மாத்தளை மாவட்டத்தில், கலேவல பெலியகந்த பிரதேசத்தில் பெற்றோரின் பாதுகாப்பின்றி தோட்டமொன்றில் உள்ள குடிசை வீட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு குழந்தைகளை கலேவலை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
ஒன்றரை மற்றும் நான்கு வயதான பிள்ளைளே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.
கலேவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக்க விதானாராச்சிக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளன.
5 நாட்களாக இந்த பிள்ளைகள் பெற்றோர் இன்றி தனியே வீட்டில் இருந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் வந்து உணவை கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் பிரதேசவாசிகள் பிள்ளைகள் தனியே வீட்டில் இருப்பது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பிள்ளைகளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார் அவர்களுக்கு ஆடைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உணவை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பிள்ளைகள் குறித்து பொலிஸார் இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் பிரத்தியோக காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்..
காணாமல் போனவர்களை இரண்டு வகையாக பார்க்கலாம் ஒன்று வலுக்கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டவர்கள் அந்தவகையில் விடுதலைப்புலிகளின் நூறுக்கு மேற்பட்ட போராளிகள் நேரடியாக குடும்ப அங்கத்தவர்கள் மூலமாக படையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்கள்.
இரண்டாவது செட்டிக்குளம் தடை முகாம்களில் நேரடியாக கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அது மட்டுமல்ல விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபின் அவர்களுக்கான பதிவுகள் கூட இல்லாத முறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
எனவே வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயமானதும் யுத்தத்தின்போது காணாமல் போன விடயமானதும் இருக்கிறது. அதில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் விடுவிக்கப்படக்கூடியவர்கள் பெருமளவில் அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறைகளிலுள்ள 150 க்கு மேற்பட்டவர்களில் பாரிய குற்றங்களை புரிந்த ஒரு தொகுதியினரும் அரசியல் கைதிகள் போல் உள்ளே இருக்கும் ஒரு நிலைமையும் இருக்கிறது.
அதேபோல் நேரடியாக ஆயுதங்களுடன் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மத்திய அரசு இந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இனவாதிகள் விடவில்லை.
பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதி ஒரு பொது மன்னிப்பை வழங்கினால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும். அரசியல் காரணங்களுக்காக பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் போதுதான் அரசியல் கைதிகளின் பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
சீன விண்வெளி நிலையம், விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் மெக்சிகோ நாட்டில் விழுந்து நொறுங்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் விண்வெளி நிலையமான தியாங்காங், கடந்த 2011ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை இழந்த இந்த விண்வெளி நிலையம், தற்போது தறிகெட்டு சுற்றி வருகிறது.
இந்நிலையில், இந்த விண்வெளி நிலையமானது ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வாக்கில், மெக்சிகோ நாட்டில் விழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சுமார் 8.5 டன் எடையுள்ள தியாங்காங், புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, காற்றின் உராய்வு காரணமாக தீப்பற்றும் என்று கூறப்படுகிறது. இதனால், எரிந்த நிலையில் அதன் சிதைவுகள் தான் பூமியில் விழும் என தெரிய வந்துள்ளது.
ரஷ்ய அதிகாரிகள் ஒருவார காலத்திற்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த 4ஆம் திகதி வணிக வளாகம் ஒன்றின் வெளியே முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அப்போது Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு அமிலம் தாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து ரஷ்யா 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
ஆனால் இது குறித்து ரஷ்யா தற்போது வரை விளக்கம் அளிக்காத காரணத்தினால், பிரித்தானியாவில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் என்று தெரசா மே தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரிகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அரசகுடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் எனவும் தெரசா மே தெரிவித்துள்ளார்.
வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் பிரித்தானியாவிற்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத்துறை வீரர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
நன்ஜிங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கவில்லை.
இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டிற்கு மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர், அந்த வீட்டு ஜன்னல் வழியாக கயிறு கட்டி கீழ் தளத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் வீட்டிற்கு இறங்கினார்.
கயிறு மூலம் கீழே இறங்கிய வீரர், ஜன்னலில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை உதைத்து வீட்டிற்குள் தள்ளினார். இதையடுத்து அந்த பெண் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவில் இளம் திருநங்கை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் எரிக் மெக்கே வெர்பீக் (17). ஆணாக பிறந்த எரிக் தனது உடலில் மாற்றம் ஏற்படுவதை ஒரு ஆண்டுக்கு முன்னர் உணர்ந்து இதுகுறித்து தனது தாய் பேட்ரிசியாவிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6-ஆம் திகதி எரிக் திடீரென கடிதம் எழுதிவிட்டு தற்கொலை கொண்டுள்ளார். அந்த கடிதத்தில், தவறான உடலுடன் நான் பிறந்ததை என்னால் சமாளிக்க முடியவில்லை.
