வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (14.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,
415 நாட்களாக எமது பிள்ளைகளை தேடி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதுவருட தினத்தில் தமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என தெரிவித்தும் தமிழ் அரசியல்வாதிகள் தமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் 415 நாட்களைக்கடந்து இடம்பெற்றுவருகின்றபோதும் இவர்களுக்கு இதுவரை தீர்வு வழங்கபபடவில்லை.
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடே இச் சம்பவத்திற்கு காரணமெனவும் இச் சம்பவத்தில் காயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் -4ஐச் சேர்ந்த சிவகுமார் தியாகரட்னம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,
தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா ஆசிக்குளம் பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய சிங்காரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரன் இன்று (15.04.2018) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸார் காவல் அரன் மீது CT-100 , பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தூக்கி அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் சி.சி.ரி.வி காணொளியில் உதவியுடனும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா ஆதிவிநாயகர் தேவஸ்தானத்தின் சித்திரைத் தேர் பவனி நேற்று (14.04.2017) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் புதுவருட தினமான நேற்று சித்திரைத் தேர் பவனி சிறப்பாக இடம்பெற்றது.
பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அடியவர்கள் தமது நிவர்த்திக் கடன்களைத் தீர்க்க அங்கப் பிரதிஸ்டை செய்து வரவும், கற்பூரச்சட்டி ஏந்தி வரவும் விநாயகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட சித்திரைத் தேரில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
புதுவருட தினம் ஆகையால் அடியார்கள் பலரும் புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்டு ஆதிவிநாயகப் பெருமானின் அருளினைப் பெற்றுக் கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை உடனடியாக கூட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இன்று அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவுடன் இணைந்து அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகளின் கூட்டணி சிரியாவின் டமஸ்கஸ் நகரின் பல இடங்களை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை இன்று (14) கூட்டுமாறு, ரஷ்யா அவசர வேண்டுகோளை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் எஸ்-300 ரக ஏவுகணை தடுப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ரஷ்யா இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுங்கள்” என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிரியா மற்றும் அதன் பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையினால் அந்நாட்டுடனான அனைத்து சர்வதேச தொடர்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பிலான விலைப் பொறிமுறைமை எதிர்வரும் மே மாதம் முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ற வகையில் இலங்கையில் எரிபொருளுக்கான விலைகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் இந்த பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சரின் உத்தரவின் பேரில் விலைப் பொறிமுறைமை குறித்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு கட்டம் கட்டமாக விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளின் ஒன்றாகவும், இந்த விலைப் பொறிமுறைமை பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மின்சாரக் கட்டணங்களுக்கான விலைப் பொறிமுறைமை பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், வடமேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் இன்று மாலை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றரை தாண்டிய அடை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.
மழை பெய்யும் நேரத்தில் 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அமுலிலுள்ள பணத்திற்கு பதிலாக ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டச் கார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டையை கொள்வனவு செய்யும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணிக்க முடியும்.
இந்த அட்டை பயணிகள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போது அட்டையில் அதற்கான கட்டணம் குறைத்து கொள்ளப்படும்.
இந்த ட்ச் அட்டை பயன்படுத்துவதனால் மீதி பணம் கிடைக்காமை போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும் என தமிழக சின்னத்திரை நடிகர் மொஹமட் அஷீம் தெரிவித்துள்ளார். தான் பிறப்பால் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு மிகவும் பிடித்த புரட்சியாளர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஷீம் வீழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவன் பிரபாகரனை பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசியல்வாதிகளான கலைஞர், சீமான், திருமாவளவன் போன்றோரையும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை உலகில் அஷீம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார். அவர் நடித்த பிரியமானவளே, பகல் நிலவு போன்ற மெகா தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக இணைந்து சிரியா மீது உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தப்படுவதை சிரியா அரசு செய்தி ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறுகையில், ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே தாக்குதல் தொடங்கியுள்ளது. இது ஒரு தனி மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல, அசுரனின் தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
சிரியா அரசு மக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்துவதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. எனினும் ரசாயன தாக்குதலை சிரியா மறுத்த நிலையில், ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களுடன் வலி.வடக்கில் ஒருவர் காவடி எடுத்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 27 வருடங்களாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.வடக்கில் ஒரு பகுதியான 683 ஏக்கர் நிலரப்பரப்பு இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை தொடர்ந்து ,ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியை சேரந்த ஒருவர் காவடி எடுத்துள்ளார். இவர் தமது தமது உடலில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதியின் படங்களை உடலில் கட்டிக்கொண்டு காவடி எடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது போல் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த இளைஞரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ்ப்பச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் யுவராஜ் என்கிற இளவேந்தன். இவர் தனது முகநூலில், இப்படி மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் கிராம உதவியாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர்களில் யுவராஜும் இருந்தார். இதனைதொடர்ந்து சோழவந்தான் காவல்துறையினர் யுவராஜை கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் மது முன்பாக ஆஜர்படுத்தினர்கள். யுவராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் இருக்கைகு இடையே சிக்கி 16 வயது சிறுவன் பரிதாபமக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மடிசான்வில்லே பகுதியில் இயங்கி வந்த பள்ளியில் படித்து வந்த கையே பிளஷ் எனும் சிறுவன் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் தற்செயலாக ஏறி அமர்ந்துள்ளான்.
