நாட்டில் உஷ்ணமான காலநிலை தொடரும்!!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், நிலவும் வெப்பமான காலநிலை இம்மாதம் மாதம் இறுதி வரை நீடிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வந்த சுவிஸ் பெண்ணின் செயற்பாடு : இந்த வயதில் இப்படியொரு செயலா?

இலங்கையில் வாழும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலாவெளி கடற்ரையை சுத்தம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 71 வயதான மாக்ரட் என்ற சுவிஸ் நாட்டு பெண்ணே இந்த சேவையை பல வருடங்களாக செய்து வருகின்றார்.

1982ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவர் இந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். அவர் மாத்திரமின்றி அவரது குடும்பத்தினரும் இலங்கையில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

மாக்ரட் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையை அதிகம் நேசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் நிலாவெளி கடலுக்கு சுற்றுலா பயணம் செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு செல்லும் மாக்ரட் கடற்கரையில் காணப்படும் குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தப்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். அவருடன் இணைந்து அவரது குடும்பத்தினரும் இந்த சேவையை செய்து வருகின்றனர்.

மாக்ரட் அந்த பகுதியில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி சென்று அந்த பிரதேச பிள்ளைகளின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்து வருகின்றார்.

“மக்களை மாற்ற முடியாது. எனினும் நாம் மாறலாம்” என கூறி மாக்ரட் கடற்கரை சுத்தப்படுத்துகின்றார்.

இலங்கை உலகின் அழகான நாடு. குப்பைகளை கொட்டி ஏன் இவ்வாறு அசுத்தப்படுத்துகின்றீர்கள் என மாக்ரட் கேட்டுள்ளார்.

இதன்போது அவரை சிலர் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் அவரிடம் சம்மதம் பெற்று புகைப்படம் எடுத்துள்ளனர். தனக்கு பிரபலமடைவதில் விருப்பம் இல்லை என மாக்ரட் அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை மீது சீனாவின் விண்வெளி மையம் உடைந்து விழுமா?

விண்வெளியில் பழுதடைந்த சீனாவிற்கு சொந்தமான ஆய்வு நிலையம் இன்று பூமியில் மோதவுள்ளதென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்வெளி ஆய்வு நிலையம் இலங்கைக்கு 479 கிலோ மீற்றர் தொலைவில் பயணிக்கும் என, கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இயக்குனர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

உடைந்து விழும் விண்வெளி மையத்தின் பிரதான பகுதியில் இலங்கையில் விழாதெனவும், இது தொடர்பில் இலங்கையர்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிதைந்த விண்வெளி மையம் விழும் இடத்தை சரியாக கணித்து கூற முடியாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இன்றய தினம் மலேசியாவுக்கு அருகில் இந்த விண்வெளி நிலையம் உடைந்து விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சீனா விண்ணில் செலுத்திய டியாங்காங்-1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

இதைத் தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் என விஞ்ஞானிகள் முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

சுமார் 8500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும் போது, விண்கல் மோதிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கிளிநொச்சில் பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து : காரணம் என்ன?

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்தில் வைத்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் சம்பவம் இடம்பெற்ற போதும் நேற்று (01.04) வரை சந்தேகநபர்கள் பொலீஸாரினால் கைது செய்யப்படவில்லை. குறித்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெளிவாக அடையாளம் காட்டிய போதும் அவர்கள் கைது செய்யப்படாதது பொலீஸார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கத்திக் குத்துக்கு இலக்கான மாணவனின் பெற்றோர்களான ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனா்

கத்திக் குத்துக்கு இலக்கான மாணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட இழைகள் போடப்பட்டு சிகிசைபெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் கத்தி குத்தை மேற்கொண்ட சந்தேக நபர்களை மாணவன் அடையாளம் காட்டிய போதும் பொலீஸாரால் இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை. என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொலீஸார் மிகவும் அசமந்த போக்குடன் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகவும், பொலீஸாரின் இச் செயற்பாடுகள் இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தரப்பினர்களை மேலும் ஊக்விப்பதாக அமைகிறது எனவும் மாணவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் ஆலயத்தில் கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது எனத் தெரியவருகிறது.

