வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம்!!

 
தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களிற்கான, சத்தியபிரமாண நிகழ்வு நேற்று (31.03.2018) இடம்பெற்றது.

வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராஜா தலைமைதாங்கினார்.

இந்நிகழ்வின் போது, வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 25 உறுப்பினர்கள் சட்டத்தரணி முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராசா, தியகராஜா, தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர், ஈழவர் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் செந்தில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்-2018

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த  30/03/2018  வெள்ளிகிழமை இடம்பெற்றது .


ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு எட்டு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.


எட்டரை மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று ஒன்பதரை மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.


தொடர்ந்து வெளிவீதி உலாவந்து யாகம் கலைக்கப்பெற்று வழமையான பூசையுடன் பகல் உற்சவம் நிறைவு பெற்றது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா-2018

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  கடந்த வியாழகிழமை (29/03/2018) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது. தொடர்ந்து கலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பது  மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு கலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.

மேற்படி உற்சவத்தில் பெருமளவான   பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.  தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த  அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும்  தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

 

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 28.03.2018 அன்று   சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் அதனை தொடர்ந்து வீ.கரன் குழுவினரின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்றது. அருளகம் சிறுவர்களது சிறப்பு பண்ணிசைகச்சேரிஇடம்பெற்றது.

தொடர்ந்து மாலை எட்டுமணியளவில் வசந்த் மண்டப பூசை இடம்பெற்று ஒன்பது மணியளவில் வெடியோசைகள் வானை பிளக்க எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.

வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞனின் துணிச்சலான செயற்பாடு : உயிர் தப்பிய பெண்!!

இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் துணிச்சலாக செயற்பட்டவருக்கான விருதினை பெற்றுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சொஹான் சேனாநாயக்க என்ற இளைஞன் அவுஸ்திரேலியாவின் துணிச்சலுக்கான விருதான ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.

சொஹான் சேனாநாயக்க தனது உயிரையும் துச்சமாக மதித்து பெண்ணொருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை, மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து சொஹான் சேனாநாயக்க கருத்து வெளியிடுகையில்,

பயணிகளுக்கான தகவல் திரையில், ரயில் வருவதற்கு ஒரு நிமிடமே உள்ளதாக காட்டியது. அத்தகைய ஒரு பரபரப்புமிக்க நேரத்திலேயே நான் ரயில் தண்டவாளத்தினுள் குதித்தேன்.

இதன்போது அப்பெண் சுயநினைவோடு உள்ளாரா என பரிசோதித்தேன் ஆனால் அவர் சுயநினைவுடன் இருக்கவில்லை. இதன்போது இன்னொருவரும் மேடையிலிருந்து குதித்தார். நாம் அவரை 30 செக்கன்களுக்குள் தூக்கி எடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை முக்கியமானது, ஒரு உள்ளுணர்வின் அடிப்படையிலேயே குதித்து அவரைக் காப்பாற்றினேன். இது இன்னொரு மனித உணர்வு என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே என்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது என சொஹான் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு இளைஞர்களின் துணிச்சல்மிக்க செயற்பாட்டினை கௌரவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விருது வழங்கியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலையில் வைத்து மூழ்கடிக்கப்பட்ட கப்பல்!!

இரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், ஜப்பான் நடத்திய குண்டு தாக்குதலில் கடலில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் ஒன்றை கடற்படையினர் மீண்டும் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி ஜப்பான் விமானப்படை மேற்கொண்ட குண்டு தாக்குதலில் இந்த கப்பல் கடலில் மூழ்கியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

138 மீற்றர் நீளமான இந்த கப்பல் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளை தலைமையகம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து 5 மாதங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் கப்பலை மீண்டும் கடலுக்குள் இருந்து வெளியில் எடுத்ததாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தின் வசதிகளை விரிவாக்கும் தேவை ஏற்பட்டதன் காரணமாக 35 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த கப்பலை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானிய அரச கடற்படைக்கு சொந்தமான சகயின் என்ற இந்த கப்பல் 75 வருடங்களுக்கு பின்னர் கடலுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆற்றில் நீராடிய தாய் மற்றும் மகள் உட்பட நான்கு பேர் பலி!!

