என்சார்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை : சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!!

என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள், அங்கு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியான கரிசணை கொண்டிருக்கின்றது.

இந்த நிலைமைகள் தொடர்பில் எமது அரசியல் உயர்பீடம் கடந்த முதலாம் திகதி அன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து எள்ளளவும் மாறவில்லை என்பதை மீண்டும் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கின்றது.

என் சார்ந்தும், எமது கட்சி சார்ந்து உத்தியோகபூர்வமில்லாது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்து தகவல்களும் செய்திகளும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எம்மை மையப்படுத்தி உறுதிப்படுத்தப்படாது வெளியிடப்படும் எந்த செய்திகளுக்கும், தகவல்களுக்கும் நாம் எந்தவகையிலும் பொறுப்பாளியாக முடியாது என்பதை இத்தருணத்தில் கூறுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடு!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வழிகாட்டலில் இன்று(04.11) காலை 9.30 மணியளவில் நகரசபை பழைய மண்டபத்தில் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது.

இளைஞர்களின் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான விஷேட வழிகாட்டல் ஒளிரும் வாழ்வும் அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, எஸ்.சிவமோகன்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சஜந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம், தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர்கள், யுவதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முடிந்தால் செய்து காட்டுங்கள் : கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் பகிரங்க சவால்!!

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்காது முடிந்தால் நடுநிலை வகித்து காட்டட்டும் என பிரதி அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடுநிலை வகித்தால் தானும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது நடுநிலை வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தான் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன். இதில் பிரதமர் தரப்புடன் எந்த தொடர்பும் இல்லை.

கடந்த காலங்களில் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.

இந்நிலையிலேயே, ஜனாதிபதியிடம் 11 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.

இதில், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு, வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் உள்ளடங்குகின்றன.

தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவைகள் தீர்க்கப்படவில்லை. இந்நிலையிலேயே கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளேன்.

தான் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவான கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

தனக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்காது முடிந்தால் நடுநிலை வகித்து காட்டட்டும்.

அவ்வாறு நடுநிலை வகித்தால் தானும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது நடுநிலை வகிப்பதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோள்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர் டுவிட்டர் தளத்தில் இன்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டமைப்பில் உள்ள சில தனி மனிதர்களின் சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த தமிழ் சமூத்தின் அடையாளமாக திகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல் என கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி @MaithripalaS மற்றும் பிரதமர் @PresRajapaksa தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் எனவும் அவர் தனது மற்றொரு பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி : கதறி அழுத சகோதரிகள்!!

திருப்பூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, மனைவி இந்திராகாந்தி (41) தன்னுடைய மகள்கள் பெரியநாயகி (23), தாமரைச்செல்வி (21) மற்றும் ரசியா (19) ஆகியோரை அழைத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் குடியேறிவிட்டார்.

இவருடைய மூத்த மகள் பெரியநாயகிக்கு திருமணம் முடிந்துவிட்டது. தாமரைச்செல்வி, பணப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இந்தியாராகாந்தியுடன், அவருடைய கடைசிமகள் ரசியா தங்கி இருந்து வந்துள்ளார்.

அரசு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த ரசியா, அடிக்கடி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த இந்திராகாந்தி மகளை கண்டித்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரசியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய இந்திராகாந்தி நீண்ட நேரம் கதவை தட்டியும் ரசியா திறக்காததால், சந்தேகமடைந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார்.

அப்போது ரசியா சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான சூழ்நிலையில் கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு!!

அமைச்சு பதவியை பெற்றுக் கொள்வதை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மோதல் கொழும்பையும் அதன் புறநகர்பகுதிகளையும் நாளாந்த கார்க்குண்டுகள்,தற்கொலை படை தாக்குதல்கள் மூலம் போர்க்களமாக மாற்றியிருந்தது. இதனை சர்வதேசத்தினர் புரிந்து கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகள் மிகப்பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். படையினருக்கு சமமான ஆயுதங்களை வைத்திருந்தனர்.

இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ யுத்தம் என்பது சிறந்த விடயமில்லை அது அருவருப்பான விடயம். நாங்கள் யுத்தத்தை உருவாக்கவில்லை. மஹிந்த உருவாக்கவில்லை, மஹிந்த ராஜபக்ச அதனை முடித்து வைத்தார்.

புதிய அரசாங்கம் மீண்டும் கடன்களிற்காக சீனாவை நாடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.

நாங்கள் எந்த நாட்டிற்கும் சார்பாக நடக்கவில்லை, இலங்கையுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம். நாங்கள் சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் நியாயமாக நடந்துகொள்வில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பில் இருந்தபடியே கோத்தபாய இந்த விடங்களை குறிப்பிட்டார் என குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய அமைச்சுகளிற்கும் பதவிகளுக்கும் குடும்ப வாரிசுகளை நியமிக்கும் பாரம்பரியத்தை கொண்ட நாட்டிற்கு இதுவொன்றும் புதிய விடயமல்ல.

ராஜபக்ச குடும்பத்தவர்கள் மீண்டும் இலங்கை அரசியலில் ஆதிக்க செலுத்துவதற்கு தயாராவதை இது புலப்படுத்துகின்றது என சர்வதேச ஊடகமான புளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தாமதம் ஏன்? மஹிந்த விளக்கம்!!

வரவு செலவுத் திட்டத்ததை சமர்ப்பிப்பதற்கு தயாராகி வருவதால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தாமதமாகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அல்ஜெஸீரா ஊடகத்துடன் இடம்பெற்ற செவ்வியின் போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையிலும் நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மை கிடைத்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கு உட்பட்டே தனக்கான பிரதமர் நியமனம் வழங்கப்பட்டது. தான் தொடர்ந்து பிரதமராக செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கனாடவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்கள்!!

கனடாவில் நடைபெற்ற அமெரிக்கன் காற்பந்தாட்ட கழக மட்டப் போட்டித் தொடரில் இலங்கைத் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கல்கரி சிட்டி ஷீப்ஸ் கழகம், டிவிசன் 3 சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளது. இந்த கழகத்தின் பயிற்றுவிப்பாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமோஸ் டன்ஸ்டன் கடமையாற்றி வருகின்றார்.

அமோஸின் சகோதரர் ஆரோன் டன்ஸ்டன் இந்த அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கல்கரி ஷீப்ஸ் கழகம் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் கோல்ட்ஸ் அணியை 40 க்கு 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஷீப்ஸ் கழகம் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கல்கரி ஷீப்ஸ் கழகம் முதல் தடவையாக லீக் சுற்றில் பங்கேற்றிருந்துடன் சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்துள்ளது.

ஷீப்ஸ் அணியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வர்னக்க இளந்தார்கே என்ற வீரரும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் நெருக்கடி காரணமாக பங்குச் சந்தை சரிவுற்றுள்ளது!!

அரசியல் ஸ்திரமின்மை காரணமாக நாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் கொழும்பு பங்குச் சந்தை நேற்று சரிவு கண்டுள்ளது.

21.92 மற்றும் எஸ் அண்ட் பி குறியீட்டெண், இலங்கை ரூபா 20 இன் பெறுமதி 12.64 ஆக குறைந்துள்ளது.

பங்கு சந்தையின் அனைத்து விலை சுட்டியும் நேற்று 6,114.13 ஆக இருந்தது, 6,092 ஆக குறைவடைந்துள்ளது.

இலங்கை 20 குறியீடானது இந்த மாதத்தின் இறுதிக்குள் 3,221.07 ஆகயிருந்வை 3,208.43 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேசமயம் பங்கு சந்தையின் அனைத்து விலை 0.39 சதவீதமாக இருந்தவை 0.36 ஆக குறைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது வரை எனக்கே பெரும்பான்மை : ரணில் சூளுரை!!

