இலங்கையையும் விட்டு வைக்காத பிக்பாஸ் வைரஸ் : தமிழ்நாடு சென்ற தமிழ் குடும்பம்!!

தென்னிந்தியாவில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தியிருந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பலரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்தியாவில் மாத்திரமன்றி உலகவாழ் தமிழ் மக்களின் மிக விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

குறித்த நிகழ்ச்சியின் இறுதி நாள் பிரம்மாண்ட நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ரித்விகா வெற்றி வாகை சூடியிருந்தார்.

இந்நிலையில், அங்கு போட்டியிட்ட 16 போட்டியாளர்களுக்கும் தனியான ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி நிகழ்வு தொடர்பான எதிர்ப்பார்ப்பு அனைத்து ரசிகரிடத்திலும் மிகுந்து காணப்பட்டது.

100 நாட்களைத் தாண்டி பிக்பாஸ் இல்லத்தில் தங்கியிருந்து இறுதிவரை சென்றிருந்த ரித்விக்கா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷமி, ஜனனி ஆகியோரை காண அவர்களது ரசிகர்கள் படையெடுத்திருந்தனர்.

இதேபோல, பிக்பாஸ் சீசன் 2 இல் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யாவை காண்பதற்கு இலங்கையில் இருந்து ஒரு தமிழ் குடும்பம் சென்றுள்ளது. அங்கு சென்று, ஐஸ்வர்யாவிடம் கதைத்து தமது மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள் : யார் அவர்? வியக்கவைக்கும் தகவல்கள்!!

கூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும். அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில் உலகின் சிறந்த நபர்களின் பிறந்தநாள், இறந்தநாளின் போது மரியாதை அளிக்கும்விதமாக லோகோ மாற்றப்படும்.

இந்நிலையில் தமிழகத்தின் மதுரையில் பிறந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் படத்தை இன்று மாற்றி அவரின் பிறந்தநாளை கூகுள் கொண்டாடியுள்ளது.

கோவிந்தப்பா வெங்கடசாமி அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி 1918ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தான் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர். பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்வளித்தவர் இவர். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் திகதி இவர் மறைந்தார்.

இறுதி வரை மக்களுக்கு சேவையாற்றிய கோவிந்தப்பாவின் பிறந்தநாளை கெளரவிக்கும் விதத்தில், கூகுள் என்ற சொல்லின் GO என்ற முதல் இரண்டு வார்த்தை மங்கலாக உள்ளது, அதற்கடுத்து அவரின் புகைப்படம் இடம்பிடித்த பின் மங்கலான எழுத்துக்கள் தெளிவாகின.

அவர் கண் மருத்துவ உலகில் ஆற்றிய சாதனையை பாராட்ட இவ்வாறு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை பிரித்ததால் உயிரை விடுகிறேன் : தற்கொலை செய்த மனைவியின் உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் தகாத உறவை கணவன் நியாயப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்ட விடயத்தில், அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் ஜான் பால் என்பவர் தனது மனைவி புஷ்பலதாவை விடுத்து, வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனையறிந்த புஷ்பலதா, இதுகுறித்து தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தகாத உறவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தனக்கு சாதமாக சுட்டிக்காட்டிய ஜான் பால், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த புஷ்பலதா, கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில் புஷ்பலதா கூறுகையில், ’கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும்போது, எங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார்.

மாலையில் வீடு திரும்பும்போது அழைத்து வருகிறார். இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்திற்கு பின்னர் கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜான் பாலிற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பிராங்க்ளின் என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. அதனை மறைத்து தனது மகளை அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மேலும், ஜான் பால் பலமுறை தனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தன் மகளின் சாவுக்கு அவர் காரணம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புஷ்பலதாவின் பெற்றொர் செல்வம்-சரசம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கணவருடன் போகமாட்டேன் என கண்ணீர் : திருமணமான 1 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கும் ரோகிணி (25) என்ற பெண்ணுக்கும் ஆக்ஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வேலை முடிந்து மோகன் வீட்டுக்கு வந்தபோது ரோகிணி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்த மோகன் பின்னர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பொலிசார் ரோகிணியின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் ரோகிணியின் சகோதரர் கிருஷ்ணா மற்றும் அவர் குடும்பத்தார் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் மோகன், ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரோகிணி எங்கள் வீட்டுக்கு வந்து எங்களிடம் கூறினார், ஆனால் நாங்கள் தான் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பிவைத்தோம். ரோகிணி தற்கொலைக்கு காரணமான மோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்

