குடிபோதையில் பெண் வைத்தியர் செய்த குழப்பம் : கொழும்பில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சை!!

கொழும்பு புறநகர் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன மாவத்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசேட பெண் வைத்தியர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் டிரான் காவிந்தியாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் குறித்த வைத்தியர் களுபோவில வைத்தியசாலையில் 11ஆம் அறையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு மத்தியில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எப்படியிருப்பினும் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு எவ்வித காயமும் இன்றி, சிறைச்சாலைக்கு செல்லாமல் வைத்தியசாலையில் அவர் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய போது வைத்தியர் குடிபோதையில் இருக்கவில்லை என களுபோவில வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அந்த அறிக்கை போலியானதெனவும், வைத்தியசாலையின் செயற்பாடு தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த பெண் வைத்தியர் ஆண் நண்பர்களுடன் இணைந்து கல்கிஸ்ஸ இரவு நேர விடுதியில் மது அருந்தியுள்ளார் என வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண் வைத்தியரின் செயற்பாடு தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதியும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பொறுப்பு வாய்ந்த கடமையில் இருக்கும் வைத்தியரின் செயற்பாடு விமர்சனத்திற்கு உரியது. எனினும் மாறுபட்ட மருத்துவ அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இது குறித்து உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது குழந்தை!!

இராஜாங்கனை – சோலேபுர பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று வயதான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பாட்டியுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன்பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளம்பெண்ணை அடித்தே கொன்ற கும்பல்… மரத்தில் கட்டித்தூக்கிய கொடூரம் : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த 15 வயது இளம்பெண்ணை 3 இளைஞர் சேர்ந்து அடித்து கொன்று மரத்தில் கட்டித்தூக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பாடசாலை மாணவியான சுவிதா யாதவ் தனது குடியிருப்புக்கு பாடசாலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 3 இளைஞர்கள் சேர்ந்த கும்பல் ஒன்று மாணவி சுவிதாவை வழிமறித்து பலாத்காரத்திற்கு முயன்றுள்ளது.

இதில் குறித்த மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் மாணவியை தாக்கியுள்ளனர். இதில் மாணவி சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

மாணவி மரணமடைந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள மரத்தில் அந்த இளைஞர்கள் மூவரும் சடலத்தை கட்டித்தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் குறித்த மாணவியின் சகோதரர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விரைந்துள்ளனர்.

பின்னர் கிராம மக்களின் உதவியுடன் தொடர்புடைய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மருத்துவ சோதனையில் மாணவி சுவிதா பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயாரின் கண்முன்னே 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் : பரிதவிக்கும் குடும்பம்!!

பிரித்தானியாவில் டோர்செட் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் தாயாரின் கண்முன்னே கடலலையில் சிக்கி 5 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோர்செட் பகுதியில் அமைந்துள்ள Durdle Door கடற்கரையில் சோபியா(32) மற்றும் சகோதரி ஜூலிட் உடன் 5 வயது சிறுமி Rose Carter மாலை நேரத்தை கழிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே திடீரென்று எழுந்த சக்தி வாய்ந்த அலை ஒன்று கடற்கரையில் நடந்து நின்ற சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது.

salisbury பகுதியை சேர்ந்த இந்த கார்ட்டர் குடும்பமானது சம்பவத்தன்று கடற்கரையில் நடக்க சென்றுள்ளனர். சோபியா கார்ட்டருடன் மகள் ஜூலியும், ரோசியும் கடற்கரையில் மிக அருகாமையில் இருந்த நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அலையில் சிக்கி தடுமாறி விழுந்த சோபியா சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றுள்ளார். ஆனால் 5 வயதேயான ரோஸ் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவத்தின்போது கடல் உக்கிரமாக இருந்தது எனவும், ஆனால் அது ஆபத்தானதாக மாறும் என கருதவே இல்லை என சோபியா பின்னர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடல் அலை தாக்கியதும் தடுமாறி விழுந்த தம்மை அங்கிருந்த நபர் ஒருவர் காப்பாற்றியதாகவும், சுதாரித்து எழுந்த தாம் அப்போது தமது மகள் கடலையில் சிக்குண்டு இழுத்துச் செல்வதை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்தவர்களை உதவி செய்ய கோரிய நிலையில் இளம்பெண் ஒருவர் சிறுமி ரோஸை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அடுத்த அலை ஒன்று அவரையும் தாக்கியதால், அவரால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே மீட்புக்குழுவினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் என சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு, முடிவில் சிறுமியின் சடலத்தை மீட்டு கரையில் சேர்த்துள்ளனர்.

