மாணவனின் உயிரைப் பறித்த டேட்டிங் செயலி!!

டெல்லியில் டேட்டிங் செயலிக்கு(Apps) அடிமையான மாணவர் அதன் காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த மாணவர் ஆயுஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தார் , உங்களது மகன் கிடைக்கவேண்டுமென்றால், நான் கேட்கும் பணத்தை கொடுக்கவேண்டும் எனக்கூறி நான் சொல்லும் இடத்திற்கு வாருங்கள் என ஆயுஷின் பெற்றோருக்கு மெசேஜ் வந்துள்ளது.

மெசேஜை பார்த்து பெற்றோர் அங்கு சென்றுள்ளனர், ஆனால் இவர்கள் சென்ற இடத்தில் யாரும் இல்லை. இவ்வாறு இரண்டு, மூன்று இடங்களுக்கு கடத்தல்காரர்கள் அழைத்துள்ளனர்.

இந்நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஆயுஷ் சடலமாக ஒரு பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், மாணவர் ஆயுஷ், தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல், அதிகமாக டேட்டிங் அப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், அதற்கு அடிமையான அவர், அதை அதிகமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். இந்த அப்பின் மூலம் பழக்கமான இஷ்தியாக் அலி என்பவருக்கும் ஆயுஷுக்கும் ஏற்பட்ட
சண்டையில் இஷ்தியாக், ஆயுஷின் தலையில் சுத்தியால் பலமாகத் தாக்கியுள்ளார்.

அதனால், ஆயுஷ் அதே இடத்திலேயே விழுந்து இறந்துள்ளார். அவரின் உடலை மறைக்க நேரம் தேவைப்பட்டதனாலேயே, ஆயுஷின் போனிலிருந்து அவரின் குடும்பத்தாருக்கு மெஸ்சேஜ் அனுப்பியுள்ளார் இஷ்தியாக். இதையடுத்து, இஷ்தியாக் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கையை முடித்து கொள்கின்றேன் : தூக்கில் தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் 14 வயதான பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்கர் நகரில் வசித்து வரும் 14 வயதான மாணவி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு, அதனருகில் இருந்த கடிதத்தை எடுத்தார்கள்.

கடிதத்தில், கடந்த 27-ஆம் திகதி வந்த இறுதி தெரிவு முடிவுகளில் மூன்று பாடங்களில் தோல்வியடைந்து விட்டதால் மனஅழுத்தத்தில் உள்ளேன்.

இதனால் என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

சித்தப்பாவை திருமணம் செய்துகொண்ட மகள் : எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்துக்கொலை!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உறவுமுறை மீறி தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன் கோவிலை சேர்ந்த தங்கதுரை-மரியசெல்வி தம்பதியினருக்கு ஜெயந்தி என்ற மகள் உள்ளார். இவர் அங்கிருக்கும் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயந்தி தனது கிராமத்தை சேர்ந்த திவாகரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பிரபாகரன் ஜெயந்திக்கு சித்தப்பா முறை ஆவார். இதனால், மகளின் காதலுக்கு தங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், தாய் மரியசெல்வியின் ஆதரவுடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜெயந்தியை, திவாகரன் திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், மரியசெல்விக்குக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டிருந்த தங்கதுரையை அவரது மருமகன் திவாகரன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கதுரையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரே தங்கதுரையை அடித்துக்கொலை செய்துவிட்டனர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருகில் வசிப்பவர்கள் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீக்குளித்த தொண்டர் : மேடையில் கண்ணீர் விட்டு வைகோ உருக்கம்!!

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து அதன் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யும் வகையில், தேனி மாவட்டம் கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கினார்.

காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.

திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், முத்தரசன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, தெகலான் பாகவி, கௌதமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடைப்பயணம் தொடங்க இருந்த இடத்தில் சிவகாசி ரவி என்பவர் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் மேடையில் கண்ணீர் மல்க பேசிய வைகோ, தொண்டரை காப்பாற்று இயற்கை தாயே என உருக்கமாக தெரிவித்தார்.

