11 பேர் மர்ம மரணம் : கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வாக்களித்த சாமியார் எங்கே?

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது, அந்த வீட்டில் பொலிஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் துணி துவைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலண்ட் மோடில் இருந்துள்ளது, அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்துள்ளனர்.

அதாவது, முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என சாமியார் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

மேலும் டைரி குறிப்பிலும், நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள், உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது, அப்படி சடங்கும் செய்யும் பட்சத்தில் தவறாக ஏதும் நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என குறித்த சாமியார் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது.

எனவே சாமியாருடனான செல்போன் உரையாடல் தொடர்பான ரெக்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

2 வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலைசெய்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தின் கள்ளக்குறிச்சி அருகே 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது, இங்கே நேற்று முன்தினம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று சடலமாக மிதந்துள்ளது.

இதை பார்த்த ஊர்மக்கள் உடனடியாக கீழ்குப்பம் பொலிசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணை நடத்தியதில் அருள்மணி- அஞ்சலை தம்பதியின் குழந்தை என தெரியவந்தது.

அவர்களது வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்ததுடன், அருள்மணி காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கும் அஞ்சலைக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, 2 வயதில் அனுசியா என்ற குழந்தையும் உண்டு.

ஆனால் என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.

எனவே கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அவளது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அங்கே சென்று சண்டையிட்டேன், குழந்தையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பிறந்ததாக இருக்காது என ஆத்திரம் வந்தது. இதனால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் காலையில் நடந்த சோகம் : பாடசாலை சென்ற சிறுமிக்கு எமனாக வந்த வான்!!

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இதில் உமையாள்புரம் பாடசாலையில் தரம் – 03இல் கல்வி கற்று வரும் 8 வயதுடைய ராஜ்குமார் யதுர்சா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுமி இன்று காலை வீட்டிலிருந்து முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது முன்னால் வந்த ஹயஸ் வாகனம் சிறுமியை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11 பேரின் சடலங்கள்… 11 குழாய்கள் : தோண்ட தோண்ட வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை சம்பவத்தில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதில் ஒன்று அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் அந்த குழாய்களில் எதுவும் தண்ணீர் செல்லும்படி இணைக்கப்படவில்லை. புராரி குடும்பம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய டைரி குறிப்புகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 11 குழாய்களின் மர்மம் குறித்து விசாரணை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தலைநகர் டெல்லியை உலுக்கிய இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் 77 வயது நாராயன் தேவி என்பவர் மட்டுமே கழுத்து நெரிபட்டு இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

எஞ்சிய 10 பேரும் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட 57 வயது பிரதிபாவின் மகள் 33 வயதான பிரியங்காவுக்கு கடந்த மாதந்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

விசாரணை அதிகாரிகளால் கைப்பற்ற டைரி குறிப்புகள் மற்றும் கடிதங்களில், அவர்கள் திட்டமிட்டு நாள் குறித்து தற்கொலை செய்து கொண்டது நிரூபணமாகியுள்ளது. ஆனால் மர்மமான அந்த குழாய்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளனர்.

11 குழாய்களில் 4 நேராகவும், நான்கு வளைவாகவும், ஒரு குழாய் தனியாகவும் பொருத்தப்பட்டுள்ளது.

இது அவர்களின் ஆவி வெளியே செல்ல அமைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் சிக்காத நாராயண் தேவியின் இன்னொரு மகனும் மகளும் குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை புகையிரத பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த வகையில் புகையிரதத்தில் பயணம் செய்பவர்களில் புகையிரத சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், புகையிரத சேவைக்காக பெருந்தொகை பணம் செலவிடப்படும் நிலையில் இது தொடர்பில் புகையிரத பயணிகளும் அக்கறை காட்ட வேண்டும்.

எனினும் சிலர் புகையிரத சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக பொது சொத்தினை சேதப்படுத்தியமை, தொடர்பிலான சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அத்துடன் இதனை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை இளைஞர்களின் செயற்பாடு : கண்ணீருடன் நன்றி தெரிவித்த சுவிஸ் பெண்கள்!!

ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் என சுவிஸ் யுவதிகள் இருவர் கூறியுள்ளனர். ஜெனிபர் ஹெமில்டன் மற்றும் லின்ஸி ஹெமில்டன் என்ற இரண்டு யுவதிகளே இவ்வாறு கூறியுள்ளனர்.

