கணவன் கேட்ட ஒரே கேள்வியால் தூக்கில் தொங்கிய மனைவி!!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு கல்யாணம் செய்து கொள்ளவா என தனது கணவன் கேட்டதால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான நடேசன் மற்றும் நிர்மலா தம்பதிக்கு கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

குழந்தை பாக்கியம் வேண்டி சிகிச்சைகள் பலவற்றையும் இருவரும் எடுத்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையின்மைக்கு காரணம் நீதான் என கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்தும் வந்துள்ளனர். இதனிடையே வேறு திருமணம் ஒன்றை செய்து கொள்ள நடேசன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு நிர்மலாவின் சம்மதத்தப் பெறவும் அவர் முயன்றுள்ளார்.

திருமண விடயத்தில் நடேசன் தீவிரமாக இருப்பதை அறிந்த நிர்மலா மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிர்மலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் தற்போது ஆலங்குடி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட கால் நோயாளியின் தலைக்கு தலையணையாக வைக்கப்பட்ட கொடூரம்!!

இந்தியாவில் விபத்தி்ல் சிக்கியவரின் காலை துண்டித்து அவரிடமே தலைக்கு தலையணையாக படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியதில் இடது கால் பலத்த காயத்துடன் அங்குள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது மருத்துவர்கள் இளைஞரின் இடது காலை துண்டித்த நிலையில் அதையே அவர் தலைக்கு தலையணையாக வைத்துள்ளனர். தலையணை வழங்காத நிலையிலே இதை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட அது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காலநிலை தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கைக்கு அண்மையில் நிலவுகின்ற மாற்றமடையும் தாழமுக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்பகுதியில் மழை பொழிவதற்கான வாய்ப்பு அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் கடும் மழை ஏற்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக உயர்வடையலாம். இடி, மின்னல்களால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு தென்மேற்கு பிரதேச கடலில் நிலவுகின்ற செயற்பாட்டு முகில் கூட்டம் காரணமாக, களுத்துறையில் இருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பரப்புக்கு அப்பாலுள்ள கரையோர பிரதேசங்களில் தாக்கம் ஏற்படலாம்.

காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்திற்கு மாற்றமடையும் சாத்தியம் காணப்படுவதனால் கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் அதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் அவசரகால சட்டத்திற்குள் சிக்கிய பேஸ்புக், வட்ஸ்அப் : அதிர்ச்சியில் அதன் பயனர்கள்!!

இலங்கையில் தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களை மீள அனுமதிக்க கால அவகாசம் எடுக்கும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டியில் தீவிரமடைந்த இன வன்முறைகளை அடுத்து 72 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கை அமுல்படுத்தப்பட்டது.

எனினும் 72 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும், சமூக வலைத்தளங்கள் இன்னும் வழமை போன்று செயற்படவில்லை.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவர் ஒஸ்ரின் பெர்னான்டோ,

சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தன்னால் இப்போது கூற முடியாது என்றும், அது நிலைமைகளைப் பொறுத்த விடயம் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அவசர காலச்சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை 14 நாட்கள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பேஸ்புக், வட்ஸ்அப் தடை செய்யப்பட்டமையினால் அதன் பயனர்கள் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உளவியல் சிகிச்சைகளை பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழ்வின்-

தமிழ் குடும்பத்தை பலவந்தமாக கைதுசெய்து நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசு முடிவு!!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து தஞ்சமடைந்திருந்த தமிழ் குடும்பமொன்றை அவுஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு தமிழ் ஏதிலிகள் கழகத்தினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலிய எல்லைப்படையினரும், பொலிஸாரும் அக்குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி சுமார் 2500 கிலோமீற்றர்கள் தள்ளியிருக்கிற மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்துவைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பத்து நிமிடங்கள் மட்டுமே அக்குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்டதாகவும், அந்நேரத்தில் கையில் அகப்பட்ட சில உடைகளை மாத்திரம் ஒருபையில் அள்ளிக்கொண்டு வந்ததாகவும் குடும்பத்தலைவி பிரியா தெரிவித்துள்ளார்.

பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா , 2 வருட குழந்தை கோபிகா ஆகியோரைப் பலவந்தமாக ஏற்றுவதைப் பார்த்த அண்டைவீட்டுப் பெண்மணி ஹாலிவுட் திரைப்படத்தை போன்ற சம்பவங்கள் நடந்தேறியதாகக் தெரிவித்துள்ளார்.

