாவில் பேருந்துகளை மறித்து திடீர் சோதனை : 13 சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம்!!

கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஆர்.எம்.என்.கே.ராஜகுரு தலைமையில் வவுனியா பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயற்பாடானது வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அரச மற்றும் தனியார் பேரூந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை, வர்ணம் மாற்றிய மோட்டார் சைக்கிள்,

வாகன இலக்கத்தகடு தெரியாத வண்ணம் இருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக ஒர் முச்சக்கரவண்டி சாரதி, ஒர் மோட்டார் சைக்கில் சாரதி, 11 பேரூந்து சாரதிகள் என 13 வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் வாகன சாரதிகள் மேலதிக பாகங்கள் பொருத்துவதை தவிர்ப்பதுடன் வாகனங்களில் டயர் மற்றும் லைட் , பிரேக் போன்றவற்றில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி தடைப்படும் மின்சாரம் : மக்கள் அவதி!!

வவுனியாவில் கடந்த சில வாரங்களாக முன்னறிவித்தலின்றி நிறுத்தப்படும் மின்சார விநியோகத்தால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மின்சாரத்தை நிறுத்துவதாகவிருந்தால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்குமெனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டமையினால் வர்த்தகர்கள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுத்தனர்.

அத்துடன் திடீரென மின்சாரம் அதிகரித்து வருவதால் வீடு மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள இலத்திரனியல் சாதனங்களும் பழுதடைவதாக மக்கள் தெரிவித்தனர்.

தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின் பட்டியலை வழங்கி சில நாட்களிலேயே முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்துச் செல்வதாகவும் மேலும் பிந்திய கட்டணம் என பட்டியலுக்கு மேலதிக கட்டணம் அறவிடும் மின்சாரசபையினர் தடங்களற்ற மின்சாரத்தினை வழங்க வேண்டிய முக்கிய பொருப்பினையும் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பலதடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தானந்தவிற்கு 20 ஆண்டுகள், நளின் பெர்னாண்டோவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!!

ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னாண்டோக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, 2019ஆம் ஆண்டு நிலையான மூவரடங்கிய விசாரணை நீதிமன்றத்தில் (Permanent High Court Trial-at-Bar) வழக்கை தொடர்ந்தது.

இதில், 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச நிதியை தவறாக பயன்படுத்தி 53 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தியதாக இருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர்.

அவர்கள், அரசின் பணத்தை பயன்படுத்தி சதொச ஊடாக பெருமளவில் கரம் மற்றும் தாம் பலகைகள் இறக்குமதி செய்து, அவற்றை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்தனர் என வழக்கில் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெற்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

நீண்ட நாள் விசாரணைகளின் பின்னர், மேல் நீதிமன்றம் இருவரும் அரச நிதி முறைகேடு மற்றும் அதிகாரப் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்து, குற்றவாளிகள் என அறிவித்தது இந்த தண்டனையை விதித்துள்ளது.

கார் சாரதி உறங்கியதால் நடந்த விபரீதம் : நால்வர் வைத்தியசாலையில்!!

குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27.05) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்!!

கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த அட்சயதிருதியை வரை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது தலைகீழ் போக்கை பதிவு செய்து வருகிறது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைவடையும் போக்கு காணப்படுகிறது.

தங்க பவுணின் விலை

இந்த நிலையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்க பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை பொதுமக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

காற்று மற்றும் பலத்த மழையின் விளைவாக மரங்கள் வீழ்ந்து மண் மேடுகள் சரிந்து பல முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

நேற்று ஹட்டன் செனன் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பல பெரிய மரங்கள் வீழ்ந்து, போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தின.

ஹட்டன்-பொகவந்தலாவ வீதியிலும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. வனராஜா பெருந்தோட்டத்தில் உள்ள வீடுகளின் மீது ஒரு பெரிய மா மரம் வீழ்ந்ததில் மூன்று வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹட்டன், நோர்வுட், கொட்டகலை மற்றும் நோர்டன் ஆகிய இடங்களில் உள்ள பிரதான மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன.

பண்டாரவளையில் உள்ள வேவதென்னவில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது ஒரு மரம் விழுந்ததில் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இதற்கிடையில், இலங்கையின் இன்றைய வானிலை குறித்து வானிலை மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமான அலைகள் எழும்பக்கூடும் என்று திணைக்களம் எதிர்வை வெளியிட்டுள்ளது.

எனவே, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு,

மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகங்களுக்கு வானிலை ஆய்வுத் மையம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் சந்தையில் கிடைக்கும், மனிதனுக்கு ஆபத்தான பல்வேறு தோல் பூச்சுக்கள்(கிரீம்கள்)மற்றும் விசிறல்கள் (லோசன்கள்) தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த தோல் கிரீம்கள் மற்றும் லோசன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நுகர்வோர் விவகார ஆணையகம், இது தொடர்பில் ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளையும், அவற்றின் முத்திரைப் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

எனவே அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோசன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.