வங்கக் கடலில் மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
எதிர்வரும் 23ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளியாக உருமாற்றம் அடையுமா? என்பது பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாதுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இதேவேளை, அந்தமான் மற்றும் வங்கக் கடலில் எதிர்வரும் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையமும் உறுதி செய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு நிலையம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை எதிர்வு கூறலில், தெரிவித்துள்ளதாவது,
“வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் எதிர்வரும் 23ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும். மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதன் தாக்கம் இலங்கைக்கு ஏற்படக்கூடியதாக இருக்குமா? என்பது பற்றி தற்போது கூற முடியாதுள்ளதுடன் ஏற்படப் போகும் தாழமுக்கம் இந்தியாவின் மேற்பகுதியூடாக நகர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது.
வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவகுமார் அனோசன் என்ற 14 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மூன்றுமுறிப்பு குளத்திற்கு சென்ற போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமானார்.
கூக்குரல் கேட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்தவர்களால் காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. குளத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
”எனது கணவர் அம்மாவைக் கொலை செய்ததுடன் எனது இரண்டு கைகளையும் வெட்டினார். உதவியற்ற நிலையில் இருக்கும் எனக்கு பொலிஸார் நியாயமான தீர்வை வழங்கவில்லை” என தெரிவித்து நீதி கோரி ஜனாதிபதிக்கு பெண்ணொருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அனுராதபுரம் அனுகட்டியாவ வீதியில் பரஸ்சன்கஸ்வாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான டி.ஆர். எம் எஸ் நிசன்சலா என்ற பெண்ணொருவரே இவ்வாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2014 ம் ஆண்டு எனது கணவர் குடித்துவிட்டு என் அம்மாவை கொலை செய்து, என் கைகளை வெட்டிய பின்னர், நாங்கள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டோம். என் சகோதரி தான் என்னை கவனித்துகொண்டார். அதன்பின்னர் கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நேரத்தில் எங்களிடம் இருந்த பொருட்களை விற்று வருமானத்திற்காக முச்சக்கர வண்டியொன்றை வாங்கி சிறிய வியாபாரத்தை மேற்கொண்டோம்.
இந்த நிலையில், கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீண்டும் குடித்துக்கொண்டு எங்களைக் கொலை செய்து விடுவார் என்ற பயத்தில் மறைந்து வாழ்ந்து வந்தோம்.
ஒரு நாள் கணவர் என் சகோதரியின் கழுத்தில் கத்தியால் வெட்டினார். சகோதரி கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த சம்பவத்தின் பிறகு கணவர் தற்கொலை செய்துகொண்டார் என அப்பெண் தெரிவித்துள்ளார்.
அம்பாறை – சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பூஜையில் பிள்ளையாருக்கு கும்பம் வைக்கவென முடிசூட்டிய தேங்காயில் பிள்ளையாரின் கண்கள் தெரிந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வாணி விழாவுக்காக வீரமுனை ஆலயகுரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் கும்பம் வைக்க தேங்காயை முடிசூட்டிய வேளையில் இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.
முடிசூட்டிய தேங்காயின் அருகருகாக பிள்ளையாரின் கண்கள் இருந்தன. உடனே குருக்கள் குங்கமத்திலகம் இட்டுக் காட்டினார்.
இதன் போது குருக்கள் தெரிவிக்கையில்,
சாதாரண தேங்காயில் மூன்று கண்கள் அமைந்திருக்கும். ஆனால் இத்தேங்காயில் காணப்படும் இரு கண்களும் அருகருகாக அமைந்துள்ளதோடு விநாயகரின் கண்கள் வடிவிலே அமையப்பெற்றிருப்பது அபூர்வமாகும் என்றார்.
வவுனியா நகரசபையின் அனுமதியின்றி வவுனியாவில் பல்வேறு இடங்களில் சர்கார் திரைப்படத்திற்கான முற்பதிவு டிக்கட்டுக்கள் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. டிக்கட்டுகளின் பின்புறத்தில் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் வவுனியா எனவும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வவுனியா விஜய் நற்பணி மன்றத்தின் தலைவரை தொடர்பு கொண்டு வினவியபோது,
எமது சங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே நாங்கள் முற்பதிவு டிக்கட் விற்பனை செய்ய முடிவேடுத்துள்ளோம் .