2013இல் ஆஸ்திரேலியா சென்ற நடேசலிங்கம் மற்றும் பிரியா 2014ஆம் ஆண்டு திருமணம் முடித்து பல வருடங்களாக பிலோலாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவ்வாண்டு மார்ச் 4இல் பிரியாவின் இணைப்பு விசா முடிவடைந்த தருவாயில் தனது விசாவை புதுப்பிப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து மெல்பேர்ண் தடுப்புமுகாமிலிருக்கும் பிரியாவுடன் பேசியபோது “விடியற்காலை 5 மணியளவில் என் வீட்டு கதவை தட்டிய அதிகாரிகள் எங்களை Melbourne அகதிகள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகவும் பத்து நிமிடத்தில் தேவையான உடைமைகளை எடுத்துக்கொள்ளும்படியம் கட்டளையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரியாவும் அவரின் கணவரும் தனித் தனியாக இரு வாகனங்களில் Gladstone விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

குழந்தைகள் பிரியாவுடன் சென்றிருந்தாலும் கூட வாகனத்தில் பிரியாவுடன் குழந்தைகளை இருக்கவிடவில்லை. அவரின் கெஞ்சல்களுக்கு பிறகும் கூட குழந்தைகள் தாயிடம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Melbourne ல் சிறை வைக்கப்பட்ட பிறகு, தமது விருப்பின்பேரில் நாடு திரும்புவதாக ஒப்புக்கொண்டு ஆவணங்களில் கையெழுத்திட காவலர்கள் கட்டாயப்படுத்தினர் எனவும், கட்டளையை மறுத்தால் தானும் கணவரும் தனித்தனியாக இலங்கை கடத்தப்படுவோம் என்றும் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

தங்களை நாடு கடத்த வேண்டாம் என்று கதறி கெஞ்சியுள்ளனர். நம்பிக்கை தளர்ந்த நிலையில் செவ்வாய் மதியம் காவலர்கள் தந்த ஆவணங்களில் கையெழுதிட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன் ஒரு தமிழ் வாலிபர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நாடுகடத்தலுக்கு அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டு வருகின்றது.

ஏற்கனவே நாடுகடத்தப்பட்டவருக்கு சிறிலங்கா அரச புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து, மிரட்டி வந்தனர். இப்பொழுது பிரியா குடும்பத்தினருக்கும் அம்மாதிரி நாடு கடத்தப்படும் சூழ்நிலை வந்துவிடுமோ என்று அவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதேவேளை, இந்தக் குடும்பம் பலவந்தமாக தடுப்புமுகாமுக்குக் கொண்டுவரப்பட்ட முறைமையும் அதுவும் அவுஸ்திரேலியாவிலேயே பிறந்து வளரும் இரண்டு குழுந்தைகளையும் நாடுகடத்த முற்படுவதும் அவுஸ்திரேலியாவில் பொதுமக்களிடத்திலும் அகதிகள் செயற்பாட்டு இயக்கங்களிடத்திலும் பெரும் விசனத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரியா, நடேசலிங்கம், தருணிகா மற்றும் கோபிகாவை Biloela விலுள்ள அவர்கள் இல்லத்திற்கு திரும்ப அனுப்ப ஆஸ்திரேலியா அரசிடம் தமிழ் ஏதிலிகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழ் ஏதிலிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரபட்டுள்ளது.

இதன்மூலம் அவர்கள் குழந்தைகளை தொடர்ந்து அமைதியான வாழ்க்கை முறையில் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நீதிச் சேவையில் பொன்விழா காணும் சட்டத்தரணி மு.சிற்றம்பலம் கௌரவிப்பு!!

 
நீதிச் சேவையில் பொன்விழாக் காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10.03) மாலை இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவசாகம் தலைமையில் நடைபெற்றது.

1968 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி முதல் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கடந்த 50 ஆண்டு காலமாக சட்டத்தரணி தொழிலை ஒரு சமூகத் தொண்டாகக் கருதி நீதித்துறையில் பணியாற்றி வவுனியா மண்ணுக்கும், இந்த நாட்டிற்கும் சேவையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்கள் இதன்போது பலராலும் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்த்தர்கள், கல்வியலாளர்கள், வர்த்தக பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உண்மையை விட பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகின்றன!!

சமூக ஊடகங்களில் உண்மையைவிட பொய்யான செய்திகள் மிக விரைவாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள “மாசாசூசெட்ஸ்” தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்காக 2016 ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை 1,26,000 பேரின் டுவிட்கள் கண்காணிக்கப்பட்டன. அந்த அறிக்கையில்,

“மக்கள் உண்மையான செய்தியை விட பொய்யான செய்தியை அதிகமாக நம்புகின்றனர். இதனால் அவர்கள் பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் மிக விரைவாக பகிர்கின்றனர். ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையை விட பொய் செய்திகள் 70 சதவீதம் அதிகமாக பகிரப்படுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாக செய்திகளை விரும்புகின்றனர். பொய்யான செய்திகள் அவர்களின் ஆவலை தூண்டுகின்றன. அதனால் வருகின்ற செய்தி உண்மையா? பொய்யா? என்பதை ஆராயாமல் அதனை பகிர்ந்து விடுகின்றனர்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க டுவிட்டர் நிறுவனம் புதிய விதிமுறைகளை கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவு­னி­யா­ புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதசாரிக் கதவை!!

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நேற்று முன்தினம் (09.10.2018) வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்னால் பாதசாரிக் கடவை அமைக்கப்பட்டது.

புதிய பஸ் நிலையமானது A9 முதன்மை வீதியில் அமைந்திருப்பதால் அந்தப்பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த இடமாக காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில் கடவை இல்லாமல் பல விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன் பயணிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களிலும் முன்னர் செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

மாடி வீட்டிலிருந்து தவறி வீழ்ந்த நபர் பரிதாபமாகப் பலி!!

 
மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடி வீட்டின் உயரத்திற்கு ஏறிய ஒருவர் தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பாண்டிருப்பு-02 ஐ சேர்ந்த ஆறுமுகம் தயாபரன் (வயது 56) என்பவர் பெயின்ட் பூசிக் கொண்டிருந்த போது தவறுதலாக உயரத்திலிருந்து கீழே விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் மாடி வீட்டின் உயரத்தில் நின்று வேலை செய்தமையினாலே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிரித்தானியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கட்டார் நீதிமன்றம் : காரணம் என்ன?

வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிய வழக்கில் பிரித்தானிய தொழிலதிபருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தொழிலதிபரான ஜோனாதன் நாஷ்(48) தனது நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கட்டாரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஜோனாதன் நாஷ். இவருக்கு வரவேண்டிய தொகை தாமதமாகவே, அதை நம்பி இவர் அளித்த காசோலையும் வங்கிக்கணக்கில் போதிய தொகை இல்லாததால் திரும்பியுள்ளது.

இதனையடுத்து நாஷுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுவரையான தமது அனைத்து கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டார் சிறையிலேயே தமது உயிர் பிரியும், அல்லது முதியவராகி தள்ளாடும் வயதில் தாம் சிறையில் இருந்து வெளியேறுவேன் என நாஷ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறை தண்டனையில் தமக்கு வருத்தம் இல்லை எனவும், இனிமேல் தமது குடும்பத்தை காண முடியாதே என்ற வருத்தமே உண்மையில் வலியைத் தருவதாக நாஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அமீரகத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, நாஷின் வழக்கை முன்னெடுத்து நடத்த முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த வார துவக்கத்தில் கத்தாரின் அமீரான தமீம் பின் ஹமத் அல் தானி என்பவருக்கு தூதரகம் வாயிலாக பொதுமன்னிப்பு கோரும் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

காசோலை விவகாரத்தில் நாஷ் எந்த ஆதாயமும் தேடவில்லை எனவும், திட்டமிட்டே காசோலை முறைகேடு நடைபெறவில்லை எனவும் தொண்டு நிறுவனம் சார்பில் முறையிட்டுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி : சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்தின் செயல்!!

சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தனது பயணத் திட்டம் குறித்து தெரிவித்தார், அதன் பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது அது குறித்து பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ’தமிழகத்தில் 2 பெண்கள் இறந்துள்ளார்கள், பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி உள்ளது?’ என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

ஆனால், கேள்வியை முடிக்கும் முன்னரே ரஜினிகாந்த், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் கூறி திரும்பி சென்றுவிட்டார்.

