மட்டக்களப்பு தாழங்குடா பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார் .
தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி என்ற (வயது 26) என்ற பெண் தலைபிரசவத்தில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை நேற்று பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறித்த கர்ப்பிணி தாய்க்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம் இந்த மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மூன்று குழந்தைகளில் முதல் பெண் குழந்தை 2 கிலோ 100 கிராம் எடையுடனும், இரண்டாவது ஆண் குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடனும், மூன்றாவது ஆண் குழந்தை 1 கிலோ 540 கிராம் எடையுடனும் பிறந்துள்ளது.
தாயும் மூன்று குழந்தைகளும் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை விடுதி வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டி, தெல்தெனிய பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டி மாவட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊடரங்கு சட்டம் இன்று காலை ஆறு மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதி கிரியை நேற்று மாலை அவிமாலை பிரதேசத்தில் இடம்பெறவிருந்த நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
முஸ்லிம் இளைஞர்கள் சிலரினால் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள இளைஞன் 10 நாட்களின் பின்னர் உயிரிழந்தார். படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் மரணமடைந்திருந்தார்.
இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது வன்முறையாக மாறியிருந்தது. இந்த சம்பவத்தில் அம்பாறை விகாரையின் தேரர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் தம்மரத்ன தேரர் உட்பட பிரதேசத்தின் பல தேரர்கள் அங்கு சென்று அவர்களுடன் இணைந்துள்ளனர்.
குழப்பமடைந்த மக்கள் கண்டி, மஹியங்கனை வீதியை மறித்து திகன மற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் டயர் கொழுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கண்டி, மஹியங்கனை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிலர் வாகனங்களின் காற்றை பிடிங்கி விட்டமையினால் அந்த வாகனங்கள் இடைநடுவில் நிறுப்பட்டுள்ளன. சிலர் திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் வெள்ளை கொடி உயர்த்தி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வெளியிட்டு தெல்தெனிய, மெனிக்ஹின்ன, கென்கல்ல உட்பட பல பிரதேசங்களின் கடைகளை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டமையின் காரணமாக கடைகள் பலவற்றிற்கு சேதம் ஏற்பட்டது.
எதிர்ப்பாளர்களின் செயற்பாடு அதிகரித்தமையினால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு அவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
எனினும் நிலைமை தீவிரமடைந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு அவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கிளர்ச்சி கட்டுப்பாட்டு குழுக்கள், அந்த பகுதியின் பல இடங்களில் வீடு தடுப்புகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த பகுதியில் அமைதியான சூழல் நிலவி வருகின்ற போதிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவம் காரணமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான 27 வர்த்தக நிலையங்கள், பல வீடுகள், ஒரு பள்ளிவாசல் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் திகன பகுதியில் நேற்று இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது முஸ்லிம் இளைஞரொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முழுவதும் திகன பகுதியில் பெரும் பதற்றம் நிலவிய நிலையில் வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முயன்ற போதே குறித்த இளைஞன் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் திகன பள்ளிக்கு அருகில் இருக்கும் சகோ. ஷம்சுதீன் என்பவரின் மகனே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர்.
அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று பிற்பகல் வழிபாடொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த வழிபாடு தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலங்களில் முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களினால் மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பல மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்திருந்தது.
சீரற்ற கடல் நீரோட்டத்துடன் திடீரென கடல் கறுப்பு நிறமாக மாறியதும் அதிக குளிர்ச்சியுடனும் காணப்பட்டதும் பின்னர் கடற்பாசி அதிகரித்துள்ளமை போன்றவை இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியதுடன், உள்ளூர் மக்களுக்கு கடலுணவுகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடலின் இயற்கைநிலை சீராகவேண்டும் என்றும், மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் இந்த சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிரினங்கள் வாழக்கூடிய பல்வகை சூழலையும் கொண்ட பூமியானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய கோள்களை விடவும் வித்தியாசமான தோற்றத்திலேயே காணப்படுகின்றது.
எனினும் முதன் முறையாக வியாழன் கோள் ஆனது பூமியைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்களை நாசா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப் புகைப்படங்கள் அனைத்தும் ஜுனோ விண்வெளி ஓடத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.
குறித்த புகைப்படங்களுக்கு Jovian ‘Twilight Zone எனப் பெயரிட்டுள்ள நாசா இது ஒரு பரிசோதனை முயற்சி என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜுனோ விண்வெளி ஓடமானது பூமியிலிருந்து 2011ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டின் நடுப்பகுதியில் வியாழன் கிரகத்தில் திரையிறங்கியிருந்தது.
இவ் விண்வெளி ஓடனத்தினால் எடுக்கப்பட்டு ஏனைய சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கனடாவில் அண்ணன், தங்கை இருவரும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.