ஆனால் தெரியாமல் காரில் இருந்த ஃபோல்டிங் பொத்தானை சிறுவன் அழுத்திய காரணத்தினால் அவன் அமர்ந்து இருந்த இருக்கை தானியங்கி முறையில் மடிய தொடங்கியுள்ளது.
இருக்கை முழுவதும் மடிந்த காரணத்தால் சிறுவன் பிளஷின் உடல் மெதுவாக நசுங்க தொடங்கியுள்ளது. பதட்டத்தில் இருந்த சிறுவன் ஆபத்தின் தன்மை உணர்ந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று பொலிஸ்க்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளான்.
ஆனால் சிறுவன் எந்த வாகனத்தில் அமர்ந்திருக்கிறான் என்ற விவரம் பொலிஸ்க்கு தெரியாத காரணத்தினால் அனைத்து கார்களையும் சோதித்து சிறுவன் சிக்கிக்கொண்ட காரை கண்டுபிடிக்க பொலிசாருக்கு தாமதமாகிவிட்டது.
இதன் காரணமாக குறித்த நேரத்தில் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. இருக்கையில் சிக்கிக்கொண்ட போது பொலிஸாரிடம் பேசிய சிறுவன் நான் இறந்துவிட்டால் என் தாயிடம் தெரிவியுங்கள் நான் அவரை ரொம்ப நேசிக்கின்றேன் என உயிர்பிரியும் தருவாயிலும் சொல்லியுள்ளான்.
விளையாட்டுக்காக காரில் ஏறிய சிறுவன் இருக்கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் வெளியாகிய கபொத சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம் வவுனியா வடக்கு வலயத்தில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்து ஓமந்தை கோட்டத்திற்கும், வவுனியா வடக்கு வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
அந்த வகையில் செல்வராசா கஸ்மிதா எனும் மாணவி 8A சித்திகளையும் வரலாறு பாடத்தில் B சித்திகளையும் பெற்று ஓமந்தை கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதுடன் பாடசாலையானது 72% சித்திகளை ஓமந்தை கோட்டத்தில் பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. அத்துடன் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திலும் 72% க்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது.
இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பொழிந்து விவசாயம் செழிக்கும்.
மேஷம் – தைரியம் மிக்க மேஷ இராசிக்காரர்களே! சூரியன் மேஷ இராசியில் உச்சத்தில் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் இராசிநாதன் செவ்வாய் 9ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்திருக்கிறார். ஆரம்பித்தில் சின்னச் சின்ன கஷ்டங்கள் இருந்தாலும் குரு, சனி பகவானின் அருளால் நன்மையே நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு இந்த ஆண்டு புது வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம் – அழகுணர்ச்சி மிக்க ரிஷப இராசிக்காரர்களே! புது வருட ஆரம்பத்தில் குருவின் சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் நேர்ந்தாலும் புரட்டாசிக்குப் பின்னர் தொட்ட காரியம் துலங்கும். பலருக்கும் திருமணம் கைகூடும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் புது வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்து குடி போகும் யோகம் கை கூடி வருது. மாசி மாதத்திற்கு பின்னர் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் வார்த்தையை கவனமாக உபயோகிக்கவும், இல்லாவிட்டால் வம்பாக போய்விடும்.
மிதுனம் – புத்திசாலித்தனம் மிக்க மிதுன இராசிக்காரர்களே! உங்கள் இராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் அதிர்ஷ்ட காற்று வீசும். உடல் நலனிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும். திடீர் சொத்துக்கள் கிடைக்கும். கண்டக சனி காலமாகையால் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
கடகம் – கற்பனை திறன் மிக்க கடக இராசிக்காரர்களே! 4ஆம் வீட்டு குருவால் நன்மைகள் இல்லை என்றாலும் புரட்டாசிக்குப் பின்னர் 5ஆம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். 6ஆம் இடத்து சனியால் அனைத்தும் கைகூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும். பணவரவு அதிகரிக்கும்.
சிம்மம் – தன்னம்பிக்கை கொண்ட சிம்ம இராசிக்காரர்களே! முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், சுகஸ்தானமாகிய நான்காவது வீட்டில் புரட்டாசிக்குப் பின்னர் அமரப்போகிறார். மனதில் தைரியம் அதிகரிக்கும். நிலம் வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்கள் குடும்ப விஷயத்தில் பிறரை தலையிட அனுமதிக்காதீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். லட்சுமி நரசிம்மரை வணங்கி வர நல்லதே நடக்கும்.
