“இலங்கையின் புதிய வரைபடம் சுமார் 18 வருடங்களின் பின்னர் இலங்கை நில அளவைத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுவருகின்றது” என்று நில அளவையாளர் அதிகாரி உதயகாந்த தெரிவித்துள்ளார்.
புதிய வரைபடத்தில் இலங்கையின் துறைமுக நகரமும் உள்ளடக்கப்படும்.
இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பரப்புகள் அதிகரித்துள்ளதுடன், சிலாபம் கடற்கரைப் பரப்பு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புதிய வரைபடம் செய்மதி உதவியுடன் தயாரிக்கப்படும். இதன் பணிகள் நிறைவடைந்ததும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறைவனுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார்.
நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தலத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக நபர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது மனுதாரர், அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக இருதய நோய் உள்ள தான் பாதிக்கப்படுவதாகவும், தனது சிறு பிள்ளைகளும் பாதிக்கப்படுவதாகவும் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவிக்கையில், “இறைவன் நல்ல காது கூர்மை உடையவர். அவரை அமைதியான முறையில் வழிபடலாம். எங்கள் உரிமை மத வழிபாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
தற்போது ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளன. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்கும், மற்ற மதத்தினருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள்” என தெரிவித்தார்.
கொட்டகலை, யதன்சைட் பகுதியில் நபரொருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் மண்வெட்டியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ரகு எனப்படும் 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இறந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸில் சரணடைந்தவர் கொழும்பில் கூலி வேலை செய்யும் கொட்டகலை யதன்சைட் தோட்டத்தை சேர்ந்த குடும்பஸ்தராவார்.
மட்டக்களப்பு – பேத்தாளை பகுதியில் நேற்று காணாமல் போன வயோதிப பெண் கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
பேத்தாளை விபுலானந்தா பாடசாலை வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி நாகமுத்து (85) என்பவர் நேற்று காலை 09.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இவரை குடும்ப உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று மதியம் கருங்காலிச்சோலை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியில் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவம் கெட்டபுலா சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி தீடீரென தீ பற்றிய போது ஓட்டுனரும், வண்டியில் பயணித்த மற்றொரு நபரும் கீழே பாய்ந்த நிலையில் எவ்வித தீக்காயங்களுமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் உயிர்கொல்லி நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து பிரித்தானியா பிபிசி செய்தியாளராக பணியாற்றும் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது தடவையாகவும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தன்னை பாதித்துள்ள நோயின் தாக்கம் குறித்து மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளதாக ஜோர்ஜ் அழகையா தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் இதேபோன்ற பரிசோதனை நடைமுறைகள் இருந்திருந்தால் இதனை முன்பு கண்டறிந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் வசிக்கும் 62 வயதான ஜோர்ஜ் அழகையா குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் விடயம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் தானாக 50 வயதிலிருந்து ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடல் புற்றுநோயை பரிசோதிக்கின்றார்கள். இந்த நடைமுறை கீழ் பிரித்தானியாவில் 60 வயதிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் வாழ்வதற்கான சந்ர்ப்பம் வெறும் பத்து வீதமே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நான் 58 வயதாக இருந்த போது குறைந்தபட்சம் மூன்று தடவை பரிசோதித்தேன். எனினும் நான்காவது முறையே கண்டறியப்பட்டதாக ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
நாம் ஆரம்பத்தில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் உயிர்வாழும் விகிதங்கள் மிகப்பெரியவை என்று நமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜ் அழகையா தனது சிகிச்சை நிலை தொடர்பில் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என் புற்றுநோய் மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஆரம்ப பரிசோதனைகள் முக்கியமானதாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் பிறந்து தற்போது லண்டனில் வாழும் ஜோர்ஜ் அழகையா இரண்டாவது முறையாக குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் வீட்டில் தனித்திருந்த தாயும், மகளும் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் தாயாரான நல்லதம்பி – இராசம்மா (வயது 75) பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நல்லதம்பி – ரேவதி (57 வயது) எனவும் திருமணம் செய்யாதவர் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் – வவுனியா பிரதான வீதியில் பிரமனாயங்குளம் பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று (01.04.2018) மாலை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை மீறி மின்கம்பத்தில் மோதி காட்டுப்பகுதியை நோக்கி 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தில் குறித்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிஸார் பிரமனாயங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தனியார் – இ.போ.ச பேரூந்தின் போட்டித்தன்மையே காரணமென பேரூந்தில் பயணித்த பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கறுப்பாக இருப்பதாக மலையாள சினிமாவில் தனக்கு குறைந்த அளவில் சம்பளம் வழங்கப்பட்டதாக நைஜீரிய நடிகர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சுடானி ப்ரம் நைஜீரியா. ஆப்பிரிக்காவை சேர்ந்த கால்பந்து வீரர் கேரளாவில் ஒரு கிளப்பில் வந்து விளையாடும்போது ஏற்படும் அனுபவங்கள்தான் கதை.
சக்ரியா முகமது என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சவுபின் சாகீர் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த சாமுவேல் அபியோலா ராபின்சன் (Samuel Abiola Robinson) ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர்.
சமீபத்தில், சாமுவேல் ராபின்சன் தனது சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பினார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டதாவது, நான் கறுப்பு இனத்தை சேர்ந்தவன் என்பதால், பிற நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை எனக்கு கொடுக்கவில்லை. குறைவாகத்தான் கொடுத்தார்கள்.