முற்பதிவு டிக்கட்க்கு நகரசபைக்கு வரி செலுத்த தேவையில்லை. நாங்கள் விற்பனை செய்யும் டிக்கட்டுகளை வசந்தி திரையரங்குச் செல்லும்போது வழங்கினால் அங்கு வவுனியா நகரசபைக்கு வரி செலுத்தப்பட்ட (டிக்கட்டின் பின்பகுதியில் நகரசபையின் சின்னம் பொறிக்கப்பட்ட) டிக்கட் வழங்கப்படுமென தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமனை தொடர்புகொண்டு கேட்டபோது,
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் எந்தவொரு டிக்கட் விற்பனை செய்வதாகவிருந்தாலும் வவுனியா நகரசபைக்கு வரி செலுத்தப்பட்டு நகரசபையின் சின்னம் டிக்கட்டின் பின்பகுதியில் பொறிக்கப்பட வேண்டும் (முற்பதிவு டிக்கட் என்றாலும் வரி செலுத்துதல் வேண்டும்)
மற்றும் வவுனியா வசந்தி திரையரங்கிற்கு முன்பாக அமைந்துள்ள சர்கார் திரைப்படத்திற்கான பதாதைகளுக்கும் எவ்வித கட்டணங்களும் நகரசபைக்கு செலுத்தப்படவில்லை.
இவ் விடயம் தொடர்பாக எனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாடுகள் தொடர்பாக விரைவாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் இன்று (19.10.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து இரண்டாம் குறுக்குத்தெரு வீதியூடாக பயணித்த வான் மீது நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகே நாற்சந்தியில் சூசைப்பிள்ளையார் குளம் வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாளது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தினை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் வேலூரில் மகன் இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
வேலூரின் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திருவேங்கடம்- பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர், மூத்த மகனான நிக்கேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.
இதனால் சோகத்தில் இருந்துள்ளனர், இந்நிலையில் நிக்கேஷின் பிறந்தநாளன்று முதியோர் இல்லம் சென்று சாப்பாடு வழங்கிவிட்டு வந்த தம்பதியினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார். இப்பெண் ரெபானா பாத்திமா என்பதும், Kiss Of Love பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக இறங்கியவர் என்பதும் தெரியவந்துள்து.
ஏற்கனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், ஆர்எஸ்எஸ் என பல கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவரின் செயல் மேலும் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.
கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி முன்வைத்தார்.
இதே போல சிந்துஜா ராஜாராம் என்ற பெண்ணும் வைரமுத்து தன்னிடம் தவறாக பேசியதாக கூறினார். இது போல சிலர் வைரமுத்து குறித்து பேசினார்கள். இதற்கு பதிலளித்த வைரமுத்து, சின்மயி புகாரில் உண்மையிருந்தால் அவர் வழக்கு தொடரட்டும் என கூறினார்.
இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையில் வைரமுத்து குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என கூறியுள்ளார்.
சினிமாவில் வந்துவிட்டால் பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும் என பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இங்கு, கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. ஒரு நடிகை சினிமாவில் வரவேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. சின்மயிக்கு தற்போது பாடல் வாய்ப்பு இல்லை. அவரது மார்க்கெட் இறங்கிவிட்டது. அதனால்தான் அவ்வாறு இப்படி செய்கிறார். அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை.
வெளிநாட்டிற்கு போனேன் என்கிறார், அங்கு அது நடந்தது என்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு நடிப்பு என்று தோன்றுகிறது.
நான் சினிமாக்காரன் என்பதால் இதுகுறித்து தொடர்ந்து பேசவிரும்பவில்லை. சினிமாவில் பாலியல் தொந்தரவு என்பது பொதுவாக நடக்கும் ஒன்று. ஆனால், பல நடிகைகள் இதனை வெளியில் சொல்லமாட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்த 19 வயது இளைஞர் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அகுலோ சாம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், காதலுக்கு வயது ஒரு தடையில்லை. 19 வயதான இளைஞர் 39 வயதான பெண்ணை திருமணம் செய்துள்ளார். காதல் அழகானது என பதிவிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்களில் மணமகன் அரேபிய ஷேக் போன்ற உடையில் உள்ளார், மணமகளோ பிங்க் நிற உடையில் ஜொலிக்கிறார்.