காலி – ஹினிதும பிரதேசத்தில் கிங் கங்கை ஆற்றில் நீராடிய தாய் மற்றும் மகள் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதான லியனகமகே சியாமலி அனோமா (தாய்), 14 வயதான மாபலகம லியனகே மனுரிகா, முத்துஹெட்டிகமகே ரவிந்தி யசஸ்மினி, மடவலவிதானகே கவீஷா அஞ்சலி ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஹினிதும நகருக்கு அருகில் உள்ள நுககல சந்திப் பகுதியில் அமைந்துள்ள நண்பியின் வீட்டிற்கு வந்த பிள்ளைகள், நண்பியின் தாயை அழைத்துக் கொண்டு ஆற்றில் குளிக்க சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சடலங்கள் ஹினிதும வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கு தப்பி வந்த துபாய் இளவரசி சுற்றிவளைத்து பிடிப்பு!!

இந்தியாவுக்கு கடல்வழியாக வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா லத்தீபா குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கையைக் கட்டிக் கொண்டு வானில் பறத்தல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஆர்வமுடையவர்.

தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பாத சேகா கடந்த 4ஆம் திகதி அமெரிக்க, பிரெஞ்ச் குடியுரிமையுள்ள தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் என்பவருடன் நோஸ்ட்ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.

இந்தத் தகவலை அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் சேகா வந்த படகைக் கோவா அருகே மடக்கியுள்ளனர்.

பின்னர் சேகாவையும், அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

திடீரென உயிரிழந்த மாணவனுக்கு அதி சிறந்த பெறுபேறு : பெரும் துயரத்தில் பாடசாலை!!

கடந்த வருடம் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்த மாணவன் எட்டு பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளார்.

கலென்பிதுனுவெவ, யகல்லே பீ.முதித சுரங்க ஹேரத் என்ற 16 வயதுடைய மாணவன் 8 ஏ சித்தியையும் ஒரு பீ சித்தியையும் பெற்றுள்ளார்.

உயிரிழந்த மாணவர் அனுராதபுரம், ஹுருலுவெவ மத்திய மகா வித்தியாலயத்தின் திறமையான மாணவராகும். அத்துடன் அவர் மாணவ தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் அந்த பாடசாலையின் வரலாற்றில் உயர் சித்தியை பெறுவார் என ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி சுகயீனமடைந்து தாயின் மடியிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரையில் சரியான வெளியாகவில்லை.

உயிரிழந்த மாணவனின் தாயார் ஆசிரியராகும். தந்தை ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியராகும். 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த மாணவன் கல்வி துறையில் மிகவும் திறமையான ஒருராகும்.

அந்த பாடசாலைக்கு அதிக பெருமையை தேடி தந்த மாணவர்களில் ஒருவராகவும் அவர் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதும் மாணவன் தற்போது உயிருடன் இல்லை என்பது அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, பாடசாலை சமூகத்தையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

வவுனியாவில் ஆலயத்திற்குள் மதுபோதையில் புகுந்த இளைஞன் : விரட்டியடித்த பொதுமக்கள்!!

 
வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் நேற்று (30.01.2018) மதியம் மதுபோதையில் இளைஞன் ஒருவன் புகுந்ததினால் சற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் குறித்த இளைஞன் பொதுமக்களினால் விரட்டியடிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் கடந்த 22ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

நேற்றையதினம் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று அன்னதானம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் ஆலயத்தினுள் நுழைத்த இளைஞன் ஆலயத்தினுள் இருந்த பொதுமக்களை தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசியுள்ளார்.