கனடாவின் Quebec பகுதியில் உள்ள Aylmer பகுதியைச் சேர்ந்தவர் Liliane Hajjar. இவருக்கு Jason என்ற கணவரும் Jacob- Liam என இரண்டு மகன்களும் Sophia என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் Liliane Hajjar, எனது மகன் மற்றும் மகள் புற்றுநோய் காரணமாக உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படம் என்று கூறி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் மிகவும் உருக்கமான பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இருவரும் ஒரே மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதிலும் குறிப்பாக அந்த மருத்துவமனையில் எங்கள் குழந்தைகளின் பெயர்கள் குறிப்பிட்டு, அதில் இரண்டு பேருக்கு மேல் அறைக்கு உள்ளே செல்லக் கூடாது.
மாலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி என்று எழுதி வைத்திருந்ததை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாகவும் கூறி, அது தொடர்பான புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்து பார்க்கவே இல்லை. என்னுடைய இரண்டு குழந்தைகளும் புற்று நோய் காரணமாக உயிருக்கு போராடி வருகின்றனர்.
Jacob-க்கு 5 வயது இருக்கும் போது தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் போனது, வாந்தி எடுத்த படியே இருந்தான்.
இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவனுக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இளைய மகனான Liam-க்கு பரிசோதனை செய்த போது அவனுக்கு இல்லை. ஆனால் சோபியாவுக்கு பரிசோதனை செய்த போது புற்று நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.
புற்றுநோயால் பாதிப்புக்குள்ளான Jacob-ற்கு ஒரு புறம் பார்வை மற்றும் ஒரு புறம் காதும் கேட்காமல் போனது, சில வாரங்களுக்கு முன்பு அவனது கிட்னியும் பாதிக்கப்பட்டது.
இதனால் அவன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறான், இதே வேளை Sophia-விற்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், இருந்த போதும் அவள் அதிக காலம் வாழ்ப்போவதில்லை என்பதும் புரிகிறது.
இருப்பினும் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில் இருப்பதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இளையமகன் Liam கூறுகையில், எனக்கு அண்ணன், தங்கை என இருவர் இருந்தும் யாரும் இல்லாதது போல் உணர்கிறேன்.
இவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டி வருகிறார். தற்போது வரை 20,000 பவுண்ட் நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 91 மற்றும் 80 வயது நிரம்பிய தம்பதிகள் நிருமணக்கோலம் கொண்டதை அங்குள்ள மக்கள் சிலிர்ப்புடன் வரவேற்றுள்ளனர்.
திருச்சி உறையூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ரயில்வே ஊழியர் சீனிவாசன்(91) மற்றும் அவரது மனைவி பத்மாவதி(80) ஆகிய இருவருக்கும் உறையூர் ராமர் மடத்தில் இன்று 90 ஆம் வயது திருமணம் நடைபெற்றுள்ளது.
அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என அனைவரும் ஆசி பெற்றனர்.
இத்திருமணத்தில் 4 தலைமுறைகளை சேர்ந்த மகன், மகள், மகள் வழி பேரப்பிள்ளைகளுடன், உறவினர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
1955 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி 60,70, 80 ஆகிய வயதுகளில் திருமண கோலம் கண்டதோடு, தற்போது 91-வது வடதிலும் திருமண கோலம் கொண்டுள்ளனர். இதனை அந்த ஊர்மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துள்ளனர்.
தமிழகத்தில் இறந்ததாக கருதப்பட்டு மனைவியை எரித்த நிலையில் அவர் தற்போது உயிருடன் வந்திருப்பது அவர் உட்பட உறவினர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் இருக்கும் திருபுவனம் தோப்பு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(45). இவர் ஆஷா(42) என்ற பெண்ணை கடந்த 24-ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு விக்னேஷ்வரன்(22) என்ற மகனும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன் ஆஷாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதால், அவ்ரை ராமச்சந்திரன் விவாகரத்து செய்துள்ளார்.
இதையடுத்து ஆஷாவும் யாரோட ஆதரவின்றி முற்றிலும் மனநிலை பாதிப்படைந்து அப்பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்த போது கடந்த 26-ஆம் திகதி திருப்புவனம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெண் ஒருவர் மயங்கி கிழே விழுந்துள்ளார்.
இதனால் அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது
ராமச்சந்திரனுக்கு போன் செய்து உங்கள் மனைவி ஆஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். வந்து உடலை பெற்று செல்லுங்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது ஆஷாவின் முகம் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. அவரின் 62 என குறிப்பிட்டிருந்தது.