உடற்கூறு சோதனையில் சிறுமி நீரில் மூழ்கியதாலையே மரணமடைந்துள்ளதாக தெரியவந்தது. உக்கிரமான அலைகளுக்கு நடுவே சிறுமியை காப்பாற்ற தனியாளாக கடலில் குதித்த Seviour என்ற இளம்பெண்ணை கார்ட்டர் குடும்பத்தினர் பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இறந்த தன் மகளுடன் சொர்க்கத்தில் வயலின் வாசித்த பிரபல இசையமைப்பாளர் : கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

மலையாள இசையமைப்பாளரும் சிறந்த வயலின் கலைஞருமான பாலபாஸ்கரின் உடல் வயலினுடன் புதைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி, திருச்சூர் வடக்குநாதர் கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு அதிகாலை 4:30 மணிக்கு வீடுதிரும்பும்போது, பள்ளிப்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் பாலபாஸ்கருக்கு பலத்த அடிபட்டு மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

மேலும் அந்த விபத்தின்போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மனைவி லட்சுமி அதிக காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார். பாலபாஸ்கரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரது உடலுடன் அவருக்கு மிகவும் பிடித்த வயலினும் சேர்த்து புதைக்கப்பட்டது. இது, பார்ப்போர் கண்களைக் கலங்கவைத்துவிட்டது.

பாலபாஸ்கர், இறந்த தன் மகளுடன் சொர்க்கத்தில் வயலின் வாசிப்பது மற்றும் வயலினில் இருக்கும் பாலபாஸ்கர் போன்ற மனதை உருக்கும் கார்ட்டூன் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடு வீதியில் கிடந்த காதலன், பதறி துடித்த காதலி : அடுத்து நடந்த சம்பவம்!!

பிலிப்பைன்சில் தனது காதலன் விபத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பதறித் துடித்து ஓடோடி வந்த காதலி கண்ணீர் விட்டுக் கதற, அதன் பின் நடந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வரும் Shiela Parayanon என்னும் அந்தப் பெண், நடு ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் தனது காதலனைக் கண்டதும் அலறித் துடித்து ஓடுகிறாள்.

எதற்கும் தயாராக இருக்குமாறு பொலிசார் கூற, அவனது முகத்தைக் கூட பார்ப்பதற்கு பயந்து நிற்கிறாள் அந்தப் பெண்.
பொலிசார் சாலையில் கிடக்கும் அந்த நபருக்கு உதவுவதற்காக அவரை புரட்டுகிறார்கள்.

இறந்து விட்டார் என கருதப்பட்ட Jeffrey Delrio என்னும் அந்த நபர், திடீரென எழுந்து ஒரு மோதிரத்தை எடுத்து, தன் காதலியிடம் என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்க, அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் அவள் ஓடிச் சென்று ஒரு பெண் பொலிசாரை கட்டியணைத்துக் கொள்கிறாள்.

பின்னர் தன்னை ஏமாற்றியதற்காக, காதலனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டு அவள் சம்மதம் தெரிவிக்க, அவள் விரலில் மோதிரம் அணிவிக்கிறார் அந்த காதலன்.

அதிர்ச்சியில் தொடங்கி ஆனந்தத்தில் முடியும் இந்த காட்சிகள் அனைத்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டு காண்போரை பலவித உணர்வுகளுக்கு ஆளாக்குகின்றன.

இன்னும் சில நாட்களில் திருமண நாள் : பரிதாபமாக இறந்த பிரபல இசையமைப்பாளரின் காதல் கதை!!

பிரபல இசையமைப்பாளரான பாலாபாஸ்கர் இன்னும் சில நாட்களில் திருமண நாள் கொண்டாடவிருந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார்.

