இலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

வீரர்களின் பயிற்சி நடவடிக்கையை இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் பார்வையிட்டுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக குறித்த இளைஞன் அதே இடத்தில் நின்று பயிற்சி நடவடிக்கையை பார்த்துள்ளார்.

இதனை அவதானித்த இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், குறித்த இளைஞனுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் ஜோ ரூட் தனது பாதணிகளை குறித்த இளைஞனுக்கு பரிசாக வழங்கிவிட்டு தான் வெறும் காலி நின்றுள்ளார்.

குறித்த இளைஞனுடன் ஜோ ரூட் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை துப்பரவு செய்யும் ஊழியர்களை உட்பட இங்கிலாந்து வீரர்கள்,“சர்” “மேடம்” என மரியாதையாக அழைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜென்டில்மென் வீரர்கள் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் மாத்திரமின்றி மனிதாபிமானத்திலும் சிறந்து காணப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் இடப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெற்றோர் : தம்பியின் படிப்புக்காக அக்கா எடுத்த மனதை உருக்கும் முடிவு!!

தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான சாமிநாதன் – மாரம்மாள் தம்பதியினருக்கு சிவரஞ்சனி என்ற மகளும், ஹரிபிரசாந்த் என்ற மகனும் உள்ளனர். மாரம்மாள் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகள் இருவரையும் சாமிநாதன் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.

சிவரஞ்சனி ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவில் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் சேர்ந்துள்ளார். ஹரிபிரசாந்த் தலமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சாமிநாதனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவரஞ்சனி படிப்பை விட்டுவிட்டு தனது தந்தையை கவனிப்பதற்காக வந்துவிட்டார்.

ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் சாமிநாதனும் இறந்துவிட்டார். இதனால் நிர்கதியான சிவரஞ்சனி, தம்பியின் படிப்பு தொடர வேண்டி தன் படிப்பை பாதியில் கைவிட்டு தற்போது 100 நாள் வேலைக்குச் செல்கிறார்.

வறுமையும் ஆதரவின்மையும் தனது ஆடிட்டர் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகக் கூறும் சிவரஞ்சனி, கல்விக்கோ அல்லது வேலைக்கோ அரசு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மகளின் சடலத்துடன் ஒரு வாரம் இருந்த தாயார் : திடுக்கிட வைக்கும் சம்பவம்!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்த மகள் உடலுடன் ஒரு வாரம் தாய் இருந்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சபிதா(21) என்பவர் நேற்று காலை அழுகிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். உடலை முத்தையாபுரம் பொலிசார் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சபிதா இறந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சபிதாவின் தந்தை ராஜமணி உடல்நிலை குறைவால் கடந்த 8 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.

பட்டதாரியான மகள் சபிதாவுடன் பத்மாவதி வசித்து வந்தார். கணவர் இறந்த வேதனையில் இருந்த அவர் மனநிலை பாதிக்கப்பட்டது.

அவ்வப்போது மருத்துவமனையில் காட்டி சிகிச்சை அளித்தபோதும் பத்மாவதி குணமடையவில்லை. அக்கம்பக்கத்தினரை எப்போதும் திட்டிக்கொண்டிருப்பாராம்.

இது மகள் சபிதாவிற்கு வருத்தத்தை தந்தது. தந்தையும் இறந்து விட்டார். தாய் நிலையும் சரியில்லை என்று அங்குள்ளவர்களிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார். இதற்கிடையில் இவர்கள் நிலையை அறிந்த உறவினர்கள் இவர்கள் வீட்டை அபகரிக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

இது சபிதாவிற்கு தெரியவந்ததும் தாயிடம் கூறியிருக்கிறார். நம்மை விட்டு அப்பாவும் போய்விட்டார். உன் நிலைமையும் இப்படி ஆகிவிட்டது. வீட்டையும் பிடுங்க பார்க்கிறார்கள். இந்த நரக வேதனையை எத்தனை நாட்கள்தான் தாங்குவது.

இனி நான் இருக்கமாட்டேன் என்று தாயின் கைகளை பிடித்து 10 நாட்களுக்கு முன் கதறியிருக்கிறார். சபிதா கதறி அழுதது வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்டுள்ளது. கடும் மள உளைச்சலுக்கு ஆளான சபிதா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மகள் இறந்த தகவலை வெளியே சென்று சொல்லும் அளவுக்கு தாயாரின் மன நிலை சரியில்லை என்பதால் அவர் மகளின் சடலத்துடனே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 3 அக்காக்களுடன் தூக்கில் தொங்கிய தம்பி : அதிர்ச்சி சம்பவம்!!