சந்தேகமடைந்த ராமச்சந்திரன் பொலிசாரிடம் கேட்ட போது, வயது 42-க்கு பதிலாக 62 என்று தவறாக வந்துவிட்டது. உங்கள் மனைவி தான் இவர் என்று உடலை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின் ராமச்சந்திரன் உடலை பெற்று உறவினர்கள் உதவியுடன் அங்கிருக்கும் மயானத்தில் முறைப்படி சடங்குகள் செய்து எரித்துள்ளார்.
இறந்து எரிக்கப்பட்ட ஆஷா கடந்த 28-ஆம் திகதி அதே பகுதியில் இருக்கும் தெருவில் எப்போதும் போல் சுற்றித் திரிந்துள்ளார். இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உடனடியாக ஆஷாவை சென்று பார்த்துள்ளார்.
அவர் அஷா தான் என்பதை உறுதி செய்தார். இதற்கு முக்கிய காரணம் பொலிசார் சரி வர விசாரணை மேற்கொள்ளாமல், சிகிச்சை பலனின்றி இறந்த யாரோ ஒரு பெண்ணின் உடலை தனது மனைவியின் உடல் என்று கூறி அவரிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும் இறந்த பெண் யார்? இறந்ததாக கூறப்பட்ட ஆஷா எப்படி உயிருடன் வந்தார்? என்று அப்பகுதி மக்கள் அவரை ஆச்சரியமாக பார்ப்பதுடன் சற்று அதிர்ச்சியுமடைந்துள்ளனர்.
இந்தியாவில் பசிக்காக உணவு தேடிச் சென்ற மது என்ற இளைஞனின் வயிற்றில், ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 15 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, கடந்த 24-ஆம் திகதி அவரின் உடற்கூறு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த அறிக்கையில், மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை. சில பழங்கள் மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.
அதுமட்டுமின்றி பசிக்காக திருடியவர் என திருட்டு பட்டத்தை சுமந்த மது, பல நாட்கள் பட்டினியாகக் கிடந்துள்ளார். அதனால் அவரின் எலும்புகளும் தசைகளும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளது.
ஆய்வில் உடல் முழுவதும் காயம் இருந்துள்ளது. தலையிலும் பலத்த காயம் காணப்பட்டுள்ளது. மார்புக்கூடு இரண்டாக உடைந்துள்ளது.
உடலில் மொத்தம் 50 காயங்கள் உள்ளது. அந்த 50 காயங்களில் 20 காயங்கள், இறப்பதற்கு முந்தைய நாள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு ராடால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரின் மரணத்துக்கு, தலையில் ஏற்பட்ட அந்தக் காயம்தான் முக்கியக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வாகனத்தில் ஏறும்போது மதுவே தெரியாமல் வாகனத்தில் இடித்துக் கொண்டதால் அந்த காயம் ஏற்பட்டது என்று திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், மது கஞ்சாவுக்கு அடிமையானவர், காதல் தோல்வியால்தான் காட்டுக்குச் சென்றார் என்ற ரீதியிலும் வழக்கை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா புதிய பேருந்து நிலைய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வவுனியா நகரில் இருந்து A9 வீதி ஊடாக பயனித்த கார் ஒன்று முன்னே சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நொச்சிக்குளத்தை சேர்ந்த ராமன் ஆறுமுகம் (வயது 55) என்வரே படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகரசபைக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள 21 நகரசபை உறுப்பினர்களை வரவேற்பதற்கு நகரசபையில் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக 3மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக சபை இடம்பெறவில்லை இதன் காரணமாக எவ்வித புனரமைப்புப்பணிகளும் இடம்பெறவில்லை. தற்போது அதி நவீன முறையில் புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.
சபையின் புனரமைப்புப்பணிகளுக்காக நவீன மலசலகூடம் உட்பட இரண்டு மில்லியன் ரூபாய்களும் பொருட்கள் மற்றும் தளபாடம், நவீன் தொடர்பாடல் கருவி என்பன ஒரு மில்லியன் ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தமாக மூன்று மில்லியன் ரூபாவில் தற்போது நவீன முறையில் நகரசபை புனரமைப்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், 21 நகரசபை உறுப்பினர்களையும் வரவேற்பதற்கு நகரசபை தயராகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமை தொடர்பில் செயற்படுகின்ற ‘Henley & Partners’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது. அதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டினை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளன.
சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.
ஜப்பான், சிங்கப்பூர், ஜேர்மன், தென் கொரியா, ஸ்பெய்ன், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.
இந்த பட்டியலுக்கு அமைய ஸிம்பாப்வே 61 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும். இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் ஸிம்பாப்வே நாட்டை விட பின்தங்கியுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்த பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 4 சக்கர வாகனம் ஒன்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை இலங்கை சுய வேலைவாய்ப்பு ஊழியர்களின் முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டிக்கு சமமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம் இந்திய தயாரிப்புகளில் ஒன்றாகும்.