இந்த போலியான வாழ்க்கையை வாழ பிடிக்கவில்லை, என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்.
திருநங்கையாக இருப்பது என் பாலின உரிமை, ஹோப் என்ற பெயருடைய திருநங்கையாகவே நான் உங்கள் நினைவில் இருக்க விரும்புகிறேன் என எழுதியுள்ளார்.
எரிக்கின் தாய் பேட்ரிசியா கூறுகையில், எரிக் விருப்படியே வரும் யூன் மாதம் முதல் அவள் பெயரை ஹோப் என மாற்றலாம் என முடிவு செய்திருந்தோம்.
நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே இருக்கலாம் என எரிக்குக்கு நான் தைரியம் கொடுத்தேன். ஆனால் அதற்குள் இப்படியொரு முடிவை எடுத்துவிட்டார் என சோகத்துடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மகன் மற்றும் மகளை திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Oklahoma மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரிசியா ஸ்பேன் (45). இவருக்கு மிஸ்டி (26) என்ற மகளும், ஜொடி ஜூனியர் மற்றும் கொய்டி என இரண்டு மகன்களும் உள்ளனர்.
மிஸ்டி சிறுவயதிலிருந்தே தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த நிலையில் 2014-ல் தாய் பேட்ரிசியாவுடன் சேர்ந்துள்ளார்.
பின்னர் தாய் மற்றும் மகள் இடையே தவறான உறவு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். Oklahoma மாகாண சட்டப்படி இது தவறு என்பதால் பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் பேட்ரிசியா ஏற்கனவே கடந்த 2008ல் தனது மகன் ஜொடி ஜூனியரை திருமணம் செய்தது தெரியவந்தது. பின்னர் இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க ஜொடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தெரிந்தது.
இதோடு இன்னொரு மகன் கொய்டியையும் திருமணம் செய்ய பேட்ரிசியா முயற்சித்துள்ளார். இதையடுத்து பொலிசார் பேட்ரிசியா மற்றும் மிஸ்டியை கடந்தாண்டு கைது செய்தனர்.
அவர்கள் மீதான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேட்ரிசியாவுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும், மாகாண பாதிக்கப்பட்டோரின் இழப்பீட்டு நிதியில் $300 வழங்கவும் பேட்ரிசியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னொரு குற்றவாளியான மிஸ்டிக்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில், பத்தாண்டுகள் அவர் நன்னடத்தையை சோதிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கணவரை அடித்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் நீரஜ் மீவேதா (25). இவர் மனைவி நீது. தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நீது தற்போது ஐந்து மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் ரத்தம் படிந்த நிலையில் வீட்டின் முதல் மாடியில் நீரஜ் இருதினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்த நடத்திய விசாரணையில் நீரஜை கொலை செய்தது அவர் மனைவி நீது என தெரியவந்தது.
இதையடுத்து நீதுவை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு விருப்பமில்லாமல் நீரஜுடன் திருமணம் நடந்தது.
அவருடன் பல தடவை சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளேன்.
நீரஜுக்கு தோல் நோய் இருந்தது, இதனால் அவரிடம் பேசுவதை கூட நான் விரும்பவில்லை. இதனால் என் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்.
இதனால் அவர் தூங்கி கொண்டிருந்த போது கூரான ஆயுதத்தை வைத்து அடித்து கொன்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்
தமிழகத்தில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியிருப்பதுடன், எஞ்சியுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த தீ விபத்தில் சிக்கி 80 சதவீத காயங்களுடன் இருப்பவர் தான் அனுவித்யா, சென்னையைச் சேர்ந்தவரான இவருக்கு மலையேற்றம் என்றால் அலாதி பிரியம்.
இதுதவிர நீச்சல், மரதன் ஓட்டம் என பலவிதமான விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக வலம்வந்தார்.
கடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டில் ஐந்து கிலோமீற்றர் நீச்சல், 30-கிலோமீற்றர் சைக்கிள் பயணம் அதை தொடர்ந்து 21 கிலோமீற்றர் ஓட்டம் என மூன்று போட்டிகளையும் ஒருசேரக்கொண்ட Triathlon போட்டியில் முழுஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இவர் தீயில் சிக்கிக் கொண்ட போது அவரை உடனடியாக அம்புலன்சில் ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது இவர் தன் அப்பாவிடம் நான் நல்ல படியாக இருக்கிறேன், சிறிய காயம் தான் என்று போனில் ஆறுதல் கூறியுள்ளார்.
