வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 350 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையில் கா.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புகள் உள்ள நிலை கடந்த 10 மாதங்களாக குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமையினால் கல்வி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பான முறையான நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவித்தும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தே பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது பாடசாலைக்கு அதிபரை நியமி, மாணவர்களின் கல்வியை பாதிப்படையச்செய்யாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா குறித்த பாடசாலைக்கான அதிபரை நியமிப்பதற்கான நேர்முகத்தேர்வுகள் முடிவடைந்து மாகாண கல்வி திணைக்களத்தினால் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் உத்தியோகபூர்வமான பயணமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்தமையினால் இதுவரை கையொப்பமிடவில்லை எனவும் தெரிவித்ததுடன் எதிர்வரும் புதன்கிழமை பாடசாலைக்கான அதிபர் நியமிக்கப்படுவார் எனவும் உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலயக்கல்விப்பணிமனைக்கு முன்பாக இருந்து கலைந்து சென்றிருந்தனர்.
பாரிய விபத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நொடி பொழுதில் உயிர் தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜகிரியவில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மீண்டும் திரும்பும் போது ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பிரதமரை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மேற்கொண்ட விபத்தில் ரணில் நொடியில் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவின் நெருக்கமான உறவினரின் மரண வீட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ராஜகிரிய பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி வரும் போது, அந்த வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதமரின் வாகனத்தில் ஏறும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் வருகை காரணமாக மரண வீடு உள்ள பிரதேசத்திற்கு பொலிஸார் வருகைத்தந்துள்ளனர்.
இதன் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை காட்டியுள்ள போதிலும், நிறுத்தாமல் பாதுகாப்பு அதிகாரிகள் மீது மோதியுள்ளார்.. இதன் போது தெய்வாதீனமாக பிரதமர் தப்பியுள்ளார் என கூறப்படுகின்றது.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் அனுமதி பத்திரம் இல்லாத 20 வயதுடைய இளைஞர் எனவும், அவர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – இமதுவ பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் பெண்ணொருவர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
குறித்த பெண் அங்கு திருட முயற்சித்த போதே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்துள்ளனர். இதற்கு முன்னரும் குறித்த பெண் அந்த பிரபல வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடியுள்ளார்.
இந்த மோசமான செயற்பாடு வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தொடர்பில் அவர்கள் அவதானத்துடன் இருந்து வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் அவர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேனிலவிற்காக இலங்கை வந்த பிரித்தானியாவின் பிரபல மாடல் கண்ணீர் விட்டழுத சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான Olivia Buckland மற்றும் Alex Bowen இலங்கை தீவில் தேனிலவை கொண்டாடுவதற்காக வந்துள்ளனர்.
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதி, தேனிலவிற்கு இலங்கை வந்து பல இடங்களை சுற்றி பார்த்துள்ளனர்.
இலங்கையில் உள்ள ஆமைகள் பாதுகாப்பு சரணாலயம் ஒன்றுக்கு இந்த தம்பதியினர் சென்றுள்ளனர்.
அங்கு புதிதாக பிறந்த ஆமைகளை பார்த்த Olivia, உணர்ச்சி வசப்பட்டுள்ளார். அத்துடன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
தேனிலவுக்கு வந்த இடத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுத செய்தி பிரித்தானிய ஊடகங்களின் தலைப்பு செய்தியாகியுள்ளது.
இதனை அவரது கணவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். Olivia இதனை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீகிரியா மலைக்குன்றுக்கு விஜயம் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரிய காட்சி ஒன்றை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலக சுற்றுலா தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் சீகிரிய குன்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
வழமையாக காலை 7 மணிக்கு சீகிரியவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் 5 மணிக்கு பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று காலை 5 மணிக்கு சீகிரிய குன்றிற்கு ஏறிய உள்நாட்டு நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சூரியன் உதிக்கும் காட்சியை காண முடிந்துள்ளது.
கடந்த சில தினங்களாக மழை பெய்தமையினால் முகில்களினால் மூடப்பட்ட நிலை ஒன்றே காணப்பட்டுள்ளது. எனினும் நேற்று அதிகாலை 6 மணியளவில் சூரியன் உதிக்கும் காட்சியினை அவதானிக்க முடிந்துள்ளது.