கடந்த 25-ஆம் திகதி பாலாபாஸ்கர் தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் திருவனந்த புரம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் அவரது 2 வயது மகள் தேஜஸ்னி பரிதாபமாக இறந்தார். இருப்பினும் பாலாபாஸ்கர் மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய் அன்று பாலாபாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பாலாபஸ்கர் குறித்து பல தகவல்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் இவர் தன்னுடைய மனைவியை எப்படி காதல் திருமணம் செய்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பாலாபாஸ்கர் திருவனந்தரபுத்தில் உள்ள யூனிவர் சிட்டியில் கடந்த 2000-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அங்கு தான் அவர் லட்சுமியை முதலில் பார்த்துள்ளார்.

இருவரும் ஒரே வகுப்பறை என்பதால் பேசியுள்ளனர். ஆனால் பாலா சந்தித்த மூன்றாவது நாளிலே லட்சுமியிடம் தன்னுடைய காதலை சொல்லியிருக்கிறார்.

ஆனால் லட்சுமி அதற்கு முதலில் மறுத்துள்ளார். அதன் பின் பாலாவின் உண்மையான காதலை உணர்ந்த இவர் காதலை ஏற்றுக் கொண்டார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் பாலா எந்த ஒரு வேலையும் இல்லாத காரணத்தினால் அதை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

எங்கே லட்சுமி நம்மளை விட்டு சென்றுவிடுவாளோ என்று பயந்த பாலா முதலில் திருமணம் அதன் பின் படிப்பை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இதனால் இரண்டு பேரின் பெற்றோரையும் அழைக்காமல், பாலா மற்றும் லட்சுமி பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு சில நண்பர்கள் மட்டுமே வந்துள்ளனர். திருமணத்திற்கு பின் படிப்பை முடித்த பாலா இசையமைப்பாளராக உருவெடுக்க ஆரம்பித்தார். பல மேடைகளில் தன்னுடைய திறமையை காட்டினார்.

இதையடுத்து அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. இந்த தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் திகதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் இரு வீட்டாரின் பெற்றோரும் இவர்களை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் குடும்பத்தினருடன் கோவிலிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.

கண்டித்த தந்தை… திட்டமிட்டு கொலை செய்த மகள் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

தமிழகத்தின் சேலம் பகுதியில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை திட்டமிட்டு கொலைசெய்த இளம்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர், சேலம் அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு பழக்கம் இருந்துவந்தது.

ராஜாவே இவரை மருத்துவமனையில் விட்டுச் செல்லுவதும், மாலை பணி முடிந்ததும் அழைத்துச் செல்லுவதுமாக இருந்துள்ளார். இது, சசிகலாவின் தந்தை தொப்பக் கவுண்டருக்குத் தெரியவர, சசிகலாவைக் கண்டித்துள்ளார்.

ஆனால் சசிகலா, தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்காமல், ராஜாவிடம் நெருக்கமாகவே பழகிவந்துள்ளார். இதையடுத்து தமது மகளை தொப்பகவுண்டர் எச்சரிக்கை செய்து மிரட்ட, அவர் கோபம் அடைந்தார். ஒருகட்டத்தில், சசிகலாவும் அவரின் கள்ளக்காதலன் ராஜாவும் சேர்ந்து தொப்பக்கவுண்டரை கொலைசெய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

அதையடுத்து, 2015-ம் ஆண்டு வீராணத்தில் உள்ள ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகிய ரவுடிகளின் துணையோடு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தொப்பக்கவுண்டரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் தொப்பக்கவுண்டரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்த வழக்கு விசாரணை சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்துவந்தது.

இந்த விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில் சசிகலா, ராஜா, ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மனைவி இறந்தது கூட தெரியாமல் தோளில் சுமந்தபடி 3 கி.மீ ஓடிய கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவின் தலுங்கானா மாநிலத்தில் விஷம் அருந்திய மனைவி இறந்தது தெரியாமல் தோளில் சுமந்தபடி அவரது கணவர் 3 கி.மீ தொலைவு ஓடிய சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள அசீஃபாபாத் மாவட்டத்தில் திங்களன்று இந்த நெஞ்சைப் பிசையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

35 வயதான ராத்தோட் ராம் என்பவர் விவசாயம் தொழிலாக செய்து வருகிறார். கன மழையால் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இவர்களின் பருத்தி விவசாயம் முற்றாக அழிந்துள்ளது. இதனால் மனதளவில் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்களன்று விளை நிலத்தை பார்வையிட சென்ற ராமுடன் அவரது மனைவி புஸ்பலதாவும் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த பூச்சிமருந்தை எடுத்து புஸ்பலதா அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது விளை நிலத்திலேயே அவர் நினைவிழந்து சரிந்துள்ளார்.

