கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி விஜயகுமாரி நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
கொழும்பில் பணியாற்றும் இவர் கடந்த 12ஆம் திகதி வீடு திரும்பவுள்ளதாக தனது மனைவியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் கொழும்பில் பணியாற்றிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, “11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை” என பதில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டவர்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டை முன்னிட்டு களுத்துறை கடற்கரைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களினால் இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இணைந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கயிறு இழுத்தல், பனிஸ் சாப்பிடுதல் போன்ற விளையாட்டுகளில் மிகவும் ஆர்வத்துடன் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டனர். அத்துடன் சிங்கள பெண்கள் போன்று உடை அணிந்து வெளிநாட்டு பெண்கள் அங்கு வருகைத்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – மாங்குளம், நீதிபுரம் பகுதியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவுனியா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கோ.இசைப்பிரியன் என்ற 12 வயது சிறுவனவே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த சிறுவனை அவரது தந்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தின் ஒருபகுதி உட்கூரையானது உடைந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், “இதுவரை செயல்பட்டு வந்த 10 குடிவரவு அலுவலகங்களில் 3 பிரிவுகளை மறுசீரமைப்பு காரணமாக மூடியுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.
பெரும் மழை காலங்களில் இதற்கு முன்னரும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள உட்கூரையானது பல முறை உடைந்து விழுந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும் நிர்ந்தர தீர்வுக்கு இதுவரை அதிகாரிகளால் எட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.
நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை இதுபோன்ற செயல்கள் கடுமையாக பாதிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான பதிவொன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு பயணம் சென்றுள்ள அவர் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான பதிவொன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதுடன் சிவகார்திகேயனினுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களிலில் நடித்துள்ளார்.
வவுனியா நகரசபையின் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு இவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (16.04.2018) காலை வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்களிப்பின் போது சேனாதிராசா 09 வாக்குகளையும் கௌதமன் 11 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணியின் கௌதமன் வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவாகியுள்ளார்.
வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவது யார் என்பதில் பல நாட்களாக இழுபறி நிலவிவந்த நிலையில் இப் பிரச்னை இன்று ஒருவாறாக முடிவிற்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதற்கு 35 வயது நபர் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகன் (38)-இளமதி(34). இவர்களுக்கு லதா(17) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சென்னை குரோம் பேட்டை பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது லதாவைக் கண்டவுடன் லதாவை எனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது தாயாரான இளமதியிடம் கேட்டுள்ளார். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
நீ இப்படி இருக்கையில் நான் எப்படி என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியும், அதுமட்டுமின்றி அவள் உனக்கு மகள் மாதிரி என்று இளமதி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் லதா பள்ளிக்கு சென்ற போது அவரை காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து பொலிசில் புகார் அளித்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதால், பெற்றோர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
அதன் பின் பொலிசார் லதாவை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். மணிகண்டனும் தூரத்து உறவினர் என்பதால் பெற்றோரும் பெரிய அளவில் பொலிசாரிடம் புகார் அளிக்கவில்லை.
இதை சாதகமாக்கிக் கொண்ட மணிகண்டன் மீண்டும் அந்த சிறுமியை கடந்த மார்ச் மாதம் கடத்தியுள்ளான். மீண்டும் பொலிசாரிடம் புகார் அளித்தும் அலட்சியக் காட்டியதால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன் பின் மணிகண்டனையும் லதாவையும் மீட்டனர். மணிகண்டனுக்கு 1 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறுமியும் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்தார். மகளின் பிரிவை தாங்கமல் இளமதி மீண்டும் மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்து படிக்க வைத்து வந்துள்ளார்.
தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வரும் லதாவை கடந்த மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளியில் வந்த மணிகண்டன் மீண்டும் நான்கு பேருடன் கடத்தியுள்ளான்.
இது குறித்து பெற்றோர் புகார் அளித்தும் பொலிசார் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மகள் கடத்தப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டதாக கூறி அவர்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.
இதனால் பொலிசாரோ இரண்டு தனிப்படைகள் அமைத்து மணிகண்டனை தேடி வருவதாக கூறியுள்ளனர். மேலும் சாதாரண ஏழைக் குடும்பம் என்பதால் மிகப் பெரிய அநியாயம் நடப்பதாகவும், மணிகண்டனின் இந்த துணிச்சலுக்கு பொலிசாரே காரணம் தான் எனவும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா என்று உறவினர்கள் கூறி வருகின்றனர்.
காஷ்மீரில் மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளார் கேரள பத்திரிக்கையாளர். காஷ்மீரின் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா, பொலிஸ் அதிகாரி உட்பட எட்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் ராம் தனது மகளுக்கு ஆஷிபா ராஜ் என பெயர் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், எனது மகளுக்கு என்ன பெயர் சூட்டுவது என இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது தான் ஆஷிபா செய்தியை கேட்டு மனம் நொந்து போனேன்.
என்னுடைய முதல் குழந்தைக்கு ஏழு வயதாகிறது, இந்த நிலை என் குழந்தைக்கு வந்தால் என்னவாகும் என ஒரு நிமிடம் யோசித்தேன். இரு பெண் குழந்தைகளின் தந்தையான நான் நிம்மதியை இழந்து விட்டேன், எனவே அவளது நினைவாக என் குழந்தைக்கு ஆஷிபா ராஜ் என பெயர் சூட்டினேன். இதுகுறித்து என் மனைவியிடம் சொன்ன போதும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டதும் வைரலாகியதுடன் இதுவரையிலும் 15,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள சொக்லேட் நிறுவனம் டோனிக்கு சொக்லேட்டால் ஆன சிலை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
இந்ந்லையில், தல டோனிக்கு சொக்லேட்டால் செய்யப்பட்ட சிலை ஒன்றை சென்னையை சேர்ந்த சொக்லேட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 386 கிலோ கிராம் எடையில், 5 அடி 9 அங்குலத்தில் டோனியின் உருவத்தை சிலையாக உருவாக்கியுள்ளனர். இதற்கு அவர்களுக்கு 151 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.
இந்த சிலையை அடுத்த மாதம் ஆர்.கே. சாலையில் உள்ள கஃபே அருகில் வைக்கயிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண்டுக்கு மேலாக அவரை துன்புறுத்தி வந்த 42 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லியை சேர்ந்த 42 வயதான நபர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ ஓட்டுனர் பீகாருக்கு சென்ற போது ஒரு ஏழ்மையான குடும்பத்தை சந்தித்துள்ளார். அந்த குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்ட நிலையில் தாய் தனது 13 வயது மகளுடன் வசித்து வந்தார்.
தாயிடம் சென்று பேசிய ஆட்டோ ஓட்டுனர், அவரின் மகளை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவளை வசதியாக வைத்து காப்பாற்றுவேன் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய தாய், ஆட்டோ ஓட்டுனருக்கு சிறுமியான தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
பின்னர் டெல்லிக்கு சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் தினமும் சிறுமியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதோடு, வீட்டு வேலைகள் பலவற்றை செய்ய சொல்லி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறுமி தினமும் இரவில் அழும் சத்தத்தை கேட்ட அவர் வீட்டருகில் வசிக்கும் நபர் சமீபத்தில் இது குறித்து சிறுவர்கள் உதவி மையத்துக்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் உதவியுடன் சம்பவ இடத்துக்கு வந்த மைய அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து அவரை கொடுமைப்படுத்தி வந்த ஆட்டோ ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், இதில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரித்தும் வருகிறார்கள்
ஆஷிபாவை கொன்றது சரிதான் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை தேடி வருகிறார்கள்.
ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி ஆஷிபா எட்டு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக கேரளாவின் பலரிவடோமை சேர்ந்த கோடாக் மகேந்திரா தனியார் வங்கி துணை மேலாளரான விஷ்ணு நந்தகுமார் பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில், இந்த வயதிலேயே ஆஷிபா கொல்லப்பட்டது நல்லது தான், இல்லையென்றால் அவள் வளர்ந்து இந்தியாவுக்கு எதிராக மனித வெடிகுண்டாக வருங்காலத்தில் வந்திருப்பார் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் கண்டணங்கள் எழுந்த நிலையில் மேலாளர் பதவியிலிருந்து விஷ்ணுவை பணி நீக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து விஷ்ணு தனது பணியை திறம்பட செய்யவில்லை என கூறப்பட்டு அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நந்தகுமாரின் மகன் தான் விஷ்ணு என தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிசார் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விஷ்ணு தலைமறைவாக உள்ளதால் அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
சொத்து தகராறு காரணமாக 1 லட்சத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேமலதா சுதர். இவருடை கணவர் சமீபத்தில் மறைந்து விட்டார். இவர்களுக்கு மோஹித் (21) என்ற மகன் உள்ளார். ஆனால் போதைக்கு அடிமையாகிவிட்ட மோஹித் தினமும் அவரது தாயை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக எரிச்சல் அடைந்த பிரேமலதா கோபித்துக்கொண்டு அவரது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரேமலதா செலவுக்கு பணம் இல்லாததால் தன்னிடம் இருந்த நிலத்தை விற்க முடிவு செய்து மகாதேவ் என்பவரை அனுகினார்.
ஆனால் நிலத்தை விற்க பிரேமலதா மகன் மோஹித் ஒப்புக்கொள்ளவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா பெற்ற மகனையை தீர்த்துக்கட்ட துணிந்தார் .இதற்காக அவர் கிராமத்தின் அருகே தாபா நடத்தி வரும் கணபத் சிங் ராஜ்புட் என்பவரிடம் மகனை கொலை செய்ய முன்பனமாக 50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். காரியம் முடிந்த பின்னர் மீதி 50 ஆயிரத்தை கொடுப்பதாக பிரேமலதா கூறி உறுதியளித்தார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மோஹித், கணபத்தின் தாபாவுக்கு வந்தார். அப்போது அவர் கேட்ட உணவில் கணபத் தூக்க மாத்திரையை கலந்தார். இதை சாப்பிட்டவுடன் மோஹித்துக்கு ஒரு பீரும் வழங்கப்பட்டது.
