வவுனியா தமிழ் கோட்டத்தின் 2018 மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு நேற்று (16.03.2018) வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை, இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் சைவப்பிரகாச ஆரம்பப் பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. இவ் விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஓய்வு பெற்ற முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரன், உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் இ.ராஜசீலன், தேசிய கல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி த.ம.தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா விவசாய திணைக்களத்தில் ஏற்பாட்டில் நேற்று (16.03.2018) காலை 10 மணியளவில் தாண்டிக்குளம் வீதியில் அமைந்துள்ள விவசாய உற்பத்தி பண்ணையில் தெரிவு செய்யப்பட்ட 214 பயனாளிகளுக்கு 13.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியாவில் நான்கு பிரதேச செயலகங்களில் பெண் தலைமைத்துவ குடும்பத்தினை சேர்ந்தவர்கள், போரால் பாதிப்படைந்தவர்கள், பெற்றோரை இழந்த குடும்பங்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 214 பயனாளிகளுக்கு 13.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டில் மோட்டர் பைப், தூவல் நீர்ப்பாசன தொகுதி, துளிர் நீர்ப்பாசன தொகுதி , மண்ணெண்னையில் இயங்கும் மோட்டார் போன்ற பல பொருட்கள் வழங்கப்பட்டன
இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் , வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் , ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வடமாகாண விவசாய அமைச்சரின் செயலாளர், விவசாய பணிப்பாளர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
காலஞ்சென்ற (14.03.2018) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காக்கிங் அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நேற்று (16.03.2018) அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் மற்றும் வளாகத்தின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றிருந்தது.
விஞ்ஞானி ஸ்டீபன் காக்கிங் அவர்களின் உருவப்படத்திற்கு வளாகத்தின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களினால் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் விரிவுரையாளர் ரி.கார்த்தீஸ்வரன், வவுனியா வளாக ஊழியர் சங்கத்தலைவர் கெ.பூங்கண்ணன், விரிவுரையாளர் திருமதி எஸ்.சுபாசனா, சிரேஸ்ட உதவி நூலகர் எஸ்.சண்முகதாசன் மற்றும் வளாகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையில் நடக்கும் சர்வதேச துடுப்பு படகு போட்டியில் பங்கேற்க தனுஷ்கோடியில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் இருவர் துடுப்பு படகில் தலைமன்னார் சென்றனர்.
மும்பையை சேர்ந்த இந்திய இராணுவத்தில் கமாண்டராக பணி புரியும் தாதா கட்டாராய் சவுத்திரி, இந்திய கடற்படை வீரர் ராஜர்ஜி பவுல் இருவரும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து நேற்றுக் காலை 9:00 மணிக்கு துடுப்பு படகில், இலங்கை தலைமன்னாருக்கு பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் 33 கி.மீ., தூரமுள்ள தலைமன்னாருக்கு இரவு 12:00 மணிக்குள் செல்ல வாய்ப்புள்ளது என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.
இருவரின் பாதுகாப்புக்காக தனுஷ்கோடி முதல் இந்திய எல்லை வரை இந்திய கடற்படைரோந்து படகு, கடலோர காவல் படையின் ஹோவர்கிராப்ட் கப்பலில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன் பின் இலங்கை எல்லையில் இலங்கை கடலோர காவல் படையினர் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
சமூக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை தடுக்கும் நோக்கில், புதிய சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டம் உருவாக்கப்படும் போது, கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இது தொடர்பில் இலங்கை தொடர்பு ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு இணங்க, தேசிய பாதுகாப்பின் பொருட்டு சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இவ்வாறு செய்யும் போது, அரசியல் யாப்பின் கீழ் உள்ள மனித உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் அல்லது வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றசெயல்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா கருத்து வெளியிட்டார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் தனியாக ஒரு பிரிவை அமைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் நேற்று பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரவுகளுக்கமைய எட்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இவ்வாறு VPN பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு VPN பயன்படுத்தியமையினால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக அசேல தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள VPN செயலியை (App) அழித்து விடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று(16.03.2018) பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
காலை முதல் கடும் வெப்ப நிலை காணப்பட்ட போதிலும் மாலை வேளைகளில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
இதனால் மின்சாரம் சற்று நேரம் தடைப்பட்டது. இன்று மாலை பெய்த கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.