சீகிரிய மலைக்குன்றில் இவ்வாறான காட்சியை காண்பது அபூர்வம் என சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறினால் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் இதனை தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பள்ளத்துசேனை பேரல்லாவெளி வயல் பிரதேசத்தில் தந்தையும், மகனும் கால்நடைகளை வளர்ப்பதுடன் விவசாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், தனது மகன் தொழிலில் ஈடுபாடு காட்டுவது குறைவாக காணப்படுவதாக தெரிவித்து நேற்று மாலை தந்தை மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்ட தந்தையும் மரத்தில் தூக்கில் தொங்குவதற்கு முயற்சித்த வேளை அயலவர்கள் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி – இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 13 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையே இந்த உயிரிழப்பிற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
எனினும், மத மாற்றம் தொடர்பில் குறித்த சிறுவனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையே மாணவனின் உயிரிழப்பிற்கான காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த மாணவனின் உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காவில் வசித்து வருபவர் பசுவராஜ் இவருக்கு திருமணமாகி பார்வதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது.
பசுவராஜ் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் உக்கேரி என்பவரிடம் 500 ரூபாய் கடன் வங்கியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக பசுவராஜால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவரான ரமேஷ் உக்கேரி வெறும் 500 ரூபாய் பணத்துக்காக பசுவராஜின் மனைவியை வீடு புகுந்து கடத்தி சென்றிருக்கிறார்.
இந்த விஷயத்தை அறிந்து கொண்ட பசுவராஜ் வாங்கிய அப்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு தன் மனைவியை மீட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
ஆனால் ரமேஷ் உக்கேரி நான் உன் மனைவியை திருமணம் செய்து கொண்டேன் அதனால் அந்த பணம் எனக்கு வேண்டாம் என்று கூறியதுடன் உனது மனைவியை நானே வைத்துக்கொள்கிறேன் எனவும் கூறுயிருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பசுவராஜ் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு முதலில் அங்குள்ள பொலிஸ் ஸ்டேசனுக்கு சென்றுள்ளார் ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி காவல் துறை எதுவும் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.
பின் மனம் அதிருப்தி அடந்த பசுவராஜ் மாவட்ட கலெக்டரின் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து கொண்டு தன் மனைவியை மீட்டுதர வேண்டுமென கேட்டு போராடிவருகிறார். இந்த கடத்தல் சம்பவம் பெல்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளம்பெண்ணை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறையிலிருந்து திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவருடன் தீயணைப்பு படையினர் 30 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, உடனடியாக ஒரு காலை வெளியில் விட்டு அந்த பெண் குதிக்க முற்படுகிறார்.
உடனே பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு நீளமாக இரும்பு கம்பியை கொண்டு அந்த பெண்ணை வீட்டிற்குள் தள்ளும் முயற்சியில் மற்றொரு வீரர் ஈடுபடுகிறார்.
ஆனால் அந்த பெண் மீண்டும் குதிக்க முற்பட்டதால், உடனே தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீரர்கள் அந்த பெண்ணை உள்ளே தள்ளுகின்றனர்.
இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம் அவர் எதிர்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி, 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19 வயது இளம்பெண் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக அங்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர், அவரை மிரட்டி காரில் கடத்தி கொண்டு 60 கி.மீ தூரம் வரை சென்றுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை அடித்து, தீயினால் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் வலி தங்க முடியாமல் அந்த பெண், என்னை விட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். ஆனால் அந்த இரக்கமற்றவர்கள் 6 மணி நேரமாக Kayla-வை கொடுமைப்படுத்தி 65 அடி உயரமுள்ள பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் தூக்கி எறிந்துள்ளனர்.
ஒரு கையை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த பெண் நீந்தி கரையை சேர்ந்ததும், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Kayla-வை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் Kayla-வின் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தையல் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் Matthew Leuthwaite, 22, மற்றும் Brooke Brown, 19 ஆகியோரை ஜாமீனில் விடுத்த நீதிமன்றம், நவம்பர் 23-ல் மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 17 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதில் ஒருவர் Kayla-வின் முன்னாள் காதலர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கியதால், அவரின் மகன் தாயின் காலில் விழுந்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தன் மகனை கஷ்டப்பட்டு, படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார். மகன் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
மகனின் பாசி மோட் பரேல் நிகழ்வில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு, அவரின் தாய்க்கு வயலில் வேலை இருந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும், வயலுக்கு ஓடி வந்த மகன் தாயின் காலில் விழுந்து பாதம் தொட்டு வணங்கி ஆசி வாங்கியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பகிர்ந்தவுடன் 17,000 பேர் லைக் செய்துள்ளனர். புகைப்படத்தைக் கண்ட இணையவாசி ஒருவர் மகன் காட்டிய நன்றியையும், தாயின் மகிமையையும், பெற்றோரை வணங்கும் சமுதாயத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாயின் கஷ்டத்தையும், அவர்களின் வெற்றியையும் ஒரே புகைப்படம் என்று மற்றொரு இணையவாசி குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு மகனை வளர்த்த தாயிக்கு பாரட்டுகள் என்றும் இணையவாசிகள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் பிக்சர் ஆப் இந்தியா என்ற இணையதளத்தில் இந்த புகைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அவரை கணவர் கொலை செய்த நிலையில், தாய் இறந்தது கூட தெரியாமல் அவரின் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு அலுவலகத்தில் ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் இரண்டாவது மனைவி மகேஸ்வரி. தம்பதிக்கு கவிதா என்ற மகளும் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அண்ணாமலைக்கும் மகேஷ்வரிக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, தலையில் பலத்த காயங்களுடன் மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மகேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அண்ணாமலை, கவிதா, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரித்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அண்ணாமலைக்கு 65 வயதாகுகிறது. இவருக்கு முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்துள்ளது.