ஆனால் அவரை மருத்துவமனையில் வந்து பார்த்த போது குடும்பத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் 80 சதவீத தீக்காயங்களுடன் அவதிப்பட்டு வருகிறார், ஆனால் சிறியக் காயம் என்று சொல்லியுள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னை பார்க்க வருபவர்களிடம் இன்னும் கொஞ்ச நாட்களில் நான் ஊருக்கு வந்துவிடுவேன். எதுக்கு எல்லோரும் மதுரை வருகிறீர்கள், நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன் அங்கு சந்திக்கலாம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
மேலும் தான் தீயில் சிக்கியிருந்த போது வந்த மலைவாசி ஒருவர் அவரின் சட்டை, லுங்கியை அவர் மீது போர்த்தியுள்ளார், பத்திரமாக இருப்பா என்று கூறியுள்ளார்.
இதனால் அவரை நிச்சயமாக பார்த்த்து நன்றி சொல்ல வேண்டும் என அவரது குடும்பத்தினரிடம் வித்யா தெரிவித்துள்ளார்.
இப்படி கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று அனுவித்யா நம்பிக்கையுடன் உள்ளதால் மகளின் உறுதி அவரை மீட்டுவரும் என்று நம்பிக்கையுடன் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
தற்போது அனுவித்யா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பூட்டப்பட்ட அறையில் பத்து வயது சிறுவன் யாராவது என்னை காப்பாற்றுங்கள் என்று கதறிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன், கூலித் தொழிலாளியான இவருக்கு வேல்முருகன்(10) என்ற மகன் உள்ளார். அங்கிருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுவன் நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.
பள்ளிக்கு சென்ற சிறுவன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளிக்கு வந்து பார்த்த போது, பள்ளி பூட்டியிருந்ததால் பெற்றோர் வேறு இடங்களுக்கு சென்று தேடியுள்ளனர்.
அந்த நேரத்தில் பள்ளிக்குள் இருந்து அண்ணா, அக்கா யாராவது என்னைக் காப்பாற்றுங்க, நான் அம்மாகிட்ட போக வேண்டும், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற சிறுவனின் அழுகுரல் கேட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற பலர் இந்த குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு சிறுவன் பூட்டப்பட்ட வகுப்பறையின் இரும்பு கேட்டின் மீது ஏறி நின்று காப்பாற்றுங்க.. காப்பாற்றுங்க என்று கத்தியுள்ளதை கண்டுள்ளனர்.
உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், காலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் காது வலிக்கிறது என்று ஆசிரியரிடம் கூறியுள்ளான்.
மதிய உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து சிறுவன் கூறியதால், ஆசிரியர் கடைசியில் இருக்கும் மேசையில் போய் படு என்று கூறியுள்ளார்.
மாலை பள்ளி விட்டதும், சிறுவன் தொடர்ந்து தூங்கியுள்ளான். இதை கவனிக்காமல் பள்ளி ஊழியர்கள் வகுப்பறையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
உடனடியாக பெற்றோர்கள் வகுப்பறையை கூட சரியாக கவனிக்காமல் பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நண்பருடன் சேர்ந்து நகைக்காக வளர்ப்பு தாயை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் விஜயம்மா (55), அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகாத நிலையில் சோனு சிங் (29) என்ற பெண் இவரின் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார்.
சோனுவுக்கும் யாரும் இல்லாததால் அவரை வளர்ப்பு தாயாக விஜயம்மா பல காலமாக வளர்த்து வந்தார். ஆனால் சோனு வெளியில் தங்கிருந்தாலும், விஜயம்மாவை அடிக்கடி வந்து பார்ப்பார்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை 7 மணியளவில் விஜயம்மா வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர் அவரை காண வந்தபோது ரத்த வெள்ளத்தில் விஜயம்மா சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது விஜயம்மாவை சோனு தனது நண்பர் குமாருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
சோனுவும், குமாரும் நிதி நெருக்கடியில் இருந்ததால் விஜயம்மாவின் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி அவரை கொன்றுவிட்டு நெக்லஸ், இரண்டு வளையல்கள், தோடுகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்த நகைகளை மீட்டுள்ளனர்.