முட்டாள்கள் தினத்தில் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற இளைஞர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் புகைப்பிடிக்கும் பாவனையினை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிப்பதற்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாட்டு வண்டியில், பறை மேளம் முழங்க குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

நேற்று ஏப்ரல் முதலாம் திகதி. சர்வதேச முட்டாள்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரும் வகையில் சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடிச்சந்திவரையில் இடம்பெற்றதுடன் இந்த ஊர்வலத்தின் போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குகொண்டனர்.

நள்ளிரவில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் அம்பலமூர்த்தி. இவர் மனைவி சாந்தி (32). தம்பதிக்கு சந்தோஷ் (8) என்ற மகன் உள்ளான்.

அம்பலமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தனி அறையில் மகனுடன் சாந்தி தூங்கினார்.

நள்ளிரவில் சாந்தி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவர் மீதும், சந்தோஷ் மீதும் மயக்க ஸ்பேரே தெளித்த நிலையில் இருவரும் மயங்கினர்.

இதைத் தொடந்து அந்த கும்பல் சாந்தியின் கழுத்தை கத்தியால் அறுத்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

பின்னர் அந்த கும்பல் சாந்தியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை திருடி சென்றது.

காலை மயக்கம் தெளிந்து எழுந்து தாய் சடலமாக இருப்பதை கண்டு சந்தோஷ் கதறிய நிலையிலேயே இது வெளியில் தெரியவந்தது.

இதையடுத்து நகையை திருடும் நோக்கில் மர்ம நபர்கள் சாந்தியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு!!

மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது. இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கொலாஜன் மற்றும் எலாஸ்டினிலால் உருவானது. மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

12 புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும்.

மேலும், புற்று நோயை கண்டுபிடிக்கவும் குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

14 வயதுக் காதலியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது காதலன்!!

14 வயதுடைய காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிகட்டுவ – நல்லதரன்கட்டுவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யக்கட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மற்றும் சந்தேகநபரான இளைஞன் ஆகிய இருவரும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பாடசாலை செல்லும் போது இவர்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி சந்தேகநபரால் குறித்த சிறுமியை புதிதாக கட்டப்படுக்கொண்டிக்கும் பாளடைந்த கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

சிறுமியை பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் கூகுள் பயனாளியா : கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷோர்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் யுஆர்எல்-களை பயனர்கள் ஐஓஎஸ் அல்லது அன்ரோயிட் இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏப்ரல் 13ம் திகதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷோர்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்-களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய லின்க்களில் தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும். அந்த வகையில் மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பிரபல சேவையாக இருக்கும் கூகுள் யுஆர்எல் ஷோர்ட்னர் 2009 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஏலியன் எலும்புக்கூடு ”அட்டா” பற்றிய இரகசியம் வௌியானது!!

சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 அங்குல அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தைப் போலவே இருந்த எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசியினுடையதாக இருக்கலாம் என அப்போது கருதப்பட்டது. இந்நிலையில், அந்த எலும்புக்கூடு பற்றிய புதிய தகவல் வௌியாகியுள்ளது.

அந்த எலும்புக்கூடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அது மனிதனின் DNA வை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

உருவத்தில் தாயின் கருவின் அளவையும், எலும்பு வளர்ச்சியில் 6 வயதுக் குழந்தையின் அளவையும் கொண்ட இந்த எலும்புக்கூட்டிற்கு ‘அட்டா’ (Ata) என்று பெயரிடப்பட்டிருந்தது.

இந்த எலும்புக்கூட்டின் தலை வேற்றுக்கிரகவாசியின் தலையைப் போல கூர்மையான வடிவில் இருந்தது. இதற்கு 10 விலா எலும்புகள் இருந்தன.