குறித்த யுவதிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். அவர்கள் எல்ல பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

சற்று தூரம் பயணித்து கொண்டிருக்கும் போது 5 இளைஞர்கள் இந்த யுவதிகளிடம் பேச முற்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது, அவர்களின் பையை கொள்ளையடித்து கொண்டு அந்த இளைஞர் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

யுவதிகள் பொலிஸாரிடம் சம்பவத்தை கூற முயற்சித்துள்ளனர். எனினும் மொழி பிரச்சினை காரணமாக இதனை அவர்களால் கூற முடியவில்லை. பொலிஸாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

எனினும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 12 இளைஞர்கள் அந்த பகுதியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளனர். அந்த இளைஞர்கள் ஒரளவிற்கு சம்பவத்தை புரிந்து கொண்டதுடன், யுவதிகளுக்கு உதவி இலங்கையின் பெயரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

பையை கொள்ளையடித்தவர்கள் தப்பி ஓடும் போதும் இந்த யுவதிகள் அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கமைய உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் திருடர்களை தேட ஆரம்பித்தனர். அங்குள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் உதவியை பெற்று கொண்ட இளைஞர்கள் திருடர்கள் ஒடிய திசையில் கிடைத்த தடயப்பொருட்களை வைத்து ஒன்றரை மணித்தியாளத்திற்கு திருடனை பிடித்துள்ளனர்.

அதற்கமைய திருடர்களினால் திருடப்பட்ட பணப்பை மீளவும் வெளிநாட்டு யுவதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்னமும் நல்லவர்கள் இருக்கின்றார்கள் எனவும், ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் எனவும் வெளிநாட்டு யுவதிகள் கூறியுள்ளனர். இந்த உதவியை ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று கூறி கண்ணீருடன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் 18 பேருக்கு டெங்கு : மக்களுக்கு எச்சரிக்கை!!

வவுனியாவில் சில பகுதிகளில் டெங்கு அதிகரித்துக்காணப்படுவதாகவும், நேற்று வரையில் 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கும்போது, கடந்த வாரத்தில் கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்டவீதி போன்ற பகுதிகளில் பெருமளவான டெங்கு நுளம்புகள் பெருக்கெடுப்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து இதனைத்தடுத்து முறியடிக்கும் நடவடிக்கையில் சுகாதாரப் பரிசோதகர்கள் 8 பேரடங்கிய குழுவினர் பொது அமைப்புக்கள், கிராம மக்களுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் தற்போது குறித்த பகுதிகளிலிருந்து குட்செட் வீதிக்கு டெங்கு நுளம்புகள் பரவிவருவதாகவும் அப்பகுதியில் டெங்கு நுளம்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளிலுள்ள மாடி வீடுகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றில் கடும் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இங்கிருந்து வெளிப்பகுதிகளுக்கு டெங்கு நுளம்பு பெருகும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது மாலை வேளைகளில் பெய்துவரும் மழையினால் மேலும் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாகவும்,

பொதுமக்கள் தமது இருப்பிடங்களில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் சுகாதாரப்பரிசோதகர்ளின் நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் மாயமாகிய மாணவன் : கண்டால் உடன் அறிவிக்கவும்!!

யாழ். காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவர் யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்று வருகின்றார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 077-4985357, 077-3400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது மாமா தே.இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

றெஜினாவுக்கு நீதி கோரி நாளை முற்றாக முடங்கும் மன்னார்!!

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் அமைதிப் பேரணி ஒன்று இடம் இடம்பெறவுள்ளது.

குறித்த பேரணி நாளை காலை 9 மணிக்கு முருங்கன் பேருந்து தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்ட ரீதியில் நாளை முழு கடையடைப்பை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்சலாந்தில் நள்ளிரவில் நடமாடிய நிர்வாண மனிதன் : அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

சுவிஸ்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெர்ன் மாகாணத்தில் உள்ள Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ஷூ மட்டுமே அணிந்து காணப்படுவதாக தொலைவில் இருந்து பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் ஓராண்டு காலமாக தினசரி இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரும் குறித்த நிர்வாண மனிதரை நேரிடையாக கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணி முடிந்து பெரும்பாலும் நள்ளிரவு தாண்டியே குடியிருப்புக்கு திரும்பும் அவர், அடிக்கடி நிர்வாண மனிதரை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், இரவில் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் ரோந்தில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த நிர்வாண மனிதரை அடையாளம் காண முடியவில்லை என தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே புகார் அளித்த பெண்மணியிடம் பொலிசார் வைத்த கோரிக்கையின்படி, அவர் ஒருமுறை அந்த நிர்வாண மனிதரை தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களால் அந்த நபர் குறித்த விசாரணையை இனியேனும் பொலிசார் துரிதப்படுத்துவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே வீட்டில் 11 சடலங்கள் : மரணத்திற்கு முன்… அதிரவைக்கும் டயரி குறிப்புகள்!!

