இலங்கையின் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில்,

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் அது மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனால் மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் (மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான) பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பாகங்களில் (மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான) ஓரளவு பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் (100 மி.மீக்கும் அதிகமான ) பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இக் கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடலில் பயணம் செய்வோரும் எச்சரிக்கையாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீக்கப்பட வாய்ப்பு!!

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்றைய தினம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமது அமைச்சும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவும் பேஷ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

பகையுணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் மற்றும் ஆபாச காட்சிகள் சிங்களத்தில் வெளியாகி இருந்ததால், அவற்றை நீக்க காலம் எடுக்கும்.

மேலும் பேஷ்புக்கில் சிங்களத்தில் வெளியாகும் பதிவுகளை கட்டுப்படுத்த அந்த நிறுவனத்திடம் போதிய மனித வளம் இல்லை.

இனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான பதிவுகளை எப்படி அகற்றுவது? என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி தனது அமைச்சுக்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்!!

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் வைத்து போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மோட்டர் சைக்கிளை நிறுத்தாது சென்ற போது அதனை விரட்டி சென்ற போக்குவரத்துப் பொலிசார் வவுனியா, புகையிரத வீதியில் உள்ள பூங்கா வீதிச் சந்தியில் குறித்த மோட்டர் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பொலிசாரும் அதனை தடுத்து அவரை கைது செய்ய கடும் பிரயத்தனம் செய்துள்ளனர்.

சுமார் 10 நிமிடங்களாக அப்பகுதியில் போக்குவரத்து பொலிசாரும் குறித்த இளைஞரும் கைகலப்பில் ஈடுபட்டு முரண்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மேலதிக போக்குவரத்து பொலிசார் வருகை தந்து குறித்த இளைஞரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் வேறு மூன்று மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆறு இளைஞர்கள் வவுனியா மணிக்கூட்டு கோப்புர சந்தியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் வீதி சோதனை செய்ய நிறுத்திய போது நிறுத்தாது அந்த பொலிசாரை சீண்டும் வகையில் தமது மோட்டர் சைக்கிளில் பல தடவை சந்திக்கு அண்மையில் வருவதும் திரும்பி தப்பி ஒடுவதும் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு!!

சமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

முகநூல், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமை குறித்த பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

சிலர் சமூக ஊடக வலையமைப்புக்களை மோசமாக பயன்படுத்திய காரணத்தினால் இவ்வாறு முடக்க நேரிட்டது.எனினும் இது பற்றி எனக்கு சரியான பதிலை அளிக்க முடியாது.

இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைiமையில் இயங்குகின்றது.

எவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமையினால் பலர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது எமக்குத் தெரியும்.

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய பதிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இவை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்காக இலங்கை சென்ற வெளிநாட்டவர் விமானத்தில் மரணம் : உடலை மீட்க திண்டாட்டம்!!

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் விமானத்தில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான யூ.ஏ.ஜயதிஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகைத்தந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தினுள் உயரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு திடீர் வைத்திய அதிகாரியினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பயணி மாரடைப்பு ஏற்பட்டு விமான கழிப்பறையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் சற்று பெரியதாக இருந்தமையினால் கழிப்பறையில் இருந்து வெளியே எடுப்பதற்கு ஐந்தரை மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் உடலை எடுக்க கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

மரண விசாரணை மற்றும் சாட்சிகளுக்கமைய அவர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவரது மனைவி பாடசாலையில் ஆசிரியராக செயற்பட்டுள்ளார்.

அவர் தனது மனைவியுடன் இலங்கையில் இடம்பெறவிருந்த உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதாக நேற்று முன் தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். அவ்வாறு வரும் போது அவர் விமான கழிப்பறைக்கு சென்று திரும்பி வரவில்லை.

பின்னர் விமான ஊழியர்கள் கழிப்பறையை திறப்பதற்கு முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்துள்ளது. எனினும் பாரிய முயற்சியின் பின்னர் சிக்கியிருந்த அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை : நான்கு அதிகாரிகள் கைது!!

யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற பணம் காணாமல் போனமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கிக்கு கொண்டு சென்ற 11,074,000 ரூபா பணத்தில் 8,020,000 ரூபா பணம் காணாமல் போயுள்ளமை தொடர்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்ம 9ஆம் திகதி அனுராதபுரம் வங்கியிலிருந்து யாழ்ப்பாண வங்கிக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பணத்தை கொண்டு செல்லும் போது தேனீர் அருந்துவதற்காக வாகனத்தை இடைநடுவில் நிறுத்தியுள்ளனர்.

அவர் தேனீர் அருந்தி விட்டு வாகனத்திற்கு வந்து பார்க்கும் பணம் இருந்த 2 பைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர். அந்த பைகள் இரண்டையும் யாராவது திருடி சென்றிருக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பணம் கொண்டு சென்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 56,43,24 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 7ம் திகதி முதல் தொடர்ந்து இந்த தடை அமுலில் இருக்கிறது. இதனை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியாலைக்கு முன்பாக துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய லொறி : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகேயுள்ள சுற்றுவட்ட வீதியில் இன்று (12.03.2018) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற லொறி – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா புதிய பேரூந்து நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

 
வவுனியா புனவேஸ்வரி அன்பு இல்லத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாக இன்று அவர்களது சாந்தசோலை பிரதான வீதியிலுள்ள நினைவிடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தின் பஜனை நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. லண்டன் மாநகரின் பிரபல சட்டத்தரணியான ஸ்ரீகாந்தாவினால் உத்தியோகபூர்வமாக நிகழ்வுகள் நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலவச மூக்குக்கண்ணாடிகள் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொண்டு வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் என்பன புவனேஸ்வரி அன்பு இல்லத்தின் குடும்ப உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஒன்றோடு ஒன்று மோதி சுக்குநூறான ஹெலிகொப்டர்கள் : வைரலாகும் வீடியோ!!

அமெரிக்காவில் காவல்துறைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி சுக்குநூறான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாண காவல் துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட தயாரான போது அருகில் வந்த மற்றொரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் காற்றின் வேகத்தில் நிலைகுலைய, இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி சுக்குநூறாக உடைந்தன.

அப்போது ஹெலிகாப்டர் அருகே நின்று கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தூக்கி வீசப்பட்டு பின்னர் சுதாரித்து அங்கிருந்து தப்பித்து ஓடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மறைந்த ஸ்ரீதேவியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்குமார்!!

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி துபாயில் மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது.

மும்பை கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவருக்கு அரசு மரியாதையும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இன்று மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் தமிழ் திரைப்பிரபலங்கள் பாக்யராஜ், கார்த்திக், மனோபலா உள்ளிட்டோர் பல திரைப்பிரலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினார். அஜித்துடன் அவரது மனைவி ஷாலினியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னனி பாடகி பி.சுசிலா, நடிகை மீனா ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் குடும்பத்திடம் சொல்லாதீர்கள் : வீதியில் மயங்கிய இளைஞனுக்கு பொலிஸ் காட்டிய கருணை!!

தமிழகத்தில் வேலை தேடி வந்த இளைஞன் மயங்கி விழுந்ததைக் கண்ட பொலிசார் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கோயமுத்தூரின் நீதிமன்றம் வளாகம் முன்பு ஒருவழிப்பாதையின் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில், போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு தலைமைக் காவலர் மகேஷ்வரன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது சாலையைக் கடந்த இளைஞர் ஒருவர், திடீரென்று மயங்கி விழுந்ததைக் கண்ட மகேஷ்வரன் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி கொடுத்தார்.