இவ்வாறு பல குறைபாடுகளுடனும் அது இருந்ததால், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்பட்டது எனவும், சாதாரண மனிதக் குழந்தையான இது, இறந்து பிறந்தோ அல்லது பிறந்தவுடன் இறந்தோ இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களின் கவனத்திற்கு!!

அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி குறித்த சட்டங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இதன்படி, வருடாந்த வருமானம் 7.5 லட்சம் ரூபா என்ற எல்லை நிர்ணயம் 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருடாந்த வருமானம் 12 லட்சத்திற்கும் அதிகமான முதல் 6 லட்சத்திற்கு 4 வீதமும், அதன் பின்னர் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஆறு லட்சத்திற்கும் முறையே 8, 12, 16, 20 மற்றும் 24 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 16 வீத வரியே அறவீடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக வருடாந்த வருமானம் 25.5 மில்லியனுக்கும் அதிக பெறுபவர்களுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட வரி வீதம் 12 லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அதிகளவில் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒருவர் தனக்குச் சொந்தமான இரண்டாவது வீட்டை விற்பனை செய்யும் போது முதலீட்டு வரியாக 10 வீதம் அறவீடு செய்யப்பட உள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யும் பணத்திற்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

எனினும், வெளிநாட்டில் பணி புரிவோர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணத்திற்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

சிரேஸ்ட பிரஜைகளின் 15 லட்சம் வரையிலான வைப்புக்களுக்கான வட்டிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தொகைக்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

வரிச் சலுகை மற்றும் வரி விடுதலை வழங்குவதற்கு நிதி அமைச்சருக்கு காணப்பட்ட 200 சந்தர்ப்பங்கள் புதிய சட்டத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் மின்சார தடை ஏற்படும் அபாயம்!!

இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொத்மலை, காஸல்ட்ரீ உட்பட நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிரதான நீர்த்தேங்களின் நீர் மட்டம் நூற்றுக்கு 50 வீதம் குறைவடைந்துள்ளது.

அதற்கமைய நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 15 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எப்படியிருப்பினும் இந்த நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் கட்டாயம் மின் தடை ஏற்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கார் வாங்கிய மகிழ்ச்சியில் விருந்து வழங்கிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

ஹட்டன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி மாடியிலிருந்து கீழே விழுந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதில் ஹட்டன் வில்பிரட் நகரைச் சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் நிலையில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதற்காக சக நண்பர்களுக்கு லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்து வழங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழந்ததாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சித்திர தேர் திருப்பணி வேலைகள் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்த சாமி கோவிலின் சித்திர தேர்  அமைக்கும் திருப்பணி வேலைகள்   கடந்த  30.03.2018   சனிக்கிழமை பங்குனி உத்தர  நன்னாளில் ஆரம்பித்து  வைக்கபட்டது.

மேற்படி சித்திர தேருக்கான  திருப்பணி வேலைகள்  திருகோணமலை கமலாலயம் கலைக்கூடத்தின் ஸ்தபதி  விஸ்வஸ்ரீ  K.சந்திர மோகன் அவர்களால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது .


வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாகப் பலி!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (01.04.2018) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்த கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த 22வயதுடைய சாந்தவேலு ரோகான் என்ற இளைஞர் புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கில் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துக்கு அதிகவேகம் அல்லது நித்திரை தூக்கம் காரணமாக இருக்கலாம் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இரு இளம் பெண்கள் கைது!!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கேரள கஞ்சாவுடன் இரு பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (31.03.2018) இரவு 9.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மொனராகல நோக்கி பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை வைத்திருந்த அரலங்கவில பகுதியினை சேர்ந்த காஞ்சன சஞ்ஜிவனி (வயது 25) , காசினி மதுமாலி (வயது 26) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது இவ்வாறான முறைப்பாடுகள் முன்னரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.