தேனி குரங்கணி தீ விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் விவின் (வயது 34), என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு மலையேறும் பயிற்சி என்றால் அலாதி பிரியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பயிற்சியின் போதே திவ்யா என்ற பெண்ணிடம் மனதை பறிகொடுத்துள்ளார்.
பெற்றோரின் சம்மதப்படி, இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்த நிலையில், திவ்யாவின் தந்தை விஸ்வநாதனின் மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
விஸ்வநாதன் இறந்த நிலையில் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இருவரும் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
விபத்தில் சிக்கி விவின் உயிரிழந்து விட்டார், திவ்யா உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களது குடும்பத்தினர் தேனிக்கு விரைந்துள்ளனர்.
இந்தியாவில் 10வது வரை மட்டுமே படித்த தமிழர் ஒருவர், தனது கடின உழைப்பால் 40 கோடி சொத்துக்கு அதிபதியாக உயர்ந்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. 10ஆம் வகுப்பு வரை படித்திருந்த இவர், தனது 17 வயதில் வேலைக்காக சென்னைக்கு சென்றார். அங்கு ரூ.250-க்கு மாத சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.
அந்த பணத்தைக் கொண்டு, 1990ஆம் ஆண்டு வேலை தேடி மும்பைக்கு சென்ற பிரேம், தனக்கு துணையாக வந்தவர் இவரது பணம், உடைமைகளை திருடிக் கொண்டு சென்றதால் மும்பை பாந்ரா ரயில் நிலையத்தில் தனியாக நின்றுள்ளார்.
இவரின் நிலையை பார்த்த தமிழர் ஒருவர், பிரேம் ஊருக்கு செல்ல தேவையான பணத்தை திரட்டி அளித்துள்ளார். ஆனால், தனது ஊருக்கு செல்ல மனமில்லாத பிரேம், பேக்கரி ஒன்றில் மாதம் ரூ.150 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.
அதன் பிறகு, சொந்தமாக இட்லி கடை ஒன்றை வைக்கும் அளவிற்குப் பணத்தைச் சம்பாதித்த பிரேம், வாஷி ரயில் நிலையத்தின் அருகில் கடை ஒன்றை தொடங்கினார். கூடுதல் வேலைக்காக தனது தம்பிகள் இருவரை ஊரிலிருந்து அழைத்து வந்து, அவர்களுக்கும் வேலை கொடுத்தார்.
தலைக்குத் தொப்பி, கைகளுக்கு உறை என தனது ரோட்டுக் கடையிலேயே சுத்தத்தினை பிரேம் கடைபிடித்ததால், அவரின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதன் மூலம், 5000 ரூபாய் வாடகையில் ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து, சிறிய உணவகம் ஒன்றை துவங்கினார். அதற்கு ‘Dosa Plaza’ என பெயர் வைத்த பிரேம், 27 வகையான தோசைகளை தயார் செய்து விற்க ஆரம்பித்தார்.
இவ்வாறாக, பிரேம் கணபதியின் உணவகம் மும்பையில் பிரபலமானது. ஷாப்பிங் மாலில் தனது கடையை திறக்க வேண்டும் என்று எண்ணிய பிரேம், தனது வாடிக்கையாளர் ஒருவரின் உதவியுடன் சில தடங்கலுக்கு பின்னர் மாலிலும் தனது Dosa Plaza-வை திறந்தார்.
இதனைத் தொடர்ந்து, இவரது கடைக்கு கிளைகள் துவங்க அனுமதி வேண்டும் என்று பலர் கோரியபோது, அதற்கு ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளித்தார் பிரேம்.
அதாவது, யார் உணவகம் ஆரம்பித்தாலும், அதற்கு தேவையான பொருட்களை தன்னிடம் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்று கூறினார்.
தற்போது, பிரேம் கணபதியின் Dosa Plaza நிறுவனத்தின் இணையதளத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 45 உணவகங்களும், வெளிநாடுகளில் 10 உணவகங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மலையேற்றத்தின் போது தீ விபத்தில் தப்பிய மாணவி ஒருவர், பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம் என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு மலையேற்ற பயிற்சிக்காக, சென்னையை சேர்ந்த 22 பெண்கள் உட்பட 24 பேரும், திருப்பூரைச் சேர்ந்த 12 பேரும் என மொத்தம் 36 பேர் சென்றுள்ளனர்.
ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை மீட்கும் பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிபத்தில் இருந்து தப்பிய மாணவி விஜயலட்சுமி கூறுகையில், ‘சென்னையிலிருந்து மொத்தமாக 24 பேர் மலையேற்றம் வந்தோம். அவர்களில் 2 பேர் ஆண்கள். மற்றவர்கள் பெண்கள்தான்.
இது தவிர, மற்றொரு குழுவினரும் வந்திருந்தார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு கிளம்பலாம் என நினைத்தோம். அப்போது, திடீரென புகை வந்தது. நாங்கள் எதிர்பாராத போது அதிகப்படியான புகை எங்களது கால் வரை வந்தது.
என்ன செய்வதென்று தெரியாமல் ஆளுக்கொரு பக்கம் ஓடினோம். நாங்கள் தப்பிக்கலாம் என நினைத்தபோது, எந்த பக்கத்திற்கும் வழி இல்லாமல் தீ முழுவதும் எங்களை சூழ்ந்து இருந்தது.
ஒரு சிலர் மட்டும் பாறைக்கு இடையில் குதித்து தப்பித்தோம். அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், மற்றவர்கள் ஒவ்வொரு பக்கமாக ஓடினார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 21 வயதான இளைஞனின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை அண்டி வசிக்கும் நிமலேந்திரன் பிரசாந்த் (வயது 21) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.
கூலித் தொழிலாளியான இவர் பெற்றோருடனும், சகோதரர்களுடனும் வசித்து வந்த நிலையில் அவ்வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நீண்ட நேரமாகியும் வீட்டின் அறைக் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், அறையைத் திறந்து பார்த்தபோது குறித்த இளைஞன் சடலமாக கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்து சடலம் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதலைப்போராட்டத்திற்கு தனது இரண்டு பிள்ளைகள் மாவீரர்களான நிலையில் வவுனியாவில் கடந்த சில தினங்களாக ஆதரவற்ற நிலையிலிருந்த வயோதிப 88 வயதுடைய தந்தை ஒருவர் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பிடம் உதயிகோரியுள்ளார்.
இதையடுத்து குறித்த வயோதிபரை வயோதிபர் காப்பகம் ஒன்றில் சேர்த்து விடுவதற்கு நிர்வாக நீதியான பிரச்சினைகளை அணுகவேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அவரை ஒரு விடுதியில் வைத்து பராமரித்து வருவதுடன் அவருக்குத் தேவையானவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வயோதிபரை வயோதிப காப்பகம் ஒன்றில் இணைத்துக்கொள்வதற்கு அதிகாரிகள் முன்வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை பொன்னையா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவில் வசித்து வந்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது தனது மூன்று பிள்ளைகளில் இரண்டுபேரை விடுதலைப்போராட்டத்தில் இணைந்து மாவீரர்களாகியுள்ளனர். இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து வரும்போது தனது மற்றைய மகனும் காணாமல்போயுள்ளார்.
இதையடுத்து மனைவியையும் பறிகொடுத்த நிலையில் வவுனியா வந்து சேர்ந்த குறித்த வயோதிபர் தன்னாலான வேலைகளைச் செய்து இயலுமானவரை வசித்து வந்துள்ள நிலையில் தற்போது மிகவும் உடல் ரீதியாக தளர்வடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் செய்வதறியாது உதவிகோரியுள்ளார்.
தனக்கு யாசகம் செய்ய முடியாத நிலையிலே தற்போது தன்னை ஒரு முதியோர் காப்பகம் ஒன்றில் சேர்த்துவிடுமாறும் கோரியே தமிழ் விருட்சம் அமைப்பிடம் உதவிகோரியுள்ளார்.