மேலும், அவரின் பின்னால் தொடர்ந்து கேள்விக்கு பதில் கேட்ட பத்திரிக்கையாளர்களை அவர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு : நடிகை கஸ்தூரி ஆவேசம்!!

சென்னையில் அஸ்வினி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஸ்வினி கொலைக்கு திரைப்படங்களும் பொறுப்புண்டு என டுவிட் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.

மேலும் கூறுகையில், ஸ்வாதி, சித்ராதேவி, அஸ்வினி… இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்களை காவு கொடுக்கப் போகிறோம்? காதல் என்ற பெயரில் தொடரும் இந்த கொலைபாதக சைக்கோ போக்குக்கு முடிவு என்ன?

தமிழ்ப் பண்பாடு எங்கள் துப்பட்டாவில் ஒளிந்து கொண்டுள்ளதாக கூப்பாடு போடும் கலாச்சார காவலர்களே… ஒரு பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் மனவளர்ச்சி இல்லாத ஆண்களை வளர்த்து விட்டதுதான் உங்கள் சாதனை.

இதில், ஒருதலைக்காதலை மிகைப்படுத்திக் காட்டும், பெண்களின் உணவுகளைத் திரித்து மலிவுபடுத்தி, பாலியல் ஆதிக்கத்தை வீரம் என்று சித்தரிக்கும் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஏற்கெனவே பொலிஸில் புகார் இருக்கும் நிலையில், அந்த இளைஞனை மீண்டும் சுதந்திரமாக எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் இயங்க அனுமதித்த நமது சட்டங்களையும் புனரமைக்க வேண்டும்.

கணவரை இழந்து, தனி ஒருத்தியாய் மகளை வளர்த்து, அவளது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் அனைத்தையும் இப்போது ஒட்டுமொத்தமாய்த் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் அந்தத்தாயை நினைத்தால் நெஞ்சைப் பிசைகிறது. இது அந்த தாய்க்கு இழைக்கப்பட்ட துரோகம்.

இது நமது வாழ்வியலின் தோல்வி. ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் தலைகுனிவு” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!!

சாரதி அனுமதி பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சை, எதிர்வரும் மே மாதம் முதல் கணினிமயப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சை செயன்முறை குறித்து போக்குவரத்து திணைக்களத்துக்கு தாம் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்தது மே மாதம் 3ஆம் திகதி கணினிமயப்படுத்தப்பட்ட பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திணைக்கள ஆணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்த அடிப்படையில், கணினிமயப்படுத்தப்பட்ட புதிய வினாக்கள் தாமாகவே இயற்றப்பட்டு, முடிவுகளையும் உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ அறிக்கைகளையும் புதிய முறையில் வெளியிடுவது குறித்தும் தாம் அவதானம் செலுத்தி வருவதாக போக்குவரத்து திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பூனைக்குட்டி ஒன்றுக்கு நாய் பாலூட்டும் காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மனிதநேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது. வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உயிரினத்தின் மீது அன்பு செலுத்தும் விலங்கின் செயல் அதைத் தான் உணர்த்துகிறது.

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான், இவர் பெண் நாய் ஒன்றையும், பூனைக்குட்டியையும் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்த நாய் சில வாரங்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், பூனைக்குட்டி அந்த பெண் நாயுடன் விளையாடி வந்ததுடன், நாயின் மடியில் தினசரி பால் குடித்து வருகிறது.

வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு நாய் பாலூட்டுவதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

பரபரப்பான போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் திரில் வெற்றி!!

இலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில் வெற்றிபெற்றுள்ளது.

சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.

குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 215 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பங்களாதேஷ் அணி இறுதியில் 5 விக்கெட்டுகளால் திரில் வெற்றிபெற்றது.

பங்களாதேஷ் அணிசார்பாக துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் தமிம் இக்பால் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடும் 3 அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி தலா ஒவ்வொரு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

இலங்கையில் தொடந்தும் நீடிக்கும் சமூக வலைதளங்கள் மீதான தடை!!

சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் திங்கட்கிழமைவரை நீடிக்கும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தொலைத்தொடர்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டியில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதள பாவனை தடைசெய்யப்பட்டது.

முடக்கப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் இன்றுமுதல் மீளச் செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.