என்னைப்போன்று, அடுத்த தலைமுறையை சேர்ந்த கறுப்பு இனத்தவர் இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான கிம் கர்தாஷியன் போன்று உடலமைப்பு பெற வேண்டும் என அறுவை சிகிச்சை செய்த பெண்ணிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் துருக்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று நடிகையான கிம் கர்தாஷியைப் போன்று முன்னழகும், பின்னழகும் வேண்டும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் அந்நாட்டு மருத்துவர்கள் 7 நாட்கள் ஓய்வு எடுக்கும் படி கூறியுள்ளனர்.
ஆனால் இவரோ துருக்கியிலிருந்து இரண்டு நாட்களில் பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார். பிரித்தானியா திரும்பிய இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, அவருடைய இதயத் துடிப்பு அதிகவேகமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நுரையீரல் சுருங்கிய நிலையில் இருந்துள்ளது.
முழுமையாக பிரித்தானியாவில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிரியாவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, அதன் பின் ஒரு வழியாக இவரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ஆனால் அதை மருத்துவர்கள் இந்த பெண்ணிடம் கூறாமல் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண், துருக்கி மருத்துவமனை மீது வழக்கு தொடரவிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை வியாசர்பாடி பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்ற ரவுடியை முகமூடி அணிந்த 5 பேர் துரத்தி சென்றுஅரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஹரி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திராவில் பப்லு என்ற ரவுடி கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் பப்லுவின் கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது.
ரவுடிகள் அரிவாளுடன் துரத்திச் சென்ற பதபதைக்க வைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. இந்த காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மகனின் நிலையால் அவன் எப்போது என்னை அப்பா என்று அழைப்பான் என்று தந்தை காத்து கொண்டிருக்கும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமீன். பாம்பை பிடித்து வனத்திற்குள் பத்திரமாக விடும் வேலையை செய்து வரும் இவருக்கு முஸ்தாக்(12), அபீஸ் அகமது மற்றும் ரெஸ்மியா பானு என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவரது மகன் முஸ்தாக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று வலிப்பு வந்து மயங்கி விழுந்தான்.
இதனால் அவனது தாய் அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்து பார்த்த போது மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். 18 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியை செய்து வரும் அமீனுக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை.
அதற்காக அவர் யாரிடமும் இதுவரை பணம் கேட்டு நின்றதில்லை. சமீபத்தில் சிறுவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ததால் அவன் தேறிவருவதாக கூறப்படும் நிலையில், மகனின் நிலைமை குறித்து அமீன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நன்றாக படிப்பான், கராத்தேவில் நிறைய மெடல்கல் எல்லாம் வாங்கியிருக்கிறான். என் குடும்பத்தில் நான் பாம்பு புடிக்கிற தொழில் பிடிக்காது, ஆனால் அவன் மட்டும் எனக்கு ஆதரவாக இருந்து, சீக்கிரம் போய் அந்த பாம்பை பிடிங்க என்று கூறி அனுப்பி வைப்பான்.
ஆனால் கடந்த இரண்டு வருடமாக முடங்கிக் கிடக்கிறான். திடீர்னு வலிப்பு வரும். இதன் காரணமாகவே அவனை விட்டுட்டு, நாங்கள் எங்கேயும் போவதில்லை, தற்போது தலையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவனுக்கு எந்த நேரத்திலும் நினைவு வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடைசியாக அவன் என்னிடம் அப்பா ரெம்ப தலை சுத்துதுப்பா என்று கூறி முடங்கியவன் தான், கடந்த இரண்டு வருடமாக முடங்கி கிடக்கிறான்.
மீண்டும் அவன் நல்ல படியாக எழுந்து அப்பா என்று கூப்பிடுவானா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அவன் கூப்பிடுவான் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஒடிசாவில் உள்ள கட்டாக் மாவட்டத்தில் பிறந்து 16 நாளே ஆன குழந்தை ஒன்று நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் தனது அம்மாவுடன் தூங்கிக் கொண்டிருந்தது.
அந்நேரம் வீட்டின் உள்ளே நுழைந்த குரங்கு குழந்தையை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்த பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் காட்டுப் பகுதிகளில் குழந்தையை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை உயர் அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து 30 மீட்புப்படையினர் இரவெல்லாம் காட்டில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குரங்குகளின் அட்டகாசத்தைக் குறைக்க ஏற்கெனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றதா? இல்லை வேறு யாரேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பத்து வயது சிறுமியை இரு சிறுவர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொடூரம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் தொடர்புடைய இரு சிறுவர்களையும் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நகான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஜாகிர் உசேன் என்ற இளைஞர் வீட்டில் புகுந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த சமயம் பள்ளி முடிந்து அவ்வழியாக சென்ற 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவரும் ஜாகிருடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சிறுமியை தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர்.
கடுமையான தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிய அந்த சிறுமி நேற்றிரவு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்த பொலிஸார் இரு சிறுவர்களை பிடித்து கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜாகிர் உசேனை தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள ஜிதேந்திரா (24) கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அச்சிறுமியை இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அந்த சிறுமி ஜிதேந்திராவிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தார் பின்னர் தனது குடும்பத்தாரிடம் தனக்கு நடந்த கொடுமை அனைத்தையும் அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று ஜிதேந்திராவுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
ஜிதேந்திராவால் பாதிக்கப்பட்ட சிறுமியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்குவதற்குள் ஊர் பொதுமக்கள் அந்த இளைஞ்சரை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது