வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் குழப்பம் : கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சிகள்!!

 

வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர்.

சுமந்திரன் எம்.பி, அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது. இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முரண்பட்டனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் தரப்பினர் கடத்தி சென்றே கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சுமத்தினர்.

ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார். குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே செயற்பட்டதாக சபை தவிசாளர் தெரிவில் செயல்பட்டதாக தெரிவித்தார்.

இதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.

தொப்புள் கொடியோடு சிக்கிக் கிடந்த குழந்தை : அதிர்ச்சியடைந்த துப்புறவு ஊழியர்!!

கேரளாவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை கழிவறையில் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த வெள்ளிக் கிழமை காலை Abdul Rehman என்ற மருத்துவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் ஊழியரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் அந்த நபர் கழிவறையை சுத்தம் செய்த போது, உள்ளே ஏதோ பந்து தான் சிக்கியுள்ளது என்று எண்ணி மிகவும் கஷ்டப்பட்டு வெளியில் எடுத்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் அவர் வெளியில் எடுத்தது பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை, தொப்புள் கொடியோடு இருந்ததால், உடனடியாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை சுதந்திரக் கட்சி வசம்!!

 

தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைத்துள்ளது.
தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டியிட்டமையால் வாக்கெடுப்பிற்கு சென்றது. உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைவாக பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது. சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி 7 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு .ஜெகதீஸ்வரன் 5 வாக்குகளையும், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் 3 வாக்குகளையும் பெற்ற நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற டெல்சன் நீக்கப்பட்டு ஏனைய இருவருக்கும் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் சுதந்திர கட்சியை சேர்ந்த 4பேரும் ஐக்கியதேசிய கட்சியின் 2பேரும் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவரும் ஆசிர்வாதம் அந்தோணிக்கு வாக்களித்தனர், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரனுக்கு கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர். இதனால் ஆசிர்வாதம் அந்தோணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை உபதலைவருக்கான போட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நவரட்ணம் சிவாயினி மற்றும், கூட்டமைப்பு சார்பில் சி.அருள்கரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சிவாயினி 7 வாக்குகளும், அருள்கரன் 6 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் ந.சிவாயினி உபதலைவராக தெரிவு செய்யபட்டார்.

இதேவேளை தலைவர் மற்றும் உப தலைவருக்கான தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் நடுநிலை வகித்திருந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தலைவர் தெரிவின் போது இரண்டாம் சுற்றிலும் உபதலைவருக்கான தெரிவிலும் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட இருவர் இன்றய சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

சிரியாவில் ஆயுதங்களை மலை போல் குவிக்கும் ரஷ்யா : 3ம் உலகப்போருக்கான ஆரம்பமா?

 

குவியல் குவியலாக ஆயுதங்களுடன் ரஷ்ய போர் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று அமெரிக்க கூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதலுக்கு பின்னர் சிரியாவுக்கு ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் ரஷ்ய கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் தொடர்பில் இதுவரை புடின் வெளிப்படையான எந்த கருத்தையும் முன்வைக்காத நிலையில், சக்தி வாய்ந்த ரோந்து படகுகள், ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள், பீரங்கிகள் என கப்பல்களில் ஆயுதங்கள் சிரியா நோக்கி விரைவது ஆபத்தான அறிகுறியாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வெள்ளியன்று தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யாவின் 11 கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ளதாகவும், இது 4-வது முறையாக ரஷ்யா சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மீதான தாக்குதலை பிரித்தானிய பிரதமர் மே, ஜேர்மானிய தலைவர் ஏஞ்சலா மற்றும் பலர் பாராட்டி பேசியுள்ள நிலையில், இணைந்து தாக்குதல் நடத்திய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளியிட்ட கருத்து கவனத்தில் கொள்ளும்படியாக அமைந்துள்ளது.

கூட்டுப்படைகளின் தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், கடுமையான விளைவுகளை தாக்குதலில் ஈடுபட்ட நாடுகள் சந்திக்கும் என ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,

குறித்த தாக்குதலானது போருக்கான ஆயத்தமல்ல எனவும், அதை அவ்வாறு காண வேண்டாம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிரியா ராணுவம் அங்குள்ள அப்பாவி மக்கள் மீது மேலும் தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யா எந்த சலசலப்பும் இன்றி சிரியாவில் ஆயுதங்களை குவிப்பது, அடுத்த பதிலடிக்கு புடின் தயாராகி வருவதை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான கடல் பகுதியில் நீராடும் முல்லைத்தீவு மக்கள்!!

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் முல்லைத்தீவு பெருங்கடல் நோக்கி இன்று படையெடுத்துள்ளனர்.

மேலும் இவர்கள் பாதுகாப்பற்ற கடல் பகுதியில் நீராடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கடற்படப்பில் கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்கள் மூவர் சென்று நீராடியிருந்த நிலையில் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அந்த கடல் பகுதி குளிப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வெப்பநிலை அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடலைநோக்கி படையெடுக்கின்றனர்.

யாழில் முதியவர் ஒருவர் படைத்துள்ள சாதனை!!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவரின் சாதனை பலராலும் பேசப்படுகின்றது. யாழ். மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவரே சாதனை படைத்துள்ளார்.