அரியானா மாநிலத்தில் 4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டில் 4 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் சூரஜ்குந்த் தானா பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தனித்தனி அறைகளில் 4 பேர் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் இறந்த 4 பேர் பற்றி மேற்கொண்ட விசாரணையில், மீனா (42), பீனா (40) ஜெயா (39) மற்றும் அவருடைய தம்பி பிரதீப் (37) என்பது தெரியவந்தது.

அவர்களில் யாருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் யாருடனும் அவர்கள் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்ததில்லை.

அவர்களின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். அவரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முன்னதாக தாயும் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அவர்கள் இறந்து 3 முதல் 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், நிதி பிரச்னை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பார்கள் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளை தலைகுனிய வைக்கும் நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்!!

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை யேமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள் உலக நாடுகளை கண்டிப்பாக தலைகுனிய வைக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபிய அரசால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் தொடங்கி, யேமன் நாடு உளநாட்டு போரால் சின்னாபின்னமாகி வருகிறது.

எத்தியோப்பியா, வங்காளம், சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் எதிர்கொண்ட கொடிய பஞ்சத்தைவிடவும் யேமன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக நாடுகள் முன்வந்தால் யேமன் நாட்டில் எஞ்சிய 12 முதல் 13 மில்லியன் மக்களை பட்டினியில் இருந்து காக்க முடியும். ஆனால் சவுதி அரேபியாவுக்கு பயந்தே எந்த வல்லரசு நாடுகளும் யேமன் விவகாரத்தில் தலையிட அஞ்சுவதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவை பகைத்துக் கொண்டால், நாளை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 400 டொலர் என அதிகரித்தாலும் வியப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஐக்கிய நாடுகள் மன்றமும் மனித உரிமை ஆர்வலர்களும் சவுதி அரேபியாவின் தொடர் வான்வழி தாக்குதலை கண்டித்து வருகின்றனர். யேமன் நாட்டின் ஹொடிடா மாகாணத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி 170 பேர் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 1,700 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருந்து 425,000 பேர் உயிர் பயத்தில் வெளியேறியதாகவும் யேமன் நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் மன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்டு மாதம் மட்டும் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு வாரத்தில் மட்டும் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரும்பாலான மக்கள் போதிய உணவு இன்றியும், தேவைக்கு குடிநீர் அருந்தாமலும் பரிதாபமான நிலையில் காட்சியளிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

போதிய ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 3 மாதங்கள் இதே நெருக்கடி நீடிக்கும் எனில் யேமனில் மிஞ்சியுள்ள 13 மில்லியன் மக்கள் பட்டினியால் சாக நேரிடும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவ வீரரின் கண்முன்னே மனைவி, மகளுக்கு நடந்த சோகம்!!

தேனியில் ராணுவ வீரரின் கண்முன்னர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பரிதாபமாக விபத்தில் பலியாகியிருக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கண்டலர்புரம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஏசுதாஸ் (54). இவருடைய மனைவி ஜூலியட்மெர்சி ஞானகுமாரி (44), மதுரையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் (13), தெஸ்கிமரியம் (10) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்றைக்கு முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஏசுதாஸ் தன்னுடைய குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

தேனி தேசிய நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே கிடந்த மணலில் இருசக்கர வாகனம் ஏறி நிலை தடுமாறியுள்ளது. இதில் ஏசுதாஸ், அவருடைய இளைய மகள் சாலையில் இடது பக்கத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

அதேசமயம் அவருடைய மனைவியும், மகள் ஜனட்ஸ்வீட்டி பிரின்சஸ் வலது புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது வேகமாக வந்த லொறி ஒன்று சாலையில் விழுந்து கிடந்த மனைவி, மகள் மீது ஏறி சென்றது. இதில் இருவரும் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, லொறியை ஒட்டி வந்த சேவுகம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (48) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெருந்தன்மை!!

மாதாந்தம் எனக்கு கிடைக்கும் 75,000 ரூபாய் பணத்தை ஒருமுறை மாத்திரமே பெற்றுக் கொண்டேன் என ஆர்ஜெண்டீனாவில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் சிறுமி பாரமி வசந்தி மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதுவே 3ஆவது இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.

சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய போதே குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, விளையாட்டு அமைச்சு எனது மாதாந்த தேவைகளுக்காக 75,000 ரூபாவை தருவதாக உறுதியளித்திருந்தது. ஆனால் அதை நான் ஒரு முறை மாத்திரமே பெற்றுக்கொண்டேன்.

எனது பெயரில் 1.5 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி வைப்பு செய்திருந்தார். நான் அந்த பணத்தின் வட்டியை பயன்படுத்தினேன். மற்றும் எனது பயிற்றுவிப்பாளர் அவருடைய பணத்தை பயன்படுத்தினார்” என சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கால் வன்முறையாக மாறிய மோதல் : மாணவியை கொடூரமாக தாக்கிய மாணவன்!!