மனைவி விஷம் அருந்தியதை சற்றும் எதிர்பார்க்காத ராம் துரிதமாக செயல்பட்டு, புஸ்பலதாவை தோளில் சுமந்தபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

வாகனம் செல்லும் சாலையில் வந்து சேர ராமுக்கு காட்டாறு ஒன்றை நீந்திக் கடக்க வேண்டியிருந்தது. மட்டுமின்றி அங்கிருந்து 3 கி.மீ தொலைவு கால் நடையாகவும் சென்றுள்ளார். இதனிடையே 3 கி.மீ தொலை கடந்த நிலையில் அவருக்கு ஆட்டோ ஒன்று கிட்டியுள்ளது.

ஆனால் மருத்துவமனையில் சென்று சேர்ந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே புஸ்பலதா இறதுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷம் அருந்திய மனைவியை தோளில் சுமந்தபடி விவசாயி ராம் ஓடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் தம்பதிக்கு பெற்றோர் கொலை மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பெற்றோரின் கொலை மிரட்டலுக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், திருமங்கலம் அடுத்த உசிலம்பட்டியை சேர்ந்த மஞ்சுபாஷினி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து மஞ்சுபாஷினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சரத்குமார், மஞ்சுபாஷினி இருவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள். கடந்த மார்ச் மாதம் 4-ஆம் திகதி திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் ஊத்துக்கோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தையும் பதிவு செய்துகொண்டனர்.

இந்த நிலையில் மஞ்சுபாஷினியின் பெற்றோர் தன் மகள் காணாமல் போய்விட்டாள். அவளை கண்டுபிடித்து தருமாறு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

மேலும் சரத்குமாரின் உறவினர்கள் 2 பேர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து பொலிசார் அவர்கள் இருவரையும் பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மஞ்சுபாஷினியின் பெற்றோர், சரத்குமார் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் புகார் அளித்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

மட்டுமின்றி சரத்குமார் மற்றும் மஞ்சுபாஷினியை கொலை செய்யவும் திட்டம் தீட்டி ஆட்கள் மூலம் தேடி வருவதும் தெரியவந்தது.

இதனால் பதறிப்போன சரத்குமார், மஞ்சுபாஷினி ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

என்னை விட்டுடுங்கள் என கதறிய மணமகன் : கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் நடந்த திருமணம் !!

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது மைனர் பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலிக்கும் பெண் குறைந்த சாதி என்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில வாரங்களாக சதீஷ் காதலியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சுமதி சதீஷ் தன்னை ஏமாற்றியதாக பெற்றோரிடம் கூறி அழுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சதீஷை, நண்பர் ஒருவர் ஏமாற்றி அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் திரண்டிருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்தவர்கள் சதீஷை சுற்றிவளைத்து பிடித்து கையில் மஞ்சள் தாலியை கொடுத்து சுமதி கழுத்தி கட்ட சொல்லி மிரட்டினர்.

ஆனால் இதற்கு சதீஷ் திட்டவட்டமாக மறுத்தநிலையில் அனைவரும் தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் காதலி கழுத்தில் தாலி கட்டினார் சதீஷ்.

பின்னர் இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்த சதீஷின் குடும்பத்தார், 17 வயது சிறுமிக்கு தங்களது மகனை கட்டாயமாக திருமணம் செய்து வைத்த அந்த சிறுமியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சப் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்!!

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து அமெரிக்காவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழர் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது.

அமெரிக்காவின் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் 300 வாழைக் கன்றுகளை பயிரிட்டுள்ளார்.

முதன்முதலாக ஜேர்மனியில் வாழ்ந்த சின்னியா, பச்சைவீட்டு வேளாண்மையக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் Coventry பகுதிக்கு சென்ற பிறகு, அவர் தனது பயிர்ச்செய்கை திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். வெப்பமண்டல தாவரங்களில் அவர் அக்கறை செலுத்தியுள்ளார்.