மயக்கம் தெளிந்த பின் அந்த இளைஞனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று மகேஷ்வரன் முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞனோ மருத்துவமனை எல்லாம் வேண்டாம், ஒரு சாக்லேட் மட்டும் கொடுத்தால் போதும் எனவும், இதைப் பற்றி என் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் பின் அவரிடம் நிலை குறித்து கேட்ட போது, தான் வேலை தேடுவதற்காக கோயமுத்தூர் வந்ததாகவும், நான் தான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உடனடியாக அவர் நான் உனக்கு வேலை தயார் செய்து தருகிறேன். முதலில் சாப்பிடு என்று கூறி சாப்பிட வைத்து அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலா வர, இதைக் கண்ட இணையவாசிகள், சில காவலர்கள் அத்து மீறி ஈடுபட்டாலும், அனைத்து காவலர்களும் அவர்களைப் போன்று இல்லை என பாராட்டி வருகின்றனர்.

இலங்கையில் பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கை கட்டுப்படுத்துவது அவசியம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“கண்டி மாவட்டத்தில் பரவிய வன்முறைகளை அடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்கும் தினம் குறித்து அரசாங்கம் ஏன் இதுவரை தீர்மானங்களை எடுக்கவில்லை?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் முற்றாக பேஸ்புக்கை நீக்கியுள்ளன. இதற்கு சீனா சிறந்த உதாரணம். இதனை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எமக்கும் உள்ளது. இது குறித்த மக்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்.

நாட்டுக்கு நல்லதென்றால் பிரச்சினை இல்லை. நாட்டுக்கு பிரச்சினையாக இருக்குமாயின் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

தடைசெய்யப்படுவதை விட பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தலாம் எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் இனவாதம் பரப்பிய மேலும் இரு மாணவர்கள் கைது!!

இணையத்தளத்தை பயன்படுத்தி இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் ஹோமாகமை மற்றும் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் இருவரும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கிறிபத்கொடை மாகொல இளைஞர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனவாத ரீதியான கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தமைக்காக இதற்கு முன்னரும் இதே போன்று இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் காதலியை மிக மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கிய இலங்கை இளைஞன்!!

லண்டன் – மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான முறையில் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படவும் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான அகம்போதி டி சொய்சா என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர் மன்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து தனது காதலியை பாலியல் ரீதியாக மிக மோசமாக சித்திரவதை செய்து இரத்தம் வரும் வரை தாக்கியுள்ளார்.

குறித்த பெண் மயக்கமுறும் வரை தாக்கிய பின்னர் தனது கையடக்கத்தொலைபேசியில் ஒளிப்பதிவும் செய்த நிலையில் நித்திரை செய்துள்ளார்.

பின்னர் ஹோட்டல் அறையிலிருந்து தப்பித்த அவரது காதலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் தனது காதலியை 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாலியல் துஷ்பிரயோகம், மற்றும் சித்திரவதை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள், சேதம் விளைவித்தமை உட்பட முந்தைய குற்றங்களுக்கும் சேர்த்து இவருக்கு 12 வருட சிறைத்தண்டனையும் ஒத்தி வைக்கப்பட்ட மேலதிக 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கண்பார்வை தெரியாத வௌவால் எப்படி எதன்மீதும் மோதாமல் பறக்கின்றது?

பூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது என்று சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு பார்க்கும் திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.

ஆனாலும் அதை வைத்துக் கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது என்பதால் வௌவால்கள் ஒலியை நம்பியிருக்கின்றது.

இவை வெளிப்படுத்தும் மீயொலி (Ultra sound) அலைகள் அதிக அதிர்வெண்களைக் கொண்டதாக இருக்கிறது.

மனிதர்களால் 80-20 ஆயிரம் அதிவெண் அலைகளைத் தான் உணர முடியும். ஆனால் வௌவால்களால் 1,50,000 அதிர்வெண்களை உணர்ந்துக் கொள்ள முடியும்.

அதனால் தான் வௌவால் பறக்கும் போது ஒலிகளை எழுப்பிக் கொண்டே செல்கின்றது. இந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு, வௌவாலுக்கு வேகமாக திரும்பி வரும்.

அதை வைத்து வௌவால் எதிரில் பொருளோ, எதிரியோ இருப்பதை அறிந்து, திசையை மாற்றிக் கொண்டு, மோதாமல் பறந்து விடுகின்றது.