இந்த தம்பதிகளின் பெயர் விபரம் தெரியாத நிலையில் அவர்களுக்கு எங்கு மற்றும் எப்போது திருமணம் நடைபெற்றது என்ற விபரமும் வெளியாகவில்லை.
வவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா காமினி வித்தியாலயத்தில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது வலயமட்டத்தில் இடம்பெற்ற தமிழ் தினப் போட்டி மற்றும் சிங்கள தினப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், தமிழ், சிங்கள கலாசாரத்தை வெளிப்படுத்தும் மாணவர்களின் பல்துறைசார் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா பொது வைத்தியசாலை சுகாதாரத்துறை தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இன்று மதியம் 12 மணியிலிருந்து 1மணிவரையான மதிய நேர இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வைத்தியசாலையின் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கும்போது,
நிலுவையிலுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் உடனே வழங்குமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிகின்ற அனைத்து சுகாதார சேவைகள் பணியாளர்கள் இணைந்து ஒரு எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
எங்களுடைய உணவு இடைவேளையின் போது நோயாளர்களின் மருத்துவத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் இன்றி இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.
கடந்த மூன்று வருடங்களாக வருட இறுதியின்போது எங்களுடைய மேலதிக நேரக்கொடுப்பனவுகளும் ஏனைய கொடுப்பனவுகளும் சிலவேளை இடை நிறுத்தப்படுகின்ற ஒரு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மாகாணசபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாது என்பதை ஒரு காரணமாக வைத்து இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. வடமாகாணத்தில் மட்டும் தான் இவ்வாறான பிரச்சினைகள் நிலவுகின்றது.
ஏனைய மாகாணங்களில் பெரும்பாலும் கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் இந்தப்பிரச்சினைகள் வருகின்றபோதும் இது வராமல் தடுப்பதற்கான எவ்வித பொறிமுறைகளும் இதுவரைக்கும் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே முன்கூட்டியே திட்டமிடுகின்றபோது இதனைத்தடுத்திருக்க முடியும். மூன்றாவது வருடமும் இதனை நாங்கள் எதிர்கொள்கின்றபோதும் இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் வரக்கூடாது அதற்குரிய முன்கூட்டி திட்டமிடும் நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையிலுள்ள அனைத்துக்
கொடுப்பனவுகளும் உடனே வழங்கவேண்டும் என்று கோரியும் இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.
வடமாகாணத்தில் வைத்தியர்களுக்கு வைத்திய நிபுனர்களுக்கும் பாரிய பற்றாக்குறை ஒன்று நிலவி வருகின்றது. இப்பகுதிக்கு எவரும் கடமைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே அப்பிரச்சினை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மேலும் மேலும் தீவிரமடையும்.
இதனைக்கருத்திற்கொண்டு உடனடியாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் எதிர்காலத்தில் எங்களுடைய கொடுப்பனவுகளை கிரமமின்றி வழங்கி வைத்தியர்கள், வைத்திய தாதிகள் மருந்தகர்கள், ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள், ஏனைய அனைத்து சுகாதார சேவைகள் தொழிற்சங்கம் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
25ஆம் திகதிக்கு முன்னர் எமது கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்வுள்ளோம் என்பதை முன்கூட்டியே தெரிவித்து இதன் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு மன்னிப்பைக் கோருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போலியாக தயாரிக்கப்பட்ட தங்க நிற பந்து விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.உண்மையான தங்கம் என கூறி இந்த பந்தினை மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
களுத்துறை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் 450 போலி தங்கப் பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றினை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடி நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதணி வியாபாரம் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் வியாபாரியை கத்தியால் குத்தி, கழுத்தை நெறித்து கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மல்லவராச்சிகே ஜயதிஸ்ஸ மற்றும் பீ.எல்.பிரதீப்குமார ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நடந்துள்ளது.
கொழும்பு – வெலிகடை பகுதியை சேர்ந்த ராஜா ஆனந்த எதிரிசிங்க என்ற பாதணி வியாபாரியை கொலை செய்ததாக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, முறைப்பாட்டாளரின் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.