காதலிகளிடம் புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து ஆறு மில்லியன் ரூபா கப்பம் பெற முயற்சித்த நிலையில் பாடசாலை மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாவையும், அதே பகுதியை சேர்ந்த மற்றுமொருவரிடம் 10 இலட்சம் ரூபாவையும் கப்பமாக பெற முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களான, மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை சிறுவர் தடுப்புக்காவலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தின் பல்லெகம, மொரகெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கப்பம் கேட்டு அச்சுறுத்திய தொலைபேசி இலக்கங்களை, தொழிநுட்ப உதவியின் மூலம் இனங்கண்டு மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, மறைந்திருந்த இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் இருவரும் பல இளம் யுவதிகளுடன் காதலில் ஈடுபட்டுள்ளதுடன், அது தொடர்பான புகைப்படங்களை காண்பித்து அவர்களையும் அச்சுறுத்தி கப்பம் கோர முயற்சித்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார்.
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார்.
இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் 25 கிலோ கிராம் நிறையை கொண்டுள்ளது.
மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் ரொக்கட் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தயாரிப்பதற்கான உதவியை தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுபதென்றால் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாக கிடைத்துள்ளது.
அதற்கமைய நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிஹான் செலவிட்டுள்ளார்.
அதன் முதலாவது பயணத்திற்கு 9 இலட்சம் ரூபாய் செலவாகும் எனவும், அந்த செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள அண்டை நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனது திறமையின் மூலம் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி தமிழ் இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வினோத் என்ற தமிழ் இளைஞனின் கலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. அவர் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நாணயத் தாள்களை 3D வடிவில் வரைந்து அசத்தியுள்ளார்.
கலர் பென்சில்களை பயன்படுத்தி தத்துரூபமான ஓவியங்களை வரைந்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் செலவிட்ட நேரம் 52 மணித்தியாலங்களாகும்.
குறித்த ஓவியங்களை பார்ப்பதற்கு உண்மையான காட்சி ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளதனை போன்று உள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.
இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ். குடாநாட்டில் ஆவா குழுவின் செயற்பாடு காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நவீன ரக ஆதயுங்கள் ஆவா குழு எழுச்சி பெரும் பெரும் ஆபத்தான விடயம் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா நகரப்பள்ளிவாசலில் இன்று(16.10) காலை 10மணியளவில் இலங்கை இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு விஷேட சமய வழிபாடு இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர ஜூம்மாப்பள்ளியின் பிரதான மௌலவி அல் ஹபீர் அமீரின் ஆலோசனைக்கு அமைவாக நிர்வாக சபை மற்றும் பிரதேச முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடனும் வன்னி எஸ்.எப்.கொமாண்டர் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் ஜூம்மாப்பள்ளியில் விஷேட வழிபாடு இடம்பெற்றது.
இவ் விஷேட பிரார்த்தனையின்போது 59 இராணுவப்படையணியும் 5 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு பாதுகாப்புப்படை தலைமையகம் வன்னிக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப்படை தலைமையகம் வன்னி, கட்டளை தலைமையகம், இன்பே வடமத்திய படைப்பிரிவு தலைமையகம், மற்றும் படைகளின் கொடிகளுக்கும் நகரப்பள்ளிவாசலில் இடம்பெற்ற விஷேட வழிபாடுகளில் ஆசீர்வாமும் இடம்பெற்றது.
புத்தளம் – ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை பணியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாசமான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
குறித்த நபர் 80 அடி உயரமான நீர் தாங்கியின் மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஆராச்சிகட்டுவ பிரதேசசபையில் 4 வருடங்களாக பணியாளராக சேவைபுரிந்த இவர் தன்னை பணியிலிருந்து நீக்கிய காரணத்தினால் சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.
ஆர்க சுனில் சாந்த என்பவரே இவ்வாறு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆராச்சிகட்டுவ பொலிஸ் அத்தியட்சகர் அநுராத ஹேரத் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளார்.
இதன்போது, பிரதேசசபை செயலாளருக்கும் தமக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே தம்மை வேலையில் இருந்து நீக்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதி என்பது அனைவருக்கும் சமன் எனவும், வேலை இல்லாததால் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தான் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் தனக்கு நிரந்தர தொழில் எதுவும் இல்லை எனவும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாரும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆராச்சிகட்டுவ பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற விசாணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தபெண் தனது முறைப்பாட்டில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகனே மூத்தவர். அவர் வேலை செய்கிறார். மகள் இளையவள். அவள் க.பொ.த சாதாரண தரம் படிக்கிறாள். எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
என் மகளும் நானும் அன்று காலை வீட்டில் இருந்தோம். நான் எனது அறையில் தூங்கினேன். என் மகள் அவளுடைய அறையில் இருந்தாள்.