கம்பளையில் பேஸ்புக் பாவனையால் ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்து வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாணவர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட மாணவன் மற்றும் மாணவி கம்பஹா நகரத்தில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் கல்வி கற்று வருகின்றனர்.

மாணவியின் தாயார் பேஸ்புக் பயன்படுத்தும் ஒருவராகும். தாயின் புகைப்படத்தை எடுத்த மாணவன் அம்மாவையா மகளையா திருமணம் செய்வதென வினவியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவி, அப்படி கேட்டு என்னை அசிங்கப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதன்போது மாணவன், மாணவியை தாக்கியுள்ளார்.

இதனால் அன்றைய தினம் இரவே மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பில் கம்பளை வைத்தியசாலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா செல்ல முற்பட்ட இளம் பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை!!

ஐரோப்பா செல்ல விசா பெற்றுத் தருவதாக பல பெண்களை ஏமாற்றிய குப்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இத்தாலிக்கு செல்வதற்காக விசா பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யும் கும்பல் ஒன்றை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹவெவ, தொடுவாவ பிரதேசத்தில் இளைஞன் ஒருவரினால் பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கும்பலில் இளைஞர்கள் 3 பேரும் இளம் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், பிங்கிரிய, நாத்தன்டிய மற்றும் குளியாப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாடகை அடிப்படையிலான மோட்டார் வாகனமும் அவர்களிடம் இருந்த போலி திருமண சான்றிதழ் மற்றும் போலி விசாக்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மஹவெவ, தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இத்தாலி விசா வழங்குவதாக கூறி பெண் ஒருவர் அவரை திருமணம் செய்துள்ளார். அதனுடன் அவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர்.

கொடுக்கல் வாங்கல்களின் முழுமையான பெறுமதி 8 லட்சம் ரூபாயாகும். இதற்காக தற்போது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தொடர்புப்பட்டுள்ளார்.

பின்னர் இந்த மோசடிக்கு தொடர்புடைய இன்னும் ஒருவரினால் பணம் வழங்கப்பட்ட இளைஞனுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. எனினும் அது போலி விசா என உறுதியாகியுள்ளது.

மேதிக பணமான 2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ள வந்த போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்த பெண்ணுடன், ஏமாற்றப்பட்ட இளைஞன் வெளிநாடு செல்ல எதிர்பார்த்த போதிலும் அந்த பெண் மோசடி கும்பலின் உறுப்பினர் என பின்னரே தெரியவந்துள்ளது.

கும்பலின் பிரதான சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு : வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாகரன் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கை 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த மருதங்கேணி தாளையடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குறித்த பெண் தொலைபேசி மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அவரை சந்திக்க வேண்டும் எனக்கூறி கொடிகாமத்திற்கு வரவழைத்துள்ளார். கொடிகாமம் வந்த அவரிடம் “உங்களுக்காக காத்திருந்து விட்டு இப்போது தான் கிளிநொச்சிக்கு வந்தேன், அங்கு வருமாறு” கூறியுள்ளார்.

அந்த பெண் கூறிய இடத்திற்கு குறித்த நபர் வந்துள்ளார். இதன் போது இரண்டு ஆண்கள் மூலம் குறித்த நபரை யாரும் இல்லாத இடத்தில் வைத்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம் என்பவற்றை அப்பெண் அபகரித்துச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபர், எல்லாவற்றையும் இழந்த நிலையில் கடைசியில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் விசாரணைகளை ஆரம்பித்த நெல்லியடி பொலிஸார் வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் அவருடன் சேர்த்து மேலும் ஒருவரையும் புதன் கிழமை கைது செய்திருந்தனர்.

இவர்களை வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதிவான் பெண்ணை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இந்த கூட்டுக் கொள்கைக்கு உடன்பட்ட வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன் குறித்த பெண்ணின் கணவனையும் கைது செய்ய நெல்லியடி பொலிஸாருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் : இளம் நடிகையின் அதிர்ச்சிப் பதிவு!!

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனுடன் நிபுணன் என்ற திரைப்படத்தின் கன்னட பதிப்பில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், அர்ஜூனுடன் விஸ்மயா திரைப்படத்தில் அவர் மனைவியாக நடித்தேன். அப்போது என்னை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சியில் என்னை வேண்டுமென்றே இறுக்கமாக கட்டிப் பிடித்தார்.

அவர் தவறாக தொடுகிறார் என்பதை நான் உணர்ந்தேன், ஆனால் அப்போது என்னை சுற்றி 50 பேர் இருந்ததால் செய்வதறியாது திகைத்தேன் என கூறியுள்ளார்.

உதவி செய்வதாக கூறி உறவினர் செய்த செயல் : தீயில் கருகி இறந்த இளம்பெண்.. திடுக்கிடும் பின்னணி!!