கன்னி – அறிவுக்கூர்மை கொண்ட கன்னி இராசிக்காரர்களே! குரு பகவான் உங்கள் இராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் முயற்சி ஸ்தானமாகிய மூன்றாமிடத்திற்கு செல்கிறார். புதன்பகவான் நேரடியாக பார்ப்பதால் தோற்றத்தில் பொலிவும் ஆளுமைத்திறனும் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 4ஆம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். மறதியால் பணம், விலை உயர்ந்த ஆபரணத்தை இழக்க நேரிடும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இந்த ஆண்டு கிடைக்கும்.
துலாம் – எதையும் சரிசமமாக பாக்கும் நியாய குணம் கொண்ட துலாம் இராசிக்காரர்களே! புத்தாண்டு பிறக்கும் போது ஜென்மஇராசியில் அமர்ந்திருக்கிறார் குரு. சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் சில நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தன ஸ்தானத்தில் அமரும் குருவினால் பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் இராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். அலுவலகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். கேதுவினால் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டமாக சொத்து சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம் – அமைதியும், அன்பும் கொண்ட விருச்சிக இராசிக்காரங்களே! உங்கள் இராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், புரட்டாசிக்குப் பின்னர் உங்கள் ஜென்ம ராசியில் குரு அமர்ந்தாலும் குரு பார்வை பெரும் இடங்களால் அதிக நன்மை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தனுசு – எதையும் நேர்மையாக அணுகும் தனுசு இராசிக்காரர்களே உங்கள் இராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் உங்களின் இராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது வீட்டிற்கு குடியேறுவார்கள். ஜென்மச் சனியாகத் தொடர்வதால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
மகரம் – பொறுமை குணம் கொண்ட மகர இராசிக்காரர்களே! உங்கள் இராசிக்கு 10வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறக்கிறது. வருமானம் உயரும். வீட்டிலும் அலுவலகத்திலும் பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். ஏழரை சனி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
கும்பம் – குடத்தில் இட்ட தங்கம் போல இருக்கும் கும்ப இராசிக்காரர்களே! குரு உங்கள் இராசிக்கு 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் இராசியை பார்ப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புரட்டாசிக்கு பின்னர் குரு பகவான் உங்கள் இராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். உங்கள் இராசி அதிபதி சனி, இராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செல்வ வளம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் அதிகம் நடக்கும்.
மீனம் – ஆழ்கடல் அமைதி போல எதையும் மனதில் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும் மீன இராசிக்காரர்களே! இராசி நாயகன் குரு புரட்டாசி 18ஆம் தேதி வரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் என்றாலும் குடும்ப ஸ்தானம், 4ஆம் இடம், 12ஆம் இடங்களை பார்ப்பதால் நன்மையே நடக்கும். புரட்டாசி 18ஆம் தேதிக்குப் பின்னர் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வீடு, மனை வாங்குவீர்கள். திருமணம் கை கூடி வரும். செவ்வாய் கேது சேர்க்கையால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் மருத்துவர்களையே ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் Kansas பகுதியைச் சேர்ந்தவர் Heather Hendershot (25). சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்கு தாயான Heather தன் உடல் நலத்தை கண்காணிப்பதற்காக ஆப்பிள் வாட்ச் ஒன்றை வாங்கியிருந்தார். கடந்த மாதத்தில் ஒரு நாள் Heatherஇன் வாட்ச் திடீரென்று அவரது இதயத்துடிப்பு அதிகரித்திருப்பதன் அடையாளமாக எச்சரிக்கை ஒலி எழுப்பத் தொடங்கியுள்ளது.
தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உறுதியாக நம்பும் Heather, வாட்சில் ஏதோ கோளாறு என்று எண்ணி அலாரத்தை ஆஃப் செய்து விட்டார். ஆனால் வாட்ச் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒலி எழுப்பவே அவரது கணவர் அந்த வாட்சை தான் வாங்கி அணிந்து பார்த்திருக்கிறார்.
அப்போது வாட்ச் ஒலி எதுவும் எழுப்பவில்லை, எனவே அவர் தனது மனைவியை வற்புறுத்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தார்கள். அதிர்ச்சியூட்டும் விதமாக அவருக்கு Hyperthyroidism என்னும் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.
பொதுவாக Hyperthyroidism இருந்தால் உடலில் பல அறிகுறிகள் காணப்படும், ஆனால் Heatherக்கு எந்த அறிகுறியும் இல்லை. அவரது வாட்ச் மட்டும் சமிக்ஞை கொடுக்காதிருந்தால் அவர் தனது பிரச்சினையை கவனிக்காமலே விட்டிருப்பார், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
பொதுவாக மருத்துவர்கள் இதுபோன்ற வாட்சுகளை நம்புவதில்லை. அவை தவறாக ஒலி எழுப்பி தேவையற்ற மன அழுத்தத்தை உண்டாக்கி இதய துடிப்பை அதிகரிக்கச் செய்துவிடும் என்று பல மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அது தவறு என்று ஆப்பிள் வாட்ச் நிரூபித்திருக்கிறது, Heatherஇன் விடயத்தில் அது அவரது உயிரையே காப்பாற்றியிருக்கிறது.