பின்னர் பொதுமக்களுக்கு அடிக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர்கள் குறித்த நபரை பிடித்து வெளியேற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் சம்பவம் முடிவடைந்து பல மணிநேரம் கழித்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

தேநீர்க்கடை நடத்தி 35 மில்லியன் டொலர் சம்பாதித்த பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த ப்ரூக் எடி என்ற பெண், இந்தியாவில் தயாரிக்கப்படும் டீ- யின் ருசியால் கவரப்பட்டு, அதன் மூலம் அமெரிக்காவில் கடை ஒன்றை நடத்தி அதிகமான வருவாயை ஈட்டி வருகிறார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இருக்கும் போல்டர் பகுதியை சேர்ந்த ப்ரூக், 2002 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது நாட்டில் அதிகமான காபி ஷாப்களையே பார்த்த ப்ரூக், இந்தியாவில் உள்ள டீக்கடைகள் மற்றம் அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு, அதுகுறித்து அறிந்துகொண்டார்.

இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் டீ சுவையைப் போலவே ப்ரூக் டீயை தயாரித்தார்.

2007 ஆம் ஆண்டில், தனது உறவினர்களுக்கு மட்டுமே டீயை தயார்த்து வழங்கி வந்த இவர், பின்னர் சிறு தொழிலாக அதனை செய்ய ஆரம்பித்தார்.

பக்தி எனப்பெயரிட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். சாதாரண டீ மற்றும் இஞ்சி டீயை தயாரித்து, போல்டர் பகுதியில் விற்பனை செய்ய ஆரம்பித்தார், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனது நிறுவனத்தை பிரபலப்படுத்த, பிரபலமான பின்னாகல் புட்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தார் ப்ரூக். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகளவிலான வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றார்.

2011 ஆம் ஆண்டில் இவரது நிறுவனத்துக்கு 10 மில்லியன் டொலர் அளவில் முதலீடு கிடைத்தது. அதன் மூலம், ready-to-drink வகையில் டீகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

இவரது நிறுவனத்தில் சுமார் 26 பேர் பணியாற்றி வருகின்றனர். இஞ்சி டீ தயாரிப்பதற்காகவே பெரு நாட்டில் இருந்து வருடத்திற்குச் சுமார் 3 லட்சம் பவுண்ட் இஞ்சி இறக்குமதி செய்கிறது இந்நிறுவனம்.

பக்தி ச்சாய் நிறுவனம் இதுவரை 35 மில்லியன் டொலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, 2018ஆம் ஆண்டில் பக்தி ச்சாய் நிறுவனத்தின் வருவாய் 7 மில்லியன் டொலர் வரையில் உயரும் என நம்புவதாகவும் ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இணைய உலகை அதிர வைக்கும் மற்றுமொரு பாரிய தகவல் திருட்டு!!

அண்மைக் காலமாக ஒன்லைன் கணக்குகள் திருடப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.

இதன் உச்சக்கட்டமாக பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் அனுமதி இன்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடுவதற்கு சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ் அதிர்ச்சியில் இருந்து இணையத்தளப் பாவனையாளர்கள் மீள்வதற்குள் மற்றுமொரு பாரிய தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது ஒன்லைன் ஊடாக விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்வதுடன், டிப்ஸ்களையும் வழங்கிவரும் MyFitnessPal எனும் நிறுவனத்தின் இணையத்தளம் மற்றும் அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியன் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ள போதிலும் இரு தினங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களை அடுத்த மக்கள் ஒன்லைனில் கணக்குகளை உருவாக்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் : உண்மைக் கதை!!

அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி ப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

சுமார் 40 – 50 கோழிகளை வெட்டி சுத்தம் செய்திகொண்டிருந்தபோது, இவர்கள் வெட்டியபோது ஒரு சேவலின் தலையும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த சேவல் மட்டும் இறக்கவில்லை, தலை இல்லாமல் முண்டத்துடன் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தது.

இதனைப்பார்த்த தம்பதியினர், தலை இல்லாமல் ஏன் இந்த சேவல் அங்கும் இங்கும் அலைய வேண்டும், பெட்டிக்குள் வைத்தால் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என அடைத்துவைத்து காலையில் பார்த்துள்ளார்கள். ஆனால் சேவல் இறந்துபோகவில்லை.

