இலங்கை ரசிகருக்கு கொடுத்த வாக்குறுதி : வீட்டுக்கு சென்று காப்பாற்றிய இந்திய அணித் தலைவர்!!

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியை பார்வையிட சென்ற இலங்கை ரசிகர் மொஹமட் நிலாமின் தந்தை சுகயீனமடைந்தார். இதன்போது திடீரென விமான பயண நாளை மாற்றுவதற்காக தேவைப்பட்ட பணத்தை இந்திய வீரர் ரோஷித் ஷர்மா வழங்கியிருந்தார்.

அடுத்த முறை இலங்கை வரும் போது நிலாமின் வீட்டிற்கு வந்து தந்தையை பார்ப்பதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார். அதற்கமைய நேற்று முன்தினம் ரோஹித் ஷர்மா நிலாமின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

“பல வருடங்களாக எனக்கு நிலாமை தெரியும். என்னை பல வருடங்களாக உற்சாகப்படுத்துகின்றார். கடந்த டிசம்பர் மாதம் தனது தந்தை சுகயீனமடைந்ததனை கூறி நிலாம் என்னிடம் அழுத காட்சி இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது.

அப்போது அவருக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினேன். இலங்கை வரும் போது வீட்டிற்கு வருவேன் என கூறினேன். இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் என்பவர் சுத்தமான மனதை கொண்ட ஒருவர். அன்று எனது குடும்பத்திடம் இருந்து தந்தைக்கு முடியவில்லை என அழைப்பு கிடைத்தது. உண்மையாக என்னிடம் பணம் இருக்கவில்லை, எனினும் இன்னும் ஒருவரின் உதவியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு தகவல் கிடைத்து எனக்கு உதவினார்.

இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்கு பழக்கம். எனினும் ரோஹித் அனைவரையும் விட ஒரு படி மேலானவர் என நிலாம் இந்திய ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கலந்து கொண்டுள்ள இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக் காண 

பிரித்தானியாவில் இளம் யுவதியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேரவுள்ள கதி!!

பிரித்தானியாவில் இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

17 வயதான இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து விட்டு குறுந்தகவல் மூலம் இலங்கை இளைஞன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

2016ஆம் இடம்பெற்ற துஷ்பிரயோகம் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னிக்குமாறு குறித்த இலங்கையர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dumfries பகுதியில் வாழும் ரொஹான் கொஸ்டா என்ற 35 வயதான இலங்கையர், கடந்த 2016ஆம் ஆண்டு வீடு ஒன்றில் வைத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் தனது குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

எனினும், Edinburgh உள்ள உயர்நீதிமன்றத்தில் 17 வயதான ஒருவரைக் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இலங்கையருக்கு Glasgow நீதிமன்றத்தில் அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பிறந்த கொஸ்டா, அந்த பெண்ணை பல முறை தன்னுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார்.

எனினும் அந்த யுவதி தன்னை விட்டு விடுமாறு பல முறை அழுது கெஞ்சியுள்ளார். அங்கிருந்து அவரை தள்ளிவிடவும் குறித்த யுவத முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த நபர் ஒருவர், உடனடியாக அவசர சேவை இலக்கமான 999 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் “மன்னிக்கவும்.. நான் குடிபோதையில் இருந்தேன்.. என குறித்த இலங்கையர், அந்த யுவதிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அடுத்த குறுந்தகவலில் தனக்கு மன்னிப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதன் பின்னரும் அவருடன் பாலியல் தொடர்புகளை அவர் வைத்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எனினும் “நீதிபதி அவர்களே நான் அப்படி செய்யவில்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டிற்கான தண்டனை அடுத்த மாதம் வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரைக்கான அத்திவாரம் இடப்பட்டது!!

 
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கசிந்த தகவலையடுத்து மாவட்ட செயலகத்திற்கு ஊடகவியலாளர்கள் விரைந்தனர்.

அச் சமயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஓர் அத்திவாரம் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

பௌத்த, கிறிஸ்தவ, இந்து வழிபாட்டுத் தளம் அமைப்பதற்காகவே அவ்விடத்தில் அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வவுனியாவில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகின் மொத்த நாடுகளையும் பார்வையிட்டு சாதனை படைத்த பெண் : எத்தனை நாளில் தெரியுமா?

