காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிலானி தன்னுடைய கணவரை பிரிந்த பின்னர், மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில் உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் மீது நிலானிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் லலித் குமார் பற்றிய உண்மை தகவல்கள் தெரியவந்ததால், நிலானி அவரை விட்டு ஒதுங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக நிலானியை தொந்தரவு செய்த லலித், தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு நிலானி மறுப்பு தெரிவித்ததால், விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், லலித்துடன் நடிகை நிலானி இருக்கும் ரகசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.
இதனால் மனமுடைந்த நிலானி திடீரென கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அரைமயக்கத்திலே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நிலானி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சொந்த வீட்டிற்கு செல்லாமல், குழந்தைகளையும் எங்கோ மறைத்து வைத்துள்ளார். அவருடைய தொலைபேசிக்கு முயற்சி செய்தபோது கூட ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.
பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக மாவட்ட செயலக முன்றலை சென்றடைந்துள்ளது.
அதன் பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில், எதிர்கட்சித் தலைவரே காட்டிக் கொடுக்காதே, எதிர்கட்சித் தலைவரே அரசுடன் பேசு, சுமந்திரனை வெளியேற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
குறித்த பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை எனவும் அவர்களை இவர்களுக்காக போராடுமாறும் பொது அமைப்புக்கள் சார்பில் கருத்துரைத்த தயா தெரிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் கைதட்டி கரகோசம் செய்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொது அமைப்புக்கள் சார்பில் பேசியவர் கருத்துரைத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து அமைதியாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டிய லூர்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
2008ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. டொலருக்கு பெறுமதி இல்லாமல் போனது. இதனால், அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டார்கள் தமது நிதியை வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
டொலரை கொண்டுவந்த முதலீட்டாளர்கள் தற்போது அதனை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு செல்கின்றனர். அதற்கு பாரிய இலாபத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றனர். இதனால், அந்தப் பணம் அமெரிக்காவிற்கு செல்கிறது.
எனவேதான், டொலரின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. இந்நிலையில், பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டிலேயே பேணப்படுகின்ற போதும், எரிபொருள் விலை அதிகரிக்கிறது. இதனால் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. எனினும், அமெரிக்காவிற்கு மட்டும் இந்தப் பிரச்சினை இல்லை.
இலங்கையின் பங்கு சந்தையின் மூலம் தற்போது 643 மில்லியன் டொலர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. இதன்மூலம் நன்மை, தீமை இரண்டும் உள்ளன.
இந்நிலையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட நாணயமாற்ற வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 170 ரூபா 65 சதமாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பமாகி உள்ளது.
இந்த ரயில் சேவை நாளாந்தம் காலை 8.30 மணியளவில் கல்கிஸ்சையில் இருந்து ஆரம்பிக்கும். அன்றையதினம் மாலை 4.10 மணியளவில் ரம்புக்கனையில் இருந்து மீண்டும் கல்கிஸ்சை நோக்கி பயணிக்கும்.
இந்த ரயில் சேவையின் போது ஒரே நேரத்தில் 100 பேர் பயணிக்க முடியும்.
கோட்டை மற்றும் வேயங்கொட ரயில் நிலையத்தில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும் என கூறப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவிலுள்ள கணவன் சந்தேகப்பட்டதால் குறித்த இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளம் மனைவி நேற்று முன்தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறான தவறான முடிவுக்கு முயன்றுள்ளார்.
கனடாவை சேர்ந்த இளைஞனுக்கும் குறித்த பெண்ணுக்கும் கடந்த மாதம் இந்தியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் பின்னர் கணவன் கனடா சென்றுள்ள நிலையில், பெண் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளார். எனினும் இருவருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதீத கோபம் காரணமாக கணவன் வீடியோ அழைப்பில் காத்திருக்க, மனைவி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதேவேளை உறவினர்களுக்கு விருப்பமான இடத்திற்கு சடலத்தை எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்வதாக உறவினர்கள் நீதிவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் நேற்று மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின் பெண்ணின் உடம்பில் எதுவித காயங்களும் இல்லை எனவும், நீரில் மூழ்கியமையினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்துள்ளார்.
தற்போது உயிரிழந்த விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மரணித்த விரிவுரையாளரின் சடலம் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக விரிவுரையாளரின் சகோதரன் நடராசா தவராசா தெரிவித்துள்ளார்.
உலக சமாதான் தினத்தை முன்னிட்டு இன்று (22.09) காலை 8.30 மணியளவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இளைஞர்கள், மாணவர்கள் தகவல் நிலையத்தின் இலங்கைக்கான தலைவர் சா.சர்ராஜ் தலைமையில் சர்வதேச சமாதான நிகழ்வுகள் இடம்பெற்றது.
சமாதானத்திற்காக உரிமை எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் சர்வதே சமாதான தினம் சர்வ மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது.
நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கு மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இலங்கைக்கான சாமாதானப் பேரவையின் செயலாளர் நாயகம் வைத்தியர் சூழா சேனரட், பாடசாலையின் அதிபர், முன்னாள் பிரதி அதிபர், கல்வியியலாளர்கள், மாணவர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவி தே.சுரேக்காவின் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (22.09) மன்னா பத்திரிகை ஆசிரியர் அருட்பணி லக்கசன் டி சில்வா தலைமையில் இறம்பைக்குளம் மறைக்கோட்ட நடுநிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை விரிவுரையாளர் க.கவிந்தன் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளால் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கவிதை நூல் வெளியீட்டை தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் நூல் ஆசிரியரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம், வவுனியா சுகாதாரத் திணைக்களம் வைத்தியர் முத்துக்குமார் மதிதரன், அருட்தந்தை லக்கோன்ஸ் பிகராடோ, மடு பிரதிகல்விப் பணிப்பாளர் ஆனந்தன் லோகேஸ்வரன் ஆகியோர் கலந்தகொண்டிருந்தனர்.
கிணற்றுக்குள் சிக்கிய மிகவும் நீளமான பாம்பு ஒன்று வனவிலங்கு அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் பாம்பு சிக்கியுள்ளமையை அவதானித்த சிறுமி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திம்புலாகல, மனம்பிட்டிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து பாம்பு மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட பாம்பு, மனம்பிட்டிய காட்டுக்குள் அதிகாரிகளால் விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு மணித்தியால மீட்பு நடவடிக்கையின் பின்னர் பாம்பு கிணற்றில் இருந்து உயிருடன் வெளியேற்றப்பட்டது.
திம்புலாகலை வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இந்த பாம்பினை காப்பற்றியுள்ளனர்.
8 அடி நீளமான இந்த பாம்பை சிறுமி ஒருவரே முதலில் அவதானித்ததாகவும், அதனாலேயே பாம்பு காப்பாற்றப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அமையவே நடராசா போதநாயகியின் சடலம் இன்று காலை 10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீட்கப்பட்ட சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம் சங்கமித்த கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதேவேளை அந்த பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில் புத்தரின் உருவம் பொறித்த சாறியை அணிந்த பெண்ணொருவர் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டுள்ளது.
சாறியை அணிந்திருந்த குறித்த பெண் இந்தியப் பிரஜை எனவும் அவர் சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் மாத்தளைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வேளையே புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த சாறியை அணிந்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுடன் பலர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பைசி கார்டன் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்ற குறித்த பெண் மீண்டும் திரும்பி வரும்போது வேறு சாறி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக 119 பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை என மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 3 ரயில் பெட்டிகளில் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் பயணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த அனர்த்தம் காரணமாக ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன. எனது மனைவி விரிவுரையாளர் என்பதால் கிழமையில் ஐந்து நாட்கள் திருகோணமலையில் இருப்பார்.
நான் கிளிநொச்சியில் வேலை பார்ப்பதால் கிளிநொச்சியில் இருப்பேன். வார இறுதி நாட்களில் நான் திருகோணமலை செல்வேன் அல்லது எனது மனைவி கைச்சிலை மடுவில் உள்ள எமது வீட்டுக்கு வருவார்.
கடந்த வாரம் கூட அவர்தான் இங்கு வந்திருந்தார். அவர் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது.
கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என.
அதன் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை. சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என நான் நினைத்தேன். பின்னர் தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை காணவில்லை எனச் சொன்னார்.
பின்னர் அவரது கைப்பை திருகோணமலை நகர கடற்கடைப் பகுதியில் இருப்பதாகவும் சடலம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்ல. அதற்கான எந்த தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (22.09.2018) காலை 10 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.
அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டுவிட்டது.
இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகிவிட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.
விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் ஒன்றிணைந்து போராட்ட ஏற்பாட்டு குழுவின் பேச்சாளர் தயா அவர்களின் சிறப்புரையுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிரெலோ, ஈரோஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனினிசக் கட்சி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகை அலங்கார உரிமையாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம், தமிழ் விருட்சம் போன்ற அமைப்புக்கள் பங்கு பற்றியதுடன்,
பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் , பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் , சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் , ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , வவுனியா நகரபிதா கெளதமன், உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் நடராஜசிங்கம், உறுப்பினர்கள், வவுனியா வெங்கல செட்டிகுளம் தலைவர் அந்தோணி, உறுப்பினர்கள் ஆகியோருடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கஜனின் மரணத்துக்கு முற்றுமுழுதாக யாழ் மேலதிக அரசஅதிபர் சுகுனவதியும் மாந்தை கிழக்கு பிரதேசசெயலாளருமே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர். இதே வேளை கஜனைப் போல மேலும் பலர் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருவதாகவும தெரியவருகின்றது. கஜனின் மரணத்தையடுத்து குறித்த பட்டதாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதுடன் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அறியவருகின்றது.
பொறுப்பானவர்களின் அதிகாரத் திமிரால் அநியாயமாக இளம் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது கடும் வேதனையளிப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.