நாடாளுமன்றத்தில் தற்போதும் தன்னிடமே பெரும்பான்மை உள்ளதாக பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியின் போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இல்லை. அதன் காரணமாகவே நாடாளுமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டும் வரை தான் அலரி மாளிகையை விட்டு வெளியேறப் போவதில்லை உறுதிபட ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்படும் என புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சினர் ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (04.11) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தினசரி சந்தைக்கு முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.கருணாதாச தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனவாத அரசு எமக்கு வேண்டாம், மக்களின் வரி எம்.பி.க்களை விலைக்கு வாங்கவா? ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் வேண்டாம், விவசாயி மகன் ஜனாதிபதி ஆனார் அன்று.. துரோகியானார் இன்று போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ்.குமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.லரிப் மற்றும் எம்.எஸ்.அப்துல்பாரி, ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள மறவன்குளம் பகுதியில் இன்று(04.11) காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மறவன்குளம் 6ஆம் ஒழுங்கையில் வசித்து வந்த விவசாயியான இராமசாமி ஜெயக்குமார் (வயது 50) எனும் 6 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு வீட்டில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் இன்று காலை மனைவி, கணவனை தேடிச் சென்றுள்ளார். அவர்கள் வசித்து வரும் காணியில் இரண்டு வீடுகள் உள்ள நிலையில் பாவனையற்ற வீட்டில் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 10 பதக்கங்கள் பெற்று சாதனை!!

கொழும்பு பாதுக்க பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பியரத்ன மத்திய கல்லூரியில் 27.10.2018 தொடக்கம் 31.10.2018 வரை தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 10 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலை குத்துச்சண்டை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் பாடசாலை 9 பதக்கங்களையும், விபுலானந்தா கல்லூரி ஒரு பதக்கத்தையும் கைப்பற்றி வவுனியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மூன்று தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், ஐந்து வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்
.
வவுனியா குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான எம்.எம்.சுரங்க மற்றும் எம்.நிக்சன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 12 பேர் பங்குபற்றிய இந்நிகழ்வில் 10 பேர் பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதக்கங்களை பெற்றுக்கொண்ட மாணவர் விபரம்

பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் பாடசாலை
S. ஜானுப்ரியா – தங்கப் பதக்கம் – 30-32Kg
U. கீர்த்தனா – தங்கப் பதக்கம் – 44-46 Kg
N. லக்ஸிகா – தங்கப் பதக்கம் – 63-70 Kg
K. சிலோஜனா – வெள்ளிப் பதக்கம்- 42-44Kg
T. சதுர்ஷினி – வெள்ளிப் பதக்கம் – 48-50 Kg
K. கமலினி – வெண்கலப் பதக்கம் – 38-40Kg
K. தேனுஜா – வெண்கலப் பதக்கம் – 46-48Kg
L. கஜேந்தினி – வெண்கலப் பதக்கம் – 40-42Kg
V. கிஷாலினி – வெண்கலப் பதக்கம் – 54-56Kg
தேசிய ரீதியில் சிறந்த பெண் போட்டியாளர் K.சிலோஜனா

வவுனியா விபுலானந்தா கல்லூரி
M.ஷானுஜன் – வெண்கலப் பதக்கம் – 46-48Kg

வவுனியாவில் புகையிரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் பரிதாபமாகப் பலி!!

வவுனியாவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஓருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (03.11) மாலை ஓமந்தைக்கும் தாண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த விஜயசீலன் கிறிஸ்ரிதீபன் என்ற 28 வயதுடைய இளைஞன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி ரூபா நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன் நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தார்.

இது சம்பந்தமாக அவருக்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். மானநஷ்ட வழக்கு போடுவதற்கான முயற்சியை நான் எனது வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வருகின்றேன்.

அந்தவகையிலேயே 150 கோடி நஷ்டஈட்டை அவரிடம் கோருவதற்காக நிச்சயமாக நான் நீதிமன்றம் செய்வேன். நீதிமன்றத்திலேயே அவர் அதனை நிரூபிக்கட்டும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்சவை பொருத்தமட்டில் இன்று அவர் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியவர். ஐ.நா தீர்மானத்தில் அவருடைய பெயரும் இருக்கிறது.

எங்களுடைய மக்கள் அவர் மீண்டும் ஆட்சியை பெறக்கூடாது என்பதில் மிகவும் ஆளுமையோடு செயற்பட்டு புதிய ஜனாதிபதியை கொண்டு வந்திருந்தார்கள். அந்த புதிய ஜனாதிபதி கூட தற்போது மாறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்.

