மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கணவனைக் கொன்ற மனைவி!!

இந்தியாவில் குடிகார கணவரின் தொல்லையால் மந்திரவாதி பேச்சை கேட்டு அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் மூர்த்தி (54). இவர் மனைவி ரமா (44).
மூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
இதோடு அவர்கள் குடும்பத்துக்கு 12 லட்சம் வரை கடன் இருந்துள்ளது.

ரமா எவ்வளவு சொல்லியும் குடிப்பழக்கத்தை மூர்த்தி கைவிடவில்லை. இந்நிலையில் ஷயாம் சிங் என்ற மந்திரவாதியை ரமா சந்தித்துள்ளார்.

ஷயாம், ரமாவிடம் விஷத்தை கொடுத்து மூர்த்தியை கொலை செய்ய சொல்ல அவர் சொல்படியே ரமா மூர்த்திக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து மூர்த்தி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மூர்த்தியின் சகோதரர் சிவ சர்மா பொலிசில் புகார் அளித்த நிலையில் ரமாவையும், ஷயாமையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருமணமான சில மணிநேரங்களில் புதுமணத் தம்பதியருக்கு ஏற்பட்ட சோகம்!!

தமிழ்நாட்டில் புதுமண தம்பதியினரின் கண்ணெதிரிலேயே மணமகனின் தாய் மற்றும் தந்தை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(54), இவரது மகன் சசிகுமாருக்கும்(27), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா(23) என்ற பெண்ணுக்கும் நேற்று காலை பெங்களூருவில் திருமணம் நடந்தது.

தொடர்ந்து, புதுமணத் தம்பதியினர் மறுவீடு நிகழ்ச்சிக்காக, வேலூரில் உள்ள காவேரிப்பாக்கத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

புதுமணத் தம்பதியினர் ஒரு காரிலும், மணமகனின் பெற்றொர் மற்றொரு காரில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆம்பூர் அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். ஆனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து, சாலையோரம் இருந்த பள்ளத்திற்குள் விழுந்தது.

இதில் மணமகனின் தந்தை கமலக்கண்ணன், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரில் அவர்களுடன் பயணித்த உறவினர்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், உயிரிழந்த மணமகனின் பெற்றோரின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமிகளுக்கு மிரட்டி விஷம் கொடுத்த உறவினர்கள் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக 3 சிறுமிகளுக்கு உறவினர்களே விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சொர்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும், அவரது சகோதரர் ராமச்சந்திரன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று ராமச்சந்திரன் தாக்கியதாக கூறி ஜெயகுமாரின் மனைவி அமுதசெல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஜெய்குமாரின் 3 மகள்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் ராமச்சந்திரனின் மனைவி ஜெயபிரியா மற்றும் அவரின் அப்பா சாமூண்டி, இவரது தம்பி சரவணன் என 8 பேர் கொண்ட கும்பல் ஜெயகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு தனியாக இருந்த குழந்தைகளை மிரட்டி சாதத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சாதத்தில் விஷம் கலந்து இருப்பதை அறியாத குழந்தைகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி உள்ளனர்.

இதனை அடுத்து, மயக்கமடைந்த 3 சிறுமிகளும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயகுமார் பொலிசில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தகராறு காரணமாக பள்ளி சிறுமிகளுக்கு உறவினர்களே விஷம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலை சுத்தம் செய்ய இதுவே சரியான நேரம் : கமல்ஹாசன்!!

தமிழக அரசியல் சூழல் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்காக வந்திருந்த மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மாற்றத்தை கொண்டு வருவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமை, நீங்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும், அதற்கான சூழல் நிச்சயம் உருவாக்கப்படும்.

மாணவர்களை பார்த்து தலைவா என்று நான் கூறும் நிலை வரவேண்டும், யார் வீழ்ந்தாலும் தமிழகம் எழுந்தே தீரும், அதற்கு மாணவர்களின் தொண்டு அவசியம்.

அழகிய குடும்பத்தில் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறீர்கள், இந்த குடும்பத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்கள்.

என் எண்ணம் உங்கள் எண்ணமாக உருவாக வேண்டும், நீங்கள்தான் என் பேச்சு, தமிழகம்தான் என் மூச்சு என பேசியுள்ளார்.

மாடியில் கைத்தொலைபேசியில் பேசிய இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் போனில் பேசிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெள்ளந்தூரில், கௌதம்(28) எனும் மென்பொருள் பொறியாளர் தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாடி உள்ளார்.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் கௌதமின் பெற்றோர் அவரை போனில் அழைத்துள்ளனர். அவர்களுடன் பேசுவதற்காக பால்கனிக்கு சென்ற அவர், சுவரில் சாய்ந்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், கௌதமின் சகோதரி அளித்த புகாரின் பேரில், கௌதமின் மரணம் எதிர்பாராத விபத்தா அல்லது கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து ஏமாற்றிய தமிழக இளைஞருக்கு பாடம் புகட்டிய இலங்கைப் பெண்!!

தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் இலங்கையை சேர்ந்த ஜெசிமா என்ற பெண்ணை துபாயில் இருக்கும் போது காதலித்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் இலங்கை சென்று திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த காரணத்தினால் ஜெசிமாவை நாகையில் உள்ள தனது ஊரான குத்தாலத்திற்கு முகமது அழைத்து வந்துள்ளார்.

அப்போது சொந்தமாக தொழில் செய்யப் போகிறேன் எனக் கூறி 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் நகையை வாங்கிக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவேயில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஜெசிகா அவரைப் பற்றி விசாரித்த போது அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் கணவர் கண்டுபிடிக்கப்படாத்தால் ஜெசிமா மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் முகமது நியாஸ் 4வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஜெசிமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி பிறந்த குழந்தையை பார்க்க அவர் குத்தாலம் வரவுள்ளதும் ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது. உடனடியாக இலங்கையிலிருந்து குத்தாலத்திற்கு விரைந்த ஜெசிமா, முகமது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் அங்கிருந்த முகமதுவின் தாய் மற்றும் தந்தை ஜெசிமாவை அடித்தது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதற்கு எல்லாம் பயப்படாமல் ஜெசிமா முன்னர் புகார் கொடுத்த காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவில் ஜெசிமாவை அவரது கணவர் வீட்டில் குத்தாலம் பொலிசார் சேர்க்க வேண்டும்.

அப்படி அவரது வீடு பூட்டப்பட்டிருந்தால் பொலிசார் உதவியுடன் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிர் மனுதாரரால் இடையூறு ஏற்பட்டால் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கண்டியில் பதற்றம் : உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்!!

 
கண்டி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர். அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார்.

தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று தீ மூட்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கு நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!!

 
வவுனியாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (05.03.2018) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் அமைச்சர் கந்தையா சிவனேசன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

வவுனியாவில் 2017 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாய போதனாசிரியர் மட்ட வெற்றியாளர்களான சிறந்த விவசாயிகள், சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர், சிறந்த சேதன விவசாய செய்கையாளர்கள், நவீன விவசாய இயந்திரமயமாக்கலை மேற்கொள்ளும் சிறந்த விவசாயிகள், இளம் விவசாயிகள், பெண் வலுவூட்டலை நிலைப்படுத்துவதற்காக சிறந்த விவசாய பெறுமதி சேர் நடவடிக்கையுடன் வணிகமுறைமையையும் பின் பற்றும் விவசாயப் பெண்கள் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இ.இந்திரராசா, ம.தியாகராஜா, அ.ஜெயதிலக, த.செனவிரெட்ன, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன மற்றும் கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராட்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ஜே.அரசகேசரி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பண்ணையாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வவுனியா கூமாங்குளத்தில் திருவள்ளுவர் குருபூசை தினம்!!

 
வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் அறநெறி பாடசாலையில் திருவள்ளுவர் குருபூசை தின நிகழ்வுகள் நேற்று (04.03.2018) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், அஸ்திரம் இளைஞர்கழக தலைவர் நா.ஸ்ரீதரன், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, ஆலய செயலாளர் பெ.இராசையா, அறநெறி ஆசிரியர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது திருவள்ளுவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

 
வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 161 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக நேற்றுமுன்தினம் (03.03.2018) காலை 9 மணியளவில்,

வவுனியா பொதுவைத்தியசாலையில் அமைந்துள்ள பிராந்திய இரத்த மத்தியஸ்தானத்தில் வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தின் ஜனாதிபதி விருது பெற்ற சாரணன் பி.கெர்சோன் தலைமையில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக சாரண மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கஜேந்திரன், உதவி மாவட்ட ஆணையாளரும் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளருமான சு.காண்டீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததான நிகழ்வில் பொதுமக்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

சிரியாவில் தாக்குதல்கள் தொடரும் : அல்-அசாத்!!

கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா, வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கூட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார். மனிதாபிமான போர் நிறுத்தம் என மேற்கத்திய நாடுகள் கூறுவது அபத்தமான பொய் எனவும் அசாத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அரசப்படைகள் கால்வாசி பகுதியை அடைந்துவிட்டதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

கிழக்கு கூட்டாவில், திங்களன்று உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தங்களிடம் உள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

சஞ்சனாவை கரம்பிடித்த நடிகர்!!

மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கதிர். அவரது நடிப்பில் அடுத்ததாக கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இந்நிலையில், கதிர் தற்போது சிகை, சத்ரு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில் சிகை வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் இயக்குநர் அட்லி, ப்ரியா அட்லி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாத இறுதியில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் கதிர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதிர்– சஞ்சனா தம்பதிகளுக்கு திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் நடிகர் ரமேஷ் திலக்குக்கும், ரேடியோ ஜோக்கியான ஆர் ஜே நவலட்சுமிக்கும் சென்னையில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தது.

சின்னத்திரை பிரபலம் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

தொலைக்காட்சித் தொடர் என்பது குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். ஹிந்தியில் Ishqbaaz என்ற தொடர் மிகவும் பிரபலம். இத் தொடர் தமிழில் கூட காதலா காதலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

தற்போது இந்த தொடரில் தயாரிப்பு மேற்பார்வை செய்து வந்த சஞ்சய் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 2) மாலை 6.30 மணியளவில் 16 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய தற்கொலைக்கு காரணம் நானே. பண பிரச்சனையால் குடும்பமும் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த Ishqbaaz குழுவினர் சஞ்சய் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவரது தற்கொலை தனக்கு அதிர்ச்சியளித்துள்ளதாக இந்த சீரியல் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் இதற்கு சளைத்தவர்கள் அல்லர்!!

வம்பு பேசு­வதில் பெண்­க­ளுக்கு ஆண்கள் சளைத்­த­வர்கள் அல்லர் என இஸ்­ரே­லிய ஏரியல் பல்கலைக்க­ழ­கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்­வொன்று கூறு­கி­ன்றது.

‘ஜென்டர் ஸ்ரடீஸ்’ ஆய்­வேட்டில் வெளி­யி­டப்­பட்­டுள்ள மேற்­படி ஆய்வு தொடர்­பான தக­வல்கள் சர்வதேச ஊட­கங்­களில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இந்த ஆய்வானது 2200 க்கும் அதி­க­மா­னோ­ரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்­போது ஆய்­விற்குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் எவ­ரா­வது ஒருவர் குறித்து தமது நண்­ப­ரிடம் எவ்வாறு விமர்­சிப்­பீர்கள் என வின­வப்­பட்ட போது அவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் அளித்த பதில் ஆய்வாளர்களால் பகுப்­பாய்வு செய்­யப்­பட்­ட­தாக இவ் ஆய்வில் பங்­கேற்ற ஆய்­வா­ள­ரான பென் ஹாடர் தெரி­வித்தார்.

இவ் ஆய்வின் பெறு­பே­றுகள் பெண்­களே வம்­ப­ளப்­பதில் விண்ணர்கள் என்ற பொது­வான கண்ணோட்டத்தை மாற்றுவதாக அமைந்­தி­ருந்­தமை தம்மை வியப்பில் ஆழ்த்துவதாக உள்­ள­தாக தெரி­வித்த பென் ஹார்டர், தமது ஆய்வு ஆண்கள் பெண்­களை போன்று வம்பு பேசும் பழக்கத்தை கொண்­டுள்­ள­வர்கள் என்பதை மட் டுமல்லாது ஆண்கள் நுட்பமான உணர்வுள்ளவர்கள் என்பதையும் காண்பிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை பொலிஸில் புகார்!!

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் நேரிட்டது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் கூறப்பட்டது.

துபாய் போலீசார் ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடமும், ஹோட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி பின்னர் உடலை மும்பை கொண்டுவர அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் குளியலறை தொட்டியில் எப்படி மூழ்கி இறக்க முடியும் என்று இணையதளங்களில் பலர் கருத்துகள் பதிவிட்டு வந்தனர். இந்தி பட உலகினரும் இதே கேள்வியை எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தி மும்பை பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்கோ பவுண்டேஷன் சட்டப்பிரிவு தலைவர் ஆதில் கத்ரி என்பவர் இந்த புகார் மனுவை மும்பை பொலிஸ் கமிஷனர் தத்தாத்ரே பத்சாலிகருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

துபாய் பொலிஸ் சொல்வதை நம்பாமல் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து மும்பை பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை
நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான எஸ்.பாலகிருஷ்ணன் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நவிஸுக்கு மின்னசலில் புகார் அனுப்பி உள்ளார்.

கிளிநொச்சியில் புகையிரத்தில் மோதி ஒருவர் பலி!!

 
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (05.02) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மளையாலபுரத்தை சேர்ந்த மாரிமுத்து நாகராசா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதிலேயே குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.