மேலும் நினைத்து பார்க்கவே முடியாத சோகமான நிகழ்வு என்றும், யாரும் தீக்குளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இளைஞனுக்கு நடந்த விபரீதம் : ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பரிதாபம்!!

வயலை பார்ப்பதற்கு குதிரையில் சென்ற இளைஞரை சாதி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள டிம்பி (Timbi) எனும் கிராமத்தை சேர்ந்தவர் கலு ரத்தோட், இவருக்கு 21 வயதுள்ள பிரதீப் ரத்தோட் என்ற மகன் உள்ளார்.

இவர்களுக்கு விவசாய நிலங்கள் நிறைய உள்ளது. அந்த வயல்களை பார்ப்பதற்கு தினமும் நடந்து செல்லும் பிரதீப்பிற்கு பக்கத்து ஊர்களில் குதிரை மீது செல்பவர்களை பார்த்து குதிரை மீது செல்ல ஆசை ஏற்பட்டது.

அதனால் கடந்த மாதம் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கிய பிரதீப், அதிலிருந்து வயலை பார்ப்பதற்கு எப்போதும் குதிரையில் சென்றுள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்து வயல்காரர்கள், பிரதீப் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், இனி இந்த மாதிரி குதிரையில் வருவதை பார்த்தால், அவ்வளவு தான் ஒழுங்காக குதிரையை விற்று விட்டு நடந்து போ என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சொல்வதை கேட்காமல் வழக்கம் போல பிரதீப் குதிரையில் வயலுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் பிரதீப் வயலுக்கு அருகில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இந்த படுகொலையை கண்டித்து பிரதீப்பின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையறிந்த பொலிஸார்கள் வழக்கு பதிவு செய்து, பிரதீப்பின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தியதில் வேறு ஜாதியை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், இவ்வழக்கை வேறு கோணத்திலும் விசாரித்து வருகிறோம், காதல் பிரச்சனை காரணமாகவும் பிரதீப் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றில் 40 ஹெரோயின் வில்லைகள்!!

ஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த நிறை 400 கிராம் என்பதுடன், அதன் பெறுமதி 45 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்ட, துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த நேபாள பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலங்கையில் அபூர்வமானதும் ஆபத்தான சத்திர சிகிச்சை : வைத்தியர்களின் பெரும் சாதனை!!

 
கண்டி, பேராதனை வைத்தியசாலை வைத்திய குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குழந்தையின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தன. இதனால் Teratoma என்ற நோய்த்தன்மையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து வித்தியாசமான முறையில் வைத்தியர்களால் பிரசவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தலையில் இருந்து நெஞ்சு பகுதி வரை மாத்திரம் கர்ப்பப்பையில் இருந்து வெளியே எடுத்து சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சத்திர சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையை முழுமையாக வெளியே எடுத்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான சத்திரசிக்சை ஒன்று மேற்கொண்டு, குழந்தையின் உயிரை பாதுகாப்பாக காப்பாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

குழந்தை சுவாச பகுதியை தடுக்கும் வகையில் காணப்பட்ட கட்டியை சத்திரகிசிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது கடினம் என்பதனால், தற்காலிகமாக குழந்தையின் வாய் வழியாக அதனை நீக்க முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் குழந்தையை பாதுகாப்பாக பிரசவித்துள்ளனர்.

பேராதனை வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்ட கடந்த 40 வருடங்களுக்குள் இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில்லை எனவும் சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தை பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தையின் தலை மற்றும் கழுத்து பிரதேசம் மாத்திரம் வெளியே எடுக்கும் போது குழந்தை மற்றும் தாயின் தொப்புள் கொடி தொடர்பு துண்டிக்கப்படாமல் அதன் ஊடாக குழந்தைக்கு மூச்சு வழங்க வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சுதந்திரம், மை சோய்ஸ் ஆகிய இரு நூல்கள் வெளியீடு!!

