வவுனியா மாளிகை கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா!!

வவுனியா மாளிகை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட அலைகல்லு போட்ட குளம் கிராமத்தில் முதியோர் சிறுவர் தின விழா இன்று (13) கிராம அலுவலர் நா.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

முயற்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.ச.பிரியதர்சினி பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் அதிதிகள் மற்றும் வயோதிபர்கள் மாலை அணிவித்து அலைகல்லு போட்ட குளம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

சிறுவர்களின் குழுப்பாடல், கிராமிய நடனங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றதுடன் நிகழ்வில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவருக்கும் முயற்சி அறக்கட்டளையின் நிறுவனர் கே.கே.சந்திரகுமாரினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதியோர்களை கௌரவித்து அவர்களுக்கான பரிசில்களை வவுனியா விஜியா பில்டர்ஸ் உரிமையாளர். கு.விஜயரத்தினத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அசிரியைக்கான பரிசில்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஆர்.ஏ.அமிலியா வழங்கி வைத்தார்.

நிகழ்வில் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அதிதிகளால் கௌரவம் வழங்கப்பட்டதை தொடர்ந்து சிறுவர்களுக்கான கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முயற்சி அறக்கட்டளையின் ஒரு கிராமத்திற்கு நூறு மரம் என்கிற செயற்திட்டத்தின் கீழ் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிறுவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். வாசன், மாளிகை கிராமத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுரேன், நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் க.ஜெயக்குமார், அலைகல்லு போட்டகுளம் வீரமாமுனிவர் வித்தியாலயத்தின் அதிபர் ச.சிவகணேசன் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.அ.பிரகாசினி, கிரம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்!!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் மோசடியான முறையில் ஏமாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டொராண்டோ பகுதியில் iPad ஒன்றை கொள்வனவு செய்த இலங்கை இளைஞனுக்கு களிமண் பெட்டியை வழங்கிய ஏமாற்றிய கடை ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Brampton பகுதியில் Walmart என்ற கடையில் சசிதரன் நடராஜன் என்ற இளைஞன் 1000 டொலர்களை செலவிட்டு iPad Pro ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அவர் தனது தாயாருக்கு பிறந்த நாள் பரிசு வழங்கும் நோக்கில் இதனை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

தனது பிறந்த நாள் அன்று காலை தாயார் தனது மகனுக்கு முன்னால் பரிசு பெட்டியை திறந்து பார்த்துள்ளார்.

எனினும் தங்களுக்கு அதிர்ச்சி ஒன்றே காத்திருந்ததாகவும், iPad க்கு சமமான நிறையில் களிமண் துண்டு ஒன்று iPad பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததாக என நடராஜன் தெரிவித்துள்ளார்.

“களி மண்ணை பார்த்த பின்னர், களி மண்ணுக்கு கீழ் ஏதாவது இருக்கும் என நினைத்தேன். எனினும் அங்கு ஒன்றுமே இல்லை. சாஜர் கூட அதில் இல்லை”

பிளாஸ்டிக் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில், iPadயை கொண்டு வந்ததாகவும், தாயின் பிறந்த நாளுக்கு பின்னர் அதனை திருப்பி கடையிலேயே கொடுத்து விட்டதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கடை உரிமையாளர் அவருக்கு பணத்தை அல்லது புதிய iPad ஒன்றை திருப்பி தரவில்லை என நடராஜா குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் நிறுவனம் அவ்வாறு செய்யாது, கடைக்கு வருபவர்களுக்கு சிறந்தததையே கொடுப்போம் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஒரு வழியாக போராடி தனது பணத்தை மீளபெற்ற நடராஜன் அந்த பணத்தில் மீண்டும் ஐபோன் நிறுவனத்திடம் iPad கொள்வனவு செய்து தனது தாய்க்கு பரிசளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

வவுனியாவில் பேரூந்துக்குள் கேரள கஞ்சா மீட்பு!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (14.10) காலை 5.45 மணியளவில் பேரூந்துக்குள்ளிருந்து கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கிணங்க வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் பையினுள் பொதிசெய்யப்பட்டிருந்த 9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் இது வரை கைது செய்யவில்லை

கேரள கஞ்சாவினை பேரூந்தில் வைத்த நபர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு தப்பிச்சென்ற வாகனம்!!

 

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக தரித்துநின்ற முச்சக்கரவண்டியை அவ்வீதி வழியாக வந்த பட்டாரக வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியில் இருந்த நான்குபேர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குருமன்காடு பகுதியில் உள்ள பந்தல்சேவைக்கு சொந்தமான பட்டாரக வாகனம் கற்பகபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பாக பயணம் செய்வதற்கு தயாராக தரித்து நின்றிருந்த முச்சக்கரவண்டியை மோதியதுடன் தப்பிச்சென்றுள்ளது.

