அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதேவேளை நாட்டை சூழவுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும்
உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை (29) பிற்பகல் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும்,
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும்,
காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும்,
அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தக் கடல் பகுதிகள் குறித்து மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் உள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்ட நிலையில் கீழே நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேற்று (27.05) மாலை 7 மணி அளவில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ராட்சத ராட்டினத்தில் ஏறி இருந்தனர். ராட்சத ராட்டினம் சுமார் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலேயே நின்று விட்டது.
இதையடுத்து தொழில்நுட்ப கோளறாரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அந்தரத்தில் தொங்கியவர்களில் சிலர், நடந்த சம்பவம் குறித்து தங்களது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் நீலாங்கரை பொலிஸாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தவர்களை ‘பிராண்டோ லிப்ட்’ மூலமாக மீட்டனர்.
3 மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் கீழே வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பொழுதுபோக்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் , பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூட அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை உயர்த்தி ஒரு சக்கரத்தில் வீதியில் சாகசப் பயணம் செய்த இளைஞனுக்கு குளியாப்பிட்டி நீதவான் ரண்டிக லக்மால் ஜெயலத் ரூபா 55,000 அபராதம் விதித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல்,
இலக்கத்தகடுகள் மற்றும் பக்கக் கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமல் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குளியாப்பிட்டி கனதுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான தசுன் ஷெவந்தா என்ற இளைஞன் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபர் தனது மோட்டார் சைக்கிளை ஒரே சக்கரத்தில் ஓட்டி, பெரும் சத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் கமல் ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வகையில் ஒரு சக்கரத்தில் சவாரி செய்வது பாதசாரிகள் மற்றும் சவாரி செய்பவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதேபோன்ற குற்றங்களில் ஈடுபடும் மற்ற இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனை விதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்ட நிலையில், நீதிமன்றம் இளைஞனுக்கு அபராதம் வித்துள்ளது.
யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார் அதன்படி அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதிய கொரோனா பாதிப்பு மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக பன்னல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செஹான் மதுசங்கவின் வீட்டில் இருந்து 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது,
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட செஹான் மதுசங்க குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், செஹான் மதுசங்க மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் இளவரசிகளாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது.
இந்நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில் கொண்டுவரும் போதே அந்த தந்தை அழ தொடங்கிவிடுகிறார்.
பிறகு குழந்தையின் கையில் ஊசி போடப்பட்ட நிலையில், குழந்தை துடித்து அழுவதைக் கண்டு அவர் கதறி கதறி அழுகிறார். குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்போல அவர் குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகிறார்.
இந்த நிலையில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது வீட்டில் இவ்வாறு இன்று (27) காலை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாணவனின் மரணத்திற்கு மன உளைச்சல் காரணமாக இருக்கலாமென பெற்றோர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கடந்த சில வாரங்களில் நாட்டில் இவ்வாறு பல மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 13 வயதுடை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அண்மையில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற 2 ஆம் ஆண்டு மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்திருந்தார். இதற்கு காரணம் பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சல் என்று கூறப்படுகிறது.
மேலும் வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி கல்வி கற்கும் 2 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சைப்ரஸில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை நிக்கோசியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான வசந்தா வஜிரானி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வாகனம் எதிரே வந்த லொறியில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பெண்ணை உடனடியாக மீட்டு நிக்கோசியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயதான லொறியின் ஓட்டுநர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நிக்கோசியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கையை, காலி மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகே நேற்று நீதவானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
உயிரிழந்தவர் காலி, ஜின்தொட்ட பகுதியை சேர்ந்த 31 வயதான சதுரங்க சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜின்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் மதியம் மாத்தறையில் இருந்து காலி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹபராதுவ பகுதியில் விபத்துக்குள்ளானார்.
காயமடைந்த நபர் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் 58வது அறையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது சகோதரர் விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் தனது தாயாருடன் மருத்துவமனைக்கு வந்தபோது, தனது சகோதரர் ஒரு டிராலியில் கிடப்பதைக் கண்டதாக உயிரிழந்த இளைஞனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வந்த போது, என் சகோதரனுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் தெரியவில்லை. அவர் நன்றாக இருந்தார்.
ஆனால் அவரது அடிவயிற்றின் கீழ் பகுதி மிகவும் வலிப்பதாக அவர் கூறினார். நாங்கள் இது குறித்து வைத்தியர் மற்றும் தாதிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
என் சகோதரனுக்கு எந்த வலியும் இல்லை என்று அவர்கள் கூறினர். அவர்கள் எக்ஸ்ரே எடுப்பதாக கூறினார்கள். ஆனால் எடுக்கவில்லை.
என் சகோதரனால் வலியைத் தாங்க முடியவில்லை, பல சந்தர்ப்பங்களில் அவருக்கு வலி இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். ஆனால் யாரும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
என் சகோதரர் நேற்று காலை வரை டிராலியில் இருந்தார். அவர் வலியைத் தாங்க முடியாமல் டிராலியில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு வந்த அம்புலன்ஸில் சென்று,
எனக்கு எந்த மருந்தும் கொடுக்க மாட்டார்கள் எனவும் என்னை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அம்புலன்ஸில் இருந்து திரும்ப அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, என் சகோதரர் இரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் இந்த மரணம் நிகழ்ந்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தங்க விலை நிலவரங்களின் படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றையதினம் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனினும், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 1,002,963 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 283,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 259,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 247,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலையானது சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய கடுமையாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண குமார். 45 வயதாகும் கிருஷ்ண குமாருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ண குமார், தனது மனைவி டோலி தேவி மற்றும் 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருமே திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டு கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கிருஷ்ணகுமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கிமோதெரபி மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் கிருஷ்ணகுமார் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கிருஷ்ணகுமார் தனது மனைவியும் மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, மட்டக்களப்பு, மாத்தளை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, கேகாலை – பெரகலை வீதியில் மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 53 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 85 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தளையில் வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் கெக்கிராவை பகுதியில் கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்திய ரூபாயை சர்வதேச மயமாக்க, இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின் உள்ளூர் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகளின் கிளைகளின் ஊடாக இந்திய நாணயத்தில் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த வங்கி மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதன் காரணமாக, இந்திய ரூபாயின் பயன்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை, சர்வதேச வர்த்தகத்தில் மேம்படுத்த முடியும் என்று, ரிசர்வ் வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், அண்டை நாடுகளான பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில்,வெளிநாட்டினருக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம் என்று இந்திய மத்திய வங்கி யோசனை தெரிவித்துள்ளது.
எனினும் இந்திய நிதியமைச்சு இன்னும் இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, தெற்காசியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 90 வீதமானவை, 2024-25 ஆம் ஆண்டில் இந்த நான்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள், வெளிநாட்டு நாணயங்களில் கடன்களை வழங்குவதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.