இதனால் அந்த சேவலை அப்படியே வளர்க்க ஆரம்பித்தார்கள், அதன் பெயர் மைக். இறைச்சி விற்கும் சந்தைக்கு செல்லும்போது அந்த தலையில்லா சேவலையும் லாய்ட் ஓல்சென் அழைத்து செல்வார். இதனால் இந்த சேவல் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் ‘மிராக்கிள் மைக்’ என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், சேவலில் தலையை வெட்டும்போது அதன் கண்கள், அலகு போன்ற பகுதிகள் மட்டும் வெட்டப்பட்டது. சேவலின் முழுத்தலையானது அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு போன்ற அமைப்பில் தான் உள்ளது.

முகத்தை மட்டும் வெட்டியதால் சேவலின் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீத பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.

அழகான மகன் இறந்தது ஏன் : இளைஞர்களுக்கு எச்சரிக்கை செய்த தாய்!!

பிரித்தானியாவில் ஹெராயின் போதை மருந்துக்கு அடிமையான மகன் உயிரிழந்துவிட்ட நிலையில் அது குறித்து அவரின் தாய் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டேனி ஹாக்கெட் (28) என்ற இளைஞர் தவறான நண்பர்களுடன் சேர்ந்து ஹெராயின் எனப்படும் போதை மருந்துக்கு அடிமையாகியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு டேனி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அழகாக இருந்த தன்னுடைய மகன் போதை மருந்துக்கு அடிமையானதன் காரணமாக எப்படி உருக்குலைந்து கடைசியில் காணப்பட்டான் என்பதை விளக்கும் விதத்தில் அவரின் புகைப்படங்களை தாய் டோனா வெளியிட்டுள்ளார்.

இது மற்றவர்களுக்கு போதை மருந்து குறித்த எச்சரிக்கையை கொடுக்கும் என்ற நோக்கிலேயே டோனா இதை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், மற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என் மகனின் புகைப்படங்களை பாருங்கள், எப்படி போதை மருந்து அவனை மாற்றிவிட்டது என புரியும்.

இது போன்ற போதை மருந்துகளை விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும், என்னிடம் அதிக பணம் இருந்திருந்தால் போதை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து சென்று டேனியை காப்பாற்றியிருப்பேன். என் மகனின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என கூறியுள்ளார்.

சேற்றில் பிணமாக கிடந்த பிரபல நடிகை!!

கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போயிருந்த பிரபல ஹொலிவுட் நடிகையான Adea Shabani யின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.

குறித்த நடிகை கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போயிருந்த நிலையில், இவரை தேடி அமெரிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே , இவரின் சடலம் நேற்று Macedonia பிரதேசத்தின் சேற்று நிலமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த Adea Shabani (வயது 25) கடந்த சில தினங்களுக்கு முன் இவர் காணாமல் போனதை தொடர்ந்து அவரின் காதலரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த காலப்பகுதியில் 33 வயதுடைய அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த பெப்ரவரி 23ம் திகதி தானும் தனது காதலியும் கார் ஒன்றில் கலிபோனியாவில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பாதியிலேயே இறக்கி விட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையில் சடலம் இவ்வாறு சேற்றில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவரது மரணம் தொடர்பில் அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பாடசாலை மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி!!

பிரித்தானியாவில், இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் தனது பள்ளி மைதானத்தில், தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Henrietta Barnett எனும் பள்ளியில் படித்து வந்த இந்திய மாணவி Elena Mondal.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான Elena, கடந்த வாரம் தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் தன்னையும் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கும்படி கோரியுள்ளார்.

ஆனால், அம்மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், Elena மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மைதானத்தில் Elena தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், Elena அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சுய தீங்கு விளைவித்துக் கொள்வது என மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,

அதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால், சிகிச்சைக்கான வகுப்புகளை Elena பலமுறை புறக்கணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொலிசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.