சமஷ்டி முறையை கொடுக்க முடியாது. வடக்கு கிழக்கை இணைக்க முடியாது. அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் தனது இறப்புக்குப் பிறகு தான் அதை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட அவர் இவ்வாறு சொல்லியிருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் நடுநிலை வகித்தாலும் வாக்களித்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சி அமைப்பதற்கான ஒரு செயலை செய்து எங்களுடைய அழிக்கப்பட்ட மக்களுடைய மற்றும் உரிமைக்காக போராடுகின்ற எங்களுடைய மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்.

அந்த வகையில் இதுவரைக்கும் யாராவது என்மீது விரலை நீட்டி நான் மகிந்த ராஜபக்சவிடமோ ஜனாதிபதியிடமோ ரணில் விக்கிரமசிங்கவிடமோ பணத்தை பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அதனைவிடுத்து வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப கூடாது. அந்த வகையிலே மனசாட்சிக்கும் மக்களுக்கும் என்னைப் பொறுத்தமட்டில் நான் செயலாற்றி வருகிறேன்.

இந்த விடயத்திலே அரசாங்கத்திற்கு சோரம் போகின்ற என்னுடைய செயற்பாடு ஒரு போதும் இருந்ததில்லை.

இந்தவகையிலே சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு நிச்சயமாக தொடர்வேன். அந்த நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் நான் மஹிந்த ராஜபக்சவிடம் 150 கோடி வேண்டியதாக தெரிவித்ததை.

கூட்டமைப்பை பொறுத்த வரையும் யாரும் அரசாங்கத்திற்கு சோரம் போகவில்லை. வியாழேந்திரன் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். அவருடைய சுயநலம் காரணமாக அவர் செயல்பட்டிருக்கிறார்.

இந்த விடயத்திலே எங்களைப் பொறுத்தவரைக்கும் மஹிந்த வந்தால் என்ன ரணில் தான் இருந்தாலும் என்ன என்பதை விட ஜனநாயகம் மறுக்கப்பட்டு வருகின்றது. அதனை காப்பதற்கு நாங்கள் செயல்பட்டாக வேண்டும்.

இன்று ஜனாதிபதி தவறான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அந்த வகையில் வியாழேந்திரன் அதனை அனுபவிப்பார். ஏனெனில் பதவி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருக்கப் போகின்றது.

இன்று இருக்கின்ற நிலவரப்படி பார்க்கின்றபோது ஜனநாயக முறையை தவறாக பயன்படுத்தியதாக அதற்கு எதிராக செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் வியாழேந்திரன் கிழக்கு மாகாண மக்களுக்கு துரோகமான செயலை செய்திருக்கிறார். கட்சி அவருக்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் அவர் செயற்பட்டது மிகவும் தவறானது மிக ஆக்ரோசமாக பேசிய ஒரு நபர் இன்று அந்த மக்களை ஏமாற்றியிருக்கின்றார்.

எனவே அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவர இருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையும் இனி வரும் கட்சி மாறி செல்லமாட்டார்கள். வதந்தியை பரப்புபவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் யாரும் மகிந்த ராஜபக்சவின் அணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வியாழேந்திரனை தவிர எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வதந்தியை பரப்புவது அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே அமையும் என மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இரண்டரை லட்சம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (03.11.2018) மதியம் 2 மணியளவில் இரண்டரை லட்சம் போலி நாணயத்தாள்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த அவர்களின் தலமையில் இடம்பெற்ற திடீர் நடவடிக்கையின் போது 50 ஜயாயிரம் போலி நாணயத்தாள்களை (இரண்டரை லட்சம் ரூபாய்) வைத்திருந்த புத்தளம் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த 50 ஐந்தாயிரம் நாணயத்தாள்களும் ஒரே இலக்கங்களுடன் காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாணைகளை தற்போது முன்னெடுத்துள்ளதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இலக்கத்தினையுடைய 94687245 ஐந்தாயிரம் நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.