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டில் இறந்து கிடந்த நிலையில் அவர்கள் எழுதி வைத்த முழு டயரி குறிப்புகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அவர்கள் வீட்டிலிருந்து பொலிசார் கைப்பற்றிய டயரியில் எப்படி தற்கொலை செய்து கொள்வது? எந்த நாளில் செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை இறப்பதற்கு முன் அவர்கள் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், சொர்க்கத்தை அடையும் வழி என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்வது வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் செய்ய வேண்டும்.

தற்கொலை செய்யும் போது, விளக்குகள் அனைத்தும் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும். நள்ளிரவு 12 மணியில் இருந்து ஒரு மணிக்குள்தான் தற்கொலை இருக்க வேண்டும். தற்கொலை செய்யும் போது, அனைவரின் கண்களும் கட்டப்பட வேண்டும், பூஜ்ஜியத்தைத் தவிரவேறு எதையும் பார்க்கக் கூடாது

தற்கொலைக்குப் புடவை அல்லது கயிறு பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பாட்டியை தரையில் கீழே படுக்கவைத்து தற்கொலை செய்யவைக்கலாம் என்று எழுதப்பட்டுள்ளது.

இதுதவிர கடைசி நாளுக்கு முன்பு 7 நாட்கள் பூஜை செய்ய வேண்டும், சடங்குகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் ஆத்மா வெளியே வந்தால், உடனடியாக சாக வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கடந்த மாதம் 26ம் திகதி எழுதப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30ம் திகதி இரவு அனைவரும் கடவுளைச் சந்திக்கச் செல்கிறோம். தற்கொலை செய்யும் போது அனைவரும் நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். கைகள், கால்கள், வாய்,கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் எனவும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 11 பேரும் தாங்கள் இறந்தபின் தங்களுடைய கண்களைத் தானமாக வழங்கிவிடுங்கள் எனவும் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

என் மகனை தூக்கில் போடுங்கள் : ஆவேசமான தந்தை!!

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக, என் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் துக்கு தண்டனை வழங்குங்கள் என குற்றவாளியின் தந்தை கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 26-ம் தேதி பள்ளி சென்ற 8 வயது சிறுமி, தந்து தந்தையின் வருகைக்காக பள்ளியின் வெளியே காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த, இரு காமுகர்கள் சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, உண்மையை வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக கழுத்தையும் அறுத்து, லட்சுமண் தார்வாஜா பகுதியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் வீசி சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பயத்தில் உறைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளும்பொழுது, பேருந்து ஒன்றிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர், டெல்லியை உலுக்கிய நிர்பயா வழக்கு போன்றே சிறுமியும் சிதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஆர்வாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றவாளிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் விரைந்த செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளிகள், இர்பான் மற்றும் அவரது நண்பர் ஆசிப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், எனது மகன் குடிகாரன். அவன் ஒரு அப்பாவி என்று நான் நினைக்கவில்லை. அவன் மீது தவறு உறுதி செய்யப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் என குற்றவாளியின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார்.

முன்னதாக சிறுமியின் தந்தை, தனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கினால் போதும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி வளாகத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட மாணவர் : அதிர்ச்சிக் காரணம்!!

கேரளாவில் கல்லூரி ஒன்றில் புதியவர்களை வரவேற்கும் வாசகம் எழுதுவதில் ஏற்பட்ட மோதலில் எஸ்எப்ஐ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எர்ணாக்குளம் மகாராஜா கல்லூரி வளாக சுவரில் புதிய மாணவர்களை வரவேற்கும் வாசகங்கள் எழுதுவதில் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் அபிமன்யூ கேம்பஸ் முன்னணி மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இன்னொரு எஸ்எப்ஐ உறுப்பினரான அர்ஜுன் (19) மோதலில் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேம்பஸ் முன்னணி, தேசிய வளர்ச்சி முன்னணி சங்கங்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள சந்தேகப்படும்படியான நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மரணித்த கணவர் : நிறைமாத கர்ப்பிணி மனைவியின் நெகிழ்ச்சி முடிவு!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றும் முத்துக்கிருஷ்ணன் என்பவர் விபத்தில் இறந்துபோனார்.

தகவல் அறிந்த பொலிசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முத்துகிருஷ்ணனின் மனைவி சந்திரா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனிடையே மரணமடைந்த முத்துக்கிருஷ்ணின் இரண்டு கண்களும் உயிர்த் துடிப்பிலிருப்பதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவி சந்திராவைத் தொடர்புகொண்டு முத்துக்கிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாகக் கேட்டிருக்கிறார்கள்.

கணவனைப் பறி கொடுத்த சோகத்திற்கிடையே சந்திராவும் அதற்குச் சம்மதித்து, தனது கண்வரின் கண்களை தானமாக வழங்கியுள்ளார்.