தமிழகத்தில் வீட்டில் டிவியை பழுது பார்க்கச் சென்ற உறவினர், பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் பிபிஷா (22). இவர் கடந்த 11-ஆம் திகதி தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான ராஜேஷ் என்பவரிடம் வீட்டில் டிவி பழுதாகி இருப்பதாகவும், மெக்கானிக்கை அழைத்து வரும்படியும் கூறினார்.

ஆனால் தானே டிவியை சரி செய்வதாக கூறி வீட்டுக்கு வந்த ராஜேஷ் திடீரென பிபிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பிபிஷா சத்தம் போட்டு அலறியதால் அங்கிருந்து ராஜேஷ் வெளியே சென்றுவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த அவர் பிபிஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன பிபிஷா தீக்குளித்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிபிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையில் ராஜேஷ் குறித்து பொலிஸ் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பிபிஷா உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ராஜேஷை கைது செய்யும்வரை பிபிஷாவின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதையடுத்து ராஜேசை கைது செய்யத் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பிபிஷாவின் சடலத்தை பெற்று சென்றனர்

ஒரே வீட்டில் 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் : கணவனால் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

ஈரோடு மாவட்டத்தில் விவாகரத்து கொடுக்க மறுத்த மனைவியை உருட்டு கட்டையால் கணவனும், மாமியாரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிவகிரி அருகே உள்ள காட்டூரை சேர்ந்த தமிழ்மணி (45) என்பவருக்கும், கொடுமுடி கருத்திபாளையத்தை சேர்ந்த ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

ஜோதிமணி மின்வாரியத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்து ஒரு ஆண்டு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் விவாகரத்து கேட்டு தமிழ்மணி மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் ஜோதிமணி விவாகரத்து கொடுக்க மறுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வார்த்தை மோதல் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த தமிழ்மணி, தன்னுடைய தாய் பழனியம்மாள் (65) மற்றும் நண்பன் லோகநாதனுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். தற்போது இந்த சமத்துவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மூவரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

60 பேரை பலிகொண்ட தசரா கொண்டாட்டம் : ராவணனாக நடித்தவரும் உயிரிழந்த சோகம்!!

அமிர்தசரஸ் விபத்தில் ராவணனாக மேடையில் நடித்த தல்விர் சிங்கும், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் உறவுகள், செல்போனில் இறந்தவர்களின் சடலங்களை தேடிய சம்பவம் பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

இவர்களில் தல்விர் சிங் என்பவரும் ஒருவர், எப்போதும் ராமராக வேடமிடுபவர் இந்த ஆண்டு நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ராவணனாக நடித்தார்.

இவர் பற்றி சகோதரர் பல்பிர் சிங் கூறுகையில், தொழில்முறையாக பட்டம் தயாரித்து வரும் தல்விர் சிங் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். எப்போதும் ராம்லீலாவில் பங்கேற்பார், ராமராக வேடமிடுபவர் இந்தாண்டு ராவணனாக வேடமிட்டார்.

நடித்து முடித்த பின்னர் ராவணனின் பொம்மை எரிவதை பார்ப்பதற்காக மக்களோடு இணைந்தார், அப்போதே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது என கண்ணீ்ர மல்க தெரிவித்துள்ளார்.

மூன்று இரவுகள் : 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்!!

டெல்லியில் 11 பேரின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு அருகில் செல்லக்கூட அப்பகுதி பொதுமக்கள் பயந்து வருகின்றனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையால் இறந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.

இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பிரேதபரிசோதனையின் முடிவில் தெரியவந்தது.

அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும் யாரும் செல்லக் கூடாது என்பது போன்ற பல புரளிகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடு தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புரளிகள் உண்மையில்லை என்பதை நிரூபிக்க இறந்த நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் சிங் தன் குடும்பத்தாருடன் புராரியில் உள்ள இல்லத்துக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கியுள்ளார்.

இது பற்றி கூறிய தினேஷ், நான் என் மனைவியுடன் மூன்று இரவுகள் அந்த வீட்டில் இருந்தேன். நாங்கள் இருந்த இந்த நாள்களில் அந்த வீட்டில் எந்த பயமும் உணரவில்லை. ஆனால், ஓர் அமைதியான சூழல் மட்டும் இருந்தது. அங்குள்ள பொருள்கள் இறந்தவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.

அடுத்த வருடம் என் மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்தவுடன் அவன் இங்கு வந்து தங்கவுள்ளான். அந்த வீட்டில் எங்களின் குடும்பத்தாரின் நினைவுகள் மட்டுமே உள்ளது பயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ரயில் மோதி விபத்து : 60க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலி!!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே ரயில் மோதிய விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது.

பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27ம் ,இலக்க ரயில்வே கேட்டின் தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

இந்த கோர விபத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.