அதற்கமைய வாழை மரங்கள் மற்றும் பிற வெப்பமண்டல மலர்களை வளர்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அதற்கமைய கோடை காலமான ஒக்டோபரில் வாழை மரங்கள் வளர ஆரம்பித்துள்ளன.

சின்னையா செந்தில்செல்வனின் வாழை மரங்கள் தற்போது 3 மீற்றர் உயரமாக வளர்ந்துள்ளன. அந்த வாழைமரங்கள் நன்கு வளர்ந்த போதிலும், இன்னமும் வாழைப்பொத்தி வெளிவர ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் வருடம் பாரிய அறுவடை ஒன்று காத்திருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குளிர்கால நெருங்குகையில் அதனை சூடாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சின்னையா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எனது பெற்றோர்களின் தோட்டத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வாழை மரங்கள் இருந்தன, அதனை நாங்கள் விற்பனை செய்தோம்.

சிலர் இங்குள்ள எனது வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் இலங்கையில் தாம் இருப்பதனை போன்று உணர்வதாக குறிப்பிட்டுள்ளனர். பெரிய வாழையிலைகளை நான் கோவிலுக்கு வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாழைப்பழ செய்கையின் ஊடாக குறித்த பகுதியில் தான் மிகவும் பிரபல்யமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊனமுற்ற மகளுடன் மரத்தில் வாழும் தந்தை : கண்ணீர்விட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!!

மனைவி உயிரிழந்ததன் பின்னர் தனது ஐந்து வயது ஊனமுற்ற மகளுடன் மரத்தின் மேல் வாழ்க்கை நடாத்தும் தந்தை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தான புளியங்கடவல என்ற பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் தொடர்பாகவே தகவல் வெளியாகி உள்ளது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ உட்பட பொலிஸ் உத்தயோகத்தர் குழுவினர் கடந்த 30ம் திகதி பிற்பகல் புளியங்கடவல கிராமத்திற்குச் சென்று தேடிப் பார்த்தபோது குறித்த தந்தை மற்றும் மகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

ஹொரவப்பொத்தான புளியங்கடவல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான டப்ளியு. விஜேசிங்க என்ற நபரின் மனைவி ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக, தலை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து வயதாக நெத்மி காவிந்தியா என்ற சிறுமி அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு மகள். அச்சிறுமி பிறப்பிலிருந்து ஊனமுற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனைவியின் திடீர் இழப்பால் விஜேசிங்க உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்துள்ளார்.

குறித்த இருவரும் அன்று முதல் இன்று வரை ஒரு கடினமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற தனது மகளை தனிமையில் விட்டுச்செல்ல முடியாத காரணத்தினால் அவர் மகளை தூக்கிக் கொண்டே கூலி வேலைகளைச் செய்து மகளைப் பராமரித்து வருகிறார்.

கூலிக்கு கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்யும் விஜேசிங்க தோட்டங்கள் மற்றும் வயல்களை இரவில் பாதுகாப்பதையே அதிகமாக செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறுசெய்யும் வேலைக்கு இரவொன்றிற்கு ரூபாய் 500 கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மரத்தில் மேல் கட்டப்பட்ட பரணில் தனது மகளுடனே தோட்டம் மற்றும் வயல்களை பாதுகாப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மலசல கூடத்திற்குச் செல்லும்போதும் தனது மகளை தூக்கிச்செல்ல வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹொரவப்பொத்தான பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ உட்பட பொலிஸ் உத்தயோகத்தர் குழுவினர் குறித்த நபரைத் தேடிச் சென்றபோது வயல் உரிமையாளரின் மரமொன்றின்மேல் கட்டப்பட்ட பரணில் தனது மகளுடன் இருந்த தந்தையை கண்டுபிடித்தனர்.

அவர்கள் இருவரின் நிலையைப் பார்த்த பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அங்கு நின்ற உத்தயோகத்தர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய மரத்திலிருந்து மகளுடன் கீழே இறங்கி வந்தார் விஜேசிங்க.

சிறுமி தன்கைகளில் தூக்கிய பொறுப்பதிகாரி “மகள் மீண்டும் ஒரு நாளும் இதைப்போல் உனக்கு வராது” என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், சேர் நான் உதவியற்றவன். சாப்பிட வழி இல்லை. அதனால் தான் நான் இதை செய்கிறேன். நான் என் குழந்தையை மிகவும்நேசிக்கறேன்.. குழந்தையின் வேலைகளைச் செய்ய பணம் இல்லை.