நான்கு நாட்களே பிரசவத்திற்கு உள்ள நிலையில், அடுத்தவர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த அவரின் தானக் கொடை அந்தப் பகுதியினரை நெகிழச் செய்திருக்கிறது.

பாதிரியார்களால் சீரழிக்கப்பட்டது இந்த பெண்ணா? வெளியான உண்மைத் தகவல்!!

கேரளாவில் 5 பாதிரியார்களால் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் ஒரு மருத்துவரது என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் என்பவருக்கு கேரள பாதிரியார்களின் லீலைகள் மிகவும் தாமதமாகவே தெரியவந்துள்ளது.

அதுவும் பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட பெண் என இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்த பின்னரே.

ஜூன் 25 ஆம் திகதி இவரது முன்னாள் சக மருத்துவர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து குறித்த புகைப்பட விவகாரத்தை தெரிவித்தபோது, உண்மையில் மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

இவர் மட்டுமல்ல, இவரது கணவருக்கும் குறித்த பாதிரியார்களின் புகைப்படங்களுடன் அஞ்சு ராமச்சந்திரன் புகைப்படமும் இணைக்கப்பட்டு ஒரு வாட்ஸ் ஆப் தகவலும் கிடைத்துள்ளது.

மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரனுக்கு இவ்வாறு புகைப்பட சிக்கல் ஏற்படுவது இது முதன் முறையல்ல.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை எடுத்து அதன் தலைப்பகுதியை பயன்படுத்தி ஒரு ஆபாச புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

பின்னர் அதே புகைப்படம் கேரளாவுக்கு கிடைத்த புது ஆபாச நடிகை என்ற பெயரில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் பொலிசில் சிக்கிய ஆபாச நடிகையின் உரையாடல் என்ற பெயரில் இவரது புகைப்படத்தை இணைத்து வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர் அஞ்சு ராமச்சந்திரன் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன் சைபர் பிரிவினருக்கும் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ள மருத்துவர் அஞ்சு, இதுபோன்ற விவகாரங்களால் பேஸ்புக்கில் உள்ள அனைத்து தனியான புகைப்படங்களையும் தாம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் : திடுக்கிடும் பின்னணித் தகவல்கள்!!

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

பாவனேஷ் பலசரக்கு கடையும், லலித் பாட்டியா தச்சுவேலையும் செய்து வந்துள்ளனர். நேற்று காலை 7.30 மணி வரை ஆகியும் கடை திறக்கப்படாததால், அருகே உள்ளவர்கள் பாவனேஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்தபோது 11 பேர் இறந்து கிடந்தனர்.

பாவனேஷ் தாய் நாராயன் தேவி கழுத்து அறுக்கப்பட்டு தரையில் இறந்து கிடந்தார். அவரது மகள் பிரதீபா, இரு மகன்கள் பாவனேஷ் மற்றும் லலித் பாட்டியா, பாவனேஷ் மனைவி சவிதா, அவரது 3 குழந்தைகள் மீனு, நிதி, துரவ் மற்றும் லலித் பாட்டியாவின் மனைவி டினா, மகன் ஷிவம் ஆகியோர் கண்கள், கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள், பெண்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தது. கொள்ளையடிக்கும் நோக்கில் இச்சம்பவம் நடைபெறவில்லை என முடிவுக்கு வந்த பொலிசார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள சில குறிப்புகளின் அடிப்படையில், குடும்பத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட மதநம்பிக்கையை பின்பற்றியது தெரியவந்துள்ளது.

அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட குறிப்பில், வாய், கண்கள், கைகளை கட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டால் பயத்தை வென்று விடலாம், ஆலமரத்தை ஏழு நாட்கள் பயபக்தியுடன் வழிபடுங்கள், யாராவது வீட்டுக்கு வந்தால் அடுத்தநாள் இதை செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குடும்பத்தினர் வளர்த்து வந்த நாய் மட்டும், மாடியில் கொண்டுபோய் விடப்பட்டுள்ளது.

கீழே இருந்த நாயை கொலையாளி மேலே கொண்டுபோய் விட்டிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

பொலிசார் கூறுகையில், இந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ மூவர் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர், ஆனால் அதன் பின்னர் குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாயை மாடியில் கொண்டு போய் விட்ட நபரின் கைரேகையை சேகரித்துள்ளோம், இதனை ஆய்வு செய்தபின்னரே அது யார் என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.

மதநம்பிக்கையா, கடன்தொல்லையா அல்லது வேறு எதாவது பிரச்சனைக்காக மொத்த குடும்பத்தாரும் தற்கொலை செய்து கொண்டனரா என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மொத்த குடும்பத்தையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.