காலையில் அறையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென இரண்டு இளைஞர்கள் அறையில் நுழைந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுடன் அதனை தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.
அதன்பின்னர், என்னுடைய தங்க நகைகளை எடுத்துக்கொண்டு யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் என்று அச்சுறுத்தி சென்றனர். உடனே எனது மகளை நினைத்து பயத்துடன் அவளது அறைக்குச்சென்று அதைப் பற்றி கேட்டேன்.
அவர்கள் அறைக்கு வந்தார்கள், ஆனால் துஷ்பிரயோகம் செய்யவில்லை என மகள் பதிலளித்தார் என அதில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தாயின் முறைப்பாட்டின் படி, அவரது மகள் மீது பொலிஸாரின் சந்தேகம் திரும்பியது. பொலிஸார் அப்பெண்ணின் மகளிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
முதலில் அவரது கைத்தொலைபேசியைத் தருமாறு பொலிஸார் கேட்டதும், தான் தொலைபேசி பாவிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவரது செயற்பாடுகளில் சந்தேகம் வலுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் விசாரணைகளை மேற்கொண்டதில் அவள் தொலைபேசி பாவிப்தைக் கண்டறிந்துள்ளனர்..
அதன் பின்னர் அந்த சிறுமியும் தொலைபேசி வைத்திருப்பதை ஒப்புக்காண்டுள்ளார்.
அவரது தொலைபேசியை சோதனை போது, அவர் தொடர்ச்சியாக உரையாடிய தொலைபேசி இலக்கம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
அவர் நீர்கொழும்பைச் சேர்ந்த இளைஞடன் தொடர்ச்சியாக உரையாடியுள்ளார். பேஸ்புக் ஊடாக குறித்த இளைஞன் நட்பாகி காலப்போக்கில் இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
நெருக்கம் அதிகமானதில் குறித்த இளைஞன் தனது காதலியிடமிருந்து நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார்.
காதலன் மீது பைத்தியமாக இருந்த அந்த சிறுமி அந்த கோரிக்கையைப் பற்றி யோசிக்காமல் விரைவில், ‘Viber’ மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை குறித்த இளைஞனுக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் அந்த இளைஞன் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எனினும் அவள் பணம் எதுவும் இளைஞனுக்கு கொடுக்கவில்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், அவள் இளைஞனுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்று பொலிஸார் சந்தேம் வெளியிட்டனர். தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த படியால் அந்த இளைஞனை விட்டு விலக நினைத்துள்ளார்.
எனினும் தன்னை நிராகரிக்க நினைத்த காதலிக்கு நல்ல பாடம் கற்பிக்கவெண்டுமென தன்னிடமிருந்த துரும்பை பாவிக்க தொடங்கியுள்ளார் அந்த இளைஞன்.
தன்னிடமிருந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றவுள்ளதாக மிரட்டியுள்ளான். அதன் பின்னர் அவளால் ஒன்றும் செய்ய முடியால் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டமென கோரியுள்ளார்.
எனினும் மீண்டும் குறித்த இளைஞன் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளான்.
அவன் கேட்ட அளவு பணம் தன்னிடம் இல்லை எனதெரிவித்தபோது, உனது அம்மாவின் தங்க நகைகளை தருமாறு கேட்டு மிரட்டியுள்ளான்.
உதவியற்ற நிலையில் குறித்த சிறுமி இறுதியாக, தன் வீட்டுக்கு வந்து என் தாயின் தங்க நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் தன்னுடைய அண்ணா வீட்டில் இல்லாத நேரம் வருமாறு கூறியுள்ளார். அதன்படியே இந்த சம்பவம் கடந்த 12ம் திகதி அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்தஇ ளைஞன் தனது இரண்டு நண்பர்களையும் அவளுடைய வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அந்த இளைஞர்களும் , அவளுடைய தாயைத் துஸ்பிரயோகம் செய்ததுடன், தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் பொலிஸார், சிறுமியின் காதலனான அசங்க என்பவரை கைது செய்தனர்.
தங்க நகைகளை மட்டுமே எடுத்து வருமாறு தெரிவித்தேன். அம்மாவையோ, மகளையோ துஸ்பிரயோகம் செய்யுமாறு கூறவில்லை என சந்தேக நபரான அசங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த அந்த இளைஞன் உண்மையை மறைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மும்பையில் மொடல் அழகியை கொலை செய்து சூட் கேசில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மொடல் அழகி மான்ஸி தீக்ஸித் (20). இவர் மும்பையில் தங்கி மொடலிங் செய்து வருகிறார்.