குழந்தயை விட்டு எங்கும் செல்ல முடியாது. அதனால் தான் பரண் கட்டி ஏறுகிறேன். முடியுமானால் எனக்கு உதவி செய்யுங்கள் என குறித்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற விசயங்ளை மீண்டும் செய்யக்கூடாது என தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அவருக்கு உதவிளை செய்ய நடவடிக்க எடுப்பதாக குறிப்பிட்டார்.

பரபரப்பை ஏற்படுத்திய யுவதியின் கடத்தல் : உண்மையை அம்பலப்படுத்திய பொலிஸார்!!

தென்னிலங்கையில் நேற்று அதிகாலை யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அம்பலந்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பலினால் 17 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடத்தல் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் காதலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் திட்டம் குறித்த மாணவி மற்றும் அவரது காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி, அதிகாலையிலேயே தனது தாயாரின் தொலைபேசியில் காதலனுக்கு அழைப்பேற்படுத்தி தன்னை கடத்தி செல்லுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மாணவியின் காதலன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அவரிடம் இருந்த துப்பாக்கி கீழே விழுந்து தோட்ட ஒன்று வெடித்துள்ளது.

தனக்கும், காதலனுக்கு இடையில் 7 வருட தொடர்பு இருந்தது, தங்கள் பெற்றோர் அதனை எதிர்த்தமையினாலும், வீட்டைவிட்டு செல்லத் தீர்மானித்ததாக கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் தனது பெற்றோரிடம் திரும்பி செல்ல விரும்பவில்லை என அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியை கடத்த உதவிய ஏனைய 5 பேரும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியை கடத்திய காதலனுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைப்பகுதிக்குபொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்!!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் அமைந்துள்ள மலைப்பகுதிக்கு கூட்டு எதிரணியினர் மற்றும் தொல்பொருட் திணைக்கள அதிகாரிகள் இன்று மாலை விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில், தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோரும், தொல்பொருட் திணைக்கள அதிகாரிகளும் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த இரு தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் தவறான தகவல்களை வழங்கியதாக ஆலய நிர்வாக சபையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன்போது தொல்பொருட் திணைக்களத்தினர் சிங்களத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் வைத்திருக்கின்றனர். இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தைச் சேர்ந்தது. 1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்திருக்கின்றது. இந்த விகாரையை பயங்கரவாதிகள் அழித்துள்ளனர். இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தம். இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றது. நாங்கள ஆய்வு செய்ய மக்கள் தடையாக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஆலயத்தைச் சூழவுள்ள மக்களுக்கும் குறித்த குழுவினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டபோது பொலிசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதேவேளை இவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் வருகை தந்தந்துள்ளதுடன் அவர் வாகனத்தை விட்டு இறங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போக்குவரத்து சபையினர் 4 மணிநேர பணிப்புறக்கணிப்பு : வழமைக்கு திரும்பிய பேரூந்துகள்!!

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (03.10.2018) மதியம் 12.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து பயணிகளை ஏற்றிய இ.போ.ச பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்தமைக்கு கண்டனம் தெரிவித்து இ.போ.சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான அனைத்து பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சாலைக்கு எடுத்துச் சென்று ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுட்டனர்.

வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட நடத்துனர் , சாரதியினை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இ.போ.ச வட மாகாண இணைந்த போக்குவரத்து தொழிற்சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் நாவரட்ணம் கோபிகிருஷ்னன் அவர்களிடம் வினாவிய போது,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேரூந்துகளும் , வவுனியாவிலிருந்து சேவையாற்றும் தனியார் பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த முதலாம் திகதி முதல் வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்துகளும் உள்செல்ல தடை விதிக்கப்பட்டு. வவுனியாவிலிருந்து சேவையினை ஆரம்பிக்கும் பேரூந்துகளும் வவுனியாவில் முடிவுரும் பேரூந்துகளும் மாத்திரமே புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை காரணம் தெரிவித்தே எமது நடத்துனர் ,சாரதியினை பொலிஸார் கைது செய்துள்ளதாவும் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள வடமாகாண இ.போ.ச ஊழியர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்தார்.