இலங்கை அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள்,
04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று கேகாலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி, நெம்புகோல் அமைப்பின் உதவியுடன் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது, அந்த வாகனத்தின் ஆதரவு அமைப்பு தளர்ந்து, வாகனம் வீதியின் கீழ்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது, பூம் ட்ரக் வாகனத்திற்கு முன்னால், கேகாலை நோக்கி செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் அவரது மகள் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பல் வைத்தியர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூபா 40,000 முதல் ரூபா 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.
அதேவேளை அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், தலைமறைவாக இருந்த பல் வைத்தியர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் கிராமத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவதூறு ஏற்படும் என்ற பயத்தில் பெற்றோர் மற்றும் தங்கை ஆகிய மூவர் ஏரியில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி உயிரிழந்ததவர்கள் 55 வயது மகாதேவ் சுவாமி , 45 வயதில் அவரது மனைவி மஞ்சுளா, 20 வயதில் அவர்களின் இளைய மகள் ஹர்ஷிதா மூவரும் பைக்கில் சென்று புதனூர் ஏரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு பைக்கை நிறுத்தி, செருப்புகளை அதே இடத்தில் விட்டுவிட்டு, தற்கொலைக்கான கடிதம் எழுதி வைத்துள்ளனர். பின்னர், ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த காட்சியைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புப் படையினரும் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கான தற்கொலைக்குறிப்பில், “எங்கள் மரணத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. எங்கள் சொத்துகள் எதுவும் எங்கள் மூத்த மகளுக்குக் கொடுக்கவேண்டாம்.
அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள். எங்களை போல யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது. அவதூறு காரணமாகவே இந்த முடிவை எடுத்தோம்” என எழுதியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், வீட்டை விட்டு ஓடிய மூத்த மகள், தனது பெற்றோர் மற்றும் தங்கையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024/2025 கல்வியாண்டிற்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பம் கோரல் 2025 மே 30ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், சாத்தியமான அனைத்து மாணவர்களும் தங்கள் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
அதற்கமைய, www.ugc.ac.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும்,
காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ – 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று (26.05.2025) சாவடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம.ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று (26.05.2025) தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .
மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி தெரிவிக்கையில்,
அரச துறையில் தனக்கு நியமனத்தை வழங்குமாறும், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட் – 19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆம் 22 திகதி தானேயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 24 ஆம் திகதியும் ஒருவர் கொரோனா வைரஸால் உயிர்ழந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்புகளை மதிப்பாய்வு செய்து, முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளதாகக் கூறியது.
தற்போது இந்தியா முழுவதும் 1,009 பேர்கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 430 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் மே 19 முதல் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் தற்போது 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 153 பேர் கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் நான்கு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார்.
இந்த நிலையில், தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சட்டரீதியாக சென்ற நிலையில் இரு மாதங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது.
மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ள நிலையில அவரின் குடும்பத்தார் நேற்று (25.05) ஊடகசந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது, எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “அவர் வெளிநாடு செல்லவேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிவர்த்தி செய்து அம்மாவின் ஆத்மா ஈடேறவேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார்.
அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்து தாமாகவே உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது” என குறிப்பிட்டுள்ளார். முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க…
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் விழுந்து கிடந்த 17,000 ரூபாய் பணத்துடன் இருந்த பையை பாடசாலை மாணவியொருவர் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொலன்னறுவை- கிரிதலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொலன்நறுவை கிரிதலேகம மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று முடித்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற பொழுது வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த மாணவி பணப்பையை பாடசாலை அதிபரிடம் கொடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். இந்தநிலையில், அதிபர் குறித்த தகவலை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்த 75 வயதுடைய முதியவர் அதிபரிடம் தனது பணப்பையை பெற்றுக்கொண்டுள்ளார். அத்தோடு, தனது பணப்பையை பெற்றுக்கொடுத்த பாடசாலை சமூகத்தினருக்கும், மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் முதியவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்ரீனின் கணவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அம்ரீனுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அம்ரீன் ஜஹான் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்கள்தான் என கணவரின் சகோதரி, மாமனார் என்னை குற்றம்சாட்டினர். மேலும், அவர்களுடன் சேர்ந்து என் கணவரும் ‘நீ ஏன் சாகக்கூடாது?’ என்று கேட்டார்.
என் மரணத்திற்கு காரணம் கணவரின் தந்தை மற்றும் சகோதரித்தான். என் கணவருக்கும் இதில் பாதி பங்கு உள்ளது என கூறியுள்ளார்.
அத்துடன் தனது தந்தையிடம் பேசிவிட்டு அம்ரீன் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அம்ரீனின் தந்தை பொலிஸில் புகார் அளிக்க, கணவர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து திங்கட்கிழமை (26.05) காலை இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மகன் பாடசாலை மாணவன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி உட்பட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குவைத தலைவர் , 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்தஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக, “உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்” என அறிவித்து, இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த நடவடிக்கை மூலம் தனிப்பட்ட சாதனைகளுக்காகக் குடியுரிமை பெற்ற பிரபலங்களான பாடகி நவால் மற்றும் நடிகர் தாவூத் ஹுசைன் ஆகியோரும் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர்.