இதையடுத்து தன்னை விட 14 வயது குறைவான மகேஷ்வரியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரில் வீடும், வங்கி லாக்கரில் 25 சவரன் நகைகளும் இருந்த நிலையில் அதை தன் பெயரில் எழுதி தர கணவரை மகேஷ்வரி வலியுறுத்தியுள்ளார்.
இது சம்மந்தமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தோசை கரண்டியால் மனைவி தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
கொலை நடந்தபோது சந்தோஷ், வீட்டில் உள்ள ஒரு அறையில் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். ஆனால், அவருக்கு எதுவும் தெரியவில்லை.
வேலை முடிந்து வீட்டுக்கு காரில் வந்திறங்கிய கவிதாவுடன் அண்ணாமலையும் எதுவும் தெரியாதது போல வந்துள்ளார். மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிஸ் விசாரணையில் முன்னுக்குபின் முரணாக அண்ணாமலை பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் மனைவியை கொன்றதை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கபடியில் கில்லாடியாக மாறி வரும் மாணவியை, அவரது கல்லூரி மாணவர்கள் முன்னால் வந்தே கிண்டல் செய்வதால், அவளை கிண்டால் செய்யாதீங்க கண்ணுங்களா என்று மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவருக்கும் காதும் கேட்காது, வாயும் பேச முடியாது, இருப்பினும் தற்போது தன்னுடைய விடா முயற்சியால், கபடியில் நேஷனல் லெவலில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இது குறித்து தர்ஷினியின் அம்மா கூறுகையில், நான் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என் கணவர் கூலி வேலை செய்கிறார். எங்களுக்கு 3 பிள்ளைகள், 2 பையன். 1 பொண்ணு. என்னுடைய 2-வது மகனுக்குக் கொஞ்சம் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது.
அவனைப் பள்ளியில சேர்த்ததும் மெது மெதுவாப் பேச ஆரம்பிச்சிட்டான். இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான். முன்னாடி இருந்ததை விட இப்போ ஓரளவுக்குப் பேச ஆரம்பிச்சிட்டான். காது மட்டும் கொஞ்சம் கேட்காது.
எங்கள் வீட்டு கடைசி பொண்ணு தான் தர்ஷிணி, அவள் தேவதை, பிறந்த போது, அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குமா என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை,
அதன் பின் வளர, வளர சரியாகிவிடும் என்று நினைத்தோம், ஆனால் இல்லை. என் மகனுக்கும் இந்த பிரச்சனை இருந்த போது, பள்ளியில் சேர்த்தோம், அது கொஞ்சம், கொஞ்சமாக சரியானதால், இவளையும் பள்ளியில் சேர்த்தோம்.
நன்றாக படிப்பாள், ஒரு முறை 6-ஆம் வகுப்பு முதல் மாணவியாக வந்தாள். அப்போது அவள் பாப்பா பெயர், பாப்பா பெயர்’ன்னு சொன்னா. எனக்கு ஒண்ணும் புரியல.
அதன் பின் அவளோட பள்ளிக்கு சென்று அவளோட வகுப்பறையில் போர்டை பார்த்த பின்பு தான் தெரிந்தது. ஒருபக்கம் பொண்ணு நல்லாப் படிக்கிறான்னு சந்தோஷம் இருந்தாலும், மத்த பசங்க மாதிரி பேசலையேன்னு அழுவேன்.
அப்போ எல்லாம் அவள் ‘ம்மா பேசுவேன், அழாதானு சொல்லுவாள். இதனால் அவள் இவ்வளவு உறுதியாக இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நானும் அதன் பின் தைரியமாக இருந்தேன்.
தர்சினியையூம், அண்ணனையும் யோக பள்ளியில் சேர்த்தேன். அப்போ தான் கபடி கத்துக்கிற வாய்ப்பு கிடைத்தது. என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போக ஆரம்பிச்சது.