எனினும் தப்பிச்சென்ற வாகனம் பள்ளத்தில் புதையுண்டதால் சாரதி
தப்பி ஓடியுள்ளார். இவ் விபத்தில் முற்சக்கரவண்டியில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்தை ஏற்படுத்திய பட்டாரக வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த சாரதி மது போதையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வவுனியா செட்டிகுளத்தில் பேரூந்து விபத்து : 8 பேர் காயம்!!

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேரூந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று (14.10) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் சென்ற மூன்று பேரூந்துகளில் ஒரு பேரூந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து செட்டிகுளம், பெரியகட்டு 40 ஆவது மைல்கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் குறித்த பேரூந்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் உடல் முழுதும் ரத்தத்துடன் ஓடிவந்த தாய் : அதிர்ச்சியடைந்த மகன்கள்!!

சென்னை பள்ளிக்கரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தாகிவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையாகியிருந்த கிருஷ்ணமூர்த்தி தினமும் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி மகாலட்சுமியிடம் சண்டையிட்டுள்ளார். இதனை ஏற்காத மகாலட்சுமி தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்றும் வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டில் சண்டையிட்டுள்ளார். மகாலட்சுமியும் அவரை திட்டிவிட்டு உறங்க சென்றுவிட்டார்.

ஆனால் ஆத்திரம் குறையாமல் இருந்த கிருஷ்ணமூர்த்தி நள்ளிரவில் மகாலட்சுமியை சாராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தம் வெளியேறியபடி உதவி கேட்டு மகாலட்சுமி ஓடிவந்துள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட மகன் திரிஷ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளான். இதில் அவனுடைய கைகளிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

வேகமாக விளக்கை போட்ட மற்றொரு மகன் குணால் தாய் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து உடனடியாக உறவினர்களின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மனைவியை கொலை செய்த கிருஷ்ணன் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர் கொடுத்த தொல்லை.. வாந்தி எடுத்து கதறினேன் : பிரபல தமிழ்ப் பாடகியின் பதிவு!!

பிரபல தமிழ் திரைப்பட பாடகி சுனிதா சாரதி இளம் வயதில் தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தற்போது பகிர்ந்துள்ளார். #Metoo என்ற டேக்கில் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறினார். இதே போல பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகி சுனிதா சாரதி தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும் போது என் அம்மாவின் உறவினர் வீட்டுக்கு வருவார். அவர் என்னை தவறான முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது சில மாதங்களுக்கு நடந்தது. அந்த நபருக்கும் ஒரு மகள் உள்ளார். இதிலிருந்தே நான் உறவினர்களை அதிகம் சந்திப்பதில்லை.

நான் திமிருபிடித்தவள் என அவர்கள் நினைப்பார்கள், அது கவலையில்லை. எனக்கு தொல்லை கொடுத்த நபரை என்றும் மன்னிக்க மாட்டேன்.

அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் என் தாயின் நண்பர் என்னை அழகாக இருப்பதாக கூறுவார். என்னை அவர் மடியில் அமரவைத்து கொண்டு முத்தம் கொடுக்க முயல்வார், அதை நான் வெறுத்தேன்.

ஒருநாள் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார், நான் உடனே கழிவறைக்கு சென்று அங்கிருந்த Dettol-ஐ குடித்துவிட்டேன்.
பின்னர் வாந்தி எடுத்துவிட்டு கதறி அழுதேன். இதன் பின்னர் சில ஆண்டுகள் அவரை சந்திக்க வேண்டியிருந்தது. கடந்தாண்டு அவர் இறந்துவிட்டார் என செய்தி வந்தது.

நான் வெறும் இரண்டு சம்பவங்களை தான் கூறியுள்ளேன். என் போல் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உண்மையை கூறுங்கள்.

சின்மயிக்கும் எனக்கும் மனக்கசப்பு இருக்கலாம், முன்பு போல நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை. ஆனால், அவருக்கு நடந்த விடயத்தை கேட்டவுடன் நொறுங்கி போய்விட்டேன்.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் ஆதரவாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தனி ஒரு ஆளாக நின்று திருமணத்தையே நிறுத்திய சிறுமி : ஆச்சர்ய சம்பவம்!!

மதுரையில் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தனி ஒரு ஆளாக 17 வயது சிறுமி தடுத்தி நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.மதுரை வடகரை பகுதியை சேர்ந்த 17 வாய்த்து சிறுமி தெப்பக்குளத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் வருகின்ற 21-ம் தேதி திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, தான் தொடர்ந்து படிக்க வேண்டும் எனவும் தற்போது திருமணம் வேண்டாம் எனவும் வீட்டில் கூறியுள்ளார். ஆனால் வருடைய வார்த்தைக்கு செவிமடுக்காத உறவினர்கள் தொடர்ந்து திருமணத்திற்கான வேலைகளை கவனித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமி நேற்றைய தினம் மதிச்சியம் காவல் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். உடனே இந்த தகவல் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், திருமணம் குறித்து விசாரித்த போது அதற்கான வேலைகள் நடந்து வருவதை உறுதி செய்தனர்.