 
உலகில் உள்ள மொத்த நாடுகளையும் வெறும் 18 மாதங்கள், 26 நாட்களில் பார்வையிட்ட முதல் பெண் என்ற சாதனையை கேசி டி பிகோல் (27) என்பவர் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் Connecticut மாகாணத்தை சேர்ந்த கேசி கடந்த 2015-ஆம் ஆண்டு யூலை மாதம் சர்வதேச சுற்றுலா மூல அமைதி நிறுவனத்தின் தூதராகவே உலக நாடுகளை பார்வையிட தொடங்கினார்.

கடைசியாக 196வது நாடாக கடந்தாண்டு 2ஆம் திகதி ஏமனை கேசி பார்வையிட்டார். இதன் மூலம் மூன்று ஆண்டுகள், மூன்று மாதங்களில் எல்லா நாடுகளையும் பார்வையிட்டவரின் பழைய சாதனையை கேசி முறியடித்தார். இதன்மூலம் கேசியின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நெடும் பயணத்தில் 225 விமானங்களில் ஏறியுள்ள கேசி 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் செடிகளை நட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் கேசி 2-லிருந்து 5 நாட்கள் வரை தங்கியிருக்கிறார்.

கேசி கூறுகையில், விசாக்களைப் பாதுகாக்க முயற்சிக்கும் தருணங்கள் தான் உலக நாடுகளை பார்வையிடும் போது கடினமாக இருந்தது.

குழந்தைகளை பராமரிக்கும் பணி செய்து கேசி $10,000 பணம் சேர்த்து வைத்திருந்தார். அதே போல $198,000 பணம் பல்வேறு அனுசரணையாளர்கள் மூலம் கேசிக்கு கிடைத்துள்ளது. இந்த பணத்தை வைத்தே உலக நாடுகளை கேசி பார்வையிட்டுள்ளார்.

டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை : நாஞ்சில் சம்பத் விலகல்!!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார்.

ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு அபார வெற்றி பெற்றவர் டிடிவி.தினகரன்.

அதன்பின் தமிழக அரசியலில் தனிச்சையாக செயல்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டு வந்த திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு அந்த பெயரில் உடன்பாடு இல்லை என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தினகரனின் இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா. அவர் பெயர் இல்லாத இடத்தில் இனி நான் இல்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மருத்துவருக்கு பதிலாக வந்த ஏசி திருத்துனர்: பரிதாபமாக போன சிறுவனின் உயிர்!!

இந்தியாவில் அம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர் என பொய்யாகி கூறி ஏ.சி மெக்கானிக் வந்ததால் நோயாளி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த அரிச்ஜித் தாஸ்(16) என்ற சிறுவனுக்கு திடீர் உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் அவனை அங்குள்ள சிறிய மருத்துவமனைக்கு பெற்றோர் கூட்டி சென்றனர்.

அங்கு தன்னை மருத்துவர் என கூறிய சர்பராஸ் உடின் (26) என்பவர் சிறுவனுக்கு ஏதோ சிகிச்சையளித்து பின்னர் வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பெற்றோரிடம் கூறி 8000 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அங்கு அம்புலன்ஸ் வர தாஸும், உடினும் மட்டும் உள்ளே ஏறி கொண்டனர். தாஸின் பெற்றோர் அனுமதிக்கப்படாத நிலையில் தனி காரில் வந்தார்கள்.

ஆனால் போகும் வழியிலேயே தாஸுக்கு உடல் நிலை மோசமாக அம்புலன்ஸியில் இருந்த செயற்கை சுவாச கருவியை கூட அவனுக்கு உடினால் பொருத்த முடியவில்லை.

இதையடுத்து தாஸ் பரிதாபமாக உயிரிழந்தான், அப்போது தான் உடின் மருத்துவரே கிடையாது எனவும், ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்பவர் எனவும் தெரியவந்தது.

இது குறித்து தாஸின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் அம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் சர்பராஸ் உடினை கைது செய்துள்ளனர்.