 
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் வவுனியா ஆங்கில சங்கமும் இணைந்து நடாத்தும் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் உருவான சுதந்திரம் – தென்னாசியக் கவிதைகள் (தமிழில்) , MY CHOICE – SRILANKA TAMIL POETRY IN ENGIISH ஆகிய இரு நூல்கள் வெளியீடும் நிகழ்வு இன்று (31.03.2018) காலை 10 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன், ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.பூபாலசிங்கம் அவர்களின் இணைத்தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆ.நடராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன், சு.சண்முகவடிவேல் , உளவளத்துணையாளர்- மனோசாந்தி பி.ஏ.சி.ஆனந்தராஜா,

வவுனியா கல்வியற்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்திபன், சிரேஸ்ட விரிவுரையாளர் சுபாஜனா ஜெயசீலன், கவிஞர்களான சி.கருணாகரன், மாணிக்கம் ஜெகன், கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் , வவுனியா ஆங்கிலச் சங்கத்தின் உபதலைவர் நா.தியாகராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிக
ள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நூலின் முதற் பிரதியினை சு.சண்முகவடிவேல் , உளவளத்துணையாளர்- மனோசாந்தி பி.ஏ.சி.ஆனந்தராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இறுதியில் இரு நூல்களையும் மொழிப்பெயர்ப்பு செய்த கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களை தமிழ் விருட்சம் அமைப்பினர் பொன்னாடைபோர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பு செய்தனர்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் அனுஷ்டிப்பு!!

 
வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (31.03.2018) சனிக்கிழமை காலை 9 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 121 ஆவது ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

தந்தை செல்வா பற்றிய சிறு கண்ணோட்டம்..

செல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார்.

செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது.

செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார்.

செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.

இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சொலமன் பண்டாரநாயக்க ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.

பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார்.

ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார்.

ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ.சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர்.

உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.

இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.

இவருடைய மகன் செ.சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.‌

போரினால் பாதிக்கப்பட்ட கழகங்களை புறக்கணித்து NEPL உதைபந்தாட்டப் போட்டி?

வடக்கு மற்றும் கிழக்குமாகாண உதைபந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி NEPL என்னும் பெயரில் புலம்பெயர் அமைப்புக்களின் நிதிப்பங்களுப்புடன் பிரமாண்டமான பரிசுத்தொகையுடன் உதைபந்தாட்ட போட்டி ஒன்றினை நடாத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துவரும் நிலையில் இறுதிப்போரின் போது நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களான முல்லைத்தீவு, மடுமாந்தை, வவுனியா ஆகிய சங்கங்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளாதாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

போரினால் பாதிப்புற்று மீண்டுவரும் தமிழ் வீரர்களை ஊக்கப்டுத்துவதாகவும் தமிழர் தாயகப்பகுதிக்கான தெரிவு அணியொன்றினை உருவாக்கப்போவதாகவும் கூறி அனுசரணையாளர்களை பெற்றுக்கொண்டுள்ள போட்டி ஏற்பாட்டுக்குழு போட்டிக்குழுவில் அங்கம் வகிக்கும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தை சேர்ந்த ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப நடந்துவருவதன் விளைவே எந்த பறக்கணிப்பிற்கு காரணமென குற்றஞ்சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட சங்கங்கள் வடக்கின் அங்கமான எங்களை புறம்தள்ளி வடக்கு கிழக்கிற்கான போட்டியை நடத்துவதும் தாயக தெரிவு அணியொன்றினை உருவாக்குவதும் அப்பட்டமான அநீதியான விடயம் என்பதால் நாமில்லாத அல்லது எமது பங்களிப்பில்லாத இந்த போட்டி தொடர்பாகவும் எமக்கு இழைக்கபட்ட அநீதி தொடர்பாகவும் நாம் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சு, அனுசரணையாளர்கள் போன்றோரின் கவனத்திற்கு கொண்டுவரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்காக போட்டி ஏற்பாட்டுக்குழு சார்பாக பேசவல்ல ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது தாம் அனைத்து உதைபந்தாட்ட சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்ததையடுத்து நாம் மீண்டும் பாதிக்கப்பட்ட சங்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி கடிதம் தோடர்பில் வினவியபோது போட்டிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு, எமது மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்கள் இடைத் தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அவர்கள்மூலம் எமது வீரர்களுடனும் பேரம்பேசப்பட்ட பின்னர் கண்துடைப்பிற்காக தற்போது ஒருசில தினங்களுக்கு முன்னர் எமக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் காலதாமதத்தை அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர்கள் செறிவாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து மிகப்பெரிய போட்டியினை நடத்துபவர்கள் ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு இடமளித்து நடந்துகொண்டமை தமக்கு இந்தபோட்டியின்மீது நம்பிகையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்க முன்னரும் இவ்வாறன புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் சுயேட்சைக்கு குழு-1 பிரதேச சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு!!

 
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை சுயேட்சைக்கு குழு–1 இல் மீன் சின்னத்தில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தனது ஒன்றியத்திற்கு கிடைத்த இரு ஆசனங்களுக்கான உறுப்பினர் நியமனத்திற்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (30.03) வெள்ளிக்கிழமை ஒன்றியத்தின் தலைவர் எம்.பி.நடராஜ் தலைமையில் வவுனியா நகரசபை பழைய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இச் சத்தியப்பிரமாண நிகழ்வில் சி.நடராஜ்- தோணிக்கல், இ.விஸ்வநான் – பூம்புகார் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த இருவரும் அமைப்பின் செயலாளரும் அகில இலங்கை சமானதான நீதவானுமாகிய பொ.ரட்ணம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சந்திரபோஸ் திறந்த பல்கலைக்கழகம் கொழும்பு, அரசியல் விஞ்ஞானப் பீட விரிவுரையாளர் ஆர்.ரமேஸ் பேராதனை பல்கலைக்கழகம், சமூக அபிவிருத்தி நிறுவனம் இயக்குனர் பொ.முத்துலிங்கம் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.சிவரட்ணம், ஆர்.இராஜேந்திரம், தேசபந்து, ராம் ஆறுமுகம் ஆகியோருடன் கிராம தலைவர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்!!

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய கால நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேல், வடமேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்ல விரும்பும் இலங்கையர்கள் உட்பட அனைவருக்கும் புதிய நடைமுறை!!

இலங்கையர்கள் உட்பட உலகின் அனைத்து நாட்டவர்களும் அமெரிக்கா விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு வைத்திருத்தல் அவசியம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சுமார் 5 வருடங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடான இந்த தொடர்ப்பு நீடித்திருக்க வேண்டும் என அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு நுழையும் சிலர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அமெரிக்க FBI அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்திட்டங்களுக்கமைய விசா விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைத்தளங்களுடன் தொடர்பு வைத்திருப்பதற்கான தகவல் மற்றும் பெயர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைய கொழும்பில் தங்கியிருந்த கேரளவாசிகள்!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முன்னர்கொழும்பில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் த ஹிந்து நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுமார் 90 பேர் 2016 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐஎஸ்ஐஎஸ்அமைப்பில் இணைந்துள்ளனர்.

அவர்களுள் பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றில் தங்கியிருந்த கேரளாவைச்சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர்.

2016 ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தவர்களுள் கேரளாவைச் சேர்ந்த 16 பேர் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

காதலியை கொலை செய்த காதலனை சுட்டுக் கொன்ற பொலிசார்!!

கனடாவில் காதலில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் Calgary நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 25-ஆம் திகதியன்று காலை இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை தொடர்பான பொலிசாரின் விசாரணையில், உயிரிழந்தது நடியா-எல்-டிப்(22) என்றும், காதலில் ஏற்பட்ட மோதலில் அவரது காதலன் அடெம் பெடஹர்(21) என்பவர் தான் கொலை செய்திருப்பதாகவும் கண்டறிந்தனர்.

அதனையடுத்து தலைமறைவாக இருந்த அடெம்மை கைது செய்ய நாடு முழுவதும் உள்ள பொலிசாருக்கு கடந்த திங்கட்கிழமை அன்று உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Evansburg பகுதியில் உள்ள நெடுங்சாலை 22 மற்றும் 16 சாலையில் பொலிசார் நடத்திய சோதனையில் அடெம் சிக்கியுள்ளார்.