இதையடுத்து தமிழ் விருட்சம் அமைப்பினரால் குறித்த வயோதிபரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருவதுடன் நிர்வாக ரீதியான நடைமுறைச்சிக்கல்களை அணுகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் அதிகாரிகள் முன்வந்து ஒத்துழைப்பினை வழங்குவதுடன் குறித்த வயோதிபரை காப்பகத்தில் சேர்த்து அவருக்கு உதவிபுரிய முன்வருமாறு கோரியுள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற போதே உதவி திட்டப்பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையாகவுள்ளது என தெரிவித்ததுடன் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட நிதிவிபரங்கள் தொடர்பிலும் தெரிவித்திருந்தார்.
யாழில் சிறுமி ஒருவரை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், குற்றவாளிக்கு உதவிய குற்ற சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் நீதிபதி விதித்துள்ளார்.
வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணைகள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
முதலாவது சந்தேநபருக்கு எதிராக கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டும், இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்குக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
“முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
அந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.
அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பை வழங்கினார்.
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள த்ரிபூவன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் பலர் உயரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமான ஊழியர்களுடன் சேர்த்து மொத்தம் 78 பேர் வரை பயணம் செய்துள்ளதாக காத்மாண்ட் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வரையில் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் நேபாள இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று காலை முதல் பெய்து வந்த மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா கண்டி வீதியிலுள்ள பிரதம பொறியியலாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா அலுவலகத்திலுள்ள பாரிய மரம் ஒன்று பாறி அலுவலகத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது.
அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது மரத்தினை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் சிவன் மகோற்சவம் (16.03.2018) வெள்ளிகிழமை மதியம் 12.00 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது ..
வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. குறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் காணப்படுகின்றது.
இந்த ஆளணி நிரப்பப்படாமையால் எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.
இதனால் இன்று அதிகாலை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் மீனவக் குடும்பங்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு நகர்ப்பகுதியெங்கும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது.
மேலும் கரையோரப் பகுதியில் வாடிகளில் குடியமர்ந்திருந்த மீனவக்குடும்பங்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலரின் அழிவான செயல்கள் காரணமாக முழு உலகிலும் சிங்கள இனம் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் ஊடாக உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட்டு பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறை அழிவு தொடர்பான செய்தி மிக விரைவில் உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொழும்புக்கு அடுத்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் கண்டி.
மேலும் சுற்றுலாப் பயணிகளாக வரும் அரேபியர் அதிகளவில் கண்டிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அண்மையில் கண்டியில் ஏற்பட்ட நிலைமைகள் சுற்றுலா தொழிற்துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து உடனடியாக கவனம் செலுத்தி கண்டி நகரின் நிலைமையை துரிதமாக வழமை நிலைமைக்கு கொண்டு வருமாறு முச்சக்கர வண்டிகளை ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல இளைஞர்கள் என்னிடம் கூறினர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், வருமானம் இன்றி எப்படி வாழ்க்கை நடத்துவது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவங்கள் காரணமாக பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்கள சாரதியை மதுபோதையில் தாக்கிய சம்பவம் காரணமாக இந்த பிரச்சினை ஆரம்பமானது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு நான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டேன்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். சம்பவங்களை பரவ செய்த நபர்கள் தொடர்பிலும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த நெருக்கடியான நிலைமை கண்டியுடன் முடிவடைந்து விட்டது. கண்டியில் ஆரம்பித்த வன்முறை நாடு முழுவதும் பரவுமோ என்ற அச்சம் பலருக்கு இருந்தது.
எனினும் அப்படியான நிலைமை ஏற்படவில்லை. அததனை தடுத்து நிறுத்த எம்மால் முடிந்தது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்குவதற்கு பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக – ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டிற்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை, அப்பதவிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் காணப்படும் சீரற்ற தன்மையை நிவர்த்தி செய்யும்படி போதனைசார ஊழியர்களால் வழங்கப்பட்ட அழுத்தத்தை கவனத்தில்கொள்ளாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.
அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் நாளை முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆதரவளிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல் உள்ளிட்ட பிரதான வாயிற் கதவுகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.