இவர், ஹயஸ் வாகனம் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியுடன் சேர்த்துக் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை குறித்த வாகனத்தை இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

யாழில் இரு இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

குறித்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீதேவியின் மகள் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் : கடுப்பாகிய ரசிகர்கள்!!

நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டவேளை, அங்கு மரணமடைந்தார்.

இதனடிப்படையில் தனி விமானம் மூலம் ஸ்ரீதோவியின் உடல் இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதிக் கிரியைகள் முடிந்து தற்போது அந்த பரபரப்பு மௌனமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியின் பிள்ளைகள் பக்கம் பலரது கவனம் திரும்பியுள்ளது. இதனால் அவர்கள் செய்யும் விடயங்கள் குறித்து பலர் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ஸ்ரீதேவியின் 2 ஆவது மகள் குஷி, கவர்ச்சி உடையில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால், பலர் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அவரது கடைசி மக்களும் தனது அண்ணாவின் வீட்டுக்கு சென்ற போதே அணிந்த உடையும் பலரால் விமர்ச்சிக்கப்பட்டு வந்தாலும் அவருடைய அண்ணன் பதிலடி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவிற்கு ஆப்புக்கு மேல் ஆப்பு : அடுத்த அதிர்ச்சி கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்!!

ஆர்யாவின் நிகழ்ச்சி விறுவிறுப்பைத் தாண்டி யாரை ஆர்யா கரம் பிடிக்க போறார் என்ற ஆர்வம் தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் அன்றி உலக தமிழர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

16 பெண்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி தற்போது மூன்று பெண்களுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த வாரமளவில் தெரிந்து விடும் யார் அந்த அதிஷ்டசாலி என்று. நிகழ்ச்சியில் இரண்டு கேரளப் பெண்களுடன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணும் போட்டியில் உள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை தொடங்கும் போதே ஒரு நிபந்தனையின் கீழ் தான் ஆர்யா நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை கண்டிப்பாக ஆர்யா திருமணம் செய்ய வேண்டும் என்பதாகும். இது கூடப் பரவாயில்லை. இன்னொரு கண்டிப்பான நிபந்தையும் உள்ளது.

அது என்னவென்றால், ஆர்யா மனம் முடிக்கும் பெண்ணுடன் திருமணமான நாளில் இருந்து இரு வருடங்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் விவாகாரத்தோ, பிரிந்து இருப்பதோ முடியாது. அந்த இரண்டு வருடங்களுக்கு இரண்டு இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியே ஆக வேண்டும் என்பதாகும்.

இதை அறிந்த நெட்டிசன்கள் ஆர்யாவையும் அந்த நிகழ்ச்சியையும் கலாய்த்து வருகின்றனர்.

வவுனியா புகையிரத நிலைய பெயர்ப் பலகையினால் சர்ச்சை!!

வவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லையென கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த பெயர்ப்பலகையில், ‘வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்’ என்ற வாசகம் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் பெரிதாகவும் தமிழ், ஆங்கில மொழிகளில் மிகவும் சிறிதாகவும் காணப்படுவது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

90 சதவீத தமிழ் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியையே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளதுடன், இல்லாவிட்டால் 3 மொழிகளையுமே ஒரே அளவில் பொறித்திருக்கலாம் எனவும் பொது அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரச கரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையாக தமிழர் வாழ்கின்ற பகுதியிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுவது இன நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் முகமாக அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபையின் உபதவிசாளராக சுந்தரம் குமாரசுவாமி தெரிவு!!

வவுனியா நகரசபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று(16.04.2018) காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆதரவாக 9 வாக்குகளும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமி புதிய உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுந்தரம் குமாரசுவாமிக்கு , ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தனர்.

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இ.கௌதமன் தெரிவு!!

வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (16.04.2018) காலை வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.

பகிரங்க வாக்களிப்பின் போது சேனாதிராசா 09 வாக்குகளையும் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவது யார் என்பதில் பல நாட்களாக இழுபறி நிலவிவந்த நிலையில் இப் பிரச்னை இன்று ஒருவாறாக முடிவிற்கு வந்துள்ளது.

இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை!!

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடவடிக்கை 2017ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. எனினும் சாரதிகள் 6 மாதங்களின் பின்னர் பொருத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அந்த 6 மாத சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் ஒரு மாத கால சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என கோதாகொட குறிப்பிட்டுள்ளார். தற்போது நாடு முழுவதும் 11,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் பலி : தாய் வைத்தியசாலையில்!!

 

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின், எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், தாய் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் எல்ல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 38 வயதுடைய தந்தையும், 4 வயது மகனுமே உயிரிழந்துள்ளனர். தந்தையால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை!!

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்து குறித்த பெண்ணின் கணவர் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்!!(2ம் இணைப்பு)

 

வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகர சபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்து.

கடற்கரையில் குழி தோண்டிய மீனவருக்கு கிடைத்த இரும்புப் பெட்டி!!

 

மன்னார் – பேசாலை, கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு தொகுதி மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டியுள்ளார்.

இதன்போது இரும்பு பெட்டியொன்று அங்கிருப்பதை அவதானித்த அவர் அருகிலுள்ள கடற்படையினரிடம் இது தொடர்பில் அறிவித்து, பின் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.