முதலில் நான் அவள் கூட தனியாக சென்றேன், இப்போ அவள் எல்லா இடத்திற்கு தனியாக தைரியமாக போயிட்டு வருகிறாள். இப்போ ஹிந்துஸ்தான் கல்லூரியில் பி.காம் முதல் ஆண்டு படிக்கிறாள்.
படித்து கொண்டே, டிச்சுகிட்டே ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கிறா. இப்ப நேஷனல் லெவல்ல நடக்குற கபடி போட்டிக்குத் தயாராகிட்டு இருக்கா. அவளுக்கு உதவுறது எல்லாம் அவளோட படிக்கிற ரம்யாங்கிற பொண்ணுதான், அந்த பொண்ணு தான் தினமும் என் மகளை கூப்பிட்டு போவா, மறுபடியும் வீட்டுக்கு வந்து விட்டுட்டுப் போவா.
ஆனால் என் பொண்ணுக்கு ஒரே ஒரு வருத்தம் இருக்கு, அது என்னா என்றால், அவளுடைய குறையை மத்த பசங்க கேலி பண்றாங்க, அவளுக்கு பின்னாடி பண்ணா கூட தெரியாது, முன்னாடி பண்றதால மிகவும் வருத்தப்படுகிறாள்.
இதனாலே அவள் காது கேட்கிற மெஷினை கழட்டி வைத்துவிடுவாள். என் பொண்ணுக்கு எல்லாரையும் நேசிக்க மட்டும்தான் தெரியும் கண்ணுங்களா அவளைக் கேலி பண்ணணும்னா தயவு செய்ஞ்சு அவ பின்னாடி கேலி பண்ணுங்க ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
தம்புள்ளையில் ஆதரவற்ற முதியவர் ஒருவருடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவரை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான எம். எம். சி.கே ஹேரத், எம்.ஏ.சி ஏக்கநாயக்க ஆகிய இருவருமே மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டுள்ளனர்.
தம்புள்ளையில் வீதியில் வயதான முதியவரொருவர் விழுந்து கிடப்பதாக 119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக தகவல்களைப் பற்றி விசாரிக்க மோட்டார் சைக்கிளில் குறித்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்மாரும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு வயதான முதியவர் ஒருவர் வீதியின் அருகே பல நாட்களாக குளிக்காமல் மிகவும் அசுத்தமாக இருப்பதை அவதானித்துள்ளனர்.
மலசலம் அந்த இடம் முழுவதும் நிறைந்து கிடந்துள்ளதுடன், அவர் அந்த இடத்திலே படுத்து உறங்கியுள்ளார். இதனால் பிரதேசவாசிகள் எவரும் அவர் பக்கத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசவாசிகளே பொலிஸ் அவசர தொலைபேசிக்கு குறித்த முதியவர் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். முதியவருக்கு அருகில் நெருங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
குறித்த இரு கான்ஸ்டபிளும் தங்கள் கடமையை ஆரம்பித்துள்ளனர். முதியவர் கிடந்த இடத்திற்கு அருகிலுள்ள வீட்டில் வசிப்பவர்களிடம் பேசி அவரை குளிப்பாட்டுவதற்குரிய இடத்தினை ஆயத்தம் செய்துள்ளனர்.
அந்த முதியவரை அழைத்துக்கொண்டு குளிப்பாட்டி அங்கிருந்தவர்களிடம் ஆடை வாங்கி அணிவித்து, சாப்பாடு வழங்கி தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பேராதெனிய கிரிபத்கும்புர பிரதேசத்சைத் சேர்ந்த பி.ஏ.கே தரம்பால என்ற இந்த முதியவரே இவ்வாறு துர்நாற்றத்துடன் வீதியில் கிடந்துள்ளார்.
அநேகம் சகோதர சகோதரிகள் உள்ளநிலையில் அவரை ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமல் வீதியில் கைவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணமாகாத இந்த முதியவர் தனக்கு சக்தி இருந்த காலத்தில் தன்னுடைய சகோதர, சகோதரிகளை கவனித்து வந்ததாக பொலிஸாரிடம் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
1,538 ரூபாவாக காணப்பட்ட, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,733 ரூபாவாக நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை முதல் சிற்றுண்டி உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், மாதாந்தம் சுமார் 6,000 ரூபாவிற்கும் மேலதிக செலவு ஏற்படும்.
எனினும், இந்த நஷ்டத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்ற காரணத்தால், சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பால்தேநீர், அப்பம், பிட்டு, ரொட்டி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இன்று அதிகாலை முதல் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.