சையத் முசம்மில் என்ற 19 வயது இளைஞர் நேற்று மதியம் மான்ஸிக்கு போன் செய்து தன்னுடைய பிளாட்டிற்கு வரவழைத்துள்ளார்.
அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சையத் உடனடியாக கத்தி ஒன்றினை எடுத்து மான்ஸியை குத்தி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அவருடைய உடலை சூட்கேசில் அடைத்த அவர், ஏர்போட்டிற்கு செல்ல கார் ஒன்றினை ஆன்லைனில் புக் செய்துள்ளார். காரில் ஏறிய சையத் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்த சொல்லிவிட்டு காருக்கு பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் கையில் வைத்திருந்த சூட்கேஸை காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டு, ரிக்சாவில் ஏறி வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் அதே வழியாக திரும்பிய கார் ஓட்டுநர், காட்டுக்குள் சூட்கேஸ் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்து போது உள்ளே ஒரு உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ஆன்லைனில் கார் புக் செய்த முகவரியை கொண்டு குற்றவாளி சையத்தை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின்னர் நாடகமாடிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்ததாக கூறி புதைக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே, மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குழந்தை கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் பொலிசில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று பொலிசார் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்விற்காக திருச்சிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மணிகண்டனின் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் குழந்தையை தானே கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர், மணிகண்டன் மீது கொலை மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவி நடத்திய வழிப்பறி நாடகம் மூலம் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கதிரவன் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் அனிதா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதுமண தம்பதி திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது பைக்கில் வந்த இருவர் கதிரவனை சரமாரியாக தாக்கிவிட்டு அனிதாவிடம் இருந்த 12 சவரன் தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து கதிரவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணையில், திருமணம் செய்த கணவனை பிடிக்காததால் முன்னாள் காதலனான ஆண்டனிஜெகன் மூலமாக கொள்ளை சம்பவம் என்ற போர்வையில் கணவரை கொலை செய்ய அனிதாவே திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அனிதாவையும், ஆண்டனிஜெகனையும் பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
வவுனியாவில் இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது. கடந்த சில நாட்களாக மழையுடனான கால நிலை நீடித்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பொது மக்களின் இயல்புவாழ்வு பாதிப்படைந்துள்ளது. தூர இடங்களிலிருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அண்மைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இன்று அதிகளவான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கைவிடப்பட்ட வயல் நிலங்களில் வயல் செய்கைகளை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். குளங்கள் மழை வெள்ளத்தினால் நிறைந்துள்ளன. இன்று காலை பூம்புகார் பகுதியிலுள்ள குளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. வெடிப்புக்குள்ளான குளத்தின் புனரமைப்பு இடம்பெற்றுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த தூத்துக்குடி மீனவர்கள் “சொந்தமா படகு இல்லாத காரணத்தினால் தான், நாங்களே மற்றவர்களின் படகுகளில் கூலிக்காக கடல் தொழிலுக்குப் போறோம். இந்த நிலையில 60 லட்சம் ரூபாய் அபராதமா? அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போவது? அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கண்ணீர் வடித்துள்ளனர்.
இதில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடல்பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அந்தோணி ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், வினோதன் மற்றும் பாக்கியம் ஆகிய 8 மீனவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, “எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உங்களைக் கைது செய்கிறோம்” எனக்கூறி, துப்பாக்கி முனையில் படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு, மீண்டும் கல்பிட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி வரை அதாவது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3ஆவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயதுச் சிறுமி, மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு இலங்கையின் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் டுவிட்டர் தளத்தில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹெல ஜயவர்தனவும் குறித்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் 1,33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பத்தில் வரலாற்றில் முதல் முறையாக 172 ரூபாவை கடந்தது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை 171.60 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 167.73 ரூபாயாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.93 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 10.8 ரூபாயில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அண்மைக்காலமாக ரூபாவின் பாரிய வீழ்ச்சியினால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் யுவதி ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் செம்மணி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியில் வந்த சிலரே இந்த கடத்தலை நடத்தியுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்தி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட வீதியூடாக சென்றுள்ளது.
மேலும், குறித்த முச்சக்கர வண்டியை துரத்திச் செல்லும் போது கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதியின் ஆடையை கழற்றி, துரத்திச் சென்ற ஒருவரின் முகத்தில் வீசி விட்டு சென்றுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.