ஆனால், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பொலிசாரை நோக்கி அந்த நபர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் RCMP அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்ததையடுத்து பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் கண்ட லொறி ஓட்டுநர் கொலின்ஸ் கூறுகையில், “இது போன்ற சம்பவங்களை செய்திகளில் தான் பார்த்துள்ளேன், நேரில் பார்ப்பது இதுவே முதல்முறை.

அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. அந்த நபர் மறைந்திருந்து 30-40 முறை பொலிசாரை நோக்கி சுட்டதை நான் பார்த்தேன்” என கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது

இவருக்கு வயது 68 : நம்பமுடிகின்றதா : ரகசியம் இதுதான்!!

சீனாவில், 68 வயதான நபர் ஒருவர் 20 வயது இளைஞர் போன்ற தோற்றத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் வசிப்பவர் ஹு ஹாய். இவர், 1950ஆம் ஆண்டு பிறந்தவர். ஹு ஹாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முதியவர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அங்கு இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் முதியவர்களுக்கான நிகழ்ச்சியில் இந்த நபர் ஏன் கலந்து கொள்கிறார் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு காரணம், 20 வயது இளைஞனைப் போல் இருந்த ஹு ஹாயின் தோற்றம், உடல்மொழி, உடை தான். அதன் பிறகு தனது வயதுக்குரிய சான்றை அவர் சமர்பித்து போட்டியில் கலந்து கொண்டார்.

‘Most Modern Grandpa’ என்ற பட்டத்தை வென்ற ஹு ஹாய், வெளியுலகில் பிரபமடைந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சி, பத்திரிகைகள், மொடலிங் துறை என பல துறைகளில் பணியாற்றினார்.

தான் குழந்தையாக இருந்த போதே தனது தந்தையை இழந்த ஹு ஹாய்க்கு, விளையாட்டில் ஆர்வம் அதிகம். அத்துடன் உடற்பயிற்சி செய்யவும் ஆரம்பித்தார்.

இது தொடர்பாக ஹு ஹாய் கூறுகையில், ‘என்னுடைய இந்தத் தோற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலை நல்ல வடிவத்தோடு வைத்திருக்க யோகா செய்கிறேன்.

மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்கிறேன். தினமும் 30 நிமிடங்கள் படிகளில் ஏறி இறங்குகிறேன். குறைவான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறேன். சில சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறேன்.

இவை தவிர, நான் எப்போதும் என்னை 20 வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்கிறேன். வயது என்பது வெறும் எண்கள்தான். நாம் எப்படி உடலை வைத்துக் கொள்கிறோம்.

எப்படி நல்ல எண்ணங்களை நிறைத்துக் கொள்கிறோம். எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொருத்தே நம் உருவம் வெளிப்படுகிறது. முதுமை என்பது தவிர்க்க இயலாதது.

எல்லோரும் ஒருநாள் முதுமையடையத்தான் போகிறோம். ஆனால், அந்த முதுமையை ஏதோ கெட்ட அம்சம் போலவும், மரணத்தை நெருங்குவது போலவும் நினைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமற்றது.

இந்த எண்ணம் உங்கள் வயதை விட, அதிக முதிர்ச்சியைக் கொண்டுவந்துவிடும். நான் மரணமடையும் கடைசி நொடியிலும் என்னை இருபது வயது இளைஞனாகவே நினைத்துக் கொள்வேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனம், உடல், உடலியக்கம் என 3 விதமான வயதுகள் இருக்கின்றன. கடைசி இரண்டு வயதுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

என்னுடைய உடல், உடலியக்கம் சார்ந்த வயது 40. ஆனால், என் மனதின் வயது 20 ஆக இருக்கிறது என்று நினைக்கிறேன். இருபது வயது இளைஞர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் என்னால் செய்ய முடியும்.

அவரைப் போலவே இளமையாக சிந்திக்கவும் முடியும். இளமை என்பது அணுகுமுறைதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசமான வாழ்க்கையை வாழுங்கள்’ என தெரிவித்துள்ளார்.