மேலும் சிறுமிக்கு தற்போது திருமனம் நடந்தால் உறவினர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக ஒப்புக்கொண்ட உறவினர்கள், சிறுமிக்கு திருமண வயது பூர்த்தியடைந்தவுடனே திருமணம் செய்யப்படும் என எழுதி கொடுத்தனர்.

அதன் பின்னர், தனி ஒரு ஆளாக பொலிஸ் நிலையம் வரை சென்று திருமணத்தை நிறுத்திய சிறுமியையும் பாராட்டி சென்றனர்.

வைரமுத்து என் அப்பா…. அவரை அவமானப்படுத்தினால் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவேன் : சீமான்!!

வைரமுத்து – சின்மயி விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவை எனது தகப்பன் போன்று நினைக்கிறேன். அவரை ஒரு அடையாளமாக நான் கருதுகிறேன். அந்த அடையாளத்தை நீங்கள் அவமானப்படுத்தி, சிதைக்கவேண்டுமென்று நினைக்கும்போது, என்ன விலை கொடுத்தாவது நான் அதனை காப்பாற்ற நினைப்பேன்.

இது என்னுடைய கருத்து. இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது அவர் இதை கூறியிருந்தால் சரியாக இருந்திருக்கும். 15 ஆண்டுகள் கழித்து இதனை வெளியில் சொல்லியிருக்கிறார். அதுவும் Metoo என்ற எழுச்சி வந்திருப்பதால் இதனை சொல்லியிருக்கிறார்.

Metoo வராமல் இருந்தால் அவர் இதை சொல்லியிருக்கமாட்டார். இதில் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கிறது. வைரமுத்துவை அவமானப்படுத்தும் முயற்சி ஆகும்.

மத்திய அமைச்சர் அக்பர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் என்பதற்காக அவரை பதவி விலக சொல்கிறார்கள். ஏன், அக்பர் என்ற இஸ்லாமிய அமைச்சர் மட்டும் தான் குற்றவாளியா? மற்ற அமைச்சர் ராமரா?

கத்துவா சிறுமிக்கு நடந்த துயரம் குறித்து குரல் கொடுக்காத பாஜக, வைரமுத்து குறித்து பிரச்சனை வரும்போது நீங்கள் பேசுவது எங்களுக்கு பேசுவது சந்தேகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

அப்பாவிற்கு வட்ஸ் அப்பில் வந்த புகைப்படம் : காதலி கண்முன்னே காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

தமிழகத்தில் விசாரணைக்கு வந்த காதல் ஜோடியை 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஒசரவிளை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஓவியர் ஜெயபால். நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

அதே ஊரைச் சேர்ந்த ஸ்டாவினுக்கும், ஜெயபால் மகள் டிக் ஷோனாவுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் இரண்டு பேரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி ஜெயபால் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடற்கரைச் சாலையில் உள்ள கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற டிக் ஷோனா, நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

எங்கும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து ஜெயபாலின் வாட்ஸ் அப்பில் ஸ்டார்லினும், டிக் ஷோனாவும் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபால், காதல் ஜோடியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது காவல் துறையில் புகார் இருந்ததால் விசாரணைக்காக காதல் ஜோடி மற்றும் அவரது உறவினர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர்.

கார் கோவளம் அருகே வந்த போது, பின்பக்கமாக மூன்று காரில் வந்த 15-க்கும் மேற்பட்டவர்கள், காதல் ஜோடி வந்த காரின் முன்னும் பின்னும் இடித்ததால், டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார்.

அதன் பின் காரில் இருந்து இறங்கிய 15 பேர் கொண்ட கும்பல், காதல் ஜோடியை அடித்து உதைத்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த ஸ்டார்லினை டிக் ஷோனா கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும், ஸ்டார்லின் உறவினர்கள் சுரேஷ் (44), அருள் (58) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.

விரைந்து செயல்பட்ட அந்தக் கும்பல், டிக் ஷோனாவை மற்றொரு காரில் கடத்திச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், டிக் ஷோனாவின் அப்பா ஜெயபால், உறவினர்கள் செல்வம், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்திய தந்தை : தாய் எடுத்த விபரீத முடிவு!!

வேலூர் மாவட்டத்தில் மகளை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது கணவர் வற்புறுத்தியதால் விரக்தியில் தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்த கல்பனா (வயது 36), காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

இந்த தம்பதியினருக்கு 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கல்பனாவிற்கு, அதேபகுதியில் காவல்துறையில் பணியாற்றி வரும் குமரேசன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தன்னைவிட சிறிய வயது பையனாக இருந்தாலும் குமரேசனை திருமணம் செய்துகொண்டு கல்பனா தன்னுடைய வாழ்க்கையினை நடத்தி வந்துள்ளார். சென்னையில் இருந்து அடிக்கடி கல்பனாவின் வீட்டிற்கு சென்று வந்த குமரேஷ், 18 வயதான மஞ்சு மீது ஆசைப்பட்டுள்ளார்.