எனினும் அந்த வாகனங்களை ஓட்டுவதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக இந்த வாகனத்தை இந்தியாவில் பயன்படுத்த தடை செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே இந்த செயற்பாட்டிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதாகவும், அதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிப்பாணை ஒன்று ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் சக்தி வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலை ‘Global Firepower List 2017′ வெளியிட்டுள்ளது.
ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்கள், கிடைக்கக் கூடிய வகையிலான மனிதசக்தி, நிலம், காற்று மற்றும் வான்வழி உட்பட 50 அம்சங்களின் அடிப்படையில் 133 நாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
4வது மற்றும் 5வது இடங்களை இந்தியா, பிரான்ஸ் நாடுகள் பிடித்துள்ளன. பிரித்தானியா, ஜப்பான், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த பட்டியல் குறித்து, Global Firepwer தனது அறிக்கையில் கூறுகையில், ‘எங்களது சூத்திரம் சிறியதாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பெரிய நாடுகள், சிறிய வளர்ச்சியுடனான நாடுகளுடன் போட்டி போடுவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் மிகவும் பிரபலமடைந்த நடிகை Elaine Lordan. ஒரே ஒரு தொலைக்காட்சி தொடரால் பிரித்தானியாவில் உச்சம் பெற்ற இவர், தனது மது பழக்கத்தால் புகழையும், செல்வாக்கையும் இழந்து உருத்தெரியாத அளவுக்கு தெருவீதியில் நின்று மதுவருந்தும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது 51 வயதாகும் இவர் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் புகழின் உச்சத்தில் இருந்தபோது மதுவுக்கு அடிமையாகி கடந்த 2003 ஆம் ஆண்டு அந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை எலைனின் தாயார் Bernadette, எலைனின் மது பழக்கமே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். இதை அவர் புரிந்து கொண்டு, அந்த பழக்கத்தை கைவிட்டால் நன்று என்றார்.
இதனிடையே மதுவில் இருந்து விடுபடும் பொருட்டு ஒரு குழந்தைக்கு தாயானால் அனைத்தும் சரியாகிவிடும் என அவருக்கு அறிவுரை சொல்லப்பட்டது.
மட்டுமின்றி மருத்துவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. அதில் கடின உழைப்பாளியான நடிகை எலைன், தொடர் படப்பிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி படிப்படியாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் எலைனின் தாயார் லண்டனில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அதேவேளை, எலைனின் 9 மாத குழந்தை 5 வாரங்கள் முன்னராகவே பிறந்தது. மட்டுமின்றி அதன் முதல் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தாயாரின் தற்கொலை, ஆசையாக வளர்த்த முதல் குழந்தையின் மரணம் என தொடர் சம்பவங்கள், நடிகை எலைனை மீண்டும் மதுவுக்கு தள்ளியது.
தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் நடிகை எலைன், லண்டன் தெருக்களின் நின்று சர்வசாதாரணமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வருந்ததக்கது என அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளி ஒருவன் நீதிபதிக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த Abdulrahman El-Bahnasawy (20), நியூயார்க்கிலுள்ள Times Square மற்றும் சுரங்க ரயில்பாதையில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில் அவன் வாழ இன்னொரு வாய்ப்புக் கோரி நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.
அவன் கைப்பட எழுதியுள்ள 24 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை நடத்திய விதம் தன்னை எவ்வாறு தீவிரவாதியாக மாற்றியது என்பதை விரக்தியுடன் தெரிவித்துள்ளான்.
Ontarioவைச் சேர்ந்த அவன் தங்கள் அமைதியான வாழ்க்கையை எவ்வாறு அமெரிக்கா வான் வெளித்தாக்குதல்கள் மூலம் சீரழித்தது என்பதையும் தங்கள் மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்ந்து அதே போல் தானும் பதிலுக்கு செய்ய விரும்பியதாகவும், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் அந்த நேரத்தில் இருந்த தனது மன ஓட்டத்தைத் தெரியப்படுத்துவதற்காகவே இதை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளான்.
சிறு வயதில் தான் அனுபவித்த விரக்தியும் தனிமையும் தன்னை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கிய விதத்தையும் அவனை குணமாக்குவதற்காக அவனது பெற்றோர் நாடு நாடாக அலைந்ததையும் பற்றி எழுதியுள்ள அவன், போதைப் பொருட்களும், யுத்தமும் வன்முறையும் இல்லாத ஒரு உலகத்தைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளான்.
அவனது வழக்கறிஞர்களும் கனடா அவனை மன்னித்து வாழ அனுமதிக்கலாம் அல்லது அவனை அமெரிக்காவிடம் ஒப்படைத்து, அமெரிக்கா அவனை விடுவிக்கலாம் என்று விரும்புகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் ஒன்பதாம் திகதி அவனுடைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.