குடிபோதையில் இளைஞரை கிணற்றில் தள்ளி கொன்ற நண்பர்கள் : வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி!!

தமிழகத்தின் வேலூரில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள், ஒருவரை கிணற்றில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர் மவீன் பெங்களூரில் தொழில் செய்து வந்த நிலையில் ஞாயிறு விடுமுறையை ஒட்டி ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று மாலை அவரது நண்பர்கள், சுதர்சன், பவீத், ராகுல், கல்யாண குமார், அருண் குமார், அஜித் குமார் ஆகியோருடன் சேர்ந்து மவீன் தோப்பில் மது அருந்தியுள்ளார்.

இதில் அனைவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் எல்லோரும் வீடு திரும்ப, மவீன் மட்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அவர்கள் மது அருந்திய தோப்பில் உள்ள கிணற்றில் மவீனின் சடலம் மிதந்துள்ளது.

மவீனின் உறவினர்கள் அங்கு வந்து பார்க்கையில், மவீனின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனை ஆராய்கையில், மவீன் எவ்வாறு இறந்தார் என்ற நேரடிக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுடன் மவீன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வீடியோவில் இருந்தது.
மேலும் மவீனைப் பிடித்து ஒருவர் தள்ளி விடுவதும், பின்னர் அனைவரும் கிணற்றில் குதித்து குளிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குளித்து முடித்துவீட்டு ஓரளவு போதையில் இருந்த நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில், முழு போதையில் இருந்த மவீன் மட்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். அருண்குமார் மட்டும் பொலிசில் சிக்கியுள்ளார்.

விளையாட்டாக செய்தது வினையாகிட்டது என அவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு : காதலனுடன் பொலிசில் சிக்கிய மனைவி!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதல் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் கடுங்கலூர் பகுதியில் குடியிருக்கும் கிரிஷ் மற்றும் சீமா ஆகிய இருவரையுமே ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி மோகன்தாஸ் என்பவர் கொடூரமான முறையில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டார்.

எர்ணாகுளம் பகுதியில் அருகாமையில் அமைந்திருந்த இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் கிரிஷ் மற்றும் சீமா. இந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்படவே, இருவரும் திட்டமிட்டு சீமாவின் கணவரான மோகன் தாசை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு பணிக்கு செல்லவிருந்த மோகன் தாசிடம் தமது நண்பர் கிரிஷுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை செல்லும் வழியில் மோகன் தாசை தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் கிரிஷ்.
பின்னர் அங்கிருந்த புதருக்குள் சடலத்தை மறைவு செய்துவிட்டு கிரிஷ் அங்கிருந்து தப்பியுள்ளார். சாலை விபத்து என கருதிய பொலிசார்,

அதன் பின்னர் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பின்னர் இது திட்டமிட்ட கொலை என தெரியவந்தது.

வவுனியாவில் ஆவா குழுவினரால் இளைஞர்களுக்கு எச்சரிக்கை!!

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களின் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளது. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியாவில் வீதி ஓரங்களிலிருந்து பொதுமக்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் இளைஞர்கள், ஜங்ஸ்டார், பைட்டர், கற்குழி போன்ற மைதானக்களில் எமது செயற்பாடுகளுக்குள் உள்வாங்கும் நோக்கத்துடன் விரிவுபடுத்தவதற்கு உள்ளோம்.

அவர்களைக்காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் மக்களுக்கும் பொலிசாருக்கும் காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்களையும் எச்சரிக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம்!!

அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தலமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டு விட்டது.

இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகிவிட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாலும் , விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (01.10.2018) காலை 7 மணிக்கு ஆரம்பமான இவ் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமானது மாலை 5 மணிவரை முன்னெ டுக்கப்படவுள்ளது.

விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என வாசகங்களை தாங்கிய பேனர்களும் கட்டவிடப்பட்டுள்ளன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஸ்ரீ ரெலோ கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனினிச கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கைதியின் உறவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியணிந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் கஞ்சா கடத்த முயன்ற தமிழ்ப் பெண் கைது!!

வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிலில் கேரள கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய பெண் ஒருவரை நேற்று (30.09.2018) இரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா ஓயார்சின்னக்குளத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். அங்கிருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிலில் வருகை தந்து கேரள கஞ்சாவுடன் மீண்டும் கொழும்பினை நோக்கி மோட்டார் சைக்கிலில் புறப்படவிருந்த சமயத்தில் குருமன்காடு பகுதியில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணிடமிருந்து 1கிலோ 620கிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னினையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் துருப்பிடித்த கொள்கலனில் சமையல் எண்ணெய் விநியோகம்!!

வவுனியாவில் சமையல் எண்ணெய் விநியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 30ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களுக்கு சமையல் எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளும் கொள்கலன் ஓமந்தை பொது சுகாதார பரிசோதகரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கொள்கலன் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சமையல் எண்ணெய் வியாபார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து குறித்த கொள்கலன் 300 லீற்றர் எண்ணெய்யுடன் கைப்பற்றப்பட்டு விநியோகஸ்தருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு அண்மையில் எடுத்து கொண்ட நிலையில், விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாணவன் தூக்கிட்டு தற்கொலை : இந்த நிலைக்கு காரணம் யார்?

எந்த ஒரு மாணவனையும் மதம் மாற்றம் செய்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மிகச் சிறந்த தலைவர்கள் எனும் ஆங்கில மொழி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அண்மையில் இறக்குவானை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவன் மன அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக எனக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நான் இந்த செய்தியை கேட்டதும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அவன் அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் எதனால், யாரால் ஏற்பட்டது. அத்துடன் உண்மையிலேயே அவனை யார் மத மாற்ற முயற்சி செய்துள்ளார்கள். இந்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

எந்த காரணம் கொண்டும் யாரும், யாரையும் மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்யக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதனை கொண்டு போக முடியாது.

ஏனென்றால் அவர்களுடைய அந்த பருவத்தில் அவர்களுக்கு முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் எதனையும் திணிக்கவோ, விரும்பாத விடயங்களை செய்யும் படியோ வற்புறுத்த கூடாது. கல்வியில் கூட அந்த நிலைதான். ஏனென்றால் அவன் விரும்பி செய்கின்ற காரியத்தில் மாத்திரமே அவன் வெற்றி பெறுவான்.

இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தற்பொழுது நாங்கள் பல மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

நான் அண்மையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ். பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களும், ஒரு பகுதியில் முஸ்லிம்களும் ஒரு பகுதியில் சைவ சமயத்தை சார்ந்தவர்களும் இன்னும் ஒரு பகுதியில் பௌத்தர்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அங்கு தற்பொழுது படிப்படியாக மத நல்லிணக்கம் ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் நியமனம்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 10வது தேசிய மாநாடு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது. இதனடிப்படையில் நேற்று மாலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாக தெரிவு நடைபெற்றுள்ளது.

தலைவராக மீண்டும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டதுடன், பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சிறிக்காந்தா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொருளாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவுசெய்யப்பட்டதுடன், கட்சியின் தவிசாளராக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய அமைப்பாளராக சுரேன் குருசாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரசார செயலாளராக சொக்கன் கணேசலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நிர்வாக செயலாளராக ப.நித்தியானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உப தலைவர்களாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரும், கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சி தலைவருமான ஹென்றி மஹேந்திரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று இளைஞரணி தலைவராக வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் துணைத்தலைவராக வேணுராஜ் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை மக்களுக்கு அவரச அறிவிப்பு!!

இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுனாமி ஆபத்துக்கள் உள்ளதாக பரவும் கட்டுக்கதைகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடல் பிரதேசத்தில் வாழும் மக்கள் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனாமி ஆபத்துக்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 380 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் வாழ்க்கையிலே அவன் வந்து விளையாடிவிட்டான் : கண்ணீரோடு நடிகர் கஞ்சா கருப்பு!!

பிரபல திரைப்பட நடிகரான கஞ்சா கருப்பு இனி நான் வாழ்க்கையில் படமே தயாரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் கஞ்சா கருப்பு, அதன் பின் காமெடி ரோலில் கலக்கிய இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் அந்தளவிற்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை, அதுமட்டுமின்றி கஞ்சா கருப்பு கடனில் தத்தளிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அவரிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அது எல்லாம் உண்மை தான், இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

வேல்முருகன் போர்வெல் என்ற படத்தால் மிகவும் கஷ்டப்பட்டேன், பாலா மற்றும் அமீர் அப்பவே சொன்னாக, சினிமா என்பது பொக்கிஷம், அதை பத்திரமாக பாத்து கொள்ள வேண்டும்.

தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதல்ல, ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொன்னாங்க, அதை கேட்காம கோபி என்ற ஒருத்தன் டைரக்டர்ங்கிற பேர்ல எமனா வந்து என் வாழ்க்கையில விளையாடிட்டான்.

இப்பவும் பெரிய டைரக்டர்கள் பேரச் சொல்லிக்கிட்டு, அவர்களிடம் அசிஸ்டெண்டா இருக்கேன்னு அள்ளிவிட்டுக்கிட்டிருக்கான். கோபி மாதிரி குடி கெடுப்பவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஜென்மத்தில் படமே எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் திருமணம் செய்வேன் என காதலியிடம் கூறிய நபர் : அடுத்து நடந்த விபரீதம்!!

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ல் துபாய்க்கு செல்ல முடிவெடுத்த அப்பாஸ் உடன் தனது காதலியையும் அழைத்து சென்றுள்ளார்.

மேலும், அப்பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டுமெனில் இஸ்லாம் மதத்துக்கு அவர் மாறவேண்டும் என அப்பாஸ் கூற அப்பெண்ணும் மாறியுள்ளார்.

இதனிடையில் இந்தாண்டு இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் ஒத்து கொண்ட நிலையில் ஏப்ரல் 17-ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அப்பாஸும், அவர் காதலியும் ஹைதராபாத்துக்கு திரும்பிய நிலையில் திடீரென அப்பாஸ் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினார்கள்.

அதாவது, சட்டபூர்வமாக ஹஜ்ஜுக்கு சென்று ஆவணத்தில் இஸ்லாமியராக மாறியதாக அப்பெண் பதிவு செய்ய வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து காதலியிடம் துபாய்க்கு சென்று வேலையை முடித்த பின்னர் வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என அப்பாஸ் கூற இருவரும் அங்கு சென்றனர்.

ஆனால் அங்கு சென்றவுடன் இனி உன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என அப்பாஸ் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதன்பின்னர் ஹைதராபாத்துக்கு திரும்பிய அப்பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். அப்பாஸ் தன்னை பலாத்காரம் செய்தார் மற்றும் ஏமாற்றிவிட்டார் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் வந்த அப்பாஸை பொலிசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமான 6 மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை : மனைவியின் செயலால் விபரீதம்!!

இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் தேஸ் ராஜ். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வேறு நகருக்கு மனைவியுடன் குடியேற முடிவு செய்த ராஜ் இது குறித்து அவரிடம் பேசினார். ஆனால் தன்னால் வேறு நகருக்கு வரமுடியாது என மனைவி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் விரக்தியில் இருந்த ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த ராஜின் உறவினர் நிரஞ்சன்குமார் பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ராஜின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.