வவுனியா நகரம், பூந்தோட்டம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியாவில் இடி மின்னல் தாக்கியதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றி சேதமடைந்துள்ளது.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை என்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று (16.03.2018) மாலை 4.30 மணிக்கு இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக இவ் அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
அனர்த்தம் இடம்பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலங்கை மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்திருந்ததுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்திருந்தனர். இதன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது.
கடுங்காற்றுடன் வவுனியாவில் மழை பெய்து வருவதால் காற்றின் காரணமாக கூரைத் தகரம் ஒன்று பறந்து சென்று உயர் அழுத்த மின்கம்பியில் மோதிய நிலையில் வவுனியாவில் சில மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இன்று(16.03.2018) மாலை பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் அலுவலகப்பணியாளர்கள் பெரும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வடிகால் சீர் இன்மை காரணமாகவே மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் கடந்த வருடம் பெய்த கடும் மழையினாலும் இப்பகுதிக்குள் மழை வெள்ளம் அலுவலகத்திற்குள் சென்றுள்ளது எனினும் அப்போது இவற்றை சீர் செய்து தருமாறு கோரியபோதும் இன்று வரையில் சீர் செய்யப்படவில்லை இதன்காரணமாகவே மழை வெள்ளம் மாவட்ட செயலகத்தின் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளதாகவும் அலுவலக உத்தியோகத்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாவட்ட செயலகத்தில் பணிபுரிபவர்கள் மழை வெள்ளத்தில் பணியாற்ற வேண்டிய நிலையில் மாவட்ட செயலகத்திற்குள் பௌத்த விகாரை அமைப்பதற்கு அரசாங்க அதிபர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றார்.
அலுவலக உத்தியோகத்தர்களுக்கு நிரந்தரக் கட்டடம் இன்றியும் வாகனத்தரிப்பிட வசதிகள் அற்ற நிலையில் தற்போது மாவட்ட செயலகத்திற்குள் பௌத்த விகாரை தேவையா எனவும் உத்தியோகத்தர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வவுனியாவில் வறட்சி காரணமாக 12 ஆயிரத்து 34 ஏக்கர் நெல் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்ண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த உதவி ஆணையாளர்
நாடு பூராவும் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவகையில் 2017 மற்றும் 2018 பெரும்போகத்தின் இலக்காக 53 ஆயிரத்து 885 தசம் 5 ஏக்கரை விழைச்சலுக்கு எடுத்திருந்தோம். அந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 48 ஆயிரத்து 399 ஏக்கருக்காக பயிர்ச்செய்கை கூட்டங்களை நடத்தியிருந்தோம்.
எனினும் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக 29 ஆயிரத்து 840 தசம் 5 ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தோம். சராசரியாக 50 வீதமான காணிகளில் மாத்திரமே பயர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
புயிர்ச்செய்கையின் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தினால் 12 ஆயிரத்து 34 தசம் 25 ஏக்கர் கணிகள் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளன.
அந்த அடிப்படையில் 6 ஆயிரத்து 170 விவசாயிகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நீரின்மை காரணமாக 2018 ஆம் ஆண்டுக்கான சிறுபோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரத்து 900 ஆயிரம் ஏக்கர் சிறு போகத்திற்காக எடுத்திருந்தோம். நீரின்மை காரணமாக 300 ஏக்கர் நிலத்தில் மாத்திரமே பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக காப்புறுதி திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காப்புறுதிக்காக 1500 ரூபா செலுத்தியவர்கள் 25 ஆயிரம் ரூபாவரை நட்டஈட்டினை பெற்றக்கொள்ள முடியும், அதற்கான விண்ணப்பங்கள் கமநல சேவைகள் திணைக்களத்தில் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 40 ஆயிரம் ரூபாவை காப்புறுதியாக பெறுவதற்கு ரூபா 675 செலுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். உரமானியம் பெற்று காப்பறுதி செய்யாத விவசாயிகளுக்கும் அரசினால் நட்ஈடு வழங்கப்படும் அதற்கான விண்ணப்பப் படிவங்களும் கமக்கார அமைப்புக்கள் ஊடாக வினியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார்.