1980களில் மும்பையில் நாட்டியக்காரிகள் என்று அழைக்கப்படும் நடன மங்கைகளைத் தேடிச் செல்லும் ஆண்கள் ஏராளம்.
விபச்சாரிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு, நாட்டியக்காரிகள் பணத்துக்காக பாலுறவு கொள்பவர்கள் இல்லை.
நடனம் ஆடுவது மட்டுமே அவர்கள் தொழில், இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மகனாகப் பிறந்த ஒருவர் தான் எவ்வறு படிப்பால் சமுதாயத்தில் முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.
புகழ் பெற்ற எழுத்தாளரான Manish Gaekwadஇன் தாய் ரேகா, சிறு வயதிலேயே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து குழந்தைத் திருமணம் செய்விக்கப்பட்டவர். காலப்போக்கில் பாட்டும் நடனமும் கற்றுக்கொண்ட ரேகா, ஒரு நாட்டியக்காரியானார்.
எப்போதும் பாட்டும் நடனப்பயிற்சியுமாக வீட்டிற்குள் இன்பமாக வாழ்ந்தபோதும் Manish வீட்டை விட்டு வெளியே வரும் போது அவரை விபச்சாரி மகன் என்று பலர் அழைப்பதுண்டு. தன் வாழ்வு மகனை பாதிக்கக்கூடாது என்று எண்ணிய அவர் Manish Gaekwadஐ போர்டிங் பள்ளி ஒன்றில் சேர்த்தார்.
Manishம் நன்றாகப் படித்தார், பெரும்பாலும் லைப்ரரியிலேயே பொழுதைக் கழித்த Manish இன்று ஒரு பத்திரிகையாளராக உயர்ந்து நிற்கிறார்.
பிரபல பத்திரிகையில் பகுதி நேர பத்திரிகையாளராக பணிபுரியும் அவர், பத்திரிகைத் துறையில் தனக்கு எந்த முன் அனுபவமும் இல்லாவிட்டாலும் தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணம் தன்னை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்த தனது தாய்தான் என்கிறார்.
அடுத்த மாதம் தனது முதல் புத்தகமாகிய Lean Days வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடும் Manish, எனது வாழ்வில் அல்ல, எனது தாயின் வாழ்வில் நடந்தவற்றை வெளியிடும் சரியான நேரம் இதுதான் என்று தான் எண்ணுவதாகக் குறிப்பிடுகிறார்.
ராஜபக்ச ஆட்சி முடிவுக்க கொண்டுவரப்பட்ட நிலையில் அராஜக ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அர்த்தபுஸ்டியான அரசியல் யாப்பு நாட்டுமக்களுக்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் பேரினவாதிகளால் அரசியல் யாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் பிரத்தியோக காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
உள்ளுராட்சி தேர்தலின் மூலம் ராஜபக்சவின் கை ஒங்கியுள்ளதுடன் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழர்கள் தங்கள் இருப்பை தக்கவைக்க கரிசனை கொள்ள வேண்டும் என்பதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க முயற்சி செய்கிறார்கள்.
புதுக்குடியிருப்பு, வெருகல் பிரதேசசபை மற்றும் பூனகரி பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரடியாக ஆட்சி அமைக்க தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
வன்முறையின்போது சமூக வலைத்தளங்களை தடுத்துவிடும்போது உண்மைநிலை வெளிவருவதை தடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்துள்ளது.
வன்முறையின்போது சிறுபான்மையினம் பாதிக்கபடும்போது தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் காரணம் தமிழர்கள் வலியை உணர்ந்தவர்கள்.
தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்கு காரணம் புதிய தேர்தல் முறை இருந்தபோதும் தமிழினத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசு புதிதாக மக்கள் வசிக்காத பகுதிகளில் விகாரைகளை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான விடயத்தை கடுமையாக எதிர்க்கிறது.
அரச நிறுவனங்களில் மத வழிபாட்டு தளங்களை உருவாக்குவது முற்று முழுதாக தவறான விடயம் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வலக்கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சி நிரல் ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுள்ளது. அது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இக்கட்டான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் விடுவிக்கப்படகூடியவர்கள் அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர் மிகுதியானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்கும் போதுதான் அரசியல் கைதிகளின் பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது.
இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், உடனடியாக அந்த தடை நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மேற்கு பகுதியில் அரபியக் கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 950 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வலுவிழந்து நாட்டை விட்டு மேலும் விலகி செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டிலும் மேற்கு கடற்பரப்பு வானிலையிலும் இதன் தாக்கம் மிகவும் குறைவாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப்பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். மின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.