காதலனை திருமணம் செய்து கொள் : தற்கொலை செய்துகொண்ட கணவனின் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆச்சாரி (24). இவருக்கு உஷா ராணி என்ற பெண்ணுடன் கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் தனது வீட்டருகில் வசிக்கும் ஸ்ரீகாந்த் என்பவருடன் உஷாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த ஆச்சாரி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆச்சாரியின் சடலத்தை கைப்பற்றியதோடு அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.

அதில், அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். நான் தோல்வியடைந்தவன்.

என் மனைவி உஷா அவள் விருப்பபடி ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ளட்டும், இதை என் கடைசி ஆசையாக எடுத்து கொள்ளுங்கள்.

உஷா மீது எந்தவொரு பழியையும் சுமத்தாதீர்கள் என எழுதப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மகனை துடிதுடிக்க கொன்று தற்கொலைக்கு முயன்றது ஏன் : தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!

தமிழகத்தில் தனது 7 வயது மகனை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா, இவர் கே.கே.நகரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி கலைச்செல்வி, மகன் மாதவ் டோலியா(7, ஊர்மில் டோலியா கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், விரைவாக கடையை மூடிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன் பின்னர் தன் மனைவியிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு, தன் மகன் மாதவ் டோலியாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் ஊர்மில் டோலியா வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி கலைச்செல்வி, கடை ஊழியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து கடைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

குறித்த ஊழியர் கடைக்கு சென்று பார்த்தபோது ஊர்மில், மாதவ் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர், அப்போது சிறுவன் மாதவ்வின் கைகள் வெட்டப்பட்டிருந்தன.

இதன் பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஊர்மிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊர்மில் டோலியாவிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஊர்மில் டோலியா கூறுகையில்,

‘கடன் தொல்லையால் அதிகமாக சிரமப்பட்டு வந்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். என்னுடைய இரண்டாவது மகன் மாதவ் டோலியாவை விட்டுப் பிரிய மனமில்லை.

இதனால், அவனையும் என்னோடு அழைத்துச் செல்லத்தான் இந்த முடிவை எடுத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகனின் நிலை குறித்து ஊர்மில் கேட்டபோது, அவன் நன்றாக இருக்கிறான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

15 வயது சிறுமி மீது காதல் : கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்!!

இந்தியாவில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் கடப்பாவை சேர்ந்தவர் யண்ணம் விஜய் குமார் (18). இவர் அதே பகுதியை சேர்ந்த மனிஷா (15) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்த நிலையில் இதை மனிஷாவின் மாமா ரெட்டி பார்த்துள்ளார்.

விஜய் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த காதல் ரெட்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மனிஷாவை அடித்துள்ள ரெட்டி, விஜய்யையும் அடித்து இனி மனிஷாவை சந்திக்கக்கூடாது என மிரட்டியுள்ளார். ஆனாலும் காதல் ஜோடிகள் தங்கள் சந்திப்பை நிறுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 10-ஆம் திகதி அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் விஜய் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து விஜய்யின் உறவினர் ஜெயசந்திரா கூறுகையில், 10-ஆம் திகதி மனிஷா, விஜய்க்கு போன் செய்து தனது வீட்டுக்கு வர சொல்லியுள்ளார்.

ஆனால் மனிஷாவின் மாமாவும், மாற்றாந் தந்தையும் மனிஷாவை மிரட்டி போன் செய்ய வைத்துள்ளனர்.

பின்னர் அங்கு விஜய்யை கொடூரமாக இருவரும் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தண்டவாளத்தி போட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரி ஸ்ரீனிவாசலு கூறுகையில், இரும்பு கம்பியால் அடித்து விஜய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விஜய்யின் தாய் உள்ளிட்ட குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் மனிஷாவின் மாமா மற்றும் தந்தையை கைது செய்துள்ளோம்.

சாதிப் பிரச்சனையால் இச்சம்பவம் நடந்ததா என விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஜெனரல் பஜார் சாலை அருகே வசித்து வந்தவர் ஸ்வரூப் (37). தங்க வேலை செய்து வந்த இவருக்கு தீபா (30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறந்து 5 மாதம்தான் ஆகிறது.