உடனே அவரை திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு கல்பனா மறுப்பு தெரிவித்து, இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என குமரேஷிடம் கூறியுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் சண்டை நடந்து வந்துள்ளது.

இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மஞ்சு, திறந்த நிலையில் வீடு இருப்பதை பார்த்து வேகமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். கல்பனா தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுத மஞ்சு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள மஞ்சு தன்னுடைய தாய் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த புகார் மனு மீது பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

திருமணம் ஆகாத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!!

தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (29). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேந்திரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து அவரது தந்தை பொலிசில் புகார் செய்தார். புகாரில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எனக்கு தெரியாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்டார்கள் : கதறும் மனைவி!!

கணவன், மனைவிக்குத் தெரியாமல் அவர்கள் சம்மதமின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யபட்டுள்ளதாக பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி அஷ்வினி. தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அஷ்வினி மீண்டும் கர்ப்பமானார்.

இதையடுத்து அவரை பிரசவத்துக்காக ராஜேஷ் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அன்று மாலையே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்கள் கழித்து செவிலியர்கள் அஸ்வினியை வேகமாக நடக்க வேண்டாம் உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்று கூறியதால் அஸ்வினி அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவமனை நிர்வாகத்தை அவர்கள் அணுகிய போது, அனுமதி பெற்று தான் செய்தோம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அஸ்வினி, குழந்தை பிறக்க அறுவை சிகிச்சைக்கு மட்டுமே தான் கையெழுத்து வாங்கினார்கள். குடும்ப கட்டுப்பாடு குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. நான் எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை என்றார்

இது குறித்து ராஜேஷ் கூறுகையில், இது குறித்து தலைமை மருத்துவரிடம் பேசிய போது அவர் விசாரித்தார். பின்னர் தவறு நடந்துவிட்டது கொஞ்சம் பொறுங்கள் என கூறினார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை மருத்துவமனையில் இருந்து என் மனைவியை அழைத்துச் செல்லப்போவதில்லை என கூறியுள்ளார்.

திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

சென்னையில் திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவருக்கும் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

எம்.பி.ஏ பட்டதாரியான கவாஸ்கி ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 4 மாத விடுமுறையில் இருந்த கவாஸ்கி நாளை ரே‌ஷன் கடை கண்காணிப்பாளர் பணியில் மீண்டும் சேருவதற்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

இந்நிலையில் கவாஸ்கி நேற்று வியாசர்பாடி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கவாஸ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை கோட்டைசாமி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர்.

அவர், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். சாவில் மர்மம் இருக்கிறது என்று பொலிசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்கியதால் பறிபோன தமிழ் இளைஞனின் உயிர்!!

ஹட்டன் புகையிரத நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

இதில், குறித்த இளைஞன் “பாபுல்” என்ற போதைப்பொருளை உட்கொண்டுள்ளதுடன், அந்த போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்குண்டமையினாலேயே உயிரிழந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கா ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஹட்டன் புகையிரத நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு, கொழும்பு – மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த சுப்பையா தர்மலிங்கம் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து குறித்த இளைஞனின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரே பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த இளைஞனுக்கு போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்குண்டமையினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்டவரும், திருமணம் முடித்து மட்டக்குளி பகுதியில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவர் புதன்கிழமை தலவாக்கலைக்கு வருகை தந்து மீண்டும் வீடு திரும்பிய போது ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் பாபுல் என்ற போதைப்பொருளை அதிகமாக பாவித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி எடுத்த அதிரடி முடிவு!!

இணையம் மூலம் மீன் விற்பனை செய்ய, கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றிய மாணவி ஹனன் ஹமீது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சூழல் காரணமாக கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வந்த கேரள மாணவி ஹனன், தற்போது ஆன்லைனில் மீன் விற்க முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர், உடல் நலம் இன்னும் முழுமை யாக குணமாகவில்லை. மீன்களை வாங்கி சுத்தம் செய்து, பிறகு இணையம் மூலம் அதை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். வியாபார போக்குவரத்துக்காக வாகனம் ஒன்றையும் வாங்க இருக்கிறேன். இந்த பிசினஸூக்காக டெக்னிக்கல் ஆலோசனையையும் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்ப னை செய்து வந்தார்.

இவரது இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த 3 ஆம் திகதி ஹனன் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் குணமாகி வரும் அவர், வீல் சேர் மூலம்தான் வீட்டுக்குள் சென்றுவருகிறார்.