இதையடுத்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அதிக போதையில் இருந்ததால் மோஹித்துடன் கணபத்தின் பணியாளர் அனில் நாயக் என்பவரும் உடன் சென்றார். இவர்களை கணபத் உள்ளிட்டோர் பின்தொடர்ந்தனர்.
சிவானா என்ற இடத்தில் வண்டியை நிறுத்திய அனில் நாயக், மோஹித்துக்கு மற்றொரு பீரை கொடுத்து குடிக்கச் சொன்னார். இதனால் போதை தலைக்கேறிய மோஹித் தனது சுயநினைவை இழந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு துணியால் மொஹித் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன் பின்னர் ஒன்றும் தெரியாதது போல் எல்லோரும் தாபாவில் அவரவர் வேலையை செய்ய தொடங்கினர். சிறிது நேரம் கழித்து மொஹித் சடலத்தை பார்த்து சிலர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மொஹித் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி கொலை குறித்து விசாரிக்க தொடங்கினர். ஆனால் இந்த கொலைக்கு துப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த போலீஸாருக்கு அங்கிருந்த டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மிகவும் உதவியாக இருந்தன. இதை வைத்து கணபத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது தாபா கடை கணபத் செய்த கொலையை பொலிஸிடம் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து பிரேமலதா, மருமகன் கிஷான் சுதர், கணபத், மகாதேவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அனில் நாயக்கை போலீஸார் தேடி வருகின்றனர். கேவலம் சொத்துக்காக பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் நடந்த கெமிக்கல் தாக்குதலில் பெருமளவு குளோரின் மற்றும் சரின் போன்ற கொடிய நச்சு வாயுவையே அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அங்கிருகும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக அமெரிக்க போன்ற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த 7ஆம் திகதி சிரியாவின் கிழக்கு கவுட்ட பகுதிக்கு உட்பட்ட Douma நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 75-க்கும் அதிகமானோர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகினர்.
இந்த ரசாயன தாக்குதலுக்கு பின்னால் சிரியா ஜனாதிபதி Bashar al-Assad இருப்பதாகவும், அப்பாவி மக்கள் இனிமேலும் சாகக் கூடாது என்பதற்காக அமெரிக்க கூட்டுப் படையுடன் இணைந்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த வெள்ளிக் கிழமை சிரியாவின் ரசாயன ஆயுத குடோன்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஓராண்டில் மட்டும் சிரியாவில் 12 முறை ரசாயான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 11 தாக்குதலில் பெரும்பாலானோர் கொடிய நச்சு வாயுவின் காரணமாகவே இறந்துள்ளனர்.
44 வகையான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர், அதில் பெரும்பாலும் குளோரின் மற்றும் சரினையே இரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர். பிரங்கி குண்டுகளின் உள்ளே வைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் பத்திரிக்கையாளர்கள் எடுத்த சிறந்த புகைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வெனிசுலா புகைப்படக் கலைஞரான ரோனால்ட் ஸ்கெமிட் எடுத்த புகைப்படம் இந்த வருடத்தின் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வெனிசுலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக 2017ம் ஆண்டு பெரும் கலவர்ம் வெடித்தது. அதிபருக்கு எதிரான அந்த கலவரத்தை அடக்க பொலிஸ் தடியடி நடத்தியது.
அப்போது ஜோஸ் விக்டர் சலாஸர் பல்ஸா எனும் 28 வயது இளைஞர் போராட்டத்தில் தன் மீது தீ வைத்துக்கொண்டார். அவர் அதிலிருந்து மீள முடியாமல் சாலையில் ஓடினார்.
அந்த காட்சியை தான் வெனிசுலா புகைப்படக் கலைஞரான ரோனால்ட் ஸ்கெமிட் படம் பிடித்தார். அதிபருக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற இந்த புகைப்படமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
நெருப்பின் வீரியத்தையும் போராட்டத்தின் ஆழத்தையும் படம்பிடித்த அந்தப் புகைப்படக் கலைஞருக்கு தான் 2018-ம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருது கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் புகைப்படம் நிச்சயம் இதயம் பலவீணமானவர்கள் பார்க்கத்தகாதவைதான்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு பகுதியில் தகப்பன்-மகனுக்கு இடையில் நடைபெற்ற மோதலை விலக்கச்சென்ற ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை மாலை கட்டுமுறிவில் உள்ள வீட்டில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் தகப்பன் மண்வெட்டியினால் மகனை தாக்க முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த எஸ்.சௌந்தரராஜன் என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தை மண்டிவெட்டியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விக்னேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்று புத்தாண்டு கொண்டாடட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை வாகரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007 ஆம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.