இந்நிலையில், அனைவரும் நேற்று குடும்பத்தோடு வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மகன்காளி பொலிசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், தற்கொலைக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.

எனவே, தற்கொலைக்கான காரணம் குறித்து இறந்தவர்களின் உறவினர்களிடம், பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

தாடியை எடுத்துவிட்டு தாலி கட்டுங்கள் : அடம்பிடித்த மணமகள்!!

 
மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் மங்கல் சௌகான் என்பவருக்கும், ரூபாலி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது.

முகூர்த்த நேரத்தில், மணமகன் தனது தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

ஆனால், சௌகான் தாடியை எடுக்க மறுப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் 12 மணிநேரம் திருமணம் பாதிக்கப்பட்ட நிலையில், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த பொலிசார் மணமகனை சமாதானப்படுத்தி, தாடியை எடுக்க வைத்தனர். அதன் பின்னர், மணமகள் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவே திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

இலங்கையில் நடந்த வித்தியாசமான திருமணம்!!

இலங்கையில் நடைபெறும் திருமண சம்பிரதாயங்களுக்கு எப்போதும் உயர்ந்த கௌரவம் ஒன்று கிடைக்கின்றது.

மேற்கத்திய முறையை போன்று தேசிய முறையிலும் இலங்கையினுள் திருமணங்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற திருமணம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரச காலத்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது.

அரச காலத்தை நினைவூட்டு வகையில் இந்த திருமணம் நடைபெற்றமையினால் பல தரப்பிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.

காணொளியைக்காண

கிரிக்கெட் உலகை முகம்சுளிக்க வைத்துள்ள பங்களாதேஷ் அணி : அணி வீரர்களுக்கு ஐ.சி.சி நடவடிக்கை!!

 
இலங்கை – வங்காளதேச அணி வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அறைக் கதவின் கண்ணாடியை உடைத்தது குறித்து வங்காளதேச வீரர்கள் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இலங்கை – வங்காளதேச அணிகள் நேற்று மோதிய பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தாலும் ஆடுகளத்தில் வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் கிரிக்கெட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.

கடைசி ஓவரின் போது நோபோல் விவகாரம் தொடர்பாக வங்காளதேச வீரர் மகமதுல்லா நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது தண்ணீர் போத்தல் கொண்டு வந்த வங்காளதேச மாற்று வீரர் இலங்கை கப்டன் திசரா பெரேராவிடம் ஏதோ கோபத்தில் கூறினார். இதனால் இலங்கை வீரர் ஒருவர் அவரை தள்ளினார். இது மோதலாக மாறியது.

அப்போது வீரர்கள் அறையில் இருந்த வங்காளதேச கப்டன் சகீப்-அல்-ஹசன் கோபத்தில் தங்களது வீரர்களை வெளியே வருமாறு கத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த முடிவை வங்காளதேச வீரர்கள் மாற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மகமதுல்லா 5-து பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றியை வங்காளதேச வீரர்கள் மைதானத்தில் பாம்பு நடனம் ஆடி கொண்டாடினார்கள். அவர்கள் கத்தியபடியே நடனம் ஆடினர்.

அப்போது இலங்கை வீரர் குசால் மெண்டீஸ் வங்காளதேச வீரர்களை நோக்கி கோபமாக திட்டினார். அவரை வங்காளதேச வீரர் தமிம் இக்பால் சமாதானம் செய்தார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே வங்காளதேச வீரர்களின் உடை மாற்றும் அறையில் (dressing room) இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சிலர் இதை உடைத்து உள்ளனர். அங்குள்ள கமராவில் இது பதிவானது.

இதையடுத்து அந்த வீரர் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிந்தது. வங்காளதேச அணி நிர்வாகம் அதற்காக இழப்பீட்டை ஈடு செய்வதாக அறிவித்தது.

இந்த விவகாரத்தில் வங்காளதேச வீரர்கள் மீது ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வங்காளதேச வீரர் தமிம் இக்பால் கூறும்போது, “கடைசி கட்டத்தில் உணர்ச்சி வசமாகி விட்டது. நோபால் குறித்து கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

இந்த சம்பவத்தை வைத்து வேறு எதையும் தவறாக உருவாக்கும் எண்ணம் இல்லை. வெற்றிக்கு பிறகு எங்கள் கோபம் மறந்துவிட்டது என்றார்.

சகீப்அல்ஹசன் கூறும்போது, அதிக உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இந்த போட்டி அமைந்து விட்டது.

இலங்கைக்கும், எங்களுக்கும் மைதானத்தில் ஆரோக்கியமான போட்டி இருந்தது. ஆனால் களத்துக்கு வெளியே நாங்கள் நண்பர்கள்.

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டோம். ஒரு கப்டனாக நான் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த போட்டிகளில் கவனமாக இருப்பேன் என்றார்.

வவுனியாவில் புளொட் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!!

 
வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றையதினம் (16.03.2018 )
புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும்
வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மற்றும் வவுனியா நகர,பிரதேச சபைகளிற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) போட்டியிட்ட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இச் சந்திப்பில் எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், கடந்த கால நகரசபை நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வது என்று உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்திற்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் ‘தொழில் வழிகாட்டல்’ செயலமர்வுகள்!!

 
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உளநலப்பிரிவினரால், வடமாகாணத்திற்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் ‘தொழில் வழிகாட்டல்’ செயலமர்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்ற மேற்படிஅமர்வுகளை, துறைசார் பிரிவின் வடமாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி உதயகலா நெறிப்படுத்தி வருகிறார்.

உளவளத்தை முறையாகப் பயின்ற ஆசிரியர்களே, மாணவர்களுக்கு ஏற்றவகையில் தெளிவாக விளக்குகிறார்கள் என்பதை நேரடியாகவே காணக்கிடைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வளப்பற்றாக்குறையான வலயங்களினது மாணவர்களுக்கு இவ்வழிகாட்டல்கள் மிகவும் பயனுறுதி மிக்கனவாக அமைகின்றன.

O/L , A/L பரீட்சைகளை எழுதியதன் பின்னர் திசையறியாது செய்வதறியாது யோசித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

தூரப்பிரதேச மாணவர்கள் பேருந்துகளில் வருகைதந்தமையும், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் மாணவர்களை அழைத்துவந்திருந்ததனையும் அவதானிக்கக்கூடியதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழ் கட்சித் தலைமைகளின் தவறால் சபைகளில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை!!

தமிழ் தேசியத்திற்குட்பட்ட தமிழ் கட்சி தலைமைகளின் தவறால் வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா விவசாயதிணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக விவசாய ஸ்தாபனத்தின் நிதிஉதவியுடன் 214 போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையான விவசாயிகளுக்கு இலவசமாக உள்ளிட்டு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பிரிந்து சென்று பல தரப்பட்ட கொடிகளை பிடித்திருக்கிறார்கள். இதனால் வவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து இரண்டு மாதகாலமாகியும் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆட்சியமைப்பில் பிரச்சினையாகயிருக்கிறது.

தமிழ்கட்சிகள் ஒன்றுணைந்து இன்றுவரை ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. இந்த தலைவர்கள் தமிழ் மக்களை எங்கு கொண்டு போய்விடப்போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வகையில் ஒவ்வொரு தமிழ் கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன். தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்றோம் என்று கூறிக்கொண்டு இவ்வாறு செய்வது தவறானது.

இனியாவது ஒன்றுபட்டு தமிழ்மக்களுக்காக தமிழ்தேசியத்தை உருவாக்கவேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் பல தரப்பட்ட கேள்விக்களுக்கு விடையளித்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் தான் இந்த தேர்தலில் வென்றுள்ளோம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு தமிழ் கட்சியும் உண்மையில் வெற்றிபெறவில்லை.

இந்த தேர்தலில் கூட மக்கள் ஏன் இவ்வாறு வாக்களித்துள்ளார்கள் என்று கூட இந்த கட்சித்தலைவர்கள் இன்னமும் உணரவில்லை. ஆகவே தமிழ் மக்களுடைய தேவைகளை உணர்ந்து தமிழ் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் அதற்கு நான் உதவி புரிய தயாராகவிருக